சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் உயர் காவல் அதிகாரிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான நிகழ்வை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதும், இந்த வழக்கின் புலன் விசாரணையை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்துவரும் என்று தெரிவித்ததும் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் மன நிம்மதியையும், ஆறுதலையும் கொடுத்துள்ளது.

புலன் விசாரணையில் இருந்துவரும் இந்த வழக்கு தொடர்பான கருத்துகளை விவாதிக்காமல், இன்றைய அரசு நிர்வாகத்தில் காவல்துறை எத்திசையில் பயணிக்கிறது? பொதுமக்களின் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளுக்கும், எதிர்கொள்ளும் குற்ற நிகழ்வுகளுக்கும் இன்றைய காவல்துறை எந்தளவுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது? சமீப காலத்தில் காவல்துறையின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? என்பது குறித்தும் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர், கவிஞர், எழுத்தாளர் உட்பட அனைத்து வகையான படைப்பாளிகளின் வாழ்வில் நிகழும் ஏற்றத்தாழ்வுகள் அந்த படைப்பாளிகளின் படைப்புகளின் தரத்தைக் குறைத்து மதிப்பிட காரணமாக அமைவதில்லை. ஆனால், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் தனிப்பட்ட வாழ்க்கையில் வெளிப்படும் ஒழக்கச் சீர்கேடுகள் அவர்களின் பணித் திறனைச் செயல் இழக்கச் செய்துவிடுகிறது என்பதைப் பல நேரங்களில் காவல்துறையினர் உணர்வதில்லை.

காவல்துறையினரின் சிறு சிறு வரம்பு மீறல்கள் குறித்து மறுப்பு எதுவும் வெளிப்படுத்தாமல், அவைகளை அனுசரித்து வாழும் மன நிலையில்தான் பெரும்பாலான பொதுமக்கள் இன்றைய சமுதாய சூழலில் இருந்து வருகின்றனர்.

சேலை மீது முள் விழுந்தாலும், முள் மீது சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குதான் என்ற முதுமொழிக்கேற்ப காவல்துறையினரிடம் வம்பு வளர்த்துக்கொண்டால், அதன் சுமையைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்பதை இன்றைய சமுதாயம் நன்கு உணர்ந்து செயல்படுவதால்தான், காவல்துறையினரின் பல அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

காவல்துறையினரும் சமூகத்தில் ஒரு அங்கமாக இருப்பதால், சமூகத்தில் பரவலாகத் தென்படும் குறைபாடுகள் காவல்துறையினர் சிலரிடம் பணியின் பொழுது வெளிப்படுகிறது. அதுமட்டுமின்றி, இரவு பகல் என்று பாராமல் பணிபுரிவதால் ஏற்படும் மன உலைச்சலால் கரடு முரடான செயல்களைச் சில சமயங்களில் அவர்கள் வெளிப்படுத்திவிடுகின்றனர். அவர்களின் அத்தகைய செயல்கள் அவர்களையும், அவர்கள் சார்ந்த துறையையும் சமுதாயத்தில் தலை குனிய வைத்துவிடுகிறது.

24 மணி நேரமும் கதவு திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே அரசு அலுவலகம் காவல்நிலையம்.  இரவு பகல் என்று பார்க்காமல் ஆண், பெண் இருபாலரும் ஆபத்துக்கு உதவி நாடிச் செல்லும் இடமாக காவல்நிலையம் திகழ்ந்து வருகின்ற நிலையில்தான், உயர்காவல் அதிகாரி ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சுயமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மக்கள் தினமும் நடந்து செல்லும் நடைபாதையில் திடீரென்று முள் மரம் ஒன்று முளைத்துவிடுவது இல்லை. மண்ணில் விழுந்த முள் விதை முளைத்து, சிறிய செடியாக வளர்ந்து, சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அது முள் மரமாக வியாபித்து, அதனருகில் செல்பவர்களுக்குத் தீங்கை விளைவிக்கிறது. அந்த முட்செடியை முளையிலேயே கிள்ளி எறிய தவறினால், அதன் முட்களுக்குப் பலர் பழியாகிவிடுகின்ற நிலையை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இன்னும் எத்தனை முள் மரங்கள் காவல்துறை என்னும் பரந்து விரிந்துள்ள தோட்டத்தில் உள்ளன?  அவை அனைத்தும் உரிய காலத்தில் வெட்டி, அப்புறப்படுத்தப்படுமா?

காவல்துறை நிர்வாகத்தில் மிக முக்கியமானவை எனக் கருதப்படுவது பயிற்சி மற்றும் கண்காணிப்பு. போதிய கல்வி மற்றும் உடல் தகுதி மட்டும் ஒரு நபர் சிறந்த காவலராக, காவல் அதிகாரியாகச் செயல்பட போதுமானது அல்ல. அவருக்குக் கொடுக்கப்படும் சரியான பயிற்சியும், அவர் முறையாக பணி செய்கிறாரா? என்பது குறித்த தொடர் கண்காணிப்பும்தான் அவரை ஒரு சிறந்த காவலராக, காவல் அதிகாரியாக உருவாக்கும்.

சமீப காலங்களில் இளம் காவல்துறையினருக்குத் தகுதி வாய்ந்த பயிற்றுநர்களால் முறையான பயிற்சி வழங்குவது புறந்தள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அரசு மற்றும் துறை சார்ந்த பல்வேறு நிர்வாகக் காரணங்களைக் கூறி, தன்னைத் தானே காவல்துறை சமாதானம் படுத்திக் கொள்கிறது.

தூண்டிவிடப்படாத திரி பிரகாசமாக எரியாது.  அது போன்று முறையாக கண்காணிப்பு இன்றி செயல்படும் காவல்துறையின் பணியும் சிறப்பாக அமையாது. காவல்துறையினரின் துறை சார்ந்த பணிகள் மீதான கண்காணிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதும், தனி மனித ஒழுக்கச் சீர்கேடுகளுடன் பணிபுரிபவர்களின் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்துவரும் உயரதிகாரிகளின் போக்கும் வேலியே பயிரை மேய்கின்ற நிலையை ஏற்படுத்தி வருகிறது.

தண்ணீர் எப்பொழுதும் மேடான இடத்தில் இருந்து தாழ்வான இடத்தை நோக்கிதான் பயணிக்கும். அதுபோன்று, உயரதிகாரிகளிடம் உள்ள நற்குணங்களும், நேர்மையும் காவல்துறையின் கீழ்மட்டம் வரை மெல்ல மெல்ல பரவத் தொடங்கிவிடும்.  களத்தில் பணிபுரியும் காவல்துறையினரிடம் நேர்மையும், நற்பண்புகளும் குறைந்து காணப்பட்டால், அதற்கான காரணத்தை விவரிக்கத் தேவையில்லை.

காவல்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிபவர்களுக்கு எப்போதும் ஒரு தர்மசங்கடம் உண்டு.  அவரவர் மேலதிகாரிகளின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.  அதே சமயம் அதிகாரத்திலுள்ள அரசியல் குறுக்கீடுகளையும் சமாளித்து செயல்பட வேண்டும்.

சமீப காலத்தில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனம் கோணாமல் செயல்பட்டால், தங்களது பணியிடத்தைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற கள நிலவரத்தை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ற மனப்பக்குவத்தைப் பல அதிகாரிகள் வளர்த்துக் கொண்டதின் விளைவுதான் பெண் உயர் காவல் அதிகாரி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிட்ட சம்பவம்.

ஒரு மாவட்ட காவல்துறையின் உயரதிகாரி ஒருவரைப் பழிவாங்கும் நோக்கத்திற்காக அவரது நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்த ஒரு பெண் அதிகாரி, அந்த உயரதிகாரி மீது பாலியல் துன்புறத்தல் செய்ததாகப் புனையப்பட்ட புகார் கொடுத்த சம்பவம் ஒன்றும் அண்மையில் நம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

வரம்பு மீறி செயல்பட்டாலும் சட்டத்தின் பார்வையிலிருந்து தப்பிவிடலாம் என்ற உணர்வு காவல்துறையினரிடம் அதிகரித்திருப்பதை இம்மாதிரியான சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

காவல்துறையின் செயல்திறனைத் தொடர்ந்து கண்காணித்து வழிநடத்தும் துறைசார்ந்த உயரதிகாரிகளின் கண்காணிப்பில் ஏற்பட்ட தொய்வும், அதிகார மையத்தில் இருப்பவர்களின் அளவிற்கு அதிகமான தலையீடும் காவல்துறையின் தரம் மட்டுமின்றி, அதன் கம்பீரத்தையும் தாழ்வடையச் செய்வதை அறிந்தும், நிர்வாகத்தில் அனுபவம் கொண்ட பலர் அமைதி காத்து வருகின்றனர்.

பல்வேறு நிலைகளில் பணிபுரியும் காவல்துறையினரின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து, குறைகளைக் கண்டறிந்து, அவைகளைக் களைவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் துறை ரீதியான அமைப்புகளைத் தன்னிச்சையாகச் செயல்படும் நிலையை நீதிமன்றம் ஏற்படுத்தினால்,  அதுவே நீதிமன்றம் சமுதாயத்திற்குச் செய்யும் மாபெரும் சேவையாக அமையப்பெறும்.

***

8 thought on “புகாரும், புனையப்பட்ட புகாரும்”
 1. அருமையான பதிவு…

  தனிமனித ஒழுக்கத்தை அனைவரும் வளர்த்துக் கொண்டால் மாற்றம் விரைவில்….
  பள்ளிகளிலேயே நல்லொழுக்கம் மேலும் வளர்க்கப் பட வேண்டும்.

 2. Sir as you said it should have been nipped in the bud.now it is very late.the person who indulged in such heinous activity used to do many times.when he was dig in trichy he involved in such very long back.then my friend told that it is usual for him.so his subordinates were restless especially lady subordinates.earlier too one high ranking officer of IG cadre did it with his lady SP level officer.i don’t know what happened to the case.your view is correct sir.If senior level officers behave properly and if they are honest then their subordinates will function properly.but these officers are to be punished severely which will be a lesson to others .

 3. குற்றச்சாட்டுக்கு உள்ளான DGP கொரோனா காலத்தில் சுகாதார துறையில் நடந்த முறைகேடு ஆதாரங்களை தன் மனைவியின் மூலமாக அறிந்து அதன் மூலம் சட்டம் ஒழுங்கு பதவியை பெற்று அரசை மிரட்டுகின்ற அளவு வந்த பின் இப்பொழுது இருக்கின்ற அரசு எப்படி அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கும் ,.அரசாங்கம் நேர்மையாக நடந்தால் தான் காவல்துறைக்கு நேர்மையான தலைமை கிடைக்கும் அரசால் தான் காவல்துறைக்கு அவபெயர் ஏற்படுகின்றது

 4. அருமையான கட்டுரை சார்.
  முளையிலேயே கிள்ளி எறியாமல் இருப்பது தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட வைப்பது முக்கியமான உண்மை.
  ஆளும் தரப்பினருக்கு ஆதரவாக உயரதிகாரிகள் செயல்படும் நிலை மிகவும் அதிகமாகி விட்டது வருத்தத்துக்குரியது.
  எவ்வளவு கேவலமாகவும் நடக்கலாம்.. ஆனால் பிரச்சினை இல்லாமல் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது.
  இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் தகுந்த நீதி கிடைக்க வேண்டும். அது நடந்தால் இனி வருங்காலங்களில் இது போன்ற வேலியே பயிரை மேயும் குற்றங்கள் பெருமளவில் குறையும் என்று நம்பலாம்.

 5. அரசு சரியானால் அதிகாரிகள் சரியாவார்கள். அதிகாரிகள் சரியானால் மக்கள் சரியாவார்கள். மக்கள் சரியானால் தேசம் உருப்படும்.

 6. அய்யா வணக்கம்
  காவல் துறை அதிகாரிக்கே இந்த நிலையென்றால் மக்கள் கொடுக்கும் புகார் எப்படி எடுப்பார்கள்.தவறு செய்யும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நினைக்கவேண்டும்..கீழ் அதிகாரிகள் தன் பதவியை தூக்கிவிடுவார்கள் நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார்கள்.
  சில காவல் நிலையங்கள் இரவு 12 மணிக்கு மேல் கதவு மூடி தான் இருக்கிறது.

 7. நீதியும், நியாயமும்,தர்மமும் நம்மை விட்டுப் பிரிந்து சென்று பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது.
  தற்காலத்தில் தவறு செய்பவர்கள் எண்ணிக்கை 80 to 90% விழுக்காடு ஆகிவிட்டது.ஆளும் அதிகார வர்க்கம் அப்படி ஆக்கி விட்டார்கள்.நானும் கொள்ளை அடிக்கிறேன்,நீயும் சம்பாதித்து கொள்,உன்னை நான் கேட்க மாட்டேன் ,நீயும் என்னை தொட கூடாது.
  அதுவும் பாலியல் தொந்தவு என்பது சகிக்க முடியாத குற்றம்,அதுவும் காவல் துறை தலைமை யே ,அப்படி நடக்கும் போது, சாதாரண பெண்களின் நிலைமை எப்படி இருக்க போகிறது என்பதை நினைத்தால்,பயமாக உள்ளது.
  நீதி மன்றம் தவ்ரு செய்வர்களி டம் ,அறிவுரை கூறாமல் ,உடநிடியாக தண்டனை வழங்கி சிறையில் தள்ள வேண்டும்.
  ஒரு நாட்டின் பெண்கள் பாதிக்கப்படும் போது, அந்த நாடு அழிவை நோக்கி நகரும்.
  வளர்ந்த நாடுகளில் கூட காவல் துறையில் பணி புரியும் அதிகாரிகள் மீது , இந்த மாதிரி புகார்கள் இருப்பதாக அறிய முடியவில்லை.
  புண்ணிய பூமயில் அதுவம்,ஒழுக்கம் நிறைந்த தமிழ் நாட்டில் நடப்பதை பாரக்கும் போது,நெஞ்சம் பதறகிறது.
  ஆண்டவன் தான் மக்களை காப்பாற்ற முடியும்.

 8. I never seen any other retired officials talk the truth like you do dear Sir ,Thats why you stand out the best ever among all dear Sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *