ஊர் நாட்டாமை மரத்தடியில் அமர்ந்து, இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து, தீர்ப்பு வழங்குவது போன்றுதான் சுதந்திர இந்தியாவில் பல பொதுத் தேர்தல்கள் கடந்த காலங்களில் நடைபெற்றன.

ஊர் பஞ்சாயத்தின் முடிவின்படி போட்டியின்றி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதும், ஒரு குறிப்பிட்ட தொகையைக் கிராம கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுப்பவருக்கு ஊர் மக்கள் அனைவரும் ஓட்டளிப்பதும், தேர்தலில் செல்வந்தர்கள் மட்டும் போட்டியிடுவதும், ஓட்டளித்தற்கு கைமாறாக ஒரு வேளை உணவு வழங்குவதும் ஆன நிலைதான் பல பொதுத் தேர்தல்களில் நடைமுறையாக இருந்தது.

அன்னதானத்துடன் கூடிய ஒரு நாள் திருவிழாவாக இருந்த பொதுத் தேர்தல்; அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்த நாளில் தொடங்கி, இரு வாரத் திருவிழாவாக பொதுத் தேர்தல் மாற்றம் அடைந்தது. ஒலி பெருக்கி பொருத்திய வாகனங்களில் நூற்றுக் கணக்கானவர்களை ஏற்றிக் கொண்டு, பகல் இரவு எனப் பார்க்காமல் ஓட்டு கேட்பதாகக் கூறி, தொகுதிகளில் வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் வலம் வந்தனர். அதனால் ஏற்படும் இடையூறுகளைப் பொதுமக்கள் சகித்துக் கொள்ள வேண்டிய நிலை நிலவியது.

வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை எதுவும் வழங்கப்படாத நிலையில், கள்ள ஓட்டு போட்டு தேர்தலையே கேலிக் கூத்தாக்கிய சம்பங்கள் அதிக அளவில் நிகழ்ந்தன. ஓட்டுச் சாவடிக்கு வந்த வாக்காளர்கள் பலர் ஓட்டளிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

சில சமயங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்களே ஓட்டளிக்க வராதவர்களின் வாக்குகளை அவர்கள் விரும்பும் வேட்பாளருக்கு போட்ட சம்பவங்களும் உண்டு.

காலப்போக்கில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக எம்.எல்.ஏ, எம்.பி உள்ளிட்ட பதவிகள் மாறத் தொடங்கின. எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற மனநிலையோடு தேர்தல்களத்தில் வேட்பாளர்கள் செயல்படத் தொடங்கினர். ஒவ்வொரு ஓட்டுக்கும் அந்தந்த பகுதி நிலவரத்திற்கு ஏற்ப பணமும், அன்பளிப்பு பொருட்களும் விலையாகக் கொடுக்கத் தொடங்கினர்.

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெயருடைய நம்நாட்டில், சுதந்திரம் அடைந்த முதல் 40 ஆண்டுகளாக இந்த முறையில்தான் இந்திய தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் பொதுத் தேர்தலைச் சந்தித்து வந்தனர். 

இந்திய ஜனநாயகம் இந்த பாதையில் பயணித்துக் கொண்டிருந்த சூழலில், டி.என்.சேஷன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி இந்;தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையராக 1990-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொறுப்பேற்றார். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் குறித்து அவர் ஆய்வு செய்ததில், நூற்றுக் கணக்கான தேர்தல் விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளதை அவர் கண்டறிந்தார்.

பணம், மது போன்றவைகள் கொடுத்து வாக்குகளைப் பெறுதல், சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வாக்காளர்களைப் பிளவுபடுத்துவது, பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் ஒலி பெருக்கிகளுடன் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக தேர்தல் செலவுகள் செய்வது, அரசு நிர்வாகத்தை தேர்தலுக்காகப் பயன்படுத்துவது, வாக்குச்சாவடிகளில் முறைகேடுகளுக்கு இடம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கடந்த கால தேர்தல்களில் நிகழ்ந்துள்ளதை டி.என்.சேஷன் கண்டறிந்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்திற்குப் புத்துயிர் கொடுத்து, தேர்தல் முறைகேடுகளுக்குக் கடிவாளம் போடும் பணியை முடக்கிவிட்டார் டி.என்.சேஷன்.

அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் முறையை இவர் கொண்டு வந்தார். இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களுக்குத் தடை; ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதி; வழிப்பாட்டு தலங்களில் தேர்தல் பரப்புரை செய்ய தடை; வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு போன்றவை கொடுப்பதற்குத் தடை; தேர்தல் காலங்களில் மது விற்பனைக்குத் தடை; தேர்தல் செலவு கணக்குகளை வேட்பாளர்கள் சமர்ப்பித்தல்; வரம்புக்கு மீறி செலவு செய்த வேட்பாளர்கள் மீது நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தினார் டி.என்.சேஷன்.

தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, அப்போதை பாரத பிரதமர் உட்பட பல மத்திய, மாநில அமைச்சர்கள் தேர்தல் பரப்புரைகளில் விதிமீறல்களைத் தவிர்த்தனர்.

1993-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பொழுது தேர்தல் செலவு கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறிய 1,488 வேட்பாளர்களை மூன்றாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தார் டி.என்.சேஷன். குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட 40,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் படிவங்களைப் பரிசீலனை செய்த அவர், 14,000 பேர் மீது நடவடிக்கை எடுத்தார். முறைகேடுகளுடன் நடந்த பீகார் மற்றும் பஞ்சாப் தேர்தல்களை ஒருமுறை தள்ளுபடியும் செய்தார்.

வெளி மாநில அதிகாரிகளைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து, உள்ளுர் அதிகாரிகள் ஆளும் கட்சியுடன் தேர்தல் நேரங்களில் இணக்கமாக செயல்படும் முறைக்குக் கடிவாளம் போடும் முறையையும் இவர் கொண்டு வந்தார்.

6 ஆண்டுகள் தேர்தல் ஆணையராகப் பணியாற்றிய காலத்தில் ஜனநாயக முறைப்படி நேர்மையாக தேர்தலை நடத்துவது எப்படி என்பதை அரசு அதிகாரிகளுக்கும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், ஐந்தாண்டுகள் நம்நாட்டை வழிநடத்திச் செல்பவர்களை எப்படி அடையாளம் கண்டறிந்து வாக்களிப்பது என்பதை வாக்காளர்களுக்கும் கற்றுக் கொடுத்து, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய பெருமையுடையவர் தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ் அதிகாரியான டி.என்.சேஷன்.

இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு விடிவெள்ளியாக விளங்கிய டி.என்.சேஷன் தலைமை தேர்தல் ஆணையராகப் பணியாற்றிய காலம் முடிந்து சரியாக கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நம் மாநிலப் பொதுத் தேர்தலை நடத்தும் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள்?  

சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளரின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட எஸ்.பி உட்பட சில அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாக பணியிடமாற்றம் செய்துள்ளது.  ஆளும் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்காகக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் வாகனச் சோதனையில் பிடிபட்டதில் நியாயமான நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்திற்காக அந்த அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை நகர காவல் ஆணையர் இருவரின் தேர்தல் பணி தொடர்பான செயல்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் இ;;ருவரையும் தேர்தல் ஆணையம் உடனடியாக இடமாற்றம் செய்ததோடு, அவர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளது.

கோவில்பட்டியில் அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களைச் சோதனையிடும் பணியில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரியை உடனடியாக விளாத்திக்குளத்திற்கு இடமாற்றம் செய்தார் தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பு வகிக்கும் மாவட்ட ஆட்சியர்.  இந்த இடமாற்றம் குறித்து பொதுவெளியில் எதிர்ப்பு எழுந்ததால், மாறுதல் ஆணை பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பொதுத் தேர்தலை நடத்தும் பொறுப்பில் இருந்துவரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளின் செயல்களை மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

நேர்மையற்ற முறையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளைத் தேர்தல் பணியிலிருந்து உடனடியாக விடுவித்து, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு தேர்தல் பணிகளை முறையாக நடத்தும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் நேரங்களில் செயல்படும் தேர்தல்; அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்வதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் செயல்படுவது, பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.

நேர்மையான முறையில் தேர்தல் பணியில் ஈடுபட்டு, அரசியல் கட்சிகளின் வெறுப்புக்கு ஆளாகும் அதிகாரிகள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும், ஆளும் கட்சியை அனுசரித்து தேர்தல் பணியாற்றுபவர்கள் புத்திசாலிகள் என்ற உணர்வு மேலோங்கிய நிலையில் உயரதிகாரிகள் செயல்படுவது ஜனநாயக நாட்டின் வளர்ச்சியைப் பெரிதும் சீர்குலைத்துவிடும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்காது.  

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய டி.என்.சேஷன் என்ற ஒரு அதிகாரியால் ஜனநாயகத்தின் வழியில் தேர்தலை இந்தியாவில் நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய நிலையில், நிகழ்கால தேர்தல் பணியில் இருந்துவரும் உயரதிகாரிகள் சிலரின் செயல்பாடுகளைப் பார்க்கும் பொழுது, நாட்டின் பொது நலனைக் காட்டிலும், அவரவர் சுயநலனைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியாற்றி வருகின்றார்களோ? என்ற உணர்வு வெளிப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணைத்தில் மற்றொரு விடிவெள்ளி எப்பொழுது தோன்றும்? என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். நம்பிக்கை வீண் போகாது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

Previous post சிதைந்த கனவுகளுடன் சாலையோரக் குழந்தைகள்
Next post கடமை தவறும் காக்கிகள்

7 thoughts on “தேர்தல் ஆணையத்தில் மற்றொரு விடிவெள்ளி!

 1. மிக பயனுள்ள கட்டுரை. தகவல் களஞ்சியமாக இருக்கிறது சார்!

 2. மீண்டும் ஒரு சேஷன் வருவார் என்ற.ஏக்கத்தோடு காத்திருப்போம்.

 3. டி.என்.சேஷன் என்ற அந்த மனிதர் ஒரு சகாப்தம். எந்த நடுநிலையுள்ள மனிதனாலும் இதனை மறுக்கமுடியாது.மிகச் சிறந்த ஓர் ஆளுமையாக இருந்தார். அவர் கொண்டு வந்த தேர்தல் கால கட்டுப்பாடுகள் காவல்துறையின் சுமையினை பெரிதும் குறைந்தன.

 4. அய்யா திரு TN Sehan IAS அவர்கள் அறுமையான முறையில் தேர்தலில் சீர் திருத்தங்கள் கொண்டு நடை முறை படுத்தி வெற்றியும் கண்டார்,ஆனால் அது தொடரவில்லை. எப்படி முடியும் பல அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு தன் கடமயை யும் சட்ட வறை முறைகளை மதிக்காமல் செயல் படுகிறார்கள், பரவாயில்ல தர் போது ஆணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.பாராட்டலாம்.
  இப்படி மாற்ற படு கின்ற அதிகாரிகள் குறந்தது ஒரு ஆண்டு எந்த பதவி யும் தரப்பட மாட்டார்கள். என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் நிச்சயமாக தவருகள் தடுக்க முடியும்.
  பூனைக்கு யார் மணி கெட்ட போகிறார்கள்?

 5. அய்யா வணக்கம்
  இன்னும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசியல்வாதிகளுக்கு சில அதிகாரிகள் பயப்படுகிறார்கள்.
  நேர்மையாக செயல்படலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *