தற்கொலையை நோக்கி பயணிக்க வைக்கும் “லோன் ஆப்”

அறிவியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சியை மனித சமுதாயம் அடைந்திருந்தாலும்,  விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகள் பல இருக்கின்றன என்பதை அவ்வப்பொழுது நிகழும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

தினசரி வாழ்க்கையை நகர்த்துவதற்கு விலங்குகள் மற்றும் பறவைகள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். அவைகளைக் கண்டு பயந்து, விலங்குகளும் பறவைகளும் தற்கொலை செய்து கொள்வது இல்லை. ஆனால், மனிதர்களோ வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்கள், எதிர்பாராத தோல்விகள், எதிர்கொள்ள முடியாத சவால்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் ஒரே மருந்து தற்கொலை எனக் கருதுகின்றனர்.

தற்கொலைகள்: 

வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு சவால்களை மதி நுட்பத்துடன் எதிர்கொண்டு, வெற்றி என்னும் இலக்கை நோக்கி பயணிக்கும் மனித சமுதாயத்தில், மனச்சோர்வு காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் முடிவைச் சில நேரங்களில் சிலர் எடுத்துவிடுகின்றனர். தவறான வாழ்க்கைப் பாதை எனத் தெரிந்தும், அந்த பாதையில் பயணித்தவர்களும் காலப்போக்கில் தற்கொலையில் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

தன் மானத்திற்கு இழுக்கு நேரிட்டால் உயிர் வாழக் கூடாது என்ற கவரிமானின் குணம் கொண்டவர்களும் தற்கொலை முடிவைத் தேர்ந்தெடுத்த சம்பவங்கள் பல கடந்த காலத்தில் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளன. 

வறட்சி மற்றும் பஞ்சத்தின் காரணமாக தான் பெற்றெடுத்த ஏழு குழந்தைகளும் உணவின்றி பசியால் வாடிய துயரம் தாங்காத நல்லதங்காள்,  தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவளது அண்ணன் வீட்டுக்குச் சென்றாள். அவளது அண்ணியின் ஏளனப் பேச்சும், குழந்தைகளை அவளது அண்ணி நடத்திய விதமும் நல்லதங்காளின் மனதை வேதனை அடையச் செய்தது. தன்மானத்தை இழந்து வாழக் கூடாது எனக் கருதிய நல்லதங்காள் தனது குழந்தைகள் ஏழுவரையும் பாழடைந்த கிணறு ஒன்றில் தூக்கிப்போட்டுவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக வரலாற்றுச் சம்பவங்கள் கூறுகின்றன.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, கந்து வட்டிக்குக் கடன் வாங்கிய பலர், வாங்கிய கடனைக கட்ட முடியாமல் மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பல உண்டு.

தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, குடும்பச் சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக படித்தவர், படிக்காதவர் மற்றும் ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த கடந்த ஆண்டில், நோய் கண்டு பயந்து பலர் நம் நாட்டில் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் தலைநகரான டெல்லியில் தொடங்கி தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இணையதளம் வழியாக லோன் ஆப்மூலம் சிறு கடன் வாங்கியவர்களில் பலர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் ஏற்பட்ட அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி கடந்த சில மாதங்களாகப் பொதுவெளியில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

லோன் ஆப்: 

கடன் கொடுப்பவரை நேரில் சந்திக்காமலும், கடன் வாங்குவதற்காக எவ்வித ஆதாரமோ அல்லது கையெழுத்து போட்ட விண்ணப்பமோ கொடுக்காமலும் இணையதளம் வழியாக லோன் ஆப்மூலம் தொடர்பு கொண்டு, கடன் வாங்குபவர் தன்னுடைய முகவரி, கைபேசி எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களைத் தெரியப்படுத்தினால் ஓரிரு நாட்களிலே ரூ. 5,000/- முதல் ஓரிரு லட்சம் ரூபாய் வரை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவல் பொதுமக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது.  ஓரிரு வாரங்களிலேயே பல லட்சம் பேர், பின் விளைவுகள் தெரியாமல், மகிழ்ச்சியுடன் கடன் பெற்றனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி மழையில் முளைத்த காளான் போன்று குறுகிய காலத்திலேயே சிதைந்துவிட்டது.

லோன் ஆப் மூலம் கடன் பெற்றவர்கள் யார்? எதற்காக அவர்கள் கடன் வாங்குகிறார்கள்? வாங்கிய கடனை அவர்களால் ஏன் கட்ட முடியவில்லை? தற்கொலை செய்யும் சூழல் அவர்களுக்கு எப்படி ஏற்படுகிறது? லோன் ஆப் மூலம் கடன் கொடுப்பவர்கள் யார்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடை தேடும்பொழுது, நம் சமுதாயத்தின் கள நிலவரம் வெளிப்படுகிறது.

வாங்கிய கடனை முறைப்படி பயன்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கடனைத் திருப்பிக் கொடுப்பவர்கள் ஒரு ரகம். ஆடம்பர வாழ்க்கை மீது மோகம் கொண்டு, தங்களது வருமானத்திற்குள் வாங்க முடியாத பொருட்களை வாங்குவதற்காகக் கடன் வாங்குபவர்கள் மற்றொரு ரகம். இவர்கள் ஒரு இடத்தில் வாங்கிய கடனை அடைப்பதற்காக மற்றொரு இடத்தில் சங்கிலித் தொடராகக் கடன் வாங்கி, அதிலிருந்து மீண்டு வர முடியாத புதைக்குழிக்குள் மூழ்கிவிடுகிறார்கள்.

வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் உரிய ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்க இயலாதவர்கள், குறிப்பாக மேலே குறிப்பிட்ட இரண்டாம் ரகத்தைச் சார்ந்தவர்கள்தான் லோன் ஆப் மூலம் கடன் வாங்கியவர்கள். கடன் கேட்பவர்கள் பற்றிய விவரங்கள் குறித்து கள விசாரணை எதுவும் மேற்கொள்ளாமல், லோன் ஆப் மூலம் ஆன் லைனில் கடன் கேட்டு தகவல் அனுப்பிய ஓரிரு நாட்களில் கடன் தொகையில் வட்டியைப் பிடித்தம் செய்து கொண்டு, மீதமுள்ள தொகையைக் கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எளிதில் கடன் கிடைத்த மகிழ்ச்சியில், உறவினர்களையும் நண்பர்களையும் லோன் ஆப் மூலம் கடன் வாங்க வழிகாட்டியாகவும் அவர்களில் பலர் இருந்துள்ளனர்.

மடியைப் பிடித்து மாங்காய் போட்டு, சிண்டைப் பிடித்து பணம் வசூல் செய்வதுஎன்ற பழமொழியை லோன் ஆப் நினைவு படுத்துகிறது. எளிதில் கடன் கிடைக்கிறது என்ற மனநிலையை மக்களிடம் லோன் ஆப் ஏற்படுத்தி, வாடிக்கையாளர்கள் பலரை எளிதில் கவர்ந்து விடுகிறது. வாங்கிய கடனைக் கட்ட முடியாதவர்கள் கூட மற்றொரு லோன் ஆப் மூலம் கடன் பெறலாம் என்ற வகையில் ஆயிரக்கணக்கான லோன் ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கந்துவட்டிக்காரன், ஈட்டிக்காரன் என்று குறிப்பிடப்படுபவர்களுக்கும், லோன் ஆப்ஸ் மூலம் கடன் கொடுப்பவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று கந்துவட்டிக்காரர்கள் மிரட்டுவார்கள்.  லோன் ஆப் மூலம் கடன் கொடுத்தவர்கள் நேரில் வரமாட்டார்கள். உறவினர்கள், நண்பர்கள் என கடன் வாங்கியவர்களோடு தொடர்பில் இருப்பவர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தரக்குறைவான தகவல்களை அனுப்பி, கடன் வாங்கியவர்களை நிலைகுலைய வைத்துவிடுவார்கள். இம்மாதிரியான தனிநபர் தாக்குதல்களுக்குப் பயந்து வாங்கிய கடனை அடைத்துவிடுபவர்களும் உண்டு. கடனை அடைக்க வழி தெரியாமல், தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

லோன் ஆப் மூலம் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று போல் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. அதைக் கட்டுக்குள் கொண்டு வர 600-க்கும் மேற்பட்ட லோன் ஆப்கள் இதுநாள்வரை முடக்கப்பட்டுள்ளன.

தற்கொலையில் முதலிடம்

2019-ம் ஆண்டில் 1,39,123 பேர் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு 381 பேர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் நம்நாடு இருந்து வருகிறது. 10,335 மாணவர்களும்,18 வயதுக்கும் குறைவான 9,613 சிறார்களும் 2019-ம் ஆண்டில் நம்நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  கடந்த 25 ஆண்டுகளில் 2019-ம் ஆண்டில்தான் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 70% பேர் ஆண்கள்; 30% பேர் பெண்கள் என்றும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

தற்கொலை செய்து கொள்வதில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை என்னஅதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்றும்,2019-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 13,493 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்றும், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலை அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது என்றும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

லோன் ஆப் நடத்தியவர்கள்: 

லோன் ஆப் மூலம் கடன் கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டவர்கள் யார்என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ன.  சீனாவைச் சேர்ந்த ஒரு கும்பல் இந்தியாவில் ஒரு சில இடங்களில் கால் செண்டர்களைத் தொடங்கி, அவைகளில் நூற்றுக்கணக்கான இந்தியர்களைப் பணியமர்த்தினர். ஆயிரக்கணக்கான லோன் ஆப்களை அவர்கள் உருவாக்கி, கைபேசி உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்கள் மூலம் ஆன் லைனில் கடன் வாங்கும் முறையைப் பொதுமக்களிடத்தில் விளம்பரப்படுத்தினர்.

இந்த லோன் ஆப் பொதுமக்களிடையே மிக வேகமாகப் பரவக் காரணமாக கொரோனா ஏற்படுத்திய பொருளாதார மந்தநிலை மட்டுமின்றி, கடன் வாங்குவதற்கான நிபந்தனைகள் பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. கடன் வாங்க எந்த ஆதாரமோ அல்லது எழுத்து மூலமான விண்ணப்பமோ கொடுக்க வேண்டியது இல்லை. ஆன் லைனில் கடன் கேட்டு பதிவிட்ட ஓரிரு நாட்களிலேயே அவரவர் வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டுவிடும். ஒரு நபர் பல்வேறு லோன் ஆப் கள் மூலம் பல கடன்களை வாங்கலாம்.

சீன நாட்டினர் லோன் ஆப்மூலம் பொதுமக்களுக்கு நேரடியாகக் கடன் கொடுக்க முடியுமாஅதற்கான அனுமதிகள் இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடம் முறைப்படி பெற்றுதான் இந்த தொழிலில் ஈடுபட்டனரா? பொதுமக்களுக்குக் கடன் கொடுப்பதற்குத் தேவையான பணத்தை அவர்கள் சீன தேசத்தில் இருந்து முறைப்படி இந்தியாவிற்குக் கொண்டு வந்தனராபோன்ற கேள்விகள் குறித்து புலன் விசாரணையில் கிடைத்த விளக்கங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

லோன் ஆப் மூலம் கடன் பெற்ற பலர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து தெலுங்கானா காவல்துறையினர் இச்செயல்களில் ஈடுபட்ட சீனர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த இந்தியர்கள் உட்பட 17 பேர்களைக் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய 75 வங்கி கணக்குகளைக் கண்டறிந்து, அந்த வங்கி கணக்குகளில் இருந்த ரூ. 423 கோடியை முடக்கினர். அவர்களது விசாரணையில் ஆன் லைன் மூலம் ஒரு கோடியே நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கடன்கள் கொடுத்திருப்பதாகவும், அப்படி கொடுக்கப்பட்ட கடன்களின் மதிப்பு ரூ. 21,000 கோடி எனவும் தெரியவந்துள்ளது.  

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இத்தகைய செயல்களில் ஈடுபட்ட சீனர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சீனர்கள் சிலர் அவர்களது விசா காலம் முடிவடைந்த பின்னரும் இந்தியாவில் தங்கி இம்மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.  

சீனர்கள் இந்தியாவில் லோன் ஆப் மூலம் கடன் கொடுக்கும் முறையைத் தொடங்குவதற்கு முன்னரே தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் இம்மாதிரியான கடன்களைக் கொடுத்துள்ளனர். அதன் எதிர்மறை விளைவுகளை உணர்ந்த பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், கென்யா உள்ளிட்ட பல நாடுகள் ஆன் லைன் மூலம் கடன் கொடுக்கும் முறையைத் தடை செய்துள்ளன.

இனி செய்ய வேண்டியது: 

இந்தியா வரும் பல வெளிநாட்டினர் அவர்களின் விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கி இருக்கின்றனர். அவர்களில் பலர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீதான கண்காணிப்பும், உரிய நடவடிக்கையும் துரிதமாக எடுக்கப்பட வேண்டும்.

கடன் கிடைக்கின்ற இடங்களில் எல்லாம் கடன் வாங்கும் மனநிலை சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது. ஏதாவது ஒரு வகையில் அந்த கடன்கள் எல்லாம் காலப்போக்கில் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையும் பலரிடம் நிலவுகிறது. உழைப்பின் மூலம் வருமானத்தைப் பெருக்க வேண்டும்; வருமானத்திற்கேற்ப செலவிட வேண்டும் என்ற வாழ்க்கைமுறை மக்களிடம் சென்றடைய வேண்டும்.  

ஆன் லைன் மூலம் கடன் கொடுப்பது தொடர்பாக அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இயற்ற வேண்டும். இதில் ஏற்படும் கவனக்குறைவு இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது மட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.

***

Previous post பெற்றோர்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் பிள்ளைகள்
Next post இப்படி ஏன் மாறிவிட்டார்கள்?

9 thoughts on “தற்கொலையை நோக்கி பயணிக்க வைக்கும் “லோன் ஆப்”

  1. அய்யா வணக்கம்
    நல்ல தகவல்
    பயனுள்ளதாக இருக்கிறது
    செந்தில் முருகன் சமூக ஆர்வலர் துத்திகுளம் நாமக்கல் மாவட்டம்

  2. அய்யா வணக்கம்
    மக்கள் வாழும் இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற மிகவும் பயனுள்ள தகவல்

  3. சிறுக சேர்த்து பெருக வாழவேண்டும்
    ஆனால் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு
    புதிதாக அறிமுகம் ஆகும் அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டும் புதிய மாடல் போன்கள் ஆடைகள் வாகனங்கள் என்று விளம்பரங்கள் ஆசையை தூண்டுகிறது
    விளைவு இது போன்ற கடன்கள்

  4. மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்
    சமுதாயத்திற்குத் தேவையான அருமையான பதிவு…. ப. மோகன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *