இரவு பகல் என்று பார்க்காமலும், மழை வெயில் என்று ஒதுங்கி நிற்காமலும், தங்களது குடும்பத்தில் நிகழும் சுக துக்க நிகழ்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் 24 மணி நேரமும் பணிபுரிபவர்கள் காவல்துறையினர்.
மங்கலகரமான திருவிழா பாதுகாப்பு பணியில் தொடங்கி புயல், வெள்ளம் என சமுதாயத்தைச் சீரழிக்கும் இயற்கைப் பேரிடர் வரை சமுதாயத்தின் பாதுகாப்பு அரணாகச் செயல்படுவதும், பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருப்பதும் காவல்துறைதான்.
குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தொடங்கி, கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்களுக்குச் சட்ட ரீதியான தீர்வு காண்பது வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவதும் காவல்துறைதான்.
இருப்பினும், காவல்துறையினர் மீது பொதுமக்களிடையே காலம் காலமாக நிலவிவரும் அதிருப்தி தொடர்கதையாகவே இருந்து வருகிறது. புகார் மனுவுடன் காவல்நிலையம் செல்பவர்களிடம் ஆறுதலாகப் பேசி, அவர்களது புகார் மீது உடனடியாக விசாரணையோ அல்லது வழக்கோ பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ளாமல் காலம் கடத்தும் செயல் காவல்துறையினர் மீது பொதுமக்கள் அதிருப்தி கொள்வதற்கான காரணங்களில் முக்கியமானது ஆகும்.
வழக்கு பதிவுசெய்ய தவிர்ப்பது ஏன்?
ஒரு குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர் கொடுக்கும் புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்வது போலீசாரின் கடமையாக இருக்கும் பொழுது, வழக்கு பதிவு செய்வதைச் சில சமயங்களில் போலீசார் தவிர்த்து விடுகின்றனர். அதற்கான காரணங்களைப் பார்ப்போம்:
- காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மீது எப்.ஐ.ஆர் போட்டு, வழக்கு பதிவு செய்வதோடு போலீசாரின் வேலை முடிந்து விடுவதில்லை. குற்றவாளிகள் யார் என்று கண்டு பிடித்து, அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதனால் போலீசாருக்கு ஏற்படும் பணி சுமை.
- பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கண்டு பிடிக்கப்படாமல் நிலுவையில் இருந்தால், உயர் அதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டிய நிலை.
- அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது, அந்த காவல் நிலையப் பகுதியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், குற்றங்கள் பெருகி விட்டதாகவும் பொதுவெளியில் எழுப்பப்படும் அதிருப்தி குரல்.
- வழக்கு பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்காக குற்றவாளிகள் மேற்கொள்ளும் முயற்சிகள்.
- விருப்பு வெறுப்புடன் செயல்படும் போலீசாரின் செயல்பாடுகள்.
நிகழ்ந்த குற்றச் செயல் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, முறையான புலன் விசாரணை மேற்கொள்ளாமல் இருப்பது, அக்குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவருக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, குற்றவாளிகள் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் மன தைரியத்தைக் கொடுக்கிறது.
இதை வெளிப்படுத்தும் சம்பவம் ஒன்று 2012-ம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அப்பொழுது நான் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் வடக்கு மண்டலத்தின் ஐ.ஜி.யாக இருந்தேன்.
மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள சாலையில் மாலை நேரத்தில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண் மீது தொடுக்கப்பட்ட வன்முறை மற்றும் பாலியல் பலாத்காரம் குறித்து காவல் நிலையத்தில் வாய்மொழியாகக் கொடுக்கப்பட்ட புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் உதாசீனம் படுத்தியதின் விளைவாக அதே சாலையில் பயணித்த இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மரணம் அடைய நேர்ந்துள்ளது. அந்த வழக்குகளில் துப்பு துலங்கிய விதம் குறித்து பார்ப்போம்.
பெண் காணவில்லை :
சென்னை – செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு காவல் நிலையத்தின் ஆய்வாளர் என்னைத் தொடர்பு கொண்டு, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விபரத்தைத் தெரியப்படுத்தினார்.
தினந்தோறும் மாலை நேரத்தில் கூடையில் பூக்களை எடுத்துக் கொண்டு, ஒரு பெண் அவள் குடியிருந்து வரும் பகுதியிலிருந்து தாம்பரம் – செங்கல்பட்டு ரெயில் பாதையைக் கடந்து செல்வது வழக்கம் என்றும், வியாபாரத்தை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பும் அவள் நேற்று இரவில் வீடு திரும்பவில்லை என்றும் அவளது மகன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளான். ‘பெண் காணவில்லை’ என வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பூக்காரியை இரவு முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். அவள் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மறுநாள் காலையிலும் அந்த பூக்காரியைத் தேடும்பணியைப் போலீசார் தொடர்ந்தனர். பூக்கூடையை ரெயில் பாதையில் சற்றுத் தொலைவில் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் சில்லறைக் காசுகளும், ரூபாய் நோட்டுகளும் சிதறிக் கிடந்தன. ஓடும் ரெயிலில் அடிபட்டு அவள் இறந்திருப்பாளோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
ரெயில் பாதையைப் போலீசார் முழுமையாக சோதனை செய்தனர். மழை நீர் ரெயில் பாதையைக் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய பாலத்தின் அடியில், உடுத்தியிருந்த சேலை கலைந்திருந்த நிலையில் அவளது பிரேதத்தைப் போலீசார் கண்டுபிடித்தனர். இறப்பிற்கான காரணம் குறித்து புலன் விசாரணை செய்து வருகிறோம் என்ற தகவலை ஆய்வாளர் என்னிடம் தெரிவித்தார்.
பூக்காரியின் இறப்பில் ஏதோ திட்டமிட்ட குற்றச் செயல் இருப்பதாக உணர்ந்த நான், குற்றம் நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட உடனடியாகப் புறப்பட்டுச் சென்றேன். சம்பவ இடத்தைப் பார்வையிட்டதும், பூக்காரியின் இறப்பு விபத்தும் அல்ல தற்கொலையும் அல்ல என்பது தெளிவானது. இதற்கிடையில், பாலியல் வன்கொடுமைக்கு அந்த பெண் உட்படுத்தப்பட்டுள்ளாள் என்ற மருத்துவ ரீதியான தகவலும் கிடைத்தது. யார் அந்த குற்றவாளி என்பதுதான் போலீசார் முன்புள்ள கேள்வி.
பூக்காரி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் என்ன கருதுகிறார்கள் எனக் கண்டறிய அவர்களிடம் விசாரித்ததில், கடந்த மாதத்தில் காவல்நிலையத்தில் பதிவான மற்றொரு வழக்கின் விபரம் தெரியவந்தது.
இறந்து போன பூக்காரி வசித்துவரும் பகுதியைச் சார்ந்த மற்றொரு பெண் காணவில்லை என்ற புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால், காணாமல் போன பெண் இதுநாள் வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவள் வைத்திருந்த செல்போனும் காணாமல் போய்விட்டது. அந்த செல்போன் நம்பர் செயல்பாட்டில் இல்லை என்ற தகவலைப் போலீசார் தெரிவித்தனர்.
வழக்கு பதிவு செய்யப்படாத புகார் :
‘இது போன்ற புகார் ஏதாவது வந்ததா?’ என்ற கேள்விக்கு போலீசார் அனைவரும் அமைதி காத்தனர். எதையோ மறைக்கிறார்கள் என்பதை அவர்களது மவுனம் உணர்த்தியது. இறுதியில் ஆய்வாளர் பேசத் தொடங்கினார்.
‘சுமார் 2 மாதத்திற்கு முன்பு ஒரு வயதான பெண் போலீஸ் ஸ்டேஷன் வந்து, சில நாட்களுக்கு முன்பு அவளை யாரோ பலாத்காரம் செய்துவிட்டதாக வாய்மொழியாகப் புகார் சொல்லியுள்ளாள். பணியில் இருந்த போலீசார் என்னிடம் தகவல் தெரியப்படுத்தவில்லை. இது குறித்த விபரம் இப்பதான் எனக்கு தெரியவந்தது’ என ஆய்வாளர் நடந்த சம்பவத்தைத் தெரிவித்தார்.
வாய்மொழியாகப் புகார் கொடுத்த அந்த பெண்ணைக் கண்டுபிடித்து விசாரிக்கும் பொறுப்பை டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். துரிதமாகச் செயல்பட்ட அவர், மறுநாளே அந்த பெண்ணைக் கண்டுபிடித்து, விசாரணை மேற்கொண்டார்.
அந்த வயதான பெண் ரெயில் பாதையைக் கடந்து செல்லும் பொழுது, தண்டவாளத்தை ஒட்டியிருந்த சுவர் மீது அமர்ந்திருந்த ஒரு இளைஞன் அவளை நோக்கி வந்துள்ளான். திடீரென்று அவளை வழிமறித்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான் என்பதும், அதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போனையும் எடுத்துச் சென்றுவிட்டான் என்பதும் டி.எஸ்.பி.யின் விசாரணையில் தெரியவந்தது.
பெண்களிடம் இருந்து பறித்துச் செல்லப்பட்ட இரண்டு செல்போன்களின் எண்களை ஆய்வு செய்த பொழுது, இந்த மூன்று பெண்களையும் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி புலம்பெயர்ந்த தொழிலாளி எனவும், அவனது வன்கொடுமையால் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்பதையும் கண்டறிந்து, அவனைக் கைது செய்;தனர் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார்.
முதல் சம்பவத்தின் மீது வழக்கு பதிவு செய்து, முறையான புலன் விசாரணை மேற்கொண்டிருந்தால், இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிரிழக்கும் பரிதாப நிலையைத் தவிர்த்திருக்கலாம்.
நிகழ்ந்த குற்றம் குறித்து வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதே, குற்றவாளிகள் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதற்கான மன தைரியத்தைக் கொடுக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாகும்.
***
கடமையை செய்ய அனைவரும் தம்முடைய பொறுப்புணர்ந்து உரிய நேரத்தில் செயல்படவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
வழக்கு பதிவு செய்யாமைக்குக் காரணங்கள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்து பதிவு செய்ய காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்கள் கருத்து கள நிலவரத்தை வெளிப்படுத்துகிறது.
நன்றி
1)குற்றம் நடக்காமல் தடுக்க காவல் துறை அதிகாரிகள் காவலர்களுக்கும் மற்ற அரசு துறை அலுவலர்கள் போல் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 10 மணி நேர பணி என நிர்ணயம் செய்ய வேண்டும் ( ஸ்ப்டு முறை) அதற்கு கூடுதல் ஆட்களை மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர் பணிக்கு வேலைக்கு எடுக்க வேண்டும் , அரசியல் வாதிகள் பாதுகாப்புக்கு என அவர்கள் சுற்றுபயண சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக சாலையில் காவலர்களை வெயிலில் நிற்க வைத்து அவர்கள் நேரத்தை வீண் அடிக்காமல் அந்த நேரத்தை குற்றங்களை கண்டுபிடிப்பதற்கு பயன் படுத்தலாம்: குற்றத்தை துப்புதுலக்கும் பிரிவில் உள்ள காவல்துறையினருக்கு அவர்கள் விரும்பும் பகுதியில் இடமாற்றம் போன்ற கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும்
2.) தற்பொழுது உள்ள I P.S அதிகாரிகளுக்கு பணி இடைபயிற்சி உங்களை போன்ற திறமையான அனுபவமிக்க ஓய்வு அதிகாரிகளை வைத்து பயிற்சி கொடுத்து அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரியிடம் எப்படி குற்றங்களை கண்டுபிடிக்க வேலை வாங்குவது என கற்று கொடுக்க வேண்டும் , பணியில் சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும்
உங்கள் கருத்து ஆய்வுக்கு உரியது.
நன்றி.
அய்யா வணக்கம்
மக்களைக் காக்கும் இரண்டாவது கடவுள் என்று நான் காவலர்களை சொல்வேன்.
முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினால் குற்றவாளி இருக்கமாட்டார்கள்.
Sir ,the system in our country is for influential persons.here money plays the role.police if function without any prejudice and if they are straightforward all crimes can be stopped.political interference should not be there.law should punish guilty immediately .Police force should not be wasted for security duty of politicians.there are many officers in police who still use many lower level officials for their house work even after retirement.all these should be streamlined.no police force should be wasted for political reasons.similarlt rules of inspection by higher officers to be changed to avoid the tendency of low registration of crimes.those who register more cases and solved the problems should be honoured.nexus with criminals by any police is found true he should be sacked from service sothat others will fear to have such.promotion,rewards are ti be purely on merit and honesty.if wealth is amassed by any official illegally that should be confiscated and such officials should be dismissed.thus laws should be strict and punishment should be severe to avoid crimes.
Your suggestions are well meaningful and need to be discussed in detail by the Department.
Thanks
குற்றங்கள் மீது அவ்வப்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காததால் அந்த குற்றங்கள் தொடர்வது பல இடங்களில் நடந்துள்ளது. மேலும் குற்றவாளிகளை அது போன்ற தவறுகளைச் செய்ய ஊக்கப்படுத்துகிறது. பல நேரங்களில் வழக்குகள் முறையாக புலன் விசாரணை செய்யப்படுவதில்லை என்பதும் குற்றத்துக்கு தொடர்பில்லாதவர்களை குற்றம் செய்தவர்களாக கணக்கு காட்டுவதும் குறையாக உள்ளது.