பெற்றோர்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் பிள்ளைகள்

எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல்   அன்பையும்,  பாசத்தையும் வெளிப்படுத்தும் உறவு தாய் –  சேய்க்கு இடையேயான உறவு.  தன்னால் இந்த உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கபட்ட தன் சேய்,  எந்த சூழலிலும் உணவின்றி வாடக் கூடாது என்பதில் தொடங்கி,  அன்னியர் அச்சுறுத்தல் வரை கண்காணித்து செயல்படும் நிர்வாகத் தன்மையுடையது தாய்  பாசம். இந்த தாய்மை உணர்வு மனித குலத்திற்கு மட்டும் உரித்தானது என்று எண்ணிவிடக் கூடாது.  மூன்று வாரங்கள் அடைகாத்து,  தான் பொரித்தெடுத்த குஞ்சைப் பருந்தின் கழுகுப் பார்வையில் இருந்து பாதுகாக்கும் கோழி, தன் குஞ்சுக்கு இரை தேடி வந்து வாயில் ஊட்டும் காகம் உள்ளிட்ட அனைத்து பறவைகள் மற்றும் விலங்குகளிடமும் இந்த தாய் பாசம் நெகிழ்வுடன் வெளிப்படுகிறது.

இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பறவைகளும், விலங்குகளும் தன்னுடைய குஞ்சுகளுக்கும், குட்டிகளுக்கும் மிகக் குறுகிய காலத்திலேயே கற்றுக் கொடுத்துவிடுகின்றன.  ஆனால், மனித சமுதாயத்தில் நிலவும் நிலை என்ன? குழந்தைகள் சிரமமின்றி வாழ வேண்டும் என்ற ஆசை பெற்றோர்களிடம் மிகுதியாகக் காணப்படுகிறது. வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்” என்பது குறித்து குழந்தைகளுக்கு முழுமையாகக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக,  அவர்களின் எதிர்கால பயன்பாட்டுக்கென பொருள் சேர்த்து வைக்க வேண்டும் என்ற உணர்வு நிகழ்கால பெற்றோர்களிடம் பரவலாகக் காணப்படுகிறது.

தன் குழந்தை மற்ற குழந்தைகளைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தது அல்ல என்ற எண்ணம் பெற்றோர்களிடம் மேலோங்கி இருக்க, அதை வெளிப்படுத்தும் வகையில் குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் அளவிற்கு அதிகமாகப் பணம் செலவிடும் மனநிலை பெற்றோர்கள் பலரிடம் தென்படுகிறது. குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நலன் எனக் கருதி பெற்றோர்கள் மேற்கொள்ளும் செயல்களே பல சமயங்களில் குழந்தைகளின் வளர்ச்சியைத் தடம் புரளச் செய்துவிடுகிறது என்ற எதார்த்த நிலையைப்  பெற்றோர்கள் காலம் கடந்துதான் உணர்கின்றனர். அதன் விளைவுதான் பெற்றோர்களைக் காலம் முழுவதும் கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறது.

சிறுவன் செய்த கொடுங்குற்றம் :

தெருத்தெருவாகச் சென்று காய்கறி வியாபாரம் செய்துவந்த ஒரு தாய் தன்னுடைய ஒரே மகனின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். கணவனால் கைவிடப்பட்ட அந்த பெண்,  தன் மகன் மீது அதிக நம்பிக்கை கொண்டு,  அவனை ஆங்கில வழியில் கற்பிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தாள்.  பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடையாத அவளது மகன் செய்த செயல், அவளை வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்தச் செய்தது மட்டுமின்றி, மனித சமுதாயத்தையே துயரத்தில் ஆழ்த்தியது. அப்படி என்ன சம்பவம் நடந்தது? 

2016-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் 16-வயது நிரம்பிய அந்த ஏழைத் தாயின் பையன்,  6-வயதுடைய ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது மட்டுமின்றி, அந்த சிறுமியின் கழுத்தை நெரித்து கொலையும் செய்துள்ளான். 18 வயது பூர்த்தியடையாத அவனைச் “சட்டத்திற்கு முரணான சிறார்” எனக் கருதப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்காமல், சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அவன் தங்க வைக்கப்பட்டிருந்தான்.

அவன் மீதான வழக்கு “இளைஞர் நீதி குழுமம்” முன்பு விசாரணையில் இருந்த பொழுது,  நிபந்தனை ஜாமீனில் அவன் விடுவிக்கப்பட்டான்.  ஜாமீனில் வெளியே வந்து சில மாதங்களிலேயே, அவனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் மற்றொரு பாலியல் குற்றச் செயலில் அவன் ஈடுபட்டுள்ளான். அதைத் தொடர்ந்து, அரசு பாதுகாப்பு இல்லத்தில் அவன் தங்க வைக்கப்பட்டுள்ளான். 20 வயதைக் கடந்துவிட்ட நிலையில், அவன் மீதான வழக்கின் விசாரணையை மகிளா நீதிமன்றத்தில் அவன் எதிர்கொண்டு வருகிறான்.

கணவனால் கைவிடப்பட்ட சோகம் ஒரு பக்கம் இருக்க,  தன் மகனின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, தெருக்களில் காய்கறி வியாபாரம் செய்ததில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன் மகனை ஆங்கில வழியில் கற்றுக் கொடுக்கும் பள்ளியில் படிக்க வைத்தது அவள் செய்த குற்றமா? வாழ்நாள் முழுவதும் அவள் கண்ணீர் சிந்தும் நிலையை அவளது மகன் ஏற்படுத்தக் காரணமாக இருந்தது எது? 

இணையதள வீடியோக்கள் :

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட அந்த சிறுவனிடம் காவல்துறையினர் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையிலோ அல்லது இளைஞர் நீதி குழுமம் நடத்திய விசாரணையிலோ வெளிவராத தகவல் ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. அந்த சிறுவன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது கைபேசி மூலம் இணையதளங்களில் உள்ள ஆபாச வீடியோக்களைப் பார்க்கும் பழக்கம் உடையவன் என்பதும்,  அதனுடைய வெளிப்பாடுதான் அவனைப் பாலியல் குற்றங்களில் ஈடுபட வைத்தது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தந்தையின் கண்காணிப்பில் வளராததும், படிப்பறிவு இல்லாத ஏழைத் தாய்க்கு மகனாகப் பிறந்ததும்தான் அந்த சிறுவனின் வாழ்க்கைப் பாதை தடம்புரளக் காரணங்களாக அமைந்து விட்டனவா? என்ற கேள்வி பலருக்கு எழக்கூடும்.  தாய், தந்தை இருவரும் நன்கு படித்து, உயர்பதவியில் இருக்கும் ஒரு தம்பதியரின் குழந்தைக்கு நேரிட்ட சம்பவம் ஒன்று குறித்து பார்ப்போம்.

மத்திய அரசுப் பணியில் வேலை பார்த்துவந்த ஒரு பெண் அவளது மகனை சென்னையிலுள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்க வைத்தார். அவரது கணவரும் அரசு பணியில் இருந்தார். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அத்தம்பதியினர் நடத்தி வந்தனர். இந்த சூழலில், பதவி உயர்வு காரணமாக அந்த பெண் அண்டை மாநிலத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். கணவரையும், பள்ளியில் படிக்கும் மகனையும் சென்னையில் விட்டுவிட்டு, அந்த பெண் மட்டும் அண்டை மாநிலம் சென்று பணியில் சேர்ந்தார். சில மாதங்களிலேயே அவளது வாழ்க்கையில் சோகம் பின் தொடரத் தொடங்கியது.

போதைப் பொருள் :

பிளஸ்-2  தேர்வை எதிர்கொள்ள வேண்டிய அவளது மகனின் நடத்தையில் மாற்றம் தென்பட்டத் தொடங்கியது. தேர்வுக்குத் தன்னைத் தயார் படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, தனிமையில் பொழுதைக் கழிப்பதும், எதையோ இழந்துவிட்டதைப் போன்று சோகத்துடன் அவன் இருப்பதற்கும் ஆன காரணம் தெரியாமல் அவனது பெற்றோர்கள் குழப்பமடைந்தனர். காதல் தோல்வியாக இருக்குமோ? செய்வினை யாராவது வைத்திருப்பார்களோ? போன்ற சந்தேகங்கள் அந்த பையனின் பெற்றோர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. இறுதியாக காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் அந்த பிரச்சினை வந்தது.

அரசு பணியில் இருந்த அவனது அப்பாவோ இரவு நேரத்தில் மட்டும்தான் வீட்டுக்கு வருவார். பள்ளி சென்று வந்த நேரம் போக,  மீதி நேரங்களில் வீட்டில் அவன் தனிமையாக இருக்க நேரிட்டது. இந்த வெற்றிடத்தை நிரப்ப, போதை பொருளைப் பயன்படுத்தும் பழக்கத்தை நண்பர்கள் மூலம் அவன் கற்றுக் கொண்டான். அதன் விளைவுதான் அவனிடம் ஏற்பட்ட மாற்றத்திற்குக் காரணம் என்பதைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.  அந்த மாணவனை நல்வழிப்படுத்தும் முயற்சியில் அவனது பெற்றோர்கள் மேற்கொள்ளத் தொடங்கினர்.

மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு :

இந்த இரண்டு பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் செயல்களால் கண்ணீர் சிந்துவது போன்று, இன்றைய சமுதாயத்தில் எண்ணற்ற பெற்றோர்கள் தினம் தினம் கண்ணீர் சிந்தும் நிலையில் இருந்து வருகின்றனர். 2017 முதல் 2019 வரையிலான மூன்று ஆண்டுகளில் 97,432  சிறார்கள் நம்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதும், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அடுத்து, அதிகமான சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாநிலமாக மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்பதும் தேசிய குற்ற ஆவணக்கூடம் சேகரித்த தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் தினம்தினம் வடிக்கும் கண்ணீரைத் துடைப்பது எப்படி? இதற்கு பிள்ளைகள் மட்டும்தான் காரணமா? 

காரணங்கள் :

“கெட்டதைப் பார்க்காதே, கெட்டதைக் கேட்காதே, கெட்டதைப் பேசாதே” என்ற கருத்தை வெளிப்படுத்தும் மூன்று குரங்குகளைச் சிறார்களுக்கு அறிமுகப்படுத்த இன்றைய சமுதாயம் தவறிவிட்டது.  தாத்தா, பாட்டி போன்ற உறவுகளின் அரவணைப்பை இன்றைய குழந்தைகள் முழுமையாக உணர்ந்து வளரும் சூழலும் மாறி வருகிறது. உறவுகளை ஏதேனும் ஒரு குடும்ப நிகழ்ச்சியின் பொழுதுதான் பார்க்கின்ற வாய்ப்பு குழந்தைகளுக்குக் கிடைக்கின்றதே அன்றி, அவர்களின் பாசத்துடன் கூடிய வழிகாட்டுதலை இன்றைய குழந்தைகள் இழந்து வருகின்றனர்.

பள்ளிக்கூடம் சென்றுவந்த நேரம் போக, மீதி நேரங்களில் உடல் களைத்துப் போகும் வரை ஓடியாடி விளையாடும் சூழல் இன்றைய சிறார்களுக்கு மறுக்கப்படுகிறது. மாறாக, மாலை நேரங்களிலும், விடுமுறை தினங்களிலும் பல்வேறு தனிப்பயிற்சி வகுப்புகளில் சிறார்கள் திணிக்கப்படுகின்றனர்.

அடுத்த வீட்டு குழந்தையுடன் தன் குழந்தையை ஒப்பிட்டுப் பார்ப்பதும், அந்த குழந்தையிடம் உள்ள திறமை தன் குழந்தையிடம் இல்லை எனக் கருதி பெற்றோர்கள் ஆதங்கப்படுவதும் குழந்தையிடம் தாழ்வு மனப்பான்மை ஏற்படக் காரணமாக அமைந்துவிடுகிறது.

தன் குழந்தையிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, தேர்வு மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளை மதிப்பீடு செய்யும் முறை சிறார்களைத் திசைமாறச் செய்துவிடுகிறது.

குழந்தைகளின் மனநிலை அறிந்து, அவர்களிடம் பேசுவதற்கு அதிக நேரத்தைப் பல பெற்றோர்களால் செலவிட முடிவதில்லை. அதன் வெளிப்பாடாக இணையதளத்தில் குவிந்திருக்கும் அனைத்து வகையான கெட்ட பழக்கங்களைக் கைபேசிகள் மூலம் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். காலம் கடந்து கண்டறியப்படும் அந்த தீய பழக்கங்களில் இருந்து பல குழந்தைகள் மீட்கப்படுவதில்லை. அவர்களின் பெற்றோர்கள் சிந்தும் கண்ணீரும் வற்றுவதில்லை. 

அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் அமெரிக்கா நாட்டில் சிறார்களின் நிலைமை எப்படி உள்ளது?  2017-ம் ஆண்டில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 6% பேர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும், 29% பேர் மது பழக்கம் உள்ளவர்கள் என்பதும் தெரியவருகிறது. அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகள் போதை, மது உள்ளிட்ட தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவார்களோ? என்ற அச்ச உணர்வுடன் வாழந்து வருகின்ற சூழல் நமக்கு உணர்த்தும் வாழ்க்கைப் பாடங்கள் பல.

***

Previous post உலகை வழிநடத்தும் விளம்பரங்கள்
Next post தற்கொலையை நோக்கி பயணிக்க வைக்கும் “லோன் ஆப்”

22 thoughts on “பெற்றோர்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் பிள்ளைகள்

 1. ஜயா, இன்றைய கொரோனா சூழல் அனைத்து மாணவர்கள் கையிலும் online வகுப்புகளுக்காக செல்போன்களை இணைய வசதியுடன் பெற்றோர்களே வாங்கி தரும் நிலை ஏற்பட்டு உள்ளதே , இதனால் ெற்றோர் பிள்ளைகளை கண்காணிக்க முடியாது

 2. அய்யா
  வணக்கம்
  காரணங்கள் என்ற தலைப்பில் அனைத்தும் கொடுத்து விட்டீர்கள்
  அதற்கு மேல் எதுவும் இல்லை
  மொத்தத்தில் ( பெற்றோர்கள்) ஒன்றை இழந்தால் தான் ( பிள்ளைகள்) ஒன்றை பெற முடியும் என்பதும் அனுபவ அறிவு.
  நன்றி

 3. அய்யா
  வணக்கம்
  காரணங்கள் என்ற தலைப்பில் அனைத்தும் கொடுத்து விட்டீர்கள்
  அதற்கு மேல் எதுவும் இல்லை
  மொத்தத்தில் ( பெற்றோர்கள்) ஒன்றை இழந்தால் தான் ( பிள்ளைகள்) ஒன்றை பெற முடியும் என்பதும் அனுபவ அறிவு.
  நன்றி

 4. கூட்டுக் குடும்பம் இல்லாததும், இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளிடம் நேரம் செலவழிக்காததும் இதற்கான காரணங்கள். பணி உயர்வு மற்றும் பணம் சம்பாதித்தலை தாண்டி, தங்களின் கடமைகளை பெற்றார் உணர வேண்டும் என்ற தங்களின் கருத்தை அனைவரும் உணர வேண்டும்.

 5. குழந்தைகளுடன் பெற்றோர்கள் போதுமான நேரம் ஒதுக்கி பழகினால், குழந்தைகள் தடம் புரட்டு விட மாட்டார்கள்.
  நன்றி
  கண்ணப்பன்

 6. அய்யா வணக்கம் அருமையான தகவல்
  இன்றைய காலத்தின் கோலம் இதனால் நிறைய பேர் கெட்டான பழக்கத்தில் உள்ளார்கள் இவர்களை மற்றவேண்டும்
  செந்தில் முருகன் சமூக ஆர்வலர் துத்திகுளம்

 7. வாழ்க்கையின் அடிப்படை புரியாமல்/தெரியாமல் மேலோட்டமான கவர்ச்சி மற்றும் சௌகரியம் சார்ந்து வாழ்வதால் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக நினைக்கிறேன் சார்

 8. A lovely article Sir.

  It's due to the wrong conception of the parents about their children's welfare and development that the parents are mislead. They view the possession of more wealth and materials than teaching them to face challenges and suffering will fetch their children happiness and prosperity.

  The case studies you have highlighted would definitely make the parents to reflect on the very boat they are sailing. It's the right time before they sink to be aware of the reality.

  This article will certainly be the life boat for all of us, parents as well as the children.
  Hats off to you Sir 🙏

 9. அய்யா இன்றைய பெரும்பாலான இளைய பெற்றோர்களே திறன் பேசிக்கு அடிமையாகி தங்களுடைய பிள்ளைகளுடன் இருக்கும் நேரத்திலும் திறன் பேசியுடனே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். மேலும், பிள்ளைகளுக்கு அதிகப்படியான செல்லம் கொடுத்து அவர்களை நல்வழி படுத்த தவறிவிடுகின்றனர். நான் பெரும்பாலும் பேருந்தில் பயணம் செய்யும் போது கண்டதுண்டு, திறன் பேசி ஒன்று பெற்றோரகளின் கைகளில் இருக்கும் இல்லையென்றால் பிள்ளைகளின் கைகளில் இருக்கும். இதுபோன்ற நிகழ்வுகளை காணும் போது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நினைத்து கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

 10. ஐயா நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் 2000 ஆம் ஆண்டு பணிபுரிந்தீர்களா

 11. ஐயா வணக்கம்.குழந்தைகளை எவ்வாறு ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும் என்ற அறிவுரைகளை இன்றைய இளைய தலைமுறையினர் பின் பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

 12. நமது கல்வி முறையில் மாற்றம் தேவை. மாணாக்கரிடம் நன் மதிப்பீடுகளை உயர்த்தும் நீதி போதனை வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

 13. தற்போதைய வாழ்க்கை முறை பெரிதும் பொருள்ரீதியாக மாறிவிட்டது. பல பெற்றோர்களுக்கே வாழ்க்கையின் அடிப்படை விஷயங்கள் பற்றிய அறிவு குறைவு எனலாம். தங்கள் பிள்ளைகளுக்கு பணம் சேர்த்து வைப்பதில் இருக்கும் கவனம் அவர்களை நல்வழிப் படுத்துதலில் இல்லை எனலாம். அடிப்படை கஷ்டங்கள் தெரியாமல் பிள்ளைகள் வளர்கிறார்கள். மேலும் பல தவறான பழக்க வழக்கங்களை சுலபமாக கற்றுக் கொள்ளும் சூழலும் தற்போது நிலவுகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *