சமுதாயத்தில் நிகழும் குற்றங்களிலேயே மிகக் கொடூரமான குற்றச் செயலாகக் கருதப்படுவது கொலைக் குற்றம். கொலை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களோடு மட்டும் கொலை வழக்கு முடிவடைந்து விடுவதில்லை. கொலை செய்யத் திட்டம் வகுத்துக் கொடுத்தவர்களும், கொலை செய்ய உதவிகரமாக இருந்தவர்களும், கொலை செய்த பிறகு கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களும் கொலை வழக்கில் குற்றவாளிகள்தான்.
கொலைக் குற்றத்தின் மீதான இந்திய தண்டனைச் சட்டத்தின் பார்வை கடுமையாக இருந்தும்கூட, சில சமயங்களில் கொலை சம்பவம் குறித்த புகார் போலீசாரின் கவனத்;திற்கு வருவதற்கு முன்னரே, அவசர அவசரமாகக் கொலையானவரின் பிரேதம் எரிக்கப்படுவதும், கொலை நிகழ்வுக்கான தடயங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் ஆன குற்றச்செயல்கள் தொடர்கின்றன.
தற்கொலை, விபத்து உள்ளிட்ட இயற்கைக்கு மாறான மரணங்களைக் கொலைகள் என பொய்ப்புகார் கொடுக்;கப்பட்டு, கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் உண்டு. அதேசமயம், திட்டமிட்டு நடத்தப்படும் கொலையைத் தற்கொலை அல்லது விபத்து என குற்றத்தின் தன்மையைத் திசை திருப்பி, குற்ற வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகள் நடைபெறுவதும் உண்டு.
ஒரு கொலை குற்றத்தை நீதிமன்றத்தில் நிரூபணம் செய்வதற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாக இருப்பது பிரேதத்தைப் பரிசோதனை செய்த மருத்துவர் கொடுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை. இறப்பு நிகழ்ந்த விதம், இறப்புக்கான காரணம், இறப்பு நிகழ்த்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், பிரேத பரிசோதனைக்கு எத்தனை மணி நேரத்திற்கு முன்னர் இறப்பு நிகழ்ந்திருக்கும் போன்றவற்றைத் தெளிவுபடுத்தும் இந்த அறிக்கைதான் புலன் விசாரணையின் அடித்தளமாகும்.
சந்தேகமான முறையில் ஒருவரின் இறப்பு நிகழ்ந்திருந்தால், அந்த நபரின் இறப்பு தற்கொலையா? விபத்தா? அல்லது கொலையா? என்பதைத் தெளிவுபடுத்துவது பிரேத பரிசோதனை அறிக்கை. இந்த அறிக்கையில் ஏற்படும் குளறுபடிகள் வழக்கின் புலன் விசாரணையைத் தவறான திசையை நோக்கி நகர்த்திவிடும்.
தந்தையை மகனே கொலை செய்துவிட்டு, விபத்தால் தந்தை இறந்துவிட்டதாக நாடகமாடி, போலீசாரை ஏமாற்ற முயற்சி செய்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கி, கொலை செய்த மகனையும், அவனுக்கு உடந்தையாக இருந்த நபரையும் கைது செய்த வழக்கு ஒன்று 2008-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக அப்பொழுது நான் பணிபுரிந்து வந்தேன்.
நாகர்கோவில் – திருநெல்வேலி ரெயில்வே பாதையில் ஒருநாள் அதிகாலையில் ஆண் பிரேதம் ஒன்று காயங்களுடன் கிடந்தது உள்ளுர் போலீசாரின் கவனத்துக்கு வந்தது. சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரும், டி.எஸ்.பி.யும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையை முடித்த அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.
ரெயில்வே பாதையிலிருந்து சற்று தள்ளி பலத்த காயங்களுடன் பிரேதம் கிடக்கிறது என்றும், தண்டவாளத்திலிருந்து பிரேதம் கிடக்கும் இடம் வரை சதையும், எலும்புத் துண்டுகளும் சிதறிக் கிடக்கின்றன என்றும், நள்ளிரவில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வந்த ரயிலில் அடிபட்டு அந்த நபர் இறந்திருக்கலாம் என்றும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
‘நேற்று முன்தினம் காலையில் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே கிளம்பிச் சென்றவர் வீடு திரும்பாததால், அவரது மகன் நேற்று மாலையில் கொடுத்த புகாரின் பேரில் ‘காணவில்லை’ என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றும் கூடுதல் தகவலை டி.எஸ்.பி தெரிவித்தார்.
வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றவர் வீடு திரும்பாததால், அவரைக் கண்டுபிடிக்க தேடுதல்; முயற்சி எதுவும் தீவிரமாகச் செய்யாமல், அவர் ‘காணவில்லை’ என்று புகார் கொடுத்திருப்பது வியப்பாக இருந்தது.
எனவே, தடய அறிவியல் நிபுணரை உடனடியாக சம்பவ இடம் சென்று பார்வையிட அனுப்பி வைத்துவிட்டு, அவரது கருத்தறிய காத்திருந்தேன். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அவர் தெரியப்படுத்திய கருத்து என்னுடைய சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
கூர்மையான வெட்டுக் காயங்கள் பிரேதத்தின் கழுத்து மற்றும் கால் பகுதிகளில் இருப்பதாகவும், அந்த காயங்கள் ரெயில் விபத்தினால் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தடய அறிவியல் நிபுணர் கருதினார்.
நேற்று நள்ளிரவில் விபத்து நிகழ்ந்திருந்தால், பிரேதம் ‘விரைப்பு தன்மை’ யுடன் காணப்பட வேண்டும். ஆனால், பிரேதத்தில் விரைப்பு தன்மை இல்லை. அதனால், இறப்பானது 24 மணி நேரத்திற்கு முன்பாக நிகழ்ந்திருக்க வேண்டுமெனவும் அவர் கருதினார்.
பிரேதம் கொப்பளங்களுடனும், கண்கள் சற்று வெளியே தள்ளியும் இருந்தன. இந்த தடயங்கள் இறப்பானது சுமார் 36 மணி நேரத்திற்கு முன்பு நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன என தடய அறிவியல் நிபுணர் கருத்து தெரிவித்தார்.
தடயங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து பார்த்த பொழுது, ‘காணவில்லை’ என்று காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதற்கு முன்னரே அந்த நபர் இறந்துவிட்டார் என்பது உறுதியாகிவிட்டது.
அப்பா காணவில்லை எனப் புகார் கொடுத்த மகன் எப்படிபட்டவர் என்று போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலை வழக்;கில் அவர் சம்பந்தப்பட்டவர் என்றும், அந்த கொலை வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும், அந்த ஆயுள் தண்டனையைத் தள்ளுபடி செய்யக்கோரி அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
தடய அறிவியல் நிபுணரின் கருத்தையும், புகார் கொடுத்த மகனின் குற்றப் பின்னணியையும் இணைத்து பார்க்கும் பொழுது, இறப்பானது ரெயில் விபத்தால் நடந்திருக்க வாய்ப்பிருக்காது என்றும், இது ஒரு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலை என்றும், இந்த கொலையில் மகனுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்றும் சந்தேகம் வலுத்தது.
அதைத் தொடர்ந்து, இறந்து போனவரின் மகனைப் போலீசார் முறைப்படி விசாரணை செய்ததில், மகன் நடத்திய நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது.
கொலை வழக்கில் மகனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீடு வழக்கை நடத்த தேவையான பணத்தை அவனது அப்பா கொடுக்க மறுத்து விட்டதால், அவரது வங்கி கணக்கில் சேமித்து வைத்திருக்கும் பணத்தை அடைய திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலை என்பதையும், பிரேதத்தை ரெயில் பாதையில் போட்டதற்கான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். கொலையாளிகள் கைதானார்கள்.
‘ஒரு குற்றத்திலிருந்து மீண்டுவர மற்றொரு குற்றம் துணைபுரியாது’ என்பதை இந்த வழக்கு உணர்த்துகிறது.
***
தங்கள் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல மறைக்கப்பட்ட கொலை வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.