எழுபத்திரண்டாவது குடியரசு தினம் கொண்டாடுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள குழந்தை உதவி மையத்திற்குத் தொலைபேசி மூலம் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனியார் ஒருவரால் நடத்தப்பட்டுவரும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்படுகிறது என்பதுதான் அந்த தகவல்.
அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை மற்றும் குழந்தைகள் நலக் குழு நடத்திய விசாரணையில் ‘வேலியே பயிரை மேய்ந்த’ சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த குழந்தைகள் இல்லத்தை நடத்திவந்தவர், அங்கு தங்கியிருந்த சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் என்பதும், அந்த கொடுமையில் இருந்து விடுபட, அங்கு தங்கியிருந்த சிறுமிகளில் ஒருவர்தான் குழந்தைகள் உதவி மையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளன.
பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறார்களைப் பராமரிப்பதற்காக தனியாரால் நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்கள் அனைத்தும் இளைஞர் நீதிச் சட்டத்தின் படி சம்பந்தப்பட்ட அரசுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்படாமல் குழந்தைகள் இல்லங்களை நடத்தப்படுபவர்களுக்கு ஓரண்டு சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதம் அல்லது சிறைத்தண்டனையுடன் அபராதமும் வழங்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.
காவல்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள இந்த குழந்தைகள் இல்லம் கடந்த இருபது ஆண்டுகளாக அரசிடம் பதிவு செய்யாமல் இயங்கி வருகிறது என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்த குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகளில் எத்தனை பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பார்கள்? அந்த துன்புறுத்தலால், அவர்களின் வாழ்க்கை எப்படி தடம் புரண்டு இருக்கும்? போன்ற கேள்விகள் பொதுவெளியில் எழுகின்றன.
அனுமதியின்றி இயங்கிவந்த மற்றொரு குழந்தைகள் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததற்காக அந்த இல்லத்தைப் பராமரித்துவந்த இருவர் மீது சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம் மகளிர் காவல்நிலையத்தில் சிறார்களைப் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி செயல்பட்டுவரும் குழந்தைகள் இல்லங்கள் சமூகப் பாதுகாப்புத்துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுவின் கண்காணிப்பி;ல் இருந்து விலகியிருப்பதும் இம்மாதிரியான குற்றங்கள் நிகழக் காரணமாக அமைந்துள்ளது.
அனுமதியின்றி செயல்படும் இல்லங்கள்:
அனுமதியின்றி செயல்பட்டுவரும் குழந்தைகள் இல்லங்கள் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதன்படி, நம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இயங்கிவரும் 9,358 குழந்தைகள் இல்லங்களில் 3,215 குழந்தைகள் இல்லங்கள் எவ்வித அனுமதியும் அரசாங்கத்திடம் பெறாமல் நடத்தப்பட்டு வருகின்றன. 1,487 குழந்தைகள் இல்லங்கள் அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட அரசுதுறையிடம் விண்ணப்பித்துள்ளன.
தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில், 1,641 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் 529 குழந்தைகள் இல்லங்கள் எவ்வித அனுமதியும் சம்பந்தப்பட்ட அரசுதுறையிடம் பெறாமல் இயங்கி வருகின்றன. 359 குழந்தைகள் இல்லங்கள் சிறுவர் நீதிச் சட்டத்தின் படி அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.
மூன்றில் ஒரு குழந்தைகள் இல்லங்கள் தமிழ்நாட்டில் எவ்வித அனுமதி பெறாமலும், சிறுவர் நீதிச் சட்டத்தின் படி அனுமதி கேட்டு விண்ணப்பிக்காமலும் இருந்துவருவது சிறார்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் கொடுமைக்களுக்கான காரணங்களில் முதன்மையான காரணம் என்று கூறலாம். அம்மாதிரியான குழந்தைகள் இல்லங்களைக் காலதாமதமின்றி ஆய்வு செய்து, அவை தொடரலாமா? அல்லது மூடப்பட வேண்டுமா? என்பது குறித்து உடனடி முடிவு செய்ய வேண்டிய கட்டாய சூழல் தற்பொழுது அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையில் தொய்வு:
குழந்தைகள் இல்லங்களில் நிகழந்த பாலியல் கொடுமைகள் தொடர்பான குற்ற வழக்குகளின் விசாரணை விரைந்து நடத்தப்படாத நிலை நிலவிவருகிறது.
தமிழ் நாட்டில் குழந்தை தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த ஒரு சிறுவனையும், சேலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனையும் ‘சைல்டு லைன்’ மீட்டெடுத்து, அவர்களை அரசினர் பிற்காப்பு இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அந்த இல்லத்தில் இருந்த சில நபர்களால் அந்த இரு சிறுவர்களும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய சம்பவம் 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குழந்தைகள் நலக் குழுவின் கவனத்திற்கு வந்ததும், காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புலன்விசாரணைக்குப் பின்னர், அந்த குழந்தை இல்லத்தில் இருந்த இருவர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் படி நீதி விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தற்பொழுது ஜாமீனில் இருந்து வருகின்றனர். ஆனால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த இரு சிறுவர்களும் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படாமல், அரசினர் குழந்தைகள் இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தை தொழிலில் அச்சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதற்கோ அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதற்கோ அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையும் இதுநாள் வரை வழங்கப்படவில்லை.
இச்சிறுவர்கள் போன்று வெளிச்சத்திற்கு வராத சிறார்கள் எத்தனை பேர்? அவர்களின் எதிர்காலம் எப்படி அமையும்? சிறார் நீதிச் சட்டத்தின் செயல்பாடுகள் முழுமை பெறாதது ஏன்? போன்ற கேள்விகளுக்கான விடை தேட வேண்டிய கட்டாய சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
உளவியலாளர்களின் சேவை:
கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பிற்காப்பு இல்லங்கள் போன்றவற்றில் தங்கியிருக்கும் சிறார்கள் இளம் வயதிலேயே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தலால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும், மற்ற சிறார்களைப் போன்று சமுதாயத்தில் ஒருங்கிணைந்து அவர்கள் செயல்படுவதற்கும் உளவியலாளர்களின் வழிகாட்டுதல் மிகவும் அவசியமானது.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உளவியலாளர்கள்தான் தற்பொழுது சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கிவரும் சிறார் இல்லங்களில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், அதனால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள சிறார் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்குத் தனிக் கவனம் செலுத்தி, அவர்களை நல்வழிப்படுத்த இயலாத நிலை நிலவி வருகிறது என்றும் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சிறார்கள் மீதான வழக்குகள்:
பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதற்காக 2019-ம் ஆண்டில் நம்நாட்டில் 38,685 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டதற்காக 1,024 பேரும், கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக 1,305 பேரும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதற்காக 1,383 பேரும், திருட்டு மற்றும் களவு குற்றங்களில் ஈடுபட்டதற்காக 13,497 பேரும், வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டதற்காக 912 பேரும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டில் 92 கொலை வழக்குகள்,100 கொலை முயற்சி வழக்குகள்,738 திருட்டு மற்றும் களவு வழக்குகள், 110 வழிப்பறி வழக்குகள் உட்பட 2,686 வழக்குகளில் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர். அவ்வழக்குகளில் 3,304 சிறார்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் மூவாயிரத்துக்கும் சற்று அதிகமான சிறார்கள் பல்வேறு குற்றவழக்குகளில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறப்பு இல்லங்களில் அவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர்.
நல்வழிப்படுத்துதல்:
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சிறார் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறார்களுக்குப் பாய் முடைதல், சோப் தயாரித்தல், புத்தகம் பைண்டு செய்தல் போன்ற வேலைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தன. அம்மாதிரியான பணிகளில் சிறார்களை ஈடுபடுத்துவது குழந்தை தொழிலாளர் சட்டத்தின் படி குற்றம் எனக் கருதப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித பணியிலும் அச்சிறார்கள் ஈடுபடுத்தப்படுவது இல்லை. பகல் முழுவதும் வெறுமனே பொழுதைக் கழித்து வரும் அந்த சிறார்களின் கவனம் தவறான வழியில் செல்லாமல் இருக்க, காலை மற்றும் மாலை நேரங்களில் உடல் சோர்வடையும் வகையில் விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும்.
சிறார் இல்லங்களில் உள்ள குழந்தைகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கல்வி கற்பிக்கும் திட்டம் இருந்தாலும், அது முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், சிறார் இல்லங்களில் பணிபுரியும் பாதுகாவலர், சமையல்காரர் உள்ளிட்ட சிலர் அச்சிறார்களுக்குப் போதைப் பொருட்கள் கிடைக்க உதவிகரமாக இருந்து வருகிறார்கள் என்றும், சிறார்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த தகவல்கள் உயரதிகாரிகளுக்குச் சென்றடைவதில்லை என்றும் சிறார் இல்லங்களோடு தொடர்பில் இருப்பவர்கள், அவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக சிறார் இல்லங்களில் தங்க வைக்கப்பட்ட சிறார்கள், சிறார் இல்லங்களில் இருந்து வெளியே வந்ததும், அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அவர்களைச் சமுதாயத்தில் ஒருங்கிணையும்படி செய்யத் தவறினால், காலப்போக்கில் அவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்படும். இன்றைய சூழலில், இம்மாதிரியான கண்காணிப்பு இல்லை என்றே கூறலாம்.
பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக சிறார் இல்லங்களில் தஞ்சமடையும் சிறார்களை உடல் மற்றும் மனதளவில் காயப்படுத்துவதும், குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்ட சிறார்களின் பிரச்சினைகளை உளவியல் ரீதியாகக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்தத் தவறுவதும், சமுதாயம் வெறுக்கும் குற்றவாளிகளாக அவர்களை மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை.
சிறார்களுக்கான வயது:
14 வயதுக்கும் குறைவான சிறார்களைத்தான் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் குழந்தைகளாகக் கருதப்படுகிறது. ஆனால், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடும் 16 வயதுக்கும் குறைவானவர்களைச் சிறார்கள் எனக் கருதப்பட்டு, அவர்களுக்குச் சலுகைகள் நம்நாட்டில் வழங்கப்படுகிறது.
12 முதல் 16 வயதுடைய சிறார்கள் நம்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலையைக் காணமுடிகிறது. 2019-ம் ஆண்டில் 214 பேர் கொலைக் குற்றச் செயல்களிலும், 272 பேர் கொலை முயற்சியிலும், 1,575 பேர் காய வழக்குகளிலும், 338 பேர் பாலியல் வழக்குகளிலும், 3,757 பேர் திருட்டு மற்றும் களவு வழக்குகளிலும், 182 பேர் வழிப்பறி வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக்கூடம் நடத்திய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
அதிகரித்து வரும் சிறார் குற்றங்களுக்குச் சமுதாய ரீதியான காரணங்கள் சில இருந்தாலும், சட்ட ரீதியாக அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளும் இதற்கு ஒரு காரணம் என்று குற்றவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வளரும் பருவத்தில் உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கான வழி முறைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாய சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
***
அய்யா. மிகவும் அருமையாக உள்ளது. நல்ல விழிப்புணர்வு பதிவு🙏🙏🙏
அய்யா வணக்கம்
நல்ல தகவல் அருமை
சிறார்களுக்கு தொழிற்பயிற்சி கொடுத்தால்தான் மனநிலை மாறி வாழ்க்கையில் முன்னேற முடியும்.சில சிறுவர் இல்லத்தில் பாதுகாவலர்களே பாலியல் தொந்தரவு கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் வெளியே சொல்ல பயப்படுவார்கள்.
இல்லங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள் முறையாக கையாண்டால் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும்
உங்கள் பார்வை சரி.
மாற்றங்கள் வரும்.
நன்றி
கண்ணப்பன்
மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்
கூர்நோக்கு இல்லங்கள், பிற்காப்பு இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில் பணிபுரிபவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கி அவர்களை இந்த மாதிரியான தவறுகள் செய்யாதவாறு நெறிப்படுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணம்….