பொது வாழ்வில் ஈடுபட்டுவரும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் என்னைச் சந்திக்க அலுவலகம் வந்தார். அவரது நண்பரையும், நண்பரின் மகளையும் உடன் அழைத்து வந்திருந்தார். அப்பொழுது நான் மதுரை நகர காவல் ஆணையராகப் பணிபுரிந்து வந்தேன்.

‘என் நண்பரின் மகள் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறாள். தர்மசங்கடமான பிரச்சினையை அவளும், அவளது பெற்றோர்களும் அனுபவித்து வருகிறார்கள். அதற்கு தீர்வு காணத்தான் உங்களைச் சந்திக்க, அவர்களை அழைத்து வந்துள்ளேன்’ என்று தன்னுடன் வந்தவர்களை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, அவர் வந்ததற்கான காரணத்தைச் சுருக்கமாகக் கூறினார்.

அந்த மாணவியின் அப்பாவைப் பார்த்தேன். சற்று கலக்கத்தோடு இருந்தவர் பேசத் தொடங்கினார். ‘கடந்த சில மாதங்களாக எங்கள் குடும்பத்தை மிரட்டும் வகையில் செல்போனில் எனக்கு தகவல்கள் வருகின்றன’ என்று பதற்றப்பட்டவர், அவரது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த சில பதிவுகளை என்னிடம் காண்பித்தார்.

‘அந்த மாணவியைத் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்; அதற்கு உடன்படாவிட்டால், அவள் தொடர்பான ஆபாசப் படங்களைச் செல்போனில் எல்லோருக்கும் அனுப்பி வைப்பேன்’ என்பதுதான் செல்போனில் வந்த தகவலின் சுருக்கம்.

‘இதை அனுப்பியவர் யார் என்று தெரியுமா?’ என்ற என் கேள்விக்கு, ‘என் மகள் படித்துவரும் கல்லூரியில் படித்தவன் என்பது மட்டும்தான் தெரியும்’ என்றார் அந்த மாணவியின் அப்பா.

தன் மகளிடம் அதிகம் விசாரிக்க வேண்டாம் என்று அவர் கருதினாரோ?  அல்லது அவரது மகள் எதையும் கூற விரும்பவில்லையா?  என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

அந்த மாணவியைப் பார்த்தேன். எவ்வித சலனமுமின்றி, அமைதியாக அமர்ந்திருந்த அவளுக்கு இப்பிரச்சினைக்கான காரணம் தெரியும் எனத் தோன்றியது. பதில் எதுவும் கூறாமல் இருந்த அவளிடம், ‘என்னம்மா நடந்தது?’ என்று வினவினேன்.

மவுனத்தைக் கலைத்த அவள், ‘உங்களிடம் தனியாகப் பேச விரும்புகிறேன்’ என்றாள். அப்பெண்ணின் அப்பாவும், அவருடன் வந்த நண்பரும் அவர்களாகவே எழுந்து என் அலுவலக அறையில் இருந்து வெளியேறினர். சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மட்டும் எனது அறையில் அமர்ந்திருந்தார்.

அப்பாவையும், அவருடன் வந்த குடும்ப நண்பரையும் வெளியேறச் சொல்லிவிட்டு, முன்பின் அறியாத காவல்துறை அதிகாரியிடம் தனியாகப் பேச வேண்டும் என்ற மனநிலைக்கு அந்த மாணவி ஏன் தள்ளப்பட்டாள்? இளம் தலைமுறையினரிடம் மனம் விட்டுப் பேசி, அவர்களது சிந்தனை ஓட்டத்தையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு, அதற்கேற்ப வாழ்க்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் தன்மையில் இருந்து இன்றைய குடும்ப உறவுமுறை விலகிச் சென்றுவிட்டதா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

பொறியியல் கல்லூரியில் அவள் முதலாம் ஆண்டு படித்தபோது, அக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவந்த மாணவன் ஒருவனுடன் அவள் சகஜமாகப் பழகியுள்ளாள். அப்பாவை இழந்த அவன், அம்மாவின் உழைப்பிலும், மாமாவின் ஆதரவிலும் படித்து வந்துள்ளான். அவனது பொருளாதார நிலையைப் பார்த்த அவள், அவனுக்குச் செல்போன் ஒன்றைப் பரிசளித்துள்ளாள். புகைப்படங்கள் சிலவற்றையும் செல்போனில் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கல்லூரி படிப்பை முடித்து, வெளி மாநிலத்தில் வேலைக்குச் சேர்ந்த அவன், அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளான். அதற்கு அவள் இணங்காததால், அவளின் பெற்றோர்களுக்கு மிரட்டல் செய்திகளைச் செல்போனில் அனுப்பி வருகிறான் என்பதை அவளது பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

‘நடந்த சம்பவங்களை உங்க அப்பா – அம்மாவிடம் முழுமையாகத் தெரியப்படுத்தி இருந்தால், அவர்களின் மன உளைச்சலைத் தவிர்த்திருக்கலாமே?’ என்று அந்த மாணவியிடம் நான் விளக்கம் கேட்டதற்கு, ‘உங்களிடம் தெரியப்படுத்திய விவரங்களை என் பெற்றோர்களிடம் முழுமையாக நான் தெரியப்படுத்தி இருந்தால், ‘நீ படித்தது போதும்!’ என்று கூறி, என்னை உடனடியாகக் கல்லூரியில் இருந்து நிறுத்தி இருப்பார்கள். முழுமையாக விசாரிக்காமல், தவறு எதுவும் செய்யாத என் மீது ஒழுக்கம் தவறியவள் என்ற பழியைச் சுமத்தி இருப்பார்கள்’ என்று தன்னிலை விளக்கம் அளித்தாள் அந்த மாணவி. அவளின் செயல்பாட்டில் நியாயம் இருந்ததை உணர முடிந்தது.

அம்மா, மாமாவுடன் விசாரணைக்கு ஆஜரானபோது, அந்த மாணவியிடம் இருந்து பரிசாகப் பெற்ற செல்போனை அந்த இளைஞன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தான். ஆனால், அவனது திருமணம் தொடர்பான முடிவை அவனது அம்மாவும், மாமாவும் எடுத்துக் கூறியும், அவன் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

வேறுவழியின்றி காவல்துறையினர் அவன் மீது வழக்கு பதிவு செய்து, அவனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்கத் தொடங்கினர். அவனது எண்ணம் நிறைவேறாது என்பதை உணர்ந்து கொண்ட அவன், உணர்ச்சிக்கு அடிமையானான்.

கணவனை இழந்த அந்தத் தாய், உழைப்பால் சேமித்த வருமானத்தைக் கொண்டு, தன்னுடைய ஒரே மகன் தனக்கு ஆதரவாக இருப்பான் என்ற பாச உணர்வில் படிக்க வைத்தாள். ஆனால், அவனோ அவளைப் பாதியில் தவிக்கவிட்டு, தற்கொலையால் உயிர் துறந்தான். அவனைச் சீர்படுத்த முயற்சி செய்த காவல்துறையினருக்கும் அவனது செயல் மிகுந்த வருத்தம் அளித்ததை உணர முடிந்தது.

படிக்கின்ற பருவத்தில் ஏற்படும் நட்பையும், காதலையும் பகுத்தாய்வு செய்ய முடியாதவர்கள், அவர்களின் வாழ்க்கை பயணத்தை அவசரக் கோலத்தில் முடித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்ப நிம்மதியையும் சீர்குலைத்து விடுகின்ற சம்பவங்கள் இன்றும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றன.

இளைய தலைமுறையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்குமான, டைவெளி அதிகரிக்கின்ற இன்றைய சூழலில், தரமான நூல்களை வாசிக்கும் பழக்கமே அவர்களைக் குழப்பமான வாழ்க்கைச் சூழலில் இருந்து மீள துணைபுரியும் என்பது காலம் உணர்த்தும் பாடம்!

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

Previous post தடயமும், தாலியும் தந்த விவசாயி!
Next post கல்விக்காக கண்ணியத்தைக் காவு கொடுக்கும் மாணவிகள்

5 thoughts on “பரிசால் வந்த வினை

 1. இளைய தலைமுறையினர் உணச்சிகளுக்கு ஆளாகாமல் தத்தம் பொறுப்புணர்ந்து செயல் பட வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான பதிவு.

 2. தங்களின் விழிப்புண்ர்வூட்டும் பதிவு அருமை.
  மிகவும் வேதனை அளிக்கும் வகையில் தற்போது கல்லூரி மட்டுமின்றி, பள்ளிகளிலும் நடைபெறுகிறது என்று அறியும் போது ,நமது சமுதாயம் எங்கு நோக்கி பயணப்படுகின்றது என்ற அச்சம் உண்டாகிறது.
  பள்ளி மற்றும் கல்லூரி களில் ஒவ்வொரு வாரமும் நல் ஒழக்கம் சார்ந்த கல்வி கற்பிக்க வேண்டும். மேலும் இந்த வாரத்தில் கல்வி கற்பிக்க கூடிய ஆசிரியர் பல பேர்கள் தங்களிடம் படிக்கும் பெண் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்கள் என்று அறியும் போது மிக மிக வேதனை ஆக உள்ளது.
  இந்த மாதிரியான ஒழுக்க மற்ற கேவலமான ஆசிரியர் களிடமிருந்து எப்படி பெண் குழந்தைகள் பாது காக்க போகிறோம் என்ற வினா எழுகிறது.
  இதை சட்டத்தின் மூலம் மட்டும்

  தவிர்க்க முடியாது.
  தாங்கள் போன்ற திரமையான நல்ல அதிகாரிகள்,சமூக நற் சிந்தனை உள்ளவர்கள் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் .அதுவும் உடனிடியாக,மேலும் தவறு செய்த ஒழுக்கம் தவரிய மனித்ர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.

 3. ஐயா வணக்கம்
  சிந்திக்ககூடிய நல்ல பதிவு
  செந்தில் முருகன் சமூக ஆர்வலர்

 4. உண்ைதான் அய்யா. ெபண்கள் மிக கவனமுடன் இருக்க ேவண்டும்.

 5. உணர்ச்சியில் உயிரின் மகத்துவம் தெரியாமல் வாழ்ந்து விடுவது வருத்தமான நிகழ்வு. நல்ல வழிகாட்டுதல் கள் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *