இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் உள்ளடக்கிய சிலப்பதிகாரம்முத்தமிழ்க் காப்பியம் என்ற சிறப்பையும், தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் என்ற பெருமையையும் உடையது. காற்சிலம்பை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இக்காப்பிய நிகழ்வுகள் முறையே சோழ, பாண்டிய, சேர நாடுகளில் நடைபெற்றுள்ளன.

உயர்குடியில் பிறந்த அரசர்கள் போன்றவர்களை மையமாகக் கொண்டு, அவர்களின் சிறப்புகளையும், நற்குணங்களையும் புகழ்ந்துரைக்கும் விதத்தில் இலக்கியங்கள் படைக்கப்பட்டு வந்த அக்காலத்தில், சமூகத்தில் ஒருவராக வாழ்ந்த ஒரு பெண்ணைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு படைக்கப்பட்ட முதல் பெருங்காப்பியம் என்ற சிறப்பு உடையது சிலப்பதிகாரம்.

தொன்மையான தமிழ் சமூகத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், கலைகள், சமய நெறிகள், அரசியல், நிர்வாகமுறைகள், நீதி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை இக்காப்பியத்தில் இளங்கோவடிகள் வெளிப்படுத்தியுள்ளார்.

இல்லற வாழ்க்கையில் தடம்புரண்ட கோவலன், தான் செய்த தவறுகளை உணர்ந்து, தன் மனைவியுடன் மீண்டும் இணைகிறான். வணிகர் குலத்தில் பிறந்த அவன், பொருள் ஈட்டுவதற்காக தன் மனைவி கண்ணகியை அழைத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து மதுரை செல்கிறான்.  

கோவலனின் கடந்த கால வாழ்க்கையைப் புறந்தள்ளிவிட்டு, அவன் தொழில் தொடங்குவதற்கு மூலதனமாக தன்காற்சிலம்புகளில் ஒன்றைக் கொடுக்கிறாள் கண்ணகி.  அந்த காற்சிலம்பை விற்பனை செய்ய சென்ற இடத்தில், அந்த காற்சிலம்பு திருட்டுபோன பாண்டிய அரசி கோப்பெரும்தேவியின் காற்சிலம்பு என கோவலன் மீது பொய்யாகத் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, அதற்காக அவனுக்கு மரண தண்டனையைப் பாண்டிய மன்னன் வழங்கினான்.

நாடு போற்றும் பெருவணிக குடும்பத்தில் பிறந்த தன் கணவன் கோவலன் கள்வன் அல்ல என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பிய கண்ணகி, பாண்டிய மன்னனிடம் நியாயம் கேட்க அரண்மனை நோக்கிப் புறப்பட்டாள்.

கண்ணகி செய்ததும், செய்யாததும்

தன் கணவன் கள்வன் அல்ல என்பதும், பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டதும் உண்மையாக இருந்தாலும்,  சோழ நாட்டைச் சார்ந்த தனக்கு பாண்டிய மன்னிடம் உரிய நீதி கிடைக்குமா?  தனி ஒரு பெண்ணாகச் சென்றால், பாண்டிய மன்னனைச் சந்தித்து முறையிட அனுமதி கிடைக்குமா? தன் உறவினர்கள் யாரையாவது மதுரைக்கு வரவழைக்கலாமா? அல்லது அரண்மனையில் செல்வாக்குள்ள நபர்கள் யாரையாவது உடன் அழைத்துக் கொண்டு மன்னனைச் சந்திக்கச் செல்லலாமா?  என்று கண்ணகி சிந்திக்கவில்லை.

நாட்டில் நிலவும் இன்றைய நிலை என்ன? எந்த ஒரு நியாயமான கோரிக்கையாக இருந்தாலும், அதன் மீது சட்ட ரீதியான நடவடிக்கையோ அல்லது நிவாரணமோ எதிர்பார்த்து காவல்துறை, வருவாய்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கலாம் என்று முடிவு செய்ததும், தன் கோரிக்கை குறித்து அரசு அதிகாரிகளிடம் சிபாரிசு செய்ய யாரைப் பிடிக்கலாம்? அரசு அலுவலகத்திற்கு யாரை உடன் அழைத்துச் சென்றால் காரியம் உடனடியாக நடக்கும்? என்று சிந்தித்து செயல்படும் நிலையை இன்றைய சமுதாயம் பழக்கப்படுத்திக் கொண்டது.

ஆனால், கண்ணகி என்ன செய்தாள்?  கையில் ஒற்றைச் சிலம்பை எடுத்துக் கொண்டு, ஒரு குற்றமும் செய்யாத தன் கணவனைக் கள்வன் எனக் குற்றம் சுமத்தி, மரண தண்டனை கொடுத்த பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு, முறையிடுவதற்காக தனி ஒரு பெண்ணாக பாண்டிய மன்னனின் அரண்மனைக்குச் சென்றாள்.

அரண்மனை காவலாளியிடம் நயந்து பேசி, தன் மீது இரக்கம் ஏற்படும் வகையில் சோக உணர்வை வெளிப்படுத்தி, பாண்டிய மன்னனை நேரில் பார்த்து, தன்னுடைய கோரிக்கையை தெரியப்படுத்துவதற்கு அனுமதி அளிக்கும்படி காவலாளியிடம் கண்ணகி கேட்கவில்லை.

“வாயில் காவலனே! நல்ல அறிவு அற்றுப்போன, செங்கோல் தவறிய, கொடுங்கோல் மன்னனுடைய அரண்மனையின் வாயில் காவலனே! கணவனை இழந்த பெண் ஒருத்தி ஒற்றைச் சிலம்பைக் கையில் ஏந்தி, மன்னனைச் சந்திக்க அரண்மனை வாயிலில் உள்ளாள் என்பதை மன்னனிடம் தெரியப்படுத்து” என்று கண்களில் அனல் தெரிக்க காவலாளியிடம் கூறினாள் கண்ணகி.

காவலாளி செய்ததும், செய்யாததும்

‘தலைவிரி கோலத்தில், சினத்துடன் அரண்மனை வாசலுக்கு வந்திருக்கும் இந்த பெண்ணுக்கு மன்னனைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், மன்னனைத் தரக்குறைவாகப் பேசி,  அவர் மனதைப் புண்படும்படி செய்துவிடுவாளோ? அதன் விளைவாக மன்னனின் கடுங்கோபத்திற்குத் தான் ஆளாக நேரிடுமோ? அவள் மன்னனைச் சந்திக்காதபடி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அவளைத் திருப்பி அனுப்ப முயற்சி செய்யலாமா?’ என்று அரண்மனை வாயில் காவலாளி சிந்திக்கவில்லை.

கண்ணகியை அரண்மனை வாயிலில் நிற்க வைத்துவிட்டு, அரண்மனைக்குள் சென்ற காவலாளி, “ஒற்றைச் சிலம்பைக் கையில் ஏந்திய, கணவனை இழந்த, கடும் சினம் கொண்ட பெண் ஒருத்தி மன்னனைச் சந்திக்க வந்துள்ளாள்” என்று நெஞ்சம் படபடக்க மன்னனிடம் தெரியப்படுத்தினான்.

மன்னன் செய்ததும், செய்யாததும்

‘செங்கோல் தவறிய கொடுங்கோல் மன்னன்’ என்று அரண்மனை காவலாளியிடம் சினத்துடன் வார்த்தைகளை உதிர்த்த அந்த பெண்ணுக்கு, அரசனுக்கு உரிய மரியாதை கொடுக்கத் தெரியாதா? அரசனை அவமதித்த குற்றத்தை அல்லவா அவள் செய்துள்ளாள்? அவளை ஏன் சந்திக்க வேண்டும்? அவள் பேசிய கடுஞ்சொற்களுக்காக அவளுக்கு தண்டனை வழங்கினால் என்ன தவறு? என்று பாண்டிய மன்னன் சிந்திக்கவில்லை.

கணவனை இழந்த அந்த பெண்ணின் சினம் ஓரிரு நாட்களில் தனிந்துவிடும். அது வரை அவளது சந்திப்பைத் தள்ளிப் போட்டால் என்ன? என்றும் பாண்டிய மன்னன் சிந்திக்கவில்லை. அவசர அலுவல் காரணமாக அந்த பெண்ணைச் சந்திக்க இயலவில்லை என்றும், அரசவையில் உள்ள அமைச்சரைச் சந்தித்து, அந்த பெண் தன் குறையை உடனடியாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் பாண்டிய மன்னன் ஆணையிடவில்லை.

அரண்மனை வாயிலில் கண்ணீருடன் காத்திருந்த கண்ணகி, பண்டிய மன்னனைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டாள். அரசியின் காற்சிலம்பு திருடியதாக திருட்டுக் குற்றம் பொய்யாக சுமத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட கோவலனின் மனைவி என்று தன்னை அவள் அறிமுகம் செய்துகொண்டாள். கோவலன் கள்வன் அல்ல என்பதை பாண்டிய மன்னின் அரசவையில் கண்ணகி மெய்பித்துக் காட்டினாள். மன்னனும் நிகழ்ந்த தவறை உணர்ந்துகொண்டான்.

‘உன் கணவன் கோவலன் மீது கள்வன் என்று பழிச்சொல் ஏற்படக் காரணமாக இருந்தவர் பொற்கொல்லர். அதற்கு நான் பொறுப்பல்ல’ எனறு பாண்டிய மன்னன் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை.

“நடந்தது நடந்து விட்டது. இனி கோவலன் உயிர் பெற்று வரமுடியாது. நடந்த சம்பவத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம். உனக்கு என்ன வேண்டுமென்று கேள். உடனடியாக அதைச் செய்து கொடுக்க ஆணையிடுகிறேன்’ என்று நடந்த அநீதிக்கு விலை பேசவில்லை பாண்டிய மன்னன்.

‘என்னுடைய கொற்றத்தின் கீழ் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது. குற்றம் செய்யாத ஒருவரைக் கள்வன் எனத் தீர்மானித்து, அவருக்கு மரண தண்டனை வழங்கிய குற்றவாளி நான்’ என்று வருத்தப்பட்ட பாண்டிய மன்னனைப் பார்த்து, ‘மன்னா, பொற்கொல்லன் செய்த சூழ்ச்சியால்தான் கோவலன் காற்சிலம்பு திருடிய கள்வன் எனக் கருதி, அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  எனவே, அந்த அநீதிக்கு நீங்கள் பொறுப்பு அல்ல’ என்று பாண்டிய மன்னனுக்கு அரசி கோப்பெருந்தேவி ஆறுதல் சொல்லவில்லை.

‘குடிமக்களைக் காக்கும் பொறுப்பில் இருந்து தவறிய நான் உயிர்வாழத் தகுதியற்றவன்’ என்று கருதிய பாண்டிய மன்னன் அரசவையிலேயே உயிர் நீத்தான். அதைத் தொடர்ந்து, அரசியும் உயிர் நீத்தாள்.

இன்றைய நிலை

தொழில் செய்து பிழைப்பு நடத்த சோழ நாட்டில் இருந்து பாண்டிய நாட்டுக்கு தன் கணவனுடன் வந்த கண்ணகி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்க தன் உறவினர்களை மதுரைக்கு வரவழைக்கவில்லை. மதுரையிலுள்ள செல்வந்தர்களையோ அல்லது அரண்மனையில் செல்வாக்கு உள்ளவர்களையோ உடன் அழைத்துக் கொண்டு, பாண்டிய மன்னனிடம் முறையிட கண்ணகி செல்லவில்லை. தான் ஒரு பெண் என்றும் தயக்கம் காட்டவில்லை. பாண்டிய மன்னனை நேருக்கு நேர் சந்தித்து, தன் கணவன் கள்வன் என்று மன்னன் வழங்கிய தீர்ப்பு பிழையானது எனக் கூறி, அதை நிருபணம் செய்தாள்.

தான் வழங்கி தவறான தீர்ப்பு ஒரு அப்பாவியின் உயிரைப் பறித்து விட்டது என்பதை உணர்ந்த பாண்டிய மன்னன், தன் தவறை மறைக்கவோ அல்லது அதை பொற்கொல்லன் மீது திசை திருப்பவோ அல்லது கண்ணகியிடம் பேரம் பேசி அவளைச் சமாதானம் செய்யவோ முயற்சி எதுவும் செய்யவில்லை. மாறாக, தன் நிர்வாகத்தின் கீழ் நிகழ்ந்த தவறுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு செயல்பட்டான் பாண்டிய மன்னன்.

தவறைச் சுட்டிக் காட்டும் தைரியமும், செய்த தவறை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் கொண்டவர்களாக நம் முன்னோர்கள் இருந்துள்ளதை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்றைய நிலை என்ன? 

நிர்வாகத்தில் இருப்பவர்களிடம் அவர்களின் தவறுகளை நேரிடையாகச் சுட்டிக்காட்டினால், அவர்கள் தவறாக எண்ணிவிடுவார்களோ?  அதன் காரணமாக தன்னுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வைத் தராமல் இருந்து விடுவார்களோ? என்ற அச்சம் இன்றைய சமுதாயத்தில் பரவலாக நிலவி வருகிறது. அதன் காரணமாக, செல்வாக்கு உள்ளவர்கள் யாரையாவது சிபாரிசுக்கு அழைத்துக்கொண்டு நிர்வாகத்திடம் சென்று முறையிடும் மனநிலைக்கு இன்றைய சமுதாயம் மாறிவிட்டது.

செய்த தவறுகளை ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்? யார் மீது அந்த தவறுகளை திசை திருப்பி விடலாம்? என்ற மனப்பான்மையுடன் செயல்படும் இன்றைய நிர்வாக அமைப்பைப் பார்க்கும் பொழுது, இவர்கள் இப்படி ஏன் மாறிவிட்டார்கள்? இவர்களின் செயல்பாடுகளில் நல்லதொரு மாற்றம் வராதா? என்று எண்ணத் தோன்றுகிறது.

***

10 thought on “இப்படி ஏன் மாறிவிட்டார்கள்?”
 1. வணக்கம் ஐயா,
  சமுதாயத்தின் இன்றைய நிலைய ஒரு பெருங்காப்பியத்தினூடே தெளிவாக சுருக்கமாக கூறிவிட்டீர்கள். அரசன் அன்று (அந்த காலகட்டத்தில்) கொல்வான். என்ற பழமொழிக்கேற்ப சிறு விசாரணை நடத்தி தண்டனை தருவார்கள். அதுமட்டுமல்ல குடிகளுக்கான கட்டளைகளை தெளிவாக கல்வெட்டுகள் மற்றும் முரசு மூலமாக தெரியப்படுத்தினர். இன்றைய நிலையில், மக்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்றை மட்டும் சொல்லி கொடுத்து விட்டு, மக்களின் உரிமைகள் மற்றும் சட்டக் கல்வியை மறைத்து விட்டனர். சில சட்டங்களின் உட்பிரிவுகள் உண்மை குற்றவாளிகள் எளிதாக தப்பும் வகையில் புழக்கத்தில் இன்றும் உள்ளது. ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் கூட நமது சமுதாயத்தில் இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே சட்ட கல்வியை அடிப்படை கல்வியின் கீழ் கொண்டு வருவதால் குற்றங்களும் அதன் தண்டனைகளும் பற்றிய பொதுவான புரிதல் சமுதாய அனைத்து தரப்பு மக்களுக்கும் யாருடைய சிபாரிசும் இன்றி தம் பிரச்சனைகளை நேரடியாக கையாளத் துவங்குவர். அரசியல் புரட்சி கூட ஏற்படலாம். நன்றி

 2. ஐயா, இது ஒரு மாறுபட்ட சிந்தனை விளக்கம். சிலப்பதிகாரத்தை ஆய்வு செய்தவர்களும் விளக்கவுரை தந்தவர்களும் இதுவரை செய்யாத பகுப்பாய்வு! மறைந்த காவல் துறை இயக்குனர் திரு.சு.ஸ்ரீபால், ஐபிஎஸ் அவர்கள் சிறந்த முறையில் சிலப்பதிகாரம் பற்றி சொற்பொழிவு ஆற்ற நான் கேட்டிருக்கிறேன். ஆனால், அது இலக்கிய சிந்தனை மட்டுமே!

 3. ச.அருணகிரிநாதன் ஐயா தங்களின் சிந்தனை இன்றைய ஆட்சியாளர்களிடமும் , அதிகாரிகளிடம் வர வேண்டும்.

 4. அய்யா வணக்கம்
  கண்ணகி, மன்னன், காவலாளி இவர்கள் செய்ததும் செய்யாததும் விளக்கம் மிக அருமை
  இன்றைய நிலைப்பற்றி மிக சிறப்பாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
  நியாயத்தை தனி ஒருவன் நேர்மையாக செயல்படலாம் என்று தைரியத்தை இந்த கருத்து அமைந்துள்ளது நன்றி

 5. மனித வாழ்வில்
  நீதியும், நேர்மையும்
  உயிரும், உடலுமாக இருக்க வேண்டியது
  என்பதை எடுத்துரைக்கும் அருமையான காவிய கட்டுரை.

  இந்தியாவில் தற்போதுள்ள
  ஆங்கிலேயர்
  சட்ட முறையை
  நீக்கிவிட்டு,
  சிலப்பதிகாரம், ராமாயாணம், மகாபாரதம்…..
  போன்ற இந்திய புராணம், இதிகாசங்களில் உள்ள சட்ட நீதிகளை
  நம் நாட்டில் நடைமுறைபடுத்தினால், உலகத்திற்கே
  இந்தியா நீதிதேவதையாக திகழும். என்பதில்
  சந்தேகமிலலை.

  இக்காலத்திற்கு ஏற்ற எடுத்துரைக்கும் அருமையாக கட்டுரை.

 6. மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்
  சிலப்பதிகாரம் என்ற பெருங்காப்பியத்தின் சுருக்கத்தைச் சொல்லி சமுதாயத்திலும் அரசு மற்றும் தனியார் துறைகளிலும் நடைபெறும் அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள்…. மிக அருமையான பதிவு
  அய்யா இன்றய சமுதாயத்தில் சாதாரண பதவியில் உள்ளவர்கள் முதல் உயர் பதவிகளில் உள்ளவர்கள் வரையிலானவர்களில் பெரும்பாலானவர்கள் பதவி மோகம் கொண்டவர்களாவும், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களாகவும், தான் பதவி வகிக்கும் இடத்தை நேர்மையற்ற முறையில் தக்க வைத்துக் கொள்பவர்களாகவும், சுயநலம் மிகுந்தவர்களாகவும்… etc., இருக்கிறார்கள்.. இப்படிப்பட்டவர்களிடம் நேர்மையான முறையில் பணிபுரிபவர்கள் நியாயமான விடயங்களை நாசூக்காக எடுத்துச் சொன்னாலும் அதனை ஆராயாமல், “எனக்கு கீழே உள்ளவன் என்னை மதிக்யாமல் நடப்பதா..? “என்று திரித்து நியாயமானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முனைவது அல்லது பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் நேர்மையானவர்கள் அப்படிப்பட்ட நபர்களை எதிர்த்து கால விரயம் செய்வதை விட ஒதுங்கி இருப்பதே மேல் என்ற எண்ணத்தில் தள்ளப்படுவதை பெரும்பாலும் காணமுடிகிறது…… தனிநபர் மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு அது நடைமுறைக்கு வரும் காலம் வரை இந்த சூழ்நிலை நிலவுவதோடு அதிகரிக்கவே செய்யும் என்பது எனது தனிப்பட்ட கருத்து….. நன்றி…. ப. மோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *