திருநெல்வேலி நகரத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் 2009-ம் ஆண்டில் மூன்று நபர்கள் கொலையான அந்த சம்பவம் தென்தமிழகத்தில் மிகவும் பரப்பரப்பாகப் பேசப்பட்ட கொலை வழக்காகும். இரு சமூகத்தினர்களுக்கு இடையே நிலவிவந்த முன் விரோதத்தின் காரணமாக பழிக்குப் பழி வாங்கும் விதத்தில் நிகழ்த்தப்பட்ட கொலையாகும் அது.
இந்த மூவர் கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்திய முக்கிய கொலையாளி தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர். சொந்த கிராமத்தில் தலைமறைவாக இருந்துவந்த அந்த கொலையாளியைப் புலன்விசாரணை செய்துவரும் போலீசார் நேரடியாகச் சென்று கைது செய்வது எளிதான காரியம் அல்ல. எனவே, தூத்துக்குடி மாவட்டக் காவல்துறையின் தனிப்பிரிவில் (உளவுப்பிரிவில்) பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த இரண்டு காவலர்களிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அன்றைய தினம் பகல் முழுவதும் மறைவிடத்தில் முடங்கிக் கிடந்த அந்த கொலையாளி, பொழுது சாய்ந்த நேரத்தில் அக்கிராமத்தில் உள்ள டீ கடைக்கு ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து வந்தான். அந்த தருணத்தை எதிர்பார்த்திருந்த அந்த தனிப்பிரிவு காவலர்கள் இருவரும் எதேச்சையாக அங்கு வந்தது போல் காட்டிக் கொண்டு, அந்த கொலையாளியிடம் பேச்சுக் கொடுத்தனர்.
அந்த முன்னிரவு நேரத்தில் அவர்கள் மூவரும் அந்த சிறிய டீக்கடையில் டீ பருகிவிட்டு, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் மூவரும் டீக்கடையில் இருந்து கிளம்பி தெருவில் நடக்கத் தொடங்கினர். சமயம் பார்த்து கொலையாளியை மடக்கிய தனிப்பிரிவு காவலர்கள், அவனை அவர்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, அந்த கிராமத்தில் இருந்து வெளியேறினர். அவர்களின் உயரதிகாரி குறிப்பிட்டிருந்த இடத்தில் அந்த கொலையாளியைக் கொண்டு சேர்த்தனர்.
தனியறையில் விசாரணைக்காக அமர வைக்கப்பட்டிருந்த அந்த ‘ஒற்றை நாடி’ மனிதரைப் பார்த்ததும், இவனா சமூக ரீதியான கொலைகளைத் திட்டமிட்டு நிகழ்த்துபவன்? என்ற ஆச்சரியம் உயரதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
அவன் செய்த முதல் கொலை எது? என்று கேட்டதற்கு அவன் அளித்த பதில் உயரதிகாரிகளைத் திகைப்படையச் செய்தது. 2003-ம் ஆண்டில் சென்னையில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் இறந்துபோன நபர் ஒருவரின் உறவினரைக் கொலை செய்த சம்பவத்தில் அவன் முதன் முதலாகப் பங்கெடுத்துக் கொண்டதாகவும், அக்கொலை வழக்கில் அவன் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை என்றும், அதைத் தொடர்ந்து அவன் சம்பந்தப்பட்ட கொலைகள், கொலை முயற்சி சம்பவங்கள் மற்றும் அச்சம்பவங்களுக்கான பின்னணி விவரங்கள் குறித்தும் அவன் விரிவாகக் கூறினான்.
கொலை, கொலை முயற்சி என பல குற்ற சம்பவங்களில் அவன் ஈடுபட்டிருந்தும், குறைவான வழக்குகளே அவன் மீது இருந்தன. அதற்கான காரணம் குறித்து கேட்டதற்கு, ‘கொலை செய்ய திட்டம் வகுத்துக் கொடுத்துவிடுவேன். பெரும்பாலான கொலை சம்பவங்களில் நான் நேரடியாக ஈடுபடமாட்டேன். கொலை செய்து முடிந்ததும், கொலையாளிகளில் சிலரைப் போலீசிலோ அல்லது நீதிமன்றத்திலோ சரணடையச் செய்து விடுவேன்’ என்று அவனது தொழில் ரகசியத்தையும் அவன் வெளிப்படுத்தினான்.
கூலிப்படை போன்று பணத்திற்காகச் செய்த கொலைகள் பற்றி அவனிடம் கேட்டதற்கு, ‘நான் கொலைகாரன்தான். ஆனால், பணத்தாசை பிடித்தவன் அல்ல’ என்று கனத்த குரலில் சட்டென்று பதிலளித்துவிட்டு, கொஞ்ச நேரம் மவுனமாக இருந்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை? மெல்லிய குரலில் உணர்ச்சி பொங்க பேசத் தொடங்கினான்.
‘ஒருமுறை வெளியூர் சென்று ஒரு சம்பவத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பிய பொழுது, கை செலவுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்தில் மீதமிருந்த 200 ரூபாயை அப்பாவிடம் கொடுத்தேன். பணம் ஏது? என்று அப்பா கேட்டார். ஒரு சம்பவத்திற்கு சென்ற பொழுது கொடுத்த பணத்தில் மீதமிருந்த பணம்தான் இது என்றேன். அந்த பணத்தை வாங்க மறுத்த அவர், “அது பாவக்காசு. எனக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டார்’ என்று படிப்பறிவு இல்லாத கிராமவாசியான அவனின் அப்பாவைப் பற்றிய சம்பவம் ஒன்றைக் கூறினான்.
‘பாவக்காசு எனக்கு வேண்டாம்’ என்று கூறிய அந்த கிராமவாசி குணத்தாலும், பண்பாலும் மிகப் பெரிய செல்வந்தர். இன்றைய சமுதாயத்தில் பரவலாகப் பேசப்பட்டுவரும் ‘ஏட்டுக் கல்வி’ அறியாத அந்த தந்தைக்கு பண்பாளனாக வாழும் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுத்த நம் சமுதாயம், அவரது மகனுக்கு அதைக் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டது.
முறையற்ற வழிகளில் பொருள் ஈட்டுபவர்களிடம் இருந்து பெறப்படும் பொருள் உதவி பாவத்தை வாங்குவதற்கு சமம் என்ற மனப்பான்மை மிகுந்த சமுதாயத்தில் தன் தந்தை வாழ்ந்து வருகிறார் என்பதைக் காலம்கடந்து உணர்ந்தார் அந்த கொலையாளி.
வாழ்க்கையின் பிற்பகுதியில் அந்த கொலையாளி எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்கள் பல.
மூவர் கொலையான வழக்கில் கைதான அந்த கொலையாளி சில மாதங்கள் சிறையில் கழித்துவிட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தான். நீதிமன்ற ஆணைபடி மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினசரி கையெழுத்து போட்டு வந்தான்.
கையெழுத்து போடுவதற்காக காவல்நிலையம் செல்லும் பொழுது, அந்த கொலையாளி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்து, பழி தீர்த்துக் கொள்ள அவனது எதிரிகள் சதித்திட்டம் தீட்டினர். உளவுப்பிரிவு மூலம் தகவல் அறிந்த போலீசார் அதை முறியடித்தனர்.
இதுநாள்வரை கைது செய்யப்படாமல் இருந்த குற்ற வழக்குகளில் கைது, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறைவாசம், நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகளில் விசாரணைக்கு ஆஜர் ஆகுதல் என அவனது நாட்கள் சிறையில் கழிந்தன.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு போலீஸ் வாகனத்தில் உரிய பாதுகாப்புடன் அழைத்துச் சென்ற பொழுது, எதிரிகளால் அவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் 2017-ல் நிகழ்ந்தது.
‘தீதும், நன்றும் பிறர்தர வாரா’ என்ற புறநானூறு பாடலைச் இச்சம்பவம் நினைவுக்குக் கொண்டு வருகிறது.
***
தீதும் நன்றும் பிறர்தர வாரா அற்புதமான வாசகம். இது போன்றநல்லவற்றை,நல்லொழுக்க பாடங்களை பள்ளிகளில் பால்யபருவத்திலேயே போதித்தால் பாவசெயல்கள் குறையும்.
பள்ளிகளில் கண்டிப்பாக மீண்டும் நல்லொழுக்கபாடம் கற்றுவித்தல் முறை வர வேண்டும். அப்படி வந்தால் பாவகாசுகள் எவை எனஇளம் சமுதாயம்
அறியும்.
சமீப காலங்களில் நம் மக்களிடையே நேர்மையற்ற மனோபாவம் அதிகமாகி உள்ளது எனலாம். பெறும் கூலிக்கு தக்க வேலை செய்யாமல் இருப்பது, பணம் சம்பாதிக்க நேர்மையற்ற வழிகளில் ஈடுபடுவது.. போன்ற செயல்கள் பெருமளவு அதிகரித்து உள்ளன. அரசின் செயல்பாடுகள் பல வகைகளில் இதனை ஊக்குவிப்பது தான் கொடுமையிலும் கொடுமை.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
மு.வரதராசன் விளக்கம்:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
Excellent article sir.people are greedy of money.this post should reach all.if u earn money by doing such sins you have to answer for that.none can escape from that which was narrated by our epic Mahabharatham and also by many saints and sundara.but our people don’t bother.they want money and indulge in all sorts of illegal activities ti earn .
அய்யா வணக்கம்
நண்பர் பல ஆண்டுகள் கழித்து சந்தித்தேன்.
அவர் சொன்னார்
அவருடைய நண்பர் ஒரு காவல்துறைக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உதவி ஆய்வாளராக திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு காவல்நிலையத்தில் சேர்ந்தார்.இரண்டுகள் பணிபுரிந்த வேளையில் அங்கு நேர்மையற்ற முறையில் நடந்து ஆய்வாளர் கண்டித்து தன் பதவியிலிருந்து விலகி கொண்டார்.இப்பொழுது ஈரோடு மாவட்டத்தில் நேர்மையாக துணை வட்டாட்சியராக பணியாற்றியிருக்கிறார்