‘முயன்று பார்; இயலவில்லை எனில் மீறி செயல்படு’ என்ற குணம் உயிரினங்களிடத்தில் வெளிப்படுவதைப் போன்று, ‘உன் குணத்தில் இருந்து விலகாமல் இரு; இயலவில்லை எனில் அடங்கிப் போ’ என்ற குணமும் உயிரினங்களிடத்தில் வெளிப்படுகின்றன. இதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டிய ஆறு அறிவு படைத்த மனிதர்களிடத்திலும் இந்த குணங்கள் சில சமயங்களில் வெளிப்படுகின்றன.

விலங்குகளின் ராஜாவாக கம்பீரத்துடன் காட்டில் வசிக்கும் சிங்கம், சர்க்கஸ் நிகழ்ச்சிகளின் பொழுது அதன் மாஸ்டர் காட்டும் சைகைகளுக்கு அடிபணிந்து செயல்படுகிறது. செல்லப்பிள்ளையாக வீட்டில் வளரும் பு+னை கூட சில சமயங்களில் சினங்கொண்டு சீறுவதும் உண்டு. அந்த வரிசையில், மனிதப் பண்புகளுடன் வாழ வேண்டிய மனிதர்களிடத்திலும் அத்தகைய பண்புகள் சில சமயங்களில் இருப்பதில்லை.

பகுத்தறிவும், அற்புதங்கள் பல நிகழ்த்தும் அறிவியல் திறனும் பெற்ற மனிதர்கள் மண்ணுக்கும், பொன்னுக்கும், பெண்ணுக்கும் அடிமையாகிய சம்வங்கள் சிலவற்றை வரலாறு வெளிப்படுகிறது. இந்த பட்டியல்கள் வரிசையில் ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் தேர்தலும் சமீப காலத்தில் இடம் பிடித்துவிட்டது.

ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது தேர்தல்முறை. ஜனநாயகத்தின் காவலர்களாக விளங்கும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் மக்களிடம் ஏற்பட்டுள்ள சமீப காலத்திய மனமாற்றங்கள் ஜனநாயகத்திற்குப் புதியதொரு இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளதோ? என்ற சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது.

அரசியலில் ஈடுபடவும், தேர்தலில் போட்டியிடவும் பு+ர்வீகச் சொத்துக்களை விற்பனை செய்தவர்கள் சிலரை சுதந்திர இ;ந்தியாவில் சுட்டிக்காட்ட முடியும்.  தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அதிகார மையத்தில் இடம் பிடித்த சிலர், தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தனிச்சலுகை காட்டுவது முறையற்ற செயல் எனக் கருதி செயல்பட்டவர்களும் உண்டு. வெற்றி தோல்வியைச் சமமாகக் கருதி, தேர்தலை நேர்மையான முறையில் எதிர்கொண்ட வரலாறும் இந்திய ஜனநாயகத்திற்கு உண்டு.

காலச் சுழற்சியால் பருவ காலங்களிலும், சுற்றுச் சூழலிலும் ஏற்பட்டுள்ள மாறுதல்களைப் போன்று, ஜனநாயக முறைப்படி நம்நாட்டில் நடத்தப்படும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்களிப்பவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கடந்த கால தேர்தல் தொடர்பான சம்பவங்கள் உணர்த்துகின்றன.

‘கோழி குருடாக இருந்தால் என்ன?  குழம்பு சுவையாக இருந்தால் போதும்’ என்ற பழமொழியை நினைவு கூறுவது போல தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஊழல் பேர்வழியாக, குற்ற வழக்குகளை நீதிமன்றங்களில் சந்தித்து வருபவராக, சமுதாயத்தின் மீது அக்கறை இல்லாதவராக இருந்தால்தான் என்ன?   வேட்பாளரின் தகுதி பார்க்காமல், பணம் அல்லது அன்பளிப்பு கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் மனநிலைக்கு நிகழ்கால வாக்காளர்களில் ஒரு பகுதியினர் மாறியுள்ளதை அண்மை கால தேர்தல்கள் வெளிப்படுத்துகின்றன.

‘கொடுப்பதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெறுவதுதான் புத்திசாலித்தனம்’ என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் பலர் வாக்குகளுக்கு விலையாக பணம், அன்பளிப்புகள், மது வகைகள் உள்ளிட்டவைகளை வாரி வழங்கி, தேர்தலில் வெற்றிபெறும் வித்தைகளைக் கற்றவர்களாகத் திகழ்கின்றனர்.

‘வாக்கு உங்களுக்குத்தான்!’ என்று ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களிடம் வாக்குறுதி கொடுத்து, அவர்களிடம் இருந்து பணத்தையும், அன்பளிப்பையும் பெற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை இன்றைய ஜனநாயகம் வாக்காளர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

கள நிலவரம் இவ்வாறு இருக்க, ஜனநாயக உணர்வை வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களை உணரச் செய்த சம்பவம் ஒன்று குறித்து பார்ப்போம்.

கோவை புறநகர் பகுதியில் அண்ணல் காந்தியடிகளால் 1934-ம் ஆண்டில் தொடங்கிவைக்கப்பட்ட கல்வி நிலையம் ஒன்று தற்பொழுது ஒரு பல்கலைக் கழகம் போன்று வளர்ச்சி பெற்றுள்ளது.  அந்த கல்விக் குழுமத்தின் ஒரு அங்கமாக உள்ள கலைக்கல்லூரியில் மாணவர் பேரவைக்கான தேர்தல் 1970-களின் பிற்பகுதியில் நிகழ்ந்தது.

தேர்தல் பரப்புரை என்ற பெயரில் அதிக அளவில் பணம் செலவழித்து, நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.  துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பேருந்து நிறுத்தங்களிலும், கடை வீதிகளிலும் வாக்கு சேகரிப்பு என்ற பெயரில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் செய்த வரம்பு மீறிய செயல்கள் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது. தேர்தல் தினத்தன்று வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்தகராறு வன்முறையில் முடிவடைந்தது. அதில் கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமான வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. 

மாணவப் பருவத்திலேயே ஜனநாயக உரிமையை நுகரும் வாய்ப்பாக மாணவர் பேரவைக்கான தேர்தல் அமைந்திருந்தும், அந்த தேர்தல் வன்முறையில் முடிந்தது கல்லூரி நிர்வாகத்திற்குப் பெரும் வேதனையை அளித்தது. அது மட்டுமின்றி, பொய்யான காரணங்களைப் பெற்றோர்களிடம் கூறிப் பெற்ற பணத்தைத் தேர்தல் பரப்புரைக்காக மாணவர்கள் செலவழித்ததும் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது. வன்முறையும், பரப்புரை என்ற பெயரில் பணம் விரையம் செய்யப்படுவதையும் மாணவர் பேரவைத் தேர்தல் என்ற பெயரில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி கல்லூரி நிர்வாகத்திற்கு எழுந்தது.

அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்துவதைத் தவிர்த்தால் என்ன? என்ற கருத்தைப் பலர் கல்லூரி நிர்வாகத்தின் முன் வைத்தனர். மாணவர் பேரவைத் தேர்தலுக்கு தடை விதிப்பது தேர்தல் வன்முறைக்குத் தீர்வாகாது. தேர்தல் நடைமுறை விதிகளில் உரிய மாற்றங்கள் செய்து மாணவர் பேரவைத் தேர்தலை நடத்துவதுதான் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக அமையும் எனக் கூறி தேர்தல் நடத்த நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றார் கல்லூரி முதல்வர்.

‘பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மாணவர்கள் தேர்தல் செலவுக்கு அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பணமோ அல்லது பொதுமக்களிடம் இருந்து நன்கொடையோ பெறக்கூடாது.  பேரவைத் தேர்தல் பரப்புரை செலவுகளைக் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டு, வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளைத் துண்டு பிரசுரமாக கல்லூரி நிர்வாகமே அச்சடித்துக் கொடுக்கும்.  வேட்பாளர்களால் தயாரிக்கப்பட்ட தேர்தல் தொடர்பான கருத்துப் படங்களைக் கல்லூரி அறிவிப்பு பலகையில் காட்சிக்கு வைக்கப்படும்.  கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே அனைத்து வேட்பாளர்களும் நேரடியாக பரப்புரை செய்வதற்கான வாய்ப்பும், வசதியும் கல்லூரி வளாகத்தில் கல்லூரி நிர்வாகமே செய்து கொடுக்கும். தேர்தல் பரப்புரை செய்ய வெளிநபர்கள் யாரையும் ஈடுபடுத்தக் கூடாது’ என்று பேரவைத் தேர்தல் விதிமுறைகளைக் கல்லூரி முதல்வர் தெளிவுபடுத்தினார். இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாணவர் பேரவைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தல் தொடர்பான இந்த சம்பவத்தை நிகழ்கால தேர்தல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, இந்திய ஜனநாயகத்தின் பயணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய ஜனநாயக முறைப்படி நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கோ அல்லது அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கோ தேர்தலில் போட்டியிடாத எந்த ஒரு நிறுவனமோ அல்லது அமைப்போ பெரும்தொகை ஒன்றை தேர்தல் நிதியாகவோ அல்லது வேட்பாளர்கள் சார்ந்த கட்சிகளின் வளர்ச்சி நிதியாகவோ கொடுத்தால், தேர்தலுக்குப் பின்னர் அமையப் பெறும் சட்டமன்றத்தையும், பாராளுமன்றத்தையும் இயக்குபவர்களாக நிதி கொடுத்த நிறுவனங்களும், அமைப்புகளும்தான் இருப்பார்கள்.

நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, சுயநலமற்ற சேவை போன்ற பண்புகளை மூலதனமாகக் கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்களால் நடத்தப்படும் ஆட்சி தான் மக்களின் நலனுக்காக நடத்தப்படும் மக்களாட்சியாக அமையப்பெறும்.  மாறாக, ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் தேர்தலில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து, வெற்றி பெறும் வேட்பாளரின் மனநிலை எவ்வாறு இருக்கும்?  தேர்தலின் பொழுது வாரி இறைத்த பணத்தையும், அடுத்த தேர்தலுக்குத் தேவையான பணத்தையும் பதவிகாலம் முடிவடைவதற்குள் அறுவடை செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருக்கும். அவரிடமிருந்து மக்களாட்சியின் நிர்வாகத்தை எப்படி எதிர்பார்க்கமுடியும்?

இந்திய தேர்தல் ஆணையம் முழு சுதந்திரத்துடன் இயங்கி, தேர்தல் நடத்தை விதிகளைச் சீராய்வு செய்து, ஜனநாயக முறைப்படி தேர்தல்களை நடத்தினால் மட்டுமே மக்களாட்சியின் பலனை ஒவ்வொரு இந்திய குடிமகனும் நுகர முடியும்.   

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்.

***

Previous post கடமை தவறும் காக்கிகள்
Next post புலன் விசாரணையின் பொழுது நிகழ்த்தப்பட்ட குற்றம்

6 thoughts on “மக்களாட்சியின் பலனை நுகர்வது எப்போது?

  1. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தேர்தலில் போட்டியிட்டாலும்.. வெற்றி பெற பல தகிடுதத்தங்கள் செய்ய வேண்டியது தான் யதார்த்த நிலை. மக்கள் என்று உணரப் போகிறார்களோ..

  2. நேர்மையும் மனோ தைரியமும் உள்ள தேர்தல் ஆணையரும் அவரை செயல்படவிடும் நடுவண்அரசும் அமையபெற்றால் நல்லது நடக்கும்.

    மீண்டும் தங்களிடம் இருந்து அருமையான கட்டுரை.மிக்க நன்றி.

  3. Tv Sir yours is thought provoking article.but who is to be blamed for this situation.we have to blame ourselves that is the public who are crazy to take money for voting.it is shame to point out this poor legacy which is now part and parcel of our people life.purely our laws and weak rules are to be blamed.failure of justice in time is other reason.when we know that in by-election they won due to money immediately that candidate was to be barred and declared the result as null and void.then he should be barred lifelong to contest election.the party he belonged to be barred by election commission from contesting in any election and to ve de recognised.will it happen.then in democracy we should not allow anyone to launch party .To be restricted.all if implemented will see a Renaissance in election.thank you sir for your article.

  4. சார் உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது. இந்திய தண்டனை சட்டங்கள் மிகவும் கடுமையாக இருக்கவேண்டும் அதை பின்பற்றக்கூடிய அதிகாரிகள் மிகவும் நேர்மையாகவும், ,நாணயமாகவும், சத்தியமாகும் நடந்து கொள்பவர்களாக இருந்தால் மட்டும் இதுவெல்லாம் சாத்தியப்படும்.ஆனால் அது ஒரு கனவா நனவா இறைவனுக்குத் தான் தெரியும். ஜனநாயகம் என்பது பணநாயகம் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போது நல்லதொரு ஜனநாயகத்தை பார்க்கப்போகிறோம்!!!

  5. அய்யா வணக்கம்
    தேர்தல் வந்தாலே வாக்குக்கு பணம் கிடைக்கும் என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.தான் சார்ந்திருக்கும் கட்சியின் சின்னத்திற்கு பணம் வாங்கிக்கொண்டு வாக்கு செலுத்தும் கட்சி தொண்டன். இனிய காலங்களில் நல்ல வேட்பாளரை தேர்ந்து எடுப்பது கடினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *