கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு நாள். பயணிகளின் நடமாட்டம் பரபரப்பாகக் காணப்பட்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்று சிறுவர்களை அழைத்துக் கொண்டு, நடைமேடையை நோக்கிச் சென்றார் சமூகப் பாதுகாப்புதுறையைச் சார்ந்த அரசு அதிகாரி ஒருவர். வடகிழக்கு மாநிலத்தை நோக்கி புறப்படுவதற்குத் தயாராக, ருந்த ரயிலில் அவர்கள் நான்கு பேரும் ஏறி அமர்ந்தனர். அந்த சிறுவர்கள் யார்? அவர்களை அரசு அதிகாரி எதற்காக அழைத்துச் செல்ல வேண்டும்?   

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடி வந்து, நகரங்களில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிந்து, இரவு நேரங்களைச் சாலையோரங்களில் கழித்துவரும் சிறார்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உணவு, உடை, தங்குவதற்கு இடம் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்கும் பணியைச் சமூகப் பாதுகாப்புதுறையின் கீழ் இயங்கிவரும் குழந்தை இல்லங்கள் செய்து வருகின்றன.

சென்னை உள்ளிட்ட பெருநகர சாலைகளில் போக்குவரத்து சிக்னல்கள் அருகில் வாகனங்கள் நின்று கொண்டிருக்கும் பொழுது, சிறு சிறு பொருட்களை விற்பனை செய்யும் சிறுவர், சிறுமியர்களை இன்றும் காணலாம். இவர்களில் பலர் வெளி மாநிலங்களைச் சார்ந்த சாலையோரக் குழந்தைகள்.

அரசு மற்றம் அரசின் அனுமதியுடன் இயங்கிவரும் குழந்தை இல்லங்களில் சாலை ஓரங்களில் இருந்து மீட்கப்படும் சிறார்கள் ஒப்படைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களைப் பராமரிப்பதோடு, அவர்களின் சொந்த ஊர் மற்றும் பெற்றோர்கள் குறித்த தகவல்களைத் திரட்டுவார்கள். பின்னர், குழந்தைகள் நல குழுமத்தின் அனுமதியுடன் அந்த சிறார்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை அந்த குழந்தைகள் இல்லத்தின் பொறுப்பாளர்கள் மேற்கொள்வார்கள்.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கடந்த ஆண்டில் மீட்கப்பட்ட சாலையோரக் குழந்தைகளில் அந்த மூன்று சிறார்களும் அடங்குவார்கள். அவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்காக அந்த அரசு அதிகாரி மேற்கொண்ட பயணம் அதன் இலக்கை அடைந்ததா?

1,700 கி.மீ தூரம் ரயில் பயணம் மேற்கொண்டு, அந்த சிறார்களின் கிராமங்களைக் கண்டறிந்து, அவர்களின் பெற்றோர்களிடம் அவர்களை ஒப்படைத்தார் அந்த அரசு அதிகாரி. 15-வயது பூர்த்தி அடையாத மகன் கிடைத்தது குறித்து பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்றும், அதற்கு நன்றி பாராட்டுவார்கள் என்றும் எதிர்பார்த்த அரசு அதிகாரிக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.

“தமிழ்நாட்டு அதிகாரிகள் உன்னைப் பிடித்து, இங்கு அழைத்து வந்தது குறித்து வருத்தப்பட வேண்டாம். விரைவில் உன்னை வேறு ஒரு மாநிலத்திற்கு அனுப்பி வைக்கிறேன்” என்று ஒரு சிறுவனின் பெற்றோர் அவரின் மகனுக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள் அந்த அதிகாரிக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. வேலை தேடி வெளிநாடு செல்ல முயற்சி செய்யும் பட்டதாரி இளைஞன் ஒருவனுக்கு அவனது தந்தை கூறும் ஆறுதல் வார்த்தைகளை நினைவுபடுத்தியது அந்த சிறுவனின் தந்தை கூறிய வார்த்தைகள்.

சாலையோரக் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் விழலுக்கு இறைத்த நீர் போன்று பயனற்றதாக இருக்கும் நிலையை அந்த சிறுவனின் தந்தை கூறிய வார்த்தைகள் உணர்த்துகின்றன.

மிகப் பழமையான, பண்பட்ட உயர்ந்த நாகரிகத்தின் பிறப்பிடமாக, குறிப்பாக குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற நம் சமுதாயத்தில், சிறார்கள் புறக்கணிக்கப்படுவதும், சாலையோரக் குழந்தைகளாக வாழ்க்கையை அவர்கள் தொடர்வதும் நிகழ்கால சமுதாயத்தில் நிலவிவரும் முக்கியமான சமூகப் பிரச்சினை. இந்த பிரச்சினை சமுதாயத்தில் எந்தளவுக்கு வியாபித்துள்ளது? இன்றைய நிர்வாகத்தால் அது எப்படி எதிர்கொள்ளப்படுகிறது? அதற்கென உருவாக்கப்பட்ட சட்டங்களின் கூர்மை எப்படி சிதைக்கப்படுகிறது? போன்ற வினாக்களுக்கான விடை தேடும் பொழுது களநிலவரம்; வெளிச்சத்திற்கு வருகிறது.

முறையான கல்வி கற்க வேண்டிய இளம்பருவத்தில், குடும்ப சூழல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் அல்லது வீட்டிலிருந்து விரட்டப்படும் சிறார்கள் அருகிலுள்ள நகரங்களை நோக்கிச் சென்று, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் அடைக்கலம் அடைகின்றனர். அவர்களில் பலர் மாநில எல்லையைக் கடந்து சென்றுவிடுவதும் உண்டு. அத்தகைய சிறார்கள் சாலையோரக் குழந்தைகளாக பரிணமித்து, புதியதொரு வாழ்க்கை முறைக்கு மாறிவிடுகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் முயற்சியால் அனைத்து மாநிலங்களிலும் ‘ஆப்பரேசன் ஸ்மைல்’ என்ற பெயரில் தேடுதல் வேட்டைகள் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு, சாலையோரக் குழந்தைகள் கண்டறியப்படுகின்றனர். பின்னர், அக்குழந்தைகளின் பெற்றோர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடம் அக்குழந்தைகள் ஒப்படைப்படுகின்றனர். பெற்றோர்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அக்குழந்தைகள் அரசின் கண்காணிப்பில் இயங்கிவரும் குழந்தை இல்லங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சென்னை நகரில் ஆப்பரேசன் ஸ்மைல் மூலம் கண்டறியப்பட்ட 201 சாலையோரக் குழந்தைகளில் 159 பேர் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 42 பேர் குழந்தை இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுக்கு ஓரிரு முறை நடத்தப்படும் இந்த தேடுதல் வேட்டைகளில் சில நூறு சாலையோரக் குழந்தைகள்தான் மாநிலங்கள் தோறும் கண்டறியப்படுகின்றனர். அந்த கணக்கின் அடிப்படையில், நாடு முழுவதும் ஒரு சில ஆயிரம் சாலையோரக் குழந்தைகள்தான் இருப்பார்கள் என்று கருதிவிடக்கூடாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி நம்நாட்டில் உள்ள சாலையோரக் குழந்தைகளின் எண்ணிக்கை 1.80 கோடி. மும்பாய், கொல்கத்தா, டில்லி போன்ற பெருநகரங்கள் ஒவ்வொன்றிலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சாலைகளில் தங்களது தினசரி வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். அக்குழந்தைகளில் சுமார் 20% பேர் முழுமையாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் எனக் கள ஆய்வு வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு சிறார் இந்தியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் சாலையோரக் குழந்தையாக அடைக்கலம் அடைவதாக மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது. அதாவது ஆண்டுதோறும் ஒரு லட்சம் சிறார்கள் இந்தியாவில் உள்ள ரயில்நிலையங்களில் சாலையோரக் குழந்தைகளாகத் தஞ்சமடைகின்றனர்.

குடும்ப வன்முறை, குடிப்பழக்கம் உள்ள தந்தையின் துன்புறுத்தல், பிரிந்து வாழும் பெற்றோர்களால் சிறார்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சினைகள், பெற்றோர்களால் வீட்டிலிருந்து விரட்டப்படும் சிறார்கள், ஏழ்மையின் காரணமாகவும், பள்ளிக்கூடம் செல்ல பிடிக்காமலும் வீட்டை விட்டு வெளியேறும் சிறார்கள் என பல்வேறு குடும்ப மற்றும் சமூக சூழல்களால் சாலையோரக் குழந்தைகளின் எண்ணிக்கை நம்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

சாலையோரக் குழந்தைகளில் மூன்றில் இரண்டு குழந்தைகள் தினசரி வாழ்வில் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கும், இரண்டு பேர்களில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர். பெரும்பாலான சிறார்கள் குழந்தை தொழிலாளியாக வேலை செய்து, அவர்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் பணியிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவை அனைத்தும் பெரும்பாலும் சட்டத்தின் பார்வைக்கு வருவதில்லை.

எல்லா செல்வங்களைக் காட்டிலும் தலைசிறந்த செல்வமாக குழந்தைகளைக் கொண்டாடும் பண்பாடும், கலாச்சாரமும் கொண்ட நம் சமுதாயத்தில் குழந்தைகள் புறக்கணிக்கப்படும் நிலை அண்மை காலத்தில் நிகழத் தொடங்கியுள்ளது. அதற்கு பெற்றோர்கள் தரப்பில் காரணங்கள் பல கூறினாலும், அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் பெற்றோர்களும், அவர்கள் சார்ந்த சமூக சுழலும்தான்.

ஆண்டுதோறும் நம்நாட்டில் லட்சக் கணக்கான சிறார்கள் அவரவர் குடும்பங்களில் இருந்து வெளியேறி, சாலையோரக் குழந்தைகள் எனும் கடலில் சங்கமம் ஆகிவிடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தாத வரையில், இப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வை சட்டங்களால் வழங்க இயலாது.

கோடிக்கணக்கான சிறார்கள் நம்நாட்டில் சாலையோரக் குழந்தைகளாக வாழ்ந்து வருகின்ற இன்றைய சூழலில், அவர்களை முறையாகப் பராமரித்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டத் தவறினால், அச்சிறார்களில் பலர் சமுதாயத்திற்குப் பெரும்சுமையாகிவிடுவார்கள். அவர்களில் பலர் கைதேர்ந்த குற்றவாளிகளாகவும் மாறிவிடுவார்கள்.

இந்த பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தால்தான், சாலையோரக் குழந்தைகளின் எண்ணிக்கை நம்நாட்டில் கோடிக் கணக்கில் உயர்ந்துள்ளது. அனுதாபத்தை மட்டும் சாலையோரக் குழந்தைகளிடம் காட்டுவதால், இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடாது.

இந்த பிரச்சினைக்குப் பின்னால் மறைந்துள்ள குடும்ப வறுமை மற்றும் சீரழிந்துவரும் குடும்ப கட்டமைப்பு போன்ற சமூக பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண்பதுதான் எல்லா சிறார்களையும் இந்நாட்டு மன்னர்களாக வாழ வழி வகுக்கும்.

***

4 thought on “சிதைந்த கனவுகளுடன் சாலையோரக் குழந்தைகள்”
 1. ஒரு தேசத்தின் முன்னேற்ற குறியீடு என்பது அந்த தேசத்தின் பெண்களுக்கும் குழந்தகளுக்கும் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக கொடுக்கப்படும் உரிமைகள் பாதிக்கப்படும் போது அந்த தேசத்தின் முன்னேற்ற குறியீடு என்பது கேள்வி குறி ஆகி விடும்.
  பொருளாதர பாதிப்புக்கு உள்ளாகும் பெற்றோர்கள் தங்கள் குழநதைகளுக்கு நல்ல கல்வி, சமூக அந்தஸ்து கொடு க்க இயலாமல் போகும் போது, இந்த மாதிரி தெருவோர குழநதைகள உருவாகி விட காரணமாக அமைகிறது.
  அரசு கண்டிப்பான சட்டம் மூலம் இதை தடுக்க முடியும். மேலும் பெண் குழந்தைகள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
  இதை தடுக்க முடியாவிட்டால் எதிர் காலத்தில் ஒரு குற்ற சமுதாயம் உருவாக அரசும் மககளும் காரணமாகி விடுவார்கள்.
  ஏன் எனில் தற்காலத்தில் பாலியல் வன்முறை என்பது மிகவும் சர்வ சாதாரணமாக தண்டனை இல்லா நிகழ்வாக இருக்கிறது என்பதை நினைக்கும் போது , வருங் காலம் எப்படி இருக்க போகிறது என்று கவலை யாக உள்ளது.
  ஒவவொருவரும் சிந்திக்க வேண்டும்.நல்ல சமுதாயம் அமைய வேண்டும்.

 2. அய்யா வணக்கம்
  நல்ல தகவல்
  ஒரு சிலரால் தவறான. நடவடிக்கையில் இந்த மாதிரி குழந்தைகள் தெருக்களில் சுற்றி வருகிறார்கள்.அரசாங்க தக்க நடவடிக்கை எடுத்தால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

 3. Sir good analysis.it is very pathetic to know such situation in our country.govt should take initiative to rehabilitate young children by offering free education with free food for such poor.that will remove child labour to some extent.but the education is to be imparted to all which will make such parents value of education.but it is a great task.all villages should be with school and primary health centres to offer free education and health care.but in our country our people will misuse facilities and won’t implement properly.sad state of affairs.NGOs can come forward to eradicate the situation but they should not have other policies like conversion of religion etc.highly thought provoking article sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *