இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவில் விட்டுச்சென்றவற்றில் ‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி’ இருப்பது ஊழல்.  இரண்டாம் உலகப்போரில் முனைப்புடன் இங்கிலாந்து ஈடுபட்டுவந்த காலகட்டத்தில்,  இந்தியாவிலுள்ள ஆங்கிலேய இராணுவத்திற்குத் தேவையான தளவாடப் பொருட்களை வாங்கியதிலும், இராணுவ வீரர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்து, விநியோகம் செய்ததிலும் அதிக அளவில் நிகழ்ந்த ஊழல் குறித்து விசாரணை மேற்கொள்ள ‘சிறப்பு போலீஸ் அமைப்பு’  ஒன்றை ஆங்கிலேய அரசாங்கம் 1941-ம் ஆண்டில் தோற்றுவித்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும் அரசாங்க அதிகாரிகளின் லஞ்சம் மற்றும் ஊழல் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு போலீஸ் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. அந்த அமைப்புதான் இந்திய விடுதலைக்குப் பின்னர் சி.பி.ஐ என்ற பெயர் மாற்றத்துடன் தற்பொழுது இயங்கி வருகிறது.

மத்திய அரசிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியும் அதிகாரிகள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது சி.பி.ஐ.யும்,  மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஊழல் தடுப்பு பிரிவும்  விசாரணை மேற்கொண்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பொது நல வழக்கு : 

இந்தியா சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் கடந்த பின்னரும் லஞ்சம், ஊழல்,  வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்தும் சக்தியை நடைமுறையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்டங்கள் இழந்துவிட்டன என்றும்,   ஊழல் இல்லாத அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அரசு துறைகள் எதுவும் தற்பொழுது நம் நாட்டில் இல்லை என்றும்,  ஊழல் தடுப்புச் சட்டங்களின்படி  பதிவு செய்யப்பட்ட எண்ணற்ற வழக்குகள் விசாரணையின் முடிவை எட்டாமல் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன என்றும்,  இந்த வழக்குகள் மீதான விசாரணையை ஓராண்டுக்குள் விரைந்து முடிப்பதற்காக  மாவட்டங்கள் தோறும் சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றங்கள் அமைக்க ஆணை வழங்கக்கோரியும் பொதுநல மனு ஒன்று சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சுதந்திர இந்தியாவில் லஞ்சம், ஊழல் போன்ற கொடுங்குற்றச் செயல்களைப் பெரும்பாலான பொதுமக்கள் சகித்துக் கொண்டு வாழப் பழகிவருகின்ற சூழலில், ஒரு சிலர்தான் அக்குற்றங்கள் குறித்து தைரியத்துடன் புகார் கொடுக்கின்றனர்.  அப்படி கொடுக்கப்பட்ட புகார்கள் மீதான விசாரணையின் முடிவு குறித்து மத்திய விழிப்புணர்வு ஆணையம் மற்றும் மத்திய குற்ற ஆவணக்கூடத்தின் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தும் கருத்துகள், சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவிற்கு வலுசேர்க்கிறது.

மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் ஆய்வின்படி  ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் சி.பி.ஐ பதிவு செய்த வழக்குகளில்  6,226 வழக்குகள் 2019-ம் ஆண்டின் இறுதியில் நீதிமன்ற விசாரணை முடிவு பெறாமல் நிலுவையில் உள்ளன.   அவைகளில் 182 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும்,  1,599 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும்,  1,883  வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும், 1,177 வழக்குகள் 3 ஆண்டுகளுக்கு மேலாகவும்,  1,385 வழக்குகள் மூன்றாண்டுகளுக்குக் குறைவாகவும் பல்வேறு ஊழல் தடுப்பு நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களில் இயங்கிவரும் ஊழல் தடுப்புப் பிரிவுகள்  பதிவு செய்த வழக்குகளில் 2,277  வழக்குகள் 2019-ம் ஆண்டில் நீதிமன்றங்களில் முடிவுக்கு வந்தன. நீதிமன்ற விசாரணையில் முடிவுக்கு வந்த வழக்குகளில் 45%  வழக்குகள்தான் தண்டனையில் முடிவடைந்துள்ளன. 2019-ம் ஆண்டின் இறுதியில் நிதிமன்ற விசாரணை முடிவு பெறாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 24,740.  நீதிமன்றங்களில் தேங்கியுள்ள இந்த வழக்குகளை மட்டும் ஊழல் தடுப்பு நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டால்,  அவைகளை விசாரித்து முடிக்க 11 ஆண்டுகள் தேவைப்படும் என்பது நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை உணர்த்துகிறது.

அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வர ஏற்படும் அதீத காலதாமதமே லஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்கள் சமுதாயத்தில் பெருக உரமாக அமைந்துவிடுகிறது என்ற காரணத்தால், அந்த வழக்குகளின் விசாரணையை ஓராண்டு காலத்திற்குள் விரைந்து முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மாவட்டங்கள் தோறும் ஊழல் தடுப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை உச்சநீதிமன்றத்தின் முன் வைத்த இந்த பொதுநல வழக்கு நம் நாட்டின் கள நிலவரத்தை வெளிப்படுத்துகிறது.

நீதிமன்றங்களில் தேக்கம் : 

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான எண்ணிக்கையில்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றங்கள் மாநிலங்களில் அமைந்துள்ளன.  நீதிமன்ற விசாரணையை முன்னெடுத்துச் செல்லும் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் எண்ணிக்கையும் மிகமிகக் குறைவாகவே உள்ளது.  காலதாமதமாக நீதிமன்ற விசாரணை நடத்தப்படுகின்ற நிலையில்,  சாட்சிகள் பலர் இடம் பெயர்ந்து சென்றுவிடுகின்றனர். பல வழக்குகளில் முக்கிய சாட்சிகளை நீதிமன்றம் விசாரணை செய்யும் வாய்ப்பை இழந்துவிடுகிறது. நீதிமன்ற விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கத்திற்காகவே  வழக்குகளின் விசாரணை மீது பல்வேறு குறைகளைக் கூறி, விசாரணைக்குத் தடைபெறும் நிலை அதிகரித்துவதைக் காணமுடிகிறது. தாமதத்திற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், அதன் விளைவு லஞ்சத்தையும், ஊழலையும் ஊட்டி வளர்க்கும் செயலாகவே அமைந்துவிடுகிறது.

நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாகத் தேங்கியிருக்கும் ஊழல் தடுப்புச் சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் துரித விசாரணை மேற்கொள்ள மாவட்டங்கள் தோறும் கூடுதல் நீதிமன்றங்களும்,  கூடுதல் அரசு வழக்கறிஞர்களும் தேவை என்பதிலும், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதிலும் இரு வேறு கருத்துகள் யாருக்கும் இருக்காது. 

கள நிலவரம் : 

138 கோடி மக்கட்தொகை கொண்ட நம்நாட்டில் 78 கோடி பேர் 25 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.  இவர்கள் அனைவரும் லஞ்சம்  மற்றும் ஊழல் செயல்பாடுகளின் தாக்கத்தை நன்கு உணர்ந்தவர்கள்.  லஞ்சம் மற்றும் ஊழலில் இவர்கள் அனைவரும் ஈடுபடாதபடி ஆறாயிரத்திற்கும் சற்று குறைவான எண்ணிக்கையிலான அலுவலர்களைக் கொண்ட சி.பி.ஐ.யோ அல்லது ஓராயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலான அலுவலர்களைக் கொண்ட மாநில ஊழல் தடுப்பு பிரிவினர்களோ கண்காணித்து, ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியுமா? முடியும் என்று கருதினால், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே அமையும்.

லஞ்சம்,  ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் நேர்மையாக வாழ்வது என்பது சட்டத்தால் மட்டும் அமையப் பெறுவது அல்ல. அது ஒரு வாழ்க்கை முறையாக அமையப் பெற வேண்டும். அந்த வாழ்க்கை முறையை இளம்பருவத்திலிருந்தே பழக்கப்படுத்திக் கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும். அச்சூழலை ஏற்படுத்துவதில் கல்வி நிலையங்கள் பெரும்பங்கு வகிக்க வேண்டும்.  உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகளும்,  அதிகார மையத்தில் இருப்பவர்களும் நேர்மையான வாழ்க்கை முறைக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும்.  

பதவியால் கிடைக்கும் அங்கீகாரத்தைக் காட்டிலும்,  நேர்மையாளராகப் பதவி வகிப்பதே உன்னதமானது என்பதை அரசு அதிகாரிகளும், அதிகார மையத்தில் இருப்பவர்களும் உணர வேண்டும்.  நேர்மையாளர்களாக வாழ்பவர்களை மதிக்கும் பண்பு சமுதாயத்தில் வளர வேண்டும். இதுவே ஊழலற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் நிற்க வழி வகுக்கும். 

***

35 thought on “ஊழல் தடுப்பு பணியில் நீதிமன்றங்களின் பங்களிப்பு”
 1. மதிப்பிற்குரிய அய்யா வணக்கம், எனது பெயர் ப. மோகன். நான் மதுரை மாவட்டத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகின்றேன். நான் சார்பு ஆய்வாளர் பதவிக்கு படித்துக் கொண்டிருந்த சமயத்தில், தங்களுடைய எளிமையான வாழ்க்கை முறை பற்றியும், தங்களது நிர்வாகத் திறன் பற்றியும், தங்களிடம் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்த கணேசன் என்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தலைமைக் காவலர் என்னிடம் பகிர்ந்து கொண்ட செய்திகளைக் கேள்விப் பட்டு மிகுந்த ஊக்கம் பெற்றேன். இன்றுவரை அந்த ஊக்கம் தினணயளவும் குறையாமல் பணிபுரிந்து வருகின்றேன். தங்களுடைய தலைமையின் கீழ் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று எண்ணியிருந்த எனக்கு Paarvaiyaalar.com மூலமாக தங்களை பின் தொடர வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். சமுதாய மாற்றத்திற்கு உதவும் வகையில் இது போன்ற கட்டுரைகளை தாங்கள் தொடர்ந்து வழங்கிட வருகின்ற ஆண்டுகளில் தங்களுக்கு நிறைந்த ஆரோக்கியம் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்… நன்றிகள்…

 2. மதிப்பிற்குரிய அய்யா வணக்கம், எனது பெயர் ப. மோகன். நான் மதுரை மாவட்டத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகின்றேன். நான் சார்பு ஆய்வாளர் பதவிக்கு படித்துக் கொண்டிருந்த சமயத்தில், தங்களுடைய எளிமையான வாழ்க்கை முறை பற்றியும், தங்களது நிர்வாகத் திறன் பற்றியும், தங்களிடம் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்த கணேசன் என்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தலைமைக் காவலர் என்னிடம் பகிர்ந்து கொண்ட செய்திகளைக் கேள்விப் பட்டு மிகுந்த ஊக்கம் பெற்றேன். இன்றுவரை அந்த ஊக்கம் தினணயளவும் குறையாமல் பணிபுரிந்து வருகின்றேன். தங்களுடைய தலைமையின் கீழ் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று எண்ணியிருந்த எனக்கு Paarvaiyaalar.com மூலமாக தங்களை பின் தொடர வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். சமுதாய மாற்றத்திற்கு உதவும் வகையில் இது போன்ற கட்டுரைகளை தாங்கள் தொடர்ந்து வழங்கிட வருகின்ற ஆண்டுகளில் தங்களுக்கு நிறைந்த ஆரோக்கியம் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்… நன்றிகள்…

 3. தங்களின் இச்சீரிய பணி
  எங்களை மென்மேலும் வழிப்படுத்தும்
  நன்றி அய்யா

 4. ஐயா நம் நாட்டில் ஊழலுக்கு அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் மட்டும் காரணம் அல்ல: போராட்ட குணம் இல்லாத சுயநல பொது மக்களும் முக்கிய காரணம் : பொதுமக்களில் சிலர் ரேசன் கடையில் பொருள் எடை குறைவாக இருந்தாலும் தட்டி கேட்பது இல்லை அதிகாரம் படைத்த சிலர் தனக்கு மட்டும் எடை சரியாகவும் கூடுதல் ஒரு கிலோ போடு என லஞ்சம் இங்கு இருந்து தான் ஆரம்பம் : ஒரு பிறப்பு சான்றோ இதர சான்றோ அலுவலகம் சென்ற உடன் கிடைத்து விடவேண்டும் அதற்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தாலும் பரவாயில்லை எனற மனநிலையில் மக்கள் உள்ளனர் லஞ்சம் கொடுக்க கூடாது என்ற போராட்ட குணம் இல்லை : குறுக்கு வழியில் அரசு வேலை வாங்க வேண்டும். அரசு சலுகை பெற வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருப்பதால் அரசியல் வாதி மக்களின் குறுகிய புத்தியை பயன்படுத்தி லஞ்சம் ஊழல் செய்கின்றான் : பின்னர் அவன் திருப்பி ஓட்டு வாங்க மக்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்து …. இப்படி லஞ்சம் ஊழல் மக்கள் வாழ்க்கையோடு கலந்து விட்டது மக்கள் மனதில் சுயநலமில்லா போராட்ட குணம் வந்தால் தான் ஊழல் ஒழியும்

 5. இது போன்ற சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களையும் அது தொடர்பான பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. நன்றி ��������

 6. இது போன்ற சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களையும் அது தொடர்பான பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. நன்றி 🙏🙏🙏🙏

 7. Vanakkam ayya. I gone through your article . It is very astonishing to read the bribary case details. It is coformed the proverb" DELAYED JUSTISE IS DENIED JUSTICE ". Each and every one should fight against bribery. We belive that year2021 will pave way for that. I pray the God for fulfillment of your good intention.

 8. அய்யா வணக்கம். ஊழலுக்கு முக்கிய காரணம் தன்னுடைய பொறுமை இன்மை. இன்று சாதாரணமாக இருக்கும் ஒரு பத்திர பதிவு அலுவலகம் சென்று நாம் அரைமணி நேரம் இருந்தால் நமக்கு புரியும். அடுத்து மோட்டார் வாகன அலுவலகம் இவ்விரண்டு அலுவலகத்திலும் இன்று எவ்வளவு ஊழல் நடைபெற்று வருகிறது என்பதை நாளிதழ் மூலம் நாம் அறிகிறோம். இன்று நாம் செய்ய வேண்டிய சமுதாயக் கடமை நமக்கு தெரிந்த அனைவரிடமும் அரசு செயல் திட்டம் மற்றும் துறை சார்பாக நமக்கு தெரிந்த நடைமுறைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். நாமும் எந்த துறையிலும் எந்த ஒரு பணியையும் இலஞ்சம் கொடுக்காமல் முடிக்க நம்மைச் சார்ந்த அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நன்றி.

 9. This is good effort.your clean experience will guide the followers.Living example is better than preaching. Good officers like you to come forward. Your precious and previous records may be bright light like light house.

 10. நன்றி திரு.மோகன்.

  நீங்கள் குறிப்பிட்டது போல் கருத்தாழம் கொண்ட பதிவுகள் தொடர்ந்து இந்த பகுதியில்
  இடம் பெறும்.

  பெ.கண்ணப்பன்

 11. உங்கள் பதிவுக்கு நன்றி.
  குறைந்துவரும் பொதுமக்களின் போராட்ட குணமற்ற சுயநலமும் ஊழல் பெருக்கத்திற்கு ஒரு காரணம் என்பதைப் புறந்தள்ளிவிட முடியாது.

  பெ.கண்ணப்பன்

 12. Respected sir, your article on corruption in India is interesting and provided fruitful insights to me. The pendency of corruption cases in India and very few courts to deal with this issue is very well highlighted in your article. The concluding remarks in the article is exemplary sir. Thank you so much sir. Hats off to you

 13. Dear Sir ,I am so happy to see your contribution in the website .Only the peron with your integrity can write these articles about corruption .I will be sharing and reading your article in a regular basis dear Sir

 14. அருமையான வாசகம் இது

  பதவியால் கிடைக்கும் அங்கீகாரத்தைக் காட்டிலும், நேர்மையாளராகப் பதவி வகிப்பதே உன்னதமானது என்பதை அரசு அதிகாரிகளும், அதிகார மையத்தில் இருப்பவர்களும் உணர வேண்டும்.

 15. ஐயா வணக்கம் எனது பெயர் சிவகுமார் உங்களுடன் அதிகவருடம் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை இருந்தாலும் உங்களுடன் பணியாற்றிய இரண்டு வருடங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் ஐயா .ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்ற வாழ்க்கை பாடம் உங்களிடம் கிடைத்தது எனக்கு. உங்களை போன்ற நேர்மையான பணி நிறைவு பெற்ற அரசு அதிகாரிகளை மாவட்டங்கள் வாரியாக அதிக அளவு தேர்வு செய்த்து அதிக நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் ஊழல் குற்றம் சுமர்த்தபட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை அந்த பணியில் இருந்து உடனடியாக நீட்கபடவேண்டும் பின்னர் அவர் குடும்பத்தார்க்கு அரசு சலுகை மற்றும் அரசு பணிகள் எதுவும் கிடைக்காத வகை செய்யவேண்டும். (குறிப்பு :நீதிமன்றம் வரும் அணைத்து உழல் குற்றங்களும் ஒருமாதத்திற்குள் முடிவுக்கு வரவேண்டும்)

 16. ஐயா வணக்கம்,

  மேலே குறிப்பிட்ட சங்கதிகள் அனைத்தும் உண்மையே தனி ஒருவன் இடத்தில் ஒழுக்கம் இல்லாதபோது எளிமை இல்லாதபோது பொறுமை இல்லாத போது ஊழல் செய்ய முற்படுகிறான் அதற்கு துணையாக இருக்கிறான் அதற்கு உடந்தையாக இருக்கிறார்.

  இவை அனைத்தும் பள்ளி பருவத்தில் இருந்தே கற்று தர பட வேண்டும்..

  தாமதமாக தர படும் நீதி மட்டும்.. அநீதி அல்ல.

  தாமதமாக தர படும் தண்டனை கூட …. அநீதி தான்..

  இது என் தனிப்பட்ட கருத்து..

  அய்யா வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *