வாழ்வில் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டாலும், ஆறுதலான ஒரு வார்த்தை எங்கிருந்தாவது கிடைக்காதா? என்ற ஏக்கம் சமுதாயத்தில் பலரிடம் பல சமயங்களில் வெளிப்படுகிறது.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக நியாயத்தைத் தேடியோ அல்லது நிகழ்ந்த குற்றச் சம்பவம் மீதான சட்ட ரீதியான நடவடிக்கை வேண்டியோ காவல்நிலையத்தை அணுகும் பொழுது, ஏன் அங்கு சென்றோம்? என்ற உணர்வுதான் பல சமயங்களில் ஏற்படுகிறது என்றும், தீர்வு கிடைக்காவிட்டாலும் வழக்கு பதிவு செய்திருந்தால் கூட ஆறுதல் கிடைத்திருக்கும் என்றும் காவல்துறை மீதான ஆதங்கக் குரல் பல சமயங்களில் வெளிப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு,உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவரும் காவல்துறை, அதன் இயக்குநரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மாநில அரசின் சார்பில், காவல்துறையின் செயல்பாடுகளைக் கண்காணித்தும், வழி நடத்தும் பொறுப்பை உடையவர் உள்துறை செயலர். பெரும்பாலும் மூத்த, துடிப்பான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக அவர் இருப்பார்.
ஒரு சில உள்துறை செயலர்கள் காவல்துறை உயரதிகாரிகளைப் போன்று மாநகர மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்களுக்குச் சென்று, கள நிலவரங்களை ஆய்வு செய்து, காவல்துறையின் மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பூர்ணலிங்கம்.
பணித் திறன் மதிப்பீடு :
காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பலவற்றில் குற்றப் பத்திரிக்கைகளை நீதிமன்றங்களில் உரிய நேரத்தில் தாக்கல் செய்யாமல் புலன் விசாரணையிலேயே வைத்திருப்பது; நீதிமன்றங்களில் இருந்து பெறப்படும் வாரண்டுகளை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருவது; தலைமறைவாக இருக்கும் பழங்குற்றவாளிகளைக் கண்காணிப்பில் கொண்டு வராமல் இருப்பது; சமுதாயத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்கள் விற்பனை, சூதாட்டம் போன்ற தீய செயல்களைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பது உள்ளிட்ட சில முக்கிய பணிகளைப் பொதுவாகக் காவல்துறையினர் புறக்கணித்துவிடுவது உண்டு.
காவல்துறையினரின் இந்த மெத்தனப் போக்கினால் பொதுமக்களுக்கு ஏற்படும் மன உலைச்சலையும், பாதிப்பையும் உணர்ந்த பூர்ணலிங்கம், அவர் உள்துறை செயலராக இருந்த பொழுது ஒவ்வொரு மாதமும் அனைத்து மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினரின் பணித் திறனை மதிப்பீடு செய்யும் முறையைக் கொண்டு வந்தார். அதன் விளைவாக காவல்துறையினரின் பணித் திறன் அதிகரிக்கத் தொடங்கியது.
ஒவ்வொருவரின் ஒவ்வொரு செயலையும் தினசரி கண்காணிக்க இயலாது. அதற்காகத்தான் பயிற்சியும், வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், அவைகளைப் புறந்தள்ளிவிட்டு செயல்பட்ட சம்பவங்களும் காலப்போக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
காவல்துறையினரின் பணி பொதுமக்களைச் சென்றடைவதில் அதிகக் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், மாதம் தோறும் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் புள்ளி விபரங்களைக் கூர்மைபடுத்தி, காவல்துறையின் செயல்பாட்டில் உள்ள பலவீனங்களைப் பக்குவமாக மறைத்து அறிக்கை அனுப்புவதில் சில அதிகாரிகள் அதிகக் கவனம் செலுத்தியதும் உண்டு.
தயக்கம் ஏன்? :
உறவினர் ஒருவர் காணவில்லை என்றோ அல்லது வீட்டில் திருட்டு நிகழந்துள்ளது என்றோ அல்லது இது போன்றதொரு குற்ற நிகழ்வு தொடர்பாக புகார் மனுவுடன் காவல் நிலையம் சென்றால், அந்த புகார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கான காரணங்களைத்தான் காவல்துறையினர் பல சமயங்களில் தேடுகின்றனர்.
காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் குற்ற நிகழ்வுகள் குறித்த அனைத்து புகார்கள் மீதும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்விக்கான விடை தேடும் பொழுது, காவல்துறையின் பணி அதிகரிக்கும் என்பதை மட்டும் இதற்குக் காரணமாகக் கூறிவிட முடியாது. பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரித்தால், அது பொதுவெளியில் விரும்பத்தகாத விமர்சனங்களுக்கு வழி வகுத்துவிடும் என்ற நிர்வாக ரீதியான அச்சமும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.
நிகழும் குற்றச் சம்பவங்களை மூடி மறைப்பதால், காவல்துறையின் புள்ளி விபரங்கள் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால், குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். சமுதாயத்தில் நிகழும் அனைத்து குற்ற நிகழ்வுகள் குறித்து காலதாமதமின்றி வழக்குகள் பதிவு செய்வதுதான் குற்றத் தடுப்பு பணியின் முதற்கட்ட நடவடிக்கை.
அரசு நிர்வாகமும், ஊடகங்களும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கண்டனக் குரல்கள் எழுப்பாமல், பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை வெளிப்படுத்த வேண்டும்.
குற்ற ஆய்வுக் கூட்டங்கள் :
மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் மாதம் தோறும் நடத்தப்படும் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டங்கள் காவல்துறையின் பணியைச் செம்மைப்படுத்தியதோடு, காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகளின் திறன் வளர்க்கும் பட்டறைகளாகவும் கடந்த காலங்களில் திகழ்ந்தன. காலப்போக்கில். அக்கூட்டங்கள் சம்பிரதாயத்துக்காக நடத்தப்படும் கூட்டங்களாக மாறிவிட்டதோ? என்ற கருத்தும் நிலவுகிறது.
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, குற்றவாளிகளைக் கண்காணித்தல், குற்றத் தடுப்பு பணி போன்றவற்றில் ஒவ்வொரு காவல்நிலையமும் எப்படி செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய காவல்துறையின் உயரதிகாரிகள் காவல்நிலையங்களில் நடத்தும் ஆய்வுகளின் முக்கியத்துவமும் மெல்ல மெல்ல குறைந்துவருகிறது.
குற்றவாளிகளின் செயல் திட்டங்கள் :
குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க வேண்டுமென்றால், நிகழ்ந்த குற்றங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புலன் விசாரணையை முறையாகவும், சரியாகவும் நடத்தப்பட வேண்டும்.
குற்றவாளிகளில் பலர் காவல்துறையினர் நடத்தும் புலன் விசாரணையின் கோணத்தை மோப்பம் பிடித்து, அதற்கேற்ப அவர்களின் செயல் திட்டங்களை வகுத்துக் கொள்வார்கள்.
‘இன்றைய பொழுது இனிதே கழிய வேண்டும்’ என்பதை லட்சியமாகக் கொண்டு இயங்கும் நிலையிலிருந்து காவல்துறை மாறிவரும் என்ற நம்பிக்கையோடு பலர் காத்திருக்கிறார்கள்.
***
திறமையான உள்துறை செயலரையும் ,D.G.P யையும் அரசாங்கம் நியமித்து அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தான் காவல்துறை இனி சரியாக செயல்படும் : உளவுதுறையிலும் திறமையான அதிகாரி வேண்டும் இது எல்லாம் நடக்க வேண்டும் என்றால் முதலமைச்சருக்கு காவல்துறையை சீர் அமைக்க விருப்பம் வேண்டும்
உண்மை சார். இப்போது எல்லாம் சட்ட ஒழுங்குப் பிரிவில் உள்ள வெகு சில அதிகாரிகளிடம் மட்டுமே நேர்மையான செயல்பாட்டை பார்க்க முடிகிறது. திறனும் நேர்மையும் அற்ற பலரைத் தான் இப்போது பார்க்க முடிகிறது. மிகவும் வருத்தமான நிலை😥.
Sir, your vision and the functioning of police in our state are totally correct .But the major reason for the failure is deep rooted corruption in all places.we are masters in satisfying our bosses and we don’t want to implement rules if the rules don’t favour the influential.similarly delay in delivery of judgement due to various procedures and their lapses cause the fearlessness among politicians and govt officials.everybody knows how to come out of their case using the loopholes of law and corruptive practises.so this will exist still the punishment is made severe and also within time frame.Guilty and accused should be punished severely that too immediately .Thus will create fear psychosis and crimes will get reduced.this is for entire nation not only for states.
அய்யா வணக்கம்
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க நிறையப் பேர்கள் பயப்படுகிறார்கள். ஒரு சிலர் காவல் அதிகாரிகள் மட்டுமே நியாயமாக இருக்கிறார்கள்.
A very fair assessment. You have rightly emphasized the need to have useful monthly meetings at the district level, periodic supervision by the higher ups and a change in our approach of looking only at the numbers instead of looking at the actual performance. Good article. Pl. Continue enlightening us on similar issues.
மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்
தற்கால சூழ்நிலையில் காவல் நிலையங்களில் அன்றாட பணிகளை செய்யக் கூட போதிய ஆளினர்கள் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு உயர் அதிகாரிகளால் வாகன தணிக்கை அலுவலே பிரதானமான அலுவலாக வழங்கப்பட்டு வருகிறது. வாகன தணிக்கை என்பது ஒரு காலத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் தற்போது வாகன தணிக்கை என்பது சாலை விதிகளை மீறும் பொதுமக்களை மீது ஒவ்வொரு சார்பு ஆய்வாளருக்கும், ஆய்வாளருக்கும் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று இலக்குகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் சராசரியாக நாளொன்றுக்கு 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஆகின்றது. இவ்வளவு நேரம் செலவழித்தும் பயன் உண்டென்றால் கேள்விக்குறியே. காரணம் காவல் துறையினர் வழக்கமான நேரத்தில், வழக்கமான இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபடுவதால், வாகன தணிக்கையின் போது தினசரி சந்தித்த பொதுமக்களையே சந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே உயரதிகாரிகள் நிர்ணயித்த இலக்கினை எட்ட முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். காலை 08.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 16.30 மணி முதல் 20.00 மணி வரையிலும் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாகன தணிக்கை செய்வதைத் தவிர்த்து காவல் நிலையத்தில் புகார் மனு விசாரனை செய்யவோ, இதர அலுவல்கள் புரியவோ அனுமதி கிடையாது. ஆகவே மற்ற நேரங்களில் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் புகார் மனு விசாரணைக்கு முக்கியத்துவம் தராமல் அவசர கதியில் மனு விசாரணை மேற்கொள்வதால், வழக்கு பதிவு செய்ய வேண்டிய நேர்வுகளில் வழக்கு பதிவு செய்யாமல் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகின்றனர். மேற்சொன்ன நேரத்தில் தான் பொதுமக்கள் தங்கள் குறைகளை முறையிட காவல் நிலையத்தை நாடுகின்றனர். ஆகவே காவல் நிலையங்களில் போதுமான ஆளினர்களை நியமிப்பது மூலமாகவும், வாகன தணிக்கைக்கு ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சுழற்சி முறையில் ஒரு குழுவை நியமித்து மீதமுள்ள காவல் அலுவலர்களைக் கொண்டு நிகழ்விடம் சென்று மனு விசாரணை செய்தல், கைது செய்யப்பட வேண்டிய எதிரிகளை கைது செய்தல், காணாமல் போன நபர்களை கண்டுபிடித்தல், சம்மன், வாரண்டு செயல்படுத்துதல், பழைய வழக்குகளில் புலன்விசாரணை மேற்கொள்ளுதல். etc., போன்ற பணிகளைச் செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரலாம். இதனால் வழக்குப் பதிவு செய்வதை மறுப்பது அல்லது ஒத்திப்போடும் செயல் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளதோடு அன்றாட பணிகளை தொய்வின்றி ஆற்றிட முடியும்.
உங்கள் கருத்து நடைமுறைப் படுத்தும் நிலை வந்தால், காவல்துறையின் பணி மேலும் சிறப்பாக அமையும்.
நன்றி