எந்த ஒரு குற்றம் நிகழ்த்தப்படும் பொழுதும் குற்றவாளி ஏதேனும் ஒரு தடயத்தை சம்பவ இடத்தில் விட்டுவிட்டுச் செல்வான் என்பது புலன் விசாரணையின் அடிப்படை விதி. அந்த தடயத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உள்ள சவால். புலன் விசாரணை செய்வதில் ஏற்படும் காலதாமதம், அந்த தடயத்தைக் கண்டறிவதற்குத் தடங்கலாக அமைந்துவிடும்.
ஓர் இரவு நேரத்தில் பள்ளிக்கூட மாணவி ஒருவர் அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்ட சம்பவத்தில் துப்பு துலங்கிய விதம் மிகவும் விசித்திரமானது!
1990-ம் ஆண்டில் ஓர் அதிகாலை நேரம் …
கிராமத்துப் பெண் ஒருவர் மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அந்தக் காவல் நிலையத்தின் கதவைத் தட்டினார்.
இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள காவல் நிலையங்களில் ‘பாரா’ காவலர் ஒருவர் மட்டும் பணியில் இருப்பார். நள்ளிரவுக்குப் பிறகு காவல் நிலையத்தின் கதவை மூடிவிட்டு, அவர் சற்று ஓய்வு எடுப்பது வழக்கம்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தார் ‘பாரா’ காவலர். நடுவயதைக் கடந்த கிராமப் பெண் ஒருவர் தன்னந்தனியாக காவல் நிலைய வாசலில் நின்று கொண்டிருந்தார்.
“யார் நீங்க? என்ன பிரச்சினை? எதுக்காக இந்த அதிகாலை நேரத்துல தனியா வந்திருக்கிறீங்க? ஊர்க்காரங்க யாரும் உங்கக்கூட வரலையா?” எனக் கேள்விகளை அடுக்கினார் பாரா காவலர்.
ஓட்டமும், நடையுமாக அந்த இரவு நேரத்தில் தன்னுடைய கிராமத்திலிருந்து காவல் நிலையம் வந்த அந்த பெண், போலீஸ்காரரைப் பார்த்ததும் பேச வார்த்தைகள் வராமல் கொஞ்ச நேரம் மவுனமாக நின்றாள். பின்னர் சுதாரித்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்.
“ஐயா, என் மகளை யாரோ கடத்திட்டுப் போயிட்டாங்க. அவளுக்கு என்னாச்சுன்னு தெரியலை. எப்படியாவது அவளை மீட்டுக் கொடுங்க”
“எப்பொழுது நடந்தது? விவரமாகச் சொல்லுங்க”
“எங்க கிராமத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள எங்களோட தோட்டத்துல நாங்க குடியிருந்து வர்றோம். என் வீட்டுக்காரர் இறந்து போனதிலிருந்து விவசாயத்தை நான்தான் கவனிச்சிட்டு வர்றேன்.
பத்தாவது படிக்கிற என் ஒரே மகளும் என்னுடன் தோட்டத்துலதான் தங்கி இருந்தாள். ராத்திரியில அவ தூங்கிக்கிட்டிருந்த பொழுது மூணு, நாலு பேர் எங்க தோட்டத்துக்கு வந்து, என் மகளைக் கடத்திட்டுப் போயிட்டாங்க”என்று படபடப்புடன் காவல் நிலையம் வந்ததற்கான காரணத்தைக் கூறினாள் அப்பெண்.
“உங்க மகளைக் கடத்திட்டுப் போனவங்க யாருன்னு உங்களுக்கு அடையாளம் தெரியுமா?” எனக் கேட்டார் பாரா காவலர்.
“துணியால் முகத்தை மூடி இருந்ததால, அவங்க யாருன்னு என்னால அடையாளம் காண முடியல. நாங்க தோட்டத்துல குடியிருப்பதால, வீட்டுக்கு வெளியே தெரு விளக்கு எதுவும் இல்ல. அதனால அவர்களை எனக்கு அடையாளம் தெரியல”
“உங்க மகளைக் கடத்திச் சென்ற பொழுது அவள் சத்தம் எதுவும் போடலையா?”
“சத்தம் போட்டா! உடனடியாக அவளது வாயைப் பொத்தி, தூக்கிட்டுப் போயிட்டாங்க” என்று கூறிய அந்தத் தாய், “ஐயா, என் மகளை உடனடியாகக் கண்டுபிடிச்சிக் கொடுங்க” என்று கண்ணீருடன் முறையிட்டாள்.
நடந்தது குறித்து விசாரித்து தெரிந்து கொண்ட அந்தக் காவலர், புலன் விசாரணையில் ஏற்படும் தாமதம் கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து மாணவியை எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீட்பதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்தார்.
நடந்தது குறித்து விசாரித்து தெரிந்து கொண்ட அந்தக் காவலர், புலன் விசாரணையில் ஏற்படும் தாமதம் கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து மாணவியை எவ்வித பாதிப்பும் இல்லாமல் மீட்பதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்தார்.
செல்போன் புழக்கத்தில் இல்லாத காலகட்டம் அது! தன் மகளை யாரோ கடத்திச் சென்று விட்டார்கள் என்ற புகாரோடு ஒரு பெண் அதிகாலை நேரத்தில் காவல் நிலையம் வந்திருக்கும் தகவலை உடனடியாக அவரது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பை உணர்ந்தார் ‘பாரா’ காவலர்.
அந்த பெண்ணைக் காவல் நிலையத்துக்கு வெளியே மரத்தடியில் உட்காரச் சொல்லிவிட்டு, காவல் நிலையத்தை அடுத்துள்ள காவலர்கள் குடியிருப்புக்கு விரைந்தார் ‘பாரா’ காவலர். மாணவி கடத்தப்பட்ட தகவலை உதவி ஆய்வாளரிடமும், நிலைய எழுத்தரிடமும் தெரியப்படுத்தினார்.
பொழுது விடிவதற்கு முன்பே காவல் நிலையம் சுறுசுறுப்பானது. புலன் விசாரணையில் மிகுந்த அனுபவம் வாய்ந்த தலைமைக் காவலர் தலைமையில் இரண்டு போலீசார், மாணவி கடத்தல் வழக்கு குறித்து முதல் கட்ட விசாரணை மேற்கொண்டு, கள நிலவரத்தைக் கண்டறிய அனுப்பி வைக்கப்பட்டனர்.
கணவனையும் இழந்துவிட்டு, தன் ஒரே மகளையும் பறி கொடுத்துவிட்டு, தவிதவித்து காவல் நிலைய வாசலில் நின்று கொண்டிருந்த அப்பெண்ணைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, சம்பவம் நடந்த கிராமத்தைப் பார்வையிட்டு, விசாரணை மேற்கொள்ள போலீசார் புறப்பட்டுச் சென்றனர்.
காதல் தொடர்பாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாமா? அல்லது திருமணம் செய்துகொள்ள பெண் கேட்டு மறுக்கப்பட்டதால் நிகழ்ந்திருக்கலாமா? என்ற சந்தேகங்கள் போலீசார் மனதில் எழுந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் அந்தத் தாய் எந்தவித தகவலையும் தெரியப்படுத்தாதது போலீசாரைப் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைத்தது.
அக்கிராமத்தில் அது நாள் வரை ஆள் கடத்தல் வழக்கு எதுவும் நிகழ்ந்ததில்லை. சம்பவ தினத்தன்று மாணவி தூங்கிக் கொண்டிருந்த வீடு, தோட்டத்துக்குள் தனியாக அமைந்துள்ளது. வரப்பு வழியாக நடந்து சென்றால்தான் அவர்களது வீட்டுக்குச் செல்ல முடியும். அதை வைத்துப் பார்க்கும் பொழுது, அந்த கிராமத்துக்குத் தொடர்பில்லாத நபர்கள் யாரும் மாணவியைக் கடத்திய செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்பதைப் போலீசாரின் ஆரம்பக்கட்ட புலன் விசாரணை உறுதிபடுத்தியது.
அந்த மாணவியைக் கடத்திய சம்பவத்தையோ அல்லது கடத்தல்காரர்களையோ நேரில் பார்த்த சாட்சிகள் எவரையும் விசாரணையில் கண்டறிய முடியவில்லை. ஆனால், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை விசாரித்த பொழுது, அவர் கூறிய செய்தி போலீசாரைச் சிந்திக்க வைத்தது.
சம்பவத்தன்று இரவில் அந்த விவசாயி அவரது தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றபொழுது, சாலையோரத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததாகப் போலீசாரிடம் தகவல் தெரியப்படுத்தினார்.
“அந்த காரை நீங்கள் கடந்து சென்ற பொழுது, காருக்கு உள்ளே அல்லது வெளியே யாராவது இருந்ததைப் பார்த்தீங்களா?” என்று போலீசார் கேட்டதற்கு, “யாரும் கண்ணில் தென்படவில்லை” என்றார் அவர். “காரின் நம்பர், கலர் என்ன என்றும் தெரியாது” என்று கூறிய அவர், யதார்த்தமாக மற்றொரு தகவலைத் தெரியப்படுத்தினார்.
காரை அவர் கடந்து சென்ற பொழுது, அதைத் தன் கைவிரல்களால் தடவிக்கொண்டே சென்றதாகவும், அதன் பின்புறத்தில் இருந்து முன்புறம் வரை கம்பி போன்று ஒன்று கையில் தட்டுப்பட்டதாகவும் போலீசாரிடம் கூறினார்.
அந்த காலகட்டத்தில் ‘அம்பாசிடர்’ கார்கள்தான் பொதுவாக வாடகைக் கார்களாக இயக்கப்பட்டு வந்தன. அந்த கிராமத்தை அடுத்துள்ள நகரில் உள்ள வாடகைக் கார்களில் இரண்டு கார்களின் வெளிப்புறத்தில் பின்புற பகுதியில் இருந்து முன்புறம் வரை ‘ஃபீடிங்’ பொருத்தப்பட்டுள்ளன என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
அந்த இரு கார்களில் ஒன்றின் டிரைவர் ஊரில் இருந்தார். அவரது கார், இரவு வாடகைக்குச் செல்லவில்லை. மற்றொரு கார் ஊரில் இல்லை. ஒருவேளை அந்த கார்தான் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்குமோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.
போலீசார் தேடிக்கொண்டிருந்த கார், வெளியூர் சவாரியை முடித்துவிட்டு சற்று நேரத்தில் ஊர் திரும்பி வந்தது. அதன் வெளிப்புறங்களில் ‘ஃபீடிங்’ பொருத்தப்பட்டிருந்ததை உறுதி செய்ததும், அதன் டிரைவரைத் தனியே அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்ததில், மாணவி கடத்தல் வழக்கில் துப்பு துலங்கியது.
திருமணம் செய்து கொள்வதற்காகக் கடத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ள விபரத்தை அந்த கார் டிரைவர் உறுதிப்படுத்தினார். அவரை உடன் அழைத்துக் கொண்டு மாணவியைத் தேடிச் சென்றனர் போலீசார்.
கட்டாயத் திருமணம் செய்து கொள்வதற்காக மாணவியைக் கடத்திய செயலில் ஈடுபட்ட நபரையும், அதற்கு உதவி செய்தவர்களையும் போலீசார் கைது செய்து, கட்டாயத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். மீட்கப்பட்ட மாணவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் தாயிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து சில ஆண்டுகள் பள்ளியில் படித்த பின்னர், உறவினர்கள் முன்னிலையில் அந்த மாணவிக்குத் திருமணம் நடைபெற்றது. பேரக் குழந்தைகளுடன் தற்பொழுது அவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகிறார். விடியாத இருட்டில் காரைத் தடவிப் பார்த்ததில் உணர்ந்ததைப் போலீசாருக்குத் தெரியப்படுத்திய விவசாயிதான் அவளுக்கு மங்கலகரமான மணவாழ்க்கையைக் கொடுத்தார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
***
காவலர்கள்,தலை காவலர் நிலையில் இருந்தவர்களே அக்காலத்தில் எவ்வளவு பொறுப்புணர்வோடு பணியாற்றி குற்றம் செய்தவர்களை பிடித்தும் பாதிக்கபட்டோரை காப்பாற்றியும் உள்ளனர். வியப்பாகவும்,பெருமையாகவும் உள்ளது.
Super Sir
அருமையான பதிவு அய்யா..
நல்ல புத்தகங்களே உற்ற நண்பன்…
அருமையான புலன் விசாரணை 😎
ஒரு குற்ற சம்பவத்தை, ஓர் சிறிய ஆனால் மிக முக்கியமான தடையத்தை அடிப்படையாகக் கொண்டு திறமையாக புலன் விசாரணை நடத்தி எப்படி குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் என்று நமது காவல் துறையினர் பயிற்சி பெற்ரிருக்கிரார்கள்.காவல் துறையினர் நினைத்தால் எந்த ஒரு குற்ற செயல்களை யும் மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் அவர்கள் மனது வைத்தால் நிச்சயமாக முடியும்.
அவர்களுக்கு மக்களுடைய ஒத்துளைப்பும்,அதிகார வர்க்கத்ினரின் உருதுனையும் இருந்தால் மட்டும் இதுவெல்லாம் சாத்தியப்படும்.
அவர்கள் மிகவும் திறமையானவர்கள்.
அய்யா வணக்கம்
மிக திறமையாக செயல்பட்டு திருமணத்தை தடுத்துள்ளது.காவல்தறை