நம் நாட்டில் எட்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது என தேசிய குற்ற ஆவணக் கூடத்தின் புள்ளிவிபரம் தெரிவித்தாலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்;தைகள் ஆண்டுதோறும் நம் நாட்டில் காணாமல் போகின்றன என்றும், அவர்களில் 50 சதவீதம் குழந்தைகள்தான் கண்டுபிடிக்கப்படுகின்றன என்றும் களஆய்வு தெரியப்படுத்துகிறது.
காணாமல் போகின்றவர்கள் பட்டியலில் குழந்தைகள் மட்டுமின்றி, வளரும் இளம்பருவ சிறுவர், சிறுமியர்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடுத்துதல், உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகக் கடத்தப்பட்ட சிறுவர், சிறுமியர்களும் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றுவிடுகின்றனர்.
பெற்றோர்களின் சம்மதம் இன்றி நடைபெறும் காதல் திருமணத்திற்காக வீட்டிலிருந்து வெளியேறும் பெண்கள் மீதும் “காணவில்லை” என்றுதான் போலீசில் புகார் கொடுக்கப்படுகிறது.
“பெண் காணவில்லை” என்று காவல்நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களில் கட்டாயத் திருமணத்திற்காக நிகழ்த்தப்பட்ட கடத்தல் சம்பவங்களும் உண்டு. சில சமயங்களில் அவை கொலைகளாகவும் மாறி விடுகின்றன.
2018-ம் ஆண்டில் நம் நாட்டில் காணாமல்; போன மூன்றரை லட்சம் பேர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள். காணாமல் போகின்றவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதும், ஆண்களைவிட அதிக அளவில் பெண்கள் காணாமல் போவதும் நம்முடைய சமுதாயத்தில் நிலவிவரும் பெண்களின் பாதுகாப்பின்மையையும், சவால்களை எதிர்கொள்ளும் சக்தியற்றவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
160 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட இந்;திய தண்டனை சட்டத்தில் சமுதாயத்தில் நிகழும் எல்லாவிதமான குற்றச் செயல்களும் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குற்றச் செயல் தொடர்பான புகாரை எந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், அக்குற்றத்திற்கான தண்டனை விபரங்களும் இந்திய தண்டனை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால், ஆண் அல்லது பெண் காணவில்லை என்று கொடுக்கப்படும் புகாரை எந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது மட்டும் இந்திய தண்டனைச் சட்டத்திலோ அல்லது குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டத்திலோ குறிப்பிடப்படவில்லை. அதனால், “காணவில்லை” என்று காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் பல புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்துவிடுவதும் உண்டு.
சமீப காலங்களில் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் காணவில்லை என்று கொடுக்கப்படுகின்ற புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அம்மாதிரியான புகார்கள் மீது வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை செய்வது குறித்து தற்பொழுது உள்ள சட்டங்களில் தெளிவான வழிகாட்டுதல் இல்லாததாலும், இது குறித்து சட்ட வல்லுஞர்கள் ஆய்வு செய்து உரிய சட்ட திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தற்பொழுது எழுந்துள்ளது.
உண்மை சம்பவத்தை மறைத்து, சட்டத்திற்கு முரணாக புலன் விசாரணை செய்வதற்காக ‘காணவில்லை’ என்ற புகார் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதையும், அதனால் புகார் கொடுத்தவருக்கு ஏற்பட்ட விபரீத விளைவுகளையும், புலன் விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தித்த சவால்களையும் வெளிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டம் ஒன்றிலுள்ள ஒரு சிறிய நகரில் நிகழ்ந்துள்ளது.
வசதியான குடும்பத்தைச் சார்ந்த ஒரு இளம்பெண், அவளது வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்த மாற்று சமூகத்தைச் சார்ந்த பையனுடன் காதல் கொண்டாள். அவர்களின் காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, ஒரு நாள் இரவில் அந்த பெண் அவளது வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டாள். அந்த டிரைவரையும் காணவில்லை. திருமணம் செய்து கொள்வதற்காகத்தான் அவர்கள் இ;ருவரும் அந்த கிராமத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள் என்பதை உணர்ந்த பெற்றோர்கள் காவல் நிலையம் சென்று நடந்ததைத் தெரியப்படுத்தினார்கள்.
இரு வேறு சமூகத்தைச் சார்ந்த ஒரு பையனும், பெண்ணும் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக ஊரைவிட்டு ஓடி விட்டார்கள் என்ற தகவலைக் கேட்ட போலீசாரிடையே கலக்கம் ஏற்பட்டது. இச்சம்பவம் சாதி மோதலாக மாறிவிடுமோ? என்ற பயம் போலீசாருக்கு ஏற்பட்டது. நிகழ்ந்த உண்மை சம்பவத்தை மறைத்து, “பெண் காணவில்லை” என்று வழக்கு பதிவு செய்தால், அந்த பகுதியில் சாதி மோதல் ஏற்படுவதைத் தவிர்த்துவிடலாம் என போலீசார் திட்டமிட்டு, செயல்படத் தொடங்கினர்.
“நாம் ஒன்று நினைக்க, கடவுள் சித்தம் வேறென்றாக இருக்கும்” என்ற பழமொழியை நினைவுபடுத்தும் வகையில் இந்த வழக்கின் புலன் விசாரணை முடிவடைந்தது.
காதல் திருமணம் செய்துகொள்ள வீட்டிலிருந்து வெளியேறிய அந்த பெண்ணைப் போலீசார் கண்டு பிடித்துவிட்டனர். ஆனால், அதற்கு அவர்கள் கையாண்ட விதமும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தவறான அறிக்கையும் புலன் விசாரணை செய்த போலீசார் மீது சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க நேரிட்டது. அந்த பெண்ணின் பெற்றோர்களும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற வழக்கைச் சந்;தித்தனர்.
கிராமத்திலிருந்து ஓடிப்போன அந்த காதலர்கள் கேரளா சென்று, திருமணம் செய்து கொண்டு, அந்த பையனின் உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் கேரளா சென்றனர். கேரளா போலீசின் உதவியோடு அந்த இளம்தம்பதியினரைப் போலீசார் கண்டுபிடித்து விட்டனர்.
“முறைப்படி திருமணம் செய்துகொண்டு நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வருகிறோம்” என்று கூறிய அந்த பெண், போலீசாருடன் அவளது கிராமத்துக்கு வர மறுத்துவிட்டாள்.
“பெண் காணவில்லை என்ற வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதியிடம் நேரில் தகவல் தெரிவித்துவிட்டு, உங்கள் விருப்பப்படி நீங்கள் நடந்து கொள்ளலாம்” என்று அந்த பெண்ணைச் சமாதானம் செய்து, கேரளா போலீசாருக்கும் தகவல் கொடுத்துவிட்டு, அவர்கள் இருவரையும் அழைத்து வந்தனர் தமிழ்நாடு போலீசார்.
ஊர் திரும்பியதும் அந்த பையனை அடித்து விரட்டிவிட்டு, அந்த பெண்ணை மட்டும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பெற்றோர்கள் மீது கோபம் கொண்ட அந்த பெண் அவளது தோழி வீட்டுக்குச் சென்று விட்டதாகவும், அங்கிருந்து அவளை அழைத்து வந்ததாகவும் போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, வழக்கை முடித்தனர்.
போலீசார் மீட்டுக் கொடுத்த மகளை உறவுக்கார பையன் ஒருவனுக்கு அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைக்க அவளது பெற்றோர்கள் ஏற்பாடுகள் செய்தனர். மூகூர்த்த சேலை எடுக்க அந்த பெண்ணையும், அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்;பிள்ளை மற்றும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு அவளது பொற்றோர்கள் அருகிலுள்ள நகரத்திற்குச் சென்றனர்.
மூகூர்த்த சேலை எடுக்கச் செல்லும் விபரத்தை அந்த பெண் அவளது காதலனுக்கு ரகசியமாகத் தகவல் கொடுக்க, அவனும் துணிக்கடைக்கு வந்துவிட்டான். நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கும், காதலனுக்கும் துணிக்கடை வாசலில் கைகலப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து உள்ளுர் போலீசாரும் விசாரணை செய்தனர்.
பெற்றோர்களுடன் செல்லமாட்டேன் என்றும், தன் காதலனுடன்தான் செல்வேன் என்றும் அந்த பெண் விசாரணையின் பொழுது போலீசாரிடம் தெரிவிக்க, அருகிலுள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் அவளைப் போலீசார் தங்க வைத்தனர்.
சில தினங்களுக்குப் பின்னர் பெண்கள் காப்பகத்திலிருந்து வீட்டு அழைத்து வரப்பட்ட அந்த பெண், அவளது வீட்டில் தற்கொலை செய்துகொண்டாள். அவசர அவசரமாக அந்த பெண்ணின் பிதேத்ததை அவளது பெற்றோர்கள் எரித்து விட்டனர்.
இந்த நிலையில், அவனது காதலி கவுரவக்கொலை செய்யப்பட்டாள் என்றும், முறைப்படி திருமணம் செய்துகொண்ட எங்கள் இருவரையும் கேரளாவிலிருந்து போலீசார் கடத்திவந்து, அவளை அவளது பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டனர் என்றும், போலீசாரின் சட்ட விரோதமான செயல்பாடுகளே என் மனைவி உயிரிழக்கக் காரணமாக அமைந்துவிட்டது என்றும் உயர்நீதிமன்றத்தில் அவளது காதலன் வழக்கு தொடுத்தான். அந்த கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம், “பெண் காணவில்லை” என்ற வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றியது.
இவ்வழக்கின் விசாரணையின் பொழுது உள்ளுர் போலீசாரிடம் சி.பி.ஐ எழுப்பி கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியாமல் போலீசார் தடுமாறினர்.
- காதல் திருமணம் செய்து கொள்வதற்காக அந்த பெண் அவளது காதலனுடன் சென்று விட்டாள் என்பது தெரிந்திருந்தும், உண்மையை போலீசார் மறைத்துவிட்டு “பெண் காணவில்லை” என வழக்கு பதிவு செய்யக் காரணம் என்ன?
- கேரளாவிலிருந்து அழைத்து வரப்பட்ட அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொழுது, தோழி வீட்டில் அவள் தங்கியிருந்தாள் என பொய்யான வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் காரணம் என்ன?
- முகூர்த்த சேலை எடுக்கச் சென்றபோது, அந்த பெண்ணின் காதலனுக்கும், நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கும் கடைத்தெருவில் ஏற்பட்ட கைகலப்பை போலீசார் ஏன் முழுமையாக விசாரிக்கவில்லை?
இந்த கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்க முடியாத போலீசார் சி.பி.ஐ.யின் நடவடிக்கையைச் சந்திக்க நேரிட்டது.
போலீசாருக்குத் தகவல் கொடுக்காமல் அந்த பெண்ணின் சடலத்தை எரித்துவிட்டதினால், அந்த பெண்ணின் இறப்பு தற்கொலையா? அல்லது கொலையா? என்பதை சி.பி.ஐ-ஆல் துப்பு துலக்க முடியவில்லை. எனவே, தடயத்தை மறைத்த குற்றத்திற்காக அந்த பெண்ணின் பெற்றோர்களை சி.பி.ஐ கைது செய்து, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்தனர்.
உண்மையை மறைத்து மேற்கொள்ளும் புலன்விசாரணைகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
***
காவல்துறை மேல் தான் அது தவறு இருக்கிறது,இது போன்ற செயல்பாடுகளுக்கு சட்டத்தில் திருத்தங்கள் தேவை