நீர், காற்று, வளமான மண் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டது பூமி என்பதும், இதனால் பூமியில் தாவரங்களும்,  உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன என்பதும், பூமியைப் போன்று வேறு எந்த கிரகத்திலும் உயிரினங்கள் இல்லை என்பதும் இதுநாள்வரை  நடைபெற்ற ஆய்வுகள் மூலம் வெளிப்படுகின்றன. இவை மட்டுமின்றி,  வியப்படையச் செய்யும் சம்பங்கள் பலவும் பூமியில் நிகழ்ந்து வருகின்றன.  

செடி, கொடி, மரங்களில் வண்ண வண்ண நிறங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குவதும்,  பூக்களில் சுவைமிகு தேன் துளிகள் இருப்பதும்,  வண்ணமிகு தோகையை ஆண் மயில்கள் கொண்டிருப்பதும், சிவந்த கொண்டையைச் சேவல் கொண்டிருப்பதும்,  அரும்பு மீசை வாலிபப் பருவ ஆண் மகனுக்கு இருப்பதும் இயற்கையின் படைப்பில் அழகாகத் தோன்றினாலும்,  அதற்கொரு காரண காரியம் உண்டு என சமூக ஆய்வாளர்கள் கூறுவார்கள்.  தாவரங்களின் இனப்பெருக்கத்தின் ஒரு செயலான மகரந்தச் சேர்க்கைக்காக பூச்சிகளையும், ஈக்களையும் தன்னகத்தே ஈர்ப்பதற்காக பூக்கள் பளிச்சிடும் வண்ணங்களிலும், தேன் துளிகளுடனும் இருக்கின்றன என்றும்,  தன் பெண்பால் இனத்தைக் கவர்ந்து ஈர்க்க தோகையுடன் ஆண் மயிலும், சிவந்த கொண்டையுடன் சேவலும் இருக்கின்றன என்றும்,  இளம் மங்கையின் மனதைக் கொள்ளை கொள்ள ஆண்மகனுக்கு அரும்பு மீசை அமைந்துள்ளது என்றும் இயற்கையின் படைப்புகளைப் பார்த்து அறிஞர்கள் வியப்படைவது உண்டு. 

இயற்கையின் இத்தகைய படைப்புகள் உணர்த்தும் தகவல் ஒன்று உண்டு.  அதுதான் அறிமுகம்.  தற்பொழுது நடைமுறையில் உள்ள வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால், அதற்குப் பெயர் விளம்பரம்.  பரந்து விரிந்துள்ள இவ்வுலகில்,  ஒருவரைப் பற்றி மற்றொருவர் தெரிந்து கொள்வதற்கும், வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், சமுதாய வளர்ச்சிக்கும் பெரும்பங்கு வகிக்கும் இந்த அறிமுகம் எனப்படும் விளம்பரத்திற்கு உறுதுணைபுரியும் வகையில் கோயில் திருவிழாக்களும்,  திருமண நிகழ்வுகளும் கடந்த காலங்களில் அமைக்கபட்டிருந்தன.  திருமணங்கள் நிச்சயக்கப்படுவதும்,  தொழில் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுவதும்,  கால்நடைகள் உட்பட விவசாயம் தொடர்பான தகவல்களைப் பறிமாறிக் கொள்வதும் ஆன செயல்களுக்குத் திருவிழாக்களும், திருமண நிகழ்வுகளும் தளம் அமைத்துக் கொடுத்தன.  அறிவியல் வளர்ச்சி காரணமாக இந்த அறிமுகம் எனப்படும் விளம்பரம் தற்பொழுது பல்வேறு வடிவங்களில் சமுதாயத்தில் வெளிவருகின்றன.

ஊடகங்களில் விளம்பரங்கள் : 

15-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அச்சு இயந்திரத்தின் உதவிகொண்டு அச்சிட்டு வெளியிடப்படும் விளம்பரங்கள் நடைமுறைக்கு வந்தன. அதைத் தொடர்ந்து 16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளில் வெளியான தினசரி மற்றும் வாராந்திர ஏடுகளில் கட்டணம் பெற்றுக்கொண்டு வர்த்தக விளம்பரங்கள் வெளியிடும் நடைமுறை பழக்கத்திற்கு வந்தது. உற்பத்தி செய்த பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி,  வியாபாரம் செய்வதற்காக அச்சிடப்பட்ட விளம்பர தட்டிகள் 1835-ம் ஆண்டிலேயே இங்கிலாந்து நாட்டின் முக்கிய தெருமுனைகளில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன. இந்த தட்டி விளம்பரங்கள் நாளடைவில் மற்ற நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

செய்தியேடுகளிலும் மற்றும் வார, மாத இதழ்களிலும் கட்டணம் செலுத்தி வெளியான விளம்பரங்கள் சில தவறான தகவல்களையும்,  போலி மருத்துவக் குறிப்புகளையும் மக்களிடையே கொண்டு சேர்த்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.  ‘புகைபிடிப்பது நோயைத் தடுப்பதுமட்டுமின்றி,  நுரையீரலைப் பாதுகாக்கிறது’ என்ற தவறான விளம்பரத்தை இங்கிலாந்திலுள்ள ஒரு பிரபல சிகரெட் தயார் செய்யும் நிறுவனம் ஒன்று வெளியிட்டு, அதன் வியாபாரத்தைப் பெருக்கிய சம்பவம் ஒன்று 1850-களில் நிகழ்ந்துள்ளது.

1920-களில் கண்டுபிடிக்கப்பட்ட வானொலியும்,  1940-களின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சியும் வர்த்தக விளம்பரங்களை அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்றன.  இந்தியாவைப் பொறுத்தமட்டில், 1967-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் வர்த்தக விளம்பரங்கள் தலைகாட்டத் தொடங்கின.

அச்சிட்டு வெளியிடப்படும் தினசரி,  வார இதழ்கள்,  வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் வர்த்த உலகில் ஆதிக்கம் செலுத்திவந்த விளம்பரங்கள் 1990-களின் தொடக்கத்தில் இணையதளத்திலும் கோலோச்சத் தொடங்கின.  கைபேசி,  இமெயில்,  யூ டியூப் போன்றவைகள் மூலம் இணையவழி விளம்பரங்கள் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. விளம்பரம் இன்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலை சமுதாயத்தில் தற்பொழுது நிலவுகிறது.

ஒட்டகத்தின் மனநிலை : 

பொதுமக்கள் பலரின் மனநிலையை ஒட்டகத்தின் மனநிலையோடு ஒப்பிடலாம். ஒட்டகத்தின் மீது பொதியை அதிக அளவில் ஏற்றிவிட்டு,  பின்னர் அதன் மேல் ஏற்றப்பட்ட சுமையிலிருந்து ஒரு சிறிய மூட்டையை ஒட்டகத்தின் பார்வையில் படும்படி கீழே தூக்கிப் போடுவார்கள்.  தன்மீது சுமை குறைக்கப்பட்டதாகக் கருதி,  மனநிறைவுடன் ஒட்டகம் பொதியைச் சுமந்து செல்லும் என்ற அர்த்தம் பொதிந்த கதையை நாம் படித்திருப்போம். பொதுமக்கள் பலரிடம் வெளிப்படும் இம்மாதிரியான ஒட்டகத்தின் மனநிலைதான் வர்த்தக விளம்பரங்களின் வெற்றி ரகசியமாகும்.

எந்த ஒரு பொருளை வாங்கும்பொழுதும்,  அதன் விலை மீது பேரம் பேசி, அதன் விலையைக் கொஞ்சமாவது குறைத்து வாங்கினால்தான் வாடிக்கையாளர்களுக்கு மனத்திருப்தி ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களின் மனநிலையை அறிந்து,  அவர்களைத் தொடர்ந்து தங்களது கடைகளுக்கு வரவழைக்க புத்தாண்டு தள்ளுபடி, ஆடித்தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் உள்ளிட்ட புதுமையான விளம்பரங்களை வர்த்தக உத்திகளாக வியாபார நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாக எப்படி கொடுக்கமுடியும்? என்பதை வாடிக்கையாளர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை.  விலையில் தள்ளுபடி என்ற பெயரில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் பழைய பொருட்களும், தரம் குறைந்த பொருட்களும் விற்பனை செய்யப்படலாம் என்பதையும் வாடிக்கையாளர்கள் மறந்து விடுகின்றனர்.

விளம்பரச்  சந்தை நிலவரம் :

விளம்பரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்களாக அச்சு, வானொலி, சினிமா,  தொலைக்காட்சி மற்றும் இணையதளம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.  அவைகளில் முன்னணியில் இருப்பது தொலைக்காட்சி ஆகும். 2019-ம் ஆண்டைய உலக சந்தை நிலவரப்படி,  43%  விளம்பர வர்த்தகத்தைத் தொலைக்காட்சி கைப்பற்றி, முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து இணையவழி விளம்பரம் 27% பெற்று இரண்டாவது இடத்தையும்,  அச்சிட்டு வெளியிடப்படும் விளம்பரம் 22%  பெற்று மூன்றாவது இடத்தையும், சினிமா மூலமான விளம்பரம் 5% பெற்று நான்காவது இடத்தையும்,  வானொலி மூலமான விளம்பரம் 3% பெற்று கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.  

2020-ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா நோய்த் தாக்கத்தால் மக்கள் அனைவரும் பல மாதங்கள் அவரவர் வீட்டிலேயே  முடங்கிக் கிடந்தனர்.  அச்சிட்டு வெளியிடப்படும் பல செய்தியேடுகள் வெளிவரவில்லை. அதன் காரணமாக கடந்த ஆண்டில் அச்சு விளம்பரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இணையவழி விளம்பரம் 2020-ம் ஆண்டில் வளர்ச்சி பெற்று,  உலக விளம்பரச் சந்தையில் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.  காலப்போக்கில், இரண்டாம் இடத்தில் இருக்கும் இணையவழி விளம்பரச் சந்தை உலக அரங்கில் முதலிடத்தைப் பிடித்துவிடவும் வாய்ப்புள்ளது.

இந்தியாவில் விளம்பரத்திற்காக 2020-ம் ஆண்டில் செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ.91,641 கோடி. இந்த தொகையானது 2019-2020ம் ஆண்டைய இந்தியாவின் மொத்த பட்ஜெட் தொகையில் 3.3% என்பது கவனிக்கத்தக்கது. விளம்பரத்திற்காக உலக நாடுகள் 2020-ம் ஆண்டு செலவிட்ட மொத்த தொகை ரூ.37,95,680 கோடி. இத்தொகையானது 2019-ம் ஆண்டில் விளம்பரத்திற்காக உலகநாடுகள் செலவு செய்ததை விட 12% குறைவு. இந்த சரிவுக்குக் காரணம் கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை எனக் கருதப்படுகிறது. 

எதிர்மறை விளைவுகள் :  

தொழில் வளர்ச்சி, உற்பத்தியான பொருட்களைச் சந்தைப்படுத்துதல், வேலைவாய்ப்பைக் கண்டறிதல், சந்தை நிலவரத்தை நுகர்வோர் எளிதில் அறிந்து கொள்ளுதல், வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விளம்பரங்கள் பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகின்றன என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், அவை சமுதாயத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் குறித்து அதிகமாகப் பேசப்படுவதில்லை. 

இரண்டு வகையான உத்திகளை விளம்பரங்கள் கடைபிடித்து வருகின்றன.  ஏதேனும் ஒருவகையில் ஏக்கத்தையும், தாக்கத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்துவதும்,  அந்த ஏக்கத்திற்கும், தாக்கத்திற்கும் தீர்வாகச் சில வழிமுறைகளைக் கவர்ச்சியான முறையில் வெளிப்படுத்துவதும் ஆன செயல்களை விளம்பரங்களில் காணலாம். வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்ற எண்ணத்தை மக்களிடம் விதைப்பது, மகிழ்ச்சியைப் பணம் கொடுத்து பெற்றுவிடலாம் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் விளம்பரங்கள் வெற்றி பெற்று வருகின்றன. 

சமுதாயத்தில் அதிகரித்துவரும் பாலியல் குற்றங்களுக்கும்,  குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும் விளம்பரங்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.  நடைமுறையில் இருந்துவரும் உணவுப் பழக்கங்கள் உட்பட பாரம்பரிய கலாச்சாரங்களை வர்த்தகத்திற்காக விளம்பரங்கள் மடைமாற்றம் செய்துவருவதையும் காணமுடிகிறது.

வியாபார வளர்ச்சிக்காக உண்மையைத் திரித்து,  தவறான தகவல்களை வெளிப்படுத்தும் விளம்பரங்கள் பல வெளிவருகின்றன. அத்தகைய விளம்பரங்களை நம்பி செயல்படுபவர்கள் உடல் ரீதியான பாதிப்பையும், பொருளாதார இழப்பையும் சந்திக்க நேரிடுகிறது. இம்மாதிரியான சூழலில் தங்களது தார்மீகப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காக ‘பொறுப்பு துறப்பு’ என்ற அறிவிப்புடன் பல அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் விளம்பரங்களை வெளியிடுகின்றன.  ஊடங்களின் தரத்தைப் பொறுத்துதான் நுகர்வோர்கள் அந்த ஊடகத்தில் வெளிவரும் விளம்பரங்களின் தரத்தை அளவிடுகிறார்கள். அந்த நிலையில்,  நுகர்வோர்களின் நலன் காக்க, தவறான விளம்பரங்களை அடையாளம் கண்டறியும் சட்ட ரீதியான அமைப்பின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட வேண்டும். 

நம் நாட்டில் மத்திய,  மாநில அரசுகள் அவரவர் சாதனைகளை விளக்கும் வகையில் அனைத்து அச்சு ஊடகங்களில் முழு பக்க அளவில் விளம்பரங்களை வெளியிடுகின்றன.  அதே போன்று அரசியல் கட்சிகளும் விளம்பரங்களை வெளியிடுகின்றன. இம்மாதிரியான விளம்பரங்களை வெளியிடுவதில் ஏற்படும் செலவுகள் ஒரு பக்கம் இருக்க,  அந்த விளம்பரங்களுக்குத் தேவைப்படும் பேப்பர்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? என்று யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. முதிர்ச்சியடைந்த 17  மரங்கள் வெட்டப்பட்டு, அவைகளில் இருந்து ஒரு டன் பேப்பர் தயாரிக்கப்படுகிறது. அச்சிட்டு வெளியிடப்படும் விளம்பரங்களுக்காக ஆண்டுதோறும் பல லட்சம் மரங்கள் நம்நாட்டிலும், கோடிக்கணக்கான மரங்கள் உலக நாடுகளிலும் வெட்டப்படுகின்றன. விளம்பரத்திற்காக கோடிக்கணக்கான மரங்களின் உயிர்களை ஆண்டுதோறும் தியாகம் செய்ய வேண்டுமா? 

உலக நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் படி,  ஒவ்வொரு நபரும் தினசரி 280 முதல் 310 விளம்பரங்களை ஏதேனும் ஒரு ஊடகம் வாயிலாகப் பார்க்க, படிக்க மற்றும் கேட்கக் கூடிய சூழல்நிலை சமூகத்தில் நிலவி வருகிறது. அதன் விளைவு என்ன? விளம்பரப் படுத்தப்பட்ட பொருள் தேவையானதா மற்றும் தரமானதா? என்பதைச் சிந்தித்துப் பார்க்காமல், அந்த பொருளை வாங்கும் மனநிலைக்குப் பொதுமக்களை விளம்பரங்கள் தள்ளிவிடுகின்றன. 

விளம்பரத் துறையில் சுய ஒழுக்கத்தை ஏற்படுத்தவும், நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கவும் மும்பாயைத் தலைமையிடமாகக் கொண்டு 1985-ம் ஆண்டில் ‘விளம்பர தர நிர்ணய கவுன்சில்’ (Advertising Standards Council of India) என்ற அரசு சாரா தன்னார்வ அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நிறுவப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும் சில விளம்பரங்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும்,  அவைகளை உடனடியாக தடைசெய்யப்பட வேண்டுமென்றும் சமூக அக்கறையுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை கடந்த மாதம் வழங்கில் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது விளம்பரங்களின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. 

அறிவு, அனுபவம், அறிவியல் போன்றவைகள் உலகை வழிநடத்திவந்த காலம் கடந்து சென்று,  தற்பொழுது விளம்பரங்கள் உலகை வழிநடத்தத் தொடங்கிவிட்டன. தேர்தல்களிலும் விளம்பரங்கள் பெரும்பங்கு வகிக்கத் தொடங்கிவிட்டன. விளம்பரங்களைக் கண்டு மதி மயங்கிவிடாமல்,  தடம்பார்த்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 

***

38 thought on “உலகை வழிநடத்தும் விளம்பரங்கள்”
 1. மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்.
  "முதிர்ச்சியடைந்த 17 மரங்கள் வெட்டப்பட்டு, அவைகளில் இருந்து ஒரு டன் பேப்பர் தயாரிக்கப்படுகிறது. அச்சிட்டு வெளியிடப்படும் விளம்பரங்களுக்காக ஆண்டுதோறும் பல லட்சம் மரங்கள் நம்நாட்டிலும், கோடிக்கணக்கான மரங்கள் உலக நாடுகளிலும் வெட்டப்படுகின்றன. விளம்பரத்திற்காக கோடிக்கணக்கான மரங்களின் உயிர்களை ஆண்டுதோறும் தியாகம் செய்ய வேண்டுமா? " இந்த தகவலை எனது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களுடைய எதிர்காலத்தில் அவர்கள் தாள்களை வீணடிக்காமல் பயன்படுத்துவதை உறுதி படுத்துவேன்….. நன்றி….

 2. தங்களது முந்தைய ஊழல் குறித்த கட்டுரையில் நேர்மையாக வாழ இளமையிலேயே கற்றுத் தரப்பட வேண்டும் என்பது மிகச்சரியான கூற்று அய்யா. R. S. Jeevanandam

 3. ஜயா ,இக்கட்டுரையில் பல கருத்துக்களையும் சிகரெட் உடலுக்கு நல்லது என விளம்பரப்படுத்தப்பட்ட
  செய்தியையும் அறிந்து கொண்டேன்

 4. ஜயா ,இக்கட்டுரையில் பல கருத்துக்களையும் சிகரெட் உடலுக்கு நல்லது என விளம்பரப்படுத்தப்பட்ட
  செய்தியையும் அறிந்து கொண்டேன்

 5. சிறப்பானதொரு கட்டுரை. விளம்பரம் இன்றி இன்றுஎந்த பொருளையும் சந்தைப்படுத்த முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. அதுவும் சமூக ஊடகங்கள் வரவால் விளம்பரங்களின் உண்மைத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது. நாம்தான் உண்மையை ஆய்ந்து தெளிய வேண்டும்.

 6. Lots of valuable information in this article dear Sir and these kind of articles going to be very helpful for the common people in our country and we are expecting more aricles from you dear Sir.

 7. Yes sir, marketing is important for the business. I am also doing my business in digital marketing methods only. Your article is very much useful.

 8. இந்த தேவையற்ற விளம்பரக் கூச்சலில், இயற்கை செய்யும் விளம்பரத்தைக் கவனிக்க ஆளில்லை.
  நல்ல அருமையான செறிவான சமுதாயப் பொறுப்புணர்வோடு எழுதப்பட்ட கட்டுரை..

 9. நன்றி திரு. மோகன்.

  குழந்தைப் பருவத்தில் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய பழக்கங்கள் பல கற்றுக் கொடுக்கப்படுவது இல்லை. அதுவே பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது.

  உங்களது பதிவு தொடரட்டும்
  .
  கண்ணப்பன்

 10. Respected sir , your article on advertisement gives wonderful message to the society and spreads awareness to the fellow beings . The environmental crime ( cutting of trees to create paper for advertisement) is linked with the advertising agencies is very well explained and the camel example suits the present life of people attracted by advertisement. Hats off to you sir.

 11. இயற்ைகையோடு இனைந்து வாழும் வாழ்ந்த மனிதர்கள் இன்று இல்லை.

 12. இயற்ைகையோடு இனைந்து வாழும் வாழ்ந்த மனிதர்கள் இன்று இல்லை.

 13. Well done sir, really respectable and social responsible words are showing up in this above article, (super perfect) good angles of social view will change this society, our hearty congrats for upcomings , thanking you sir

 14. ஐயா
  புள்ளி விபரம் அருமை

  1 டன் காகிதத்திற்கு 17 முதிர்ந்த மரங்கள் பலியாவது வருத்தமளிக்கிறது

  விளம்பர கவுன்சில் என்ற அமைப்பைப் பற்றி இதன்மூலம் அறிந்துகொண்டேன்.

 15. Respected Sir, Thank you for the very nice article. As you have rightly said we need to change the way we live. As of now we are living in a self propagating world which leads to comparison and then to other paths.
  Once again thank you for the wonderful article.

 16. Respected sir,
  Very nice article with lots of information and statistical truths.

  The effect of this article would definitely promote the spirit to appreciate the life style of the downtrodden which is in tune with the nature and the practice of looking down upon them will gradually be over throwed.
  My humble prayer is that May God bless you with good health and happiness for ever.

 17. Respected sir,
  Very nice article with lots of information and statistical truths.

  The effect of this article would definitely promote the spirit to appreciate the life style of the downtrodden which is in tune with the nature and the practice of looking down upon them will gradually be over throwed.
  My humble prayer is that May God bless you with good health and happiness for ever.

 18. விளம்பரம் உருவான பாதையை மிக அருமையாக இக்கட்டுரை விபரிக்கிறது.விளம்பரம் மூலம் ஆக்கல் அழித்தல் இரண்டும் நடக்கும் என்பது புரிகிறது.அருமையான கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *