கல்விக்காக கண்ணியத்தைக் காவு கொடுக்கும் மாணவிகள்

‘அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’ என்ற மனநிலையில் நம்நாட்டு மக்கள் வாழ்ந்து வந்த நிலையில், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘பெண்கள் கல்வி கற்கத் தொடங்கினால், சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகள் தானாகவே அவர்களை வந்தடையும்’ என்ற சிந்தனை உடைய சிலர் பெண்களின் கல்விக்கான முன்னெடுப்புகளைச் செய்யத் தொடங்கினர்.

சாவித்திரிபாய் புலே என்ற சமூக சேவகி இந்;தியாவில் முதன் முதலாக பெண்கள் மட்டும் படிக்கக் கூடிய மகளிர் பள்ளி ஒன்றை பூனாவில் 1848-ம் ஆண்டில் தொடங்கினார். அப்பள்ளியின் ஆசிரியையாகச் செயல்பட்ட அவர், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை. இப்பள்ளி தொடங்குவதற்கு முன்னரே, தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள திருநெல்வேலியில் 1821-ம் ஆண்டில் சிறுமிகள் தங்கிப் படிக்கக் கூடிய மகளிர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. ஆனால், சில நடைமுறை இடையூறுகளால் அந்த மகளிர் பள்ளி தொடர்ந்து இயங்கவில்லை.

பெண் கல்வியில் இந்தியாவின் நிலை என்ன? 1882-ம் ஆண்டில் 0.2 சதவிகிதம் பெண்கள்தான் படித்தவர்கள். அதாவது 1,000 பெண்களில் இரண்டு பெண்கள் மட்டும்தான் படித்தவர்கள். இந்;திய விடுதலையடைந்த பொழுது 6 சதவிகிதமாக இருந்த படித்த பெண்கள், 2020-ம் ஆண்டில் 70.3 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், 2011-ம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி 73.44% பெண்கள் படித்தவர்கள். இந்த நிலை மேலும் உயர்ந்து, 2021-ம் ஆண்டில் 82%-யைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு பள்ளி இறுதி தேர்வுகளில் கலந்துகொள்பவர்களில் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் எண்ணிக்கை சமமாக இருந்துவருகின்ற நிலையைத் தற்பொழுது தமிழ்நாடு எட்டியுள்ளது.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக இந்திய அளவில் 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில் மாணவர்களைக் காட்டிலும், மாணவிகள்தான் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற புள்ளிவிவரம் பெண் கல்விக்கு நம்நாடு கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

பெண் கல்வியில் முன்னிலை வகிக்கும் நம்நாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களும், பாலியல் வன்கொடுமைகளும் சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் தொடர்கின்றன.  குறிப்பாக, சிறுமிகள் மீது தொடுக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தை (போக்சோ சட்டம்) 2012-ம் ஆண்டில் இந்திய அரசு கொண்டுவந்தது. இந்த புதிய சட்டம் குழந்தைகளின் பாதுகாப்பை எந்த அளவுக்கு உறுதி செய்கிறது?      

குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ‘போக்சோ’ சட்டத்தின்படி பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம் வெளிப்படுத்துகிறது. 2017-ம் ஆண்டில் போக்சோ சட்டத்தின்படி 32,608 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் முறையே 39,827 மற்றும் 47,335 வழக்குகள் நம்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 46% அதிகரித்து இருப்பது, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சமுதாயத்தில் கணிசமான அளவிற்கு அதிகரித்து வருகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

நீதிமன்ற விசாரணையில் 35 சதவிகித  போக்சோ வழக்குகள் மட்டும்தான் தண்டனையில் முடிவடைகின்றன. குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச் செயலுக்கான ஆதாரங்களைச் சேகரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னரும் 65 சதவிகித போக்சோ  வழக்குகள் நீதிமன்ற விசாரணையின் முடிவில் விடுதலை அடைந்துள்ளன் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துள்ளனர்.    

அதிக எண்ணிக்கையிலான போக்சோ வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் விடுதலையாவது பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். அதிக எண்ணிக்கையிலான போக்சோ வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் விடுதலையாகிவிடுவது குறித்து காவல்துறை முழுமையான ஆய்வு மேற்கொள்ளத் தவறினால், போக்சோ சட்டம் அதன் வலிமையை இழந்துவிடும்; அச்சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கமும் நிறைவேறாது.

உலக நாடுகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகித்தினர் 16 வயதிற்கும் குறைவான சிறுமிகள் என்றும், அன்னிய நபர்களைக்காட்டிலும் அறிமுகமான நபர்களால்தான் அதிக எண்ணிக்கையிலான சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்குக் காரணமாக அமைந்துள்ளனர் என்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வு  கண்டறிந்துள்ளது.

இந்த சுழலில், குழந்தைகளின் வளமான எதிர்காலத்தை நோக்கிய வாழக்கை பயணத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் ஆசிரியர்கள்,  பள்ளி மாணவிகளிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதும், மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததும் ஆன சென்னை சம்பவங்கள்  தற்பொழுது பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பள்ளிகள் சிலவற்றில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் சில மாணவிகள், ஆசிரியர்கள் சிலரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிலை நிலவுகிறது என்பதும், உண்டுறை பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இத்தொல்லையைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதும் கள ஆய்வில் வெளிப்படுகிறது.

தற்பொழுது நடைமுறையில் இருந்துவரும் அக மதிப்பெண்கள் மற்றும் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை மையப்படுத்தி, கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளும் சில ஆசிரியர்களின் செயல்களைச் சகித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு மாணவிகள் தள்ளப்படுகின்றனர் என்ற ஆதங்கமும் ஆய்வில் வெளிப்படுகிறது.

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் பள்ளி வேலை நாட்களில் கூடுதல் வகுப்புகள் என்று நடத்தப்படும் வகுப்புகள் சில சமயங்களில் மாணவிகளின் கண்ணியத்திற்குச் சோதனையாக அமைந்துவிடுவதும் உண்டு.

கொரோனா நோய்தொற்று காரணமாக இணையவழியில் பாடம் நடத்தும் சில ஆசிரியர்கள் மாணவிகளுடன் தனிப்பட்ட முறையிலும், இரவு நேரங்களிலும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். மாணவிகளின் கற்றலுக்குத் துணைபுரியும் செயல் என்று இது தோன்றினாலும், சபல எண்ணம் கொண்ட சில ஆசிரியர்கள் இச்சந்தர்ப்பங்களில் மாணவிகளிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்வதான முணுமுணுப்பும் சில மாணவிகளிடம் இருந்து வெளிப்படுகிறது.

பள்ளியில் தனக்கு நிகழும் கண்ணியக் குறைவான சம்பவங்களைப் பெற்றோர்களிடம் தெரியப்படுத்தினால், தன் பக்கம் உள்ள நியாயத்தை பெற்றோர்கள் உணராமல், பள்ளியில் இருந்து உடனடியாக நிறுத்திவிடுவார்களோ? என்ற அச்சமும் மாணவிகள் சிலரிடம் வெளிப்படுகிறது.

ஆசிரியர் ஒருவரின் கண்ணியக் குறைவான செயல் புகாராக வெளிப்படும் பொழுது, பெற்றோரைச் சமாதானப்படுத்த பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகள் பல நேரங்களில் பலனளித்துவிடுகின்றன. பெற்றோர்களும் அவர்களின் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சட்ட ரீதியான நடவடிக்கையை நாடுவதில்லை.

மாணவி ஒருவரிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட தனியார் பள்ளி ஆசிரியர் பாடம் நடத்துவதில் திறமையானவராக இருந்தால், அவரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிக் கொண்டு, அவர் பணியில் தொடர பள்ளி நிர்வாகம் அனுமதிப்பதும், ருசிகண்ட பூனை போன்று அந்த ஆசிரியர் வாய்ப்பு கிடைக்கும் பொழுது மாணவிகளிடம் கண்ணியக் குறைவாக நடக்க முயற்சி செய்வதும் ஆன கள நிலவரம் வேதனைக்குரிய செயல்.

தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற கண்ணியத்தை இழப்பதில் தவறில்லை என்ற மனநிலையை மாணவிகளிடம் கல்விக்கூடங்கள் ஏற்படுத்தி விடக்கூடாது.

பள்ளிகளில் ஆசிரியர் – பெற்றோர் கூட்டங்கள் முறையாக நடந்திருந்தால், இம்மாதிரியான பிரச்சினைகள் நிகழாமல் தவிர்த்திருக்கலாம். சமீப காலங்களில் நடைபெறும் ஆசிரியர்-பெற்றோர் சந்திப்புகள் பெரும்பாலும் மாணவ, மாணவியர்கள் பற்றிய குறைகளைக் கூறி, பெற்றோர்களின் மனதை நோகடிக்கும் நிகழ்வுகளாகத்தான் இருக்கின்றன. மாறாக, பெற்றோர்களின் கருத்தை உள்வாங்கும் மனநிலையில் பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் இருப்பதில்லை. ஆசிரியர்-பெற்றோர் இரு தரப்பினரும் மனம் விட்டு பேசி, கற்றலில் ஏற்படும் குறைபாடுகளுக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொண்டால், பள்ளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு மாணவிகள் ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்காது.

முன்னாள் மாணவர்கள் கூட்டங்களைப் பள்ளிகளில் நடத்தினால், ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களுக்கு வழி கிடைப்பதோடு, பள்ளிகளில் நிகழும் சில தவறான செயல்களும் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

பள்ளிகளில் ‘போக்சோ சட்டம்’ பற்றிய தகவல்களை அறிவிப்பு பலகையில் மாணவ, மாணவியர்களின் பார்வைக்கு வைக்கலாம். ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியில் படித்துவரும் மாணவ மாணவியர்கள் அடங்கிய ‘போக்சோ கமிட்டி’ மூலம் பள்ளியில் நிகழும் கண்ணியக் குறைவான செயல்களைக் கண்டறிந்து, அவைகளைக் களைய நடவடிக்கை எடுக்கலாம்.

பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள், கூடுதல் வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் போன்ற வகுப்புகள் நடத்துவதற்கான செயல்திட்டங்கள் முறையாக பள்ளி நிர்வாகத்தால் வகுக்கப்பட வேண்டும்.

பள்ளியில் எதிர்கொள்ளும் கண்ணியக் குறைவான செயல்களைப் புகாராக கொடுக்க பல மாணவிகள் தயங்குவார்கள். இந்த சூழலில், பள்ளி மாணவிகளுக்கென்று ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தலாம்.

வாழ்க்கை எனும் கடலில் மாணவ, மாணவிகள் நீந்தி கரையேற வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். மாறாக, வைரம் பாய்ந்த மரத்தை உள்ளிலிருந்து அரித்து, சிதைக்கும் கரையான்களாக அவர்கள் இருந்துவிடக் கூடாது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

Previous post பரிசால் வந்த வினை
Next post களவாடிய பொழுதுகள்

6 thoughts on “கல்விக்காக கண்ணியத்தைக் காவு கொடுக்கும் மாணவிகள்

  1. இக்காலச்சூழலை மிக அருமையாக (உள்ளதை உள்ளபடி)படம்பிடத்துக்காட்டும் கட்டுரை.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகக்கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

  2. மிகவும் அருமையான பதிவு. மாதா ,பிதா ,குரு என்ற மூன்றாவது இடத்தில் வைத்து பூஜிக்கப்பட கூடியவர்கள் ஆசிரியர்கள் . அந்த
    நிலையிலிருந்து இன்று மிகவும் மோசமான நிலைக்கு சில ஆசிரியர்கள் பயணப்படும் போது அதன் மூலம் சமுதாயத்தில் உள்ள பெண் குழந்தைகள் மறறும் இளம் சிறார்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. இதைத் தடுப்பதற்கு அரசு இரும்புக்கரம் கொண்டு தகுந்த முறையில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அப்போதுதான் சமுதாயத்தில் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு ஒரு பாதுகாப்பான நிலையை அவர்கள் உணர முடியும். எந்த ஒரு போக்சோ குற்றமும் நீர்த்துப் போகாமல் இருப்பதற்கு காவல்துறை மிகவும் கவனமாக செயல்பட்டு குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பெண் குழந்தைகள் மட்டுமன்றி அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் பலர் மிகவும் பலவகையில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அங்கும் சில பெரிய ஓநாய்கள் இருந்து கொண்டு இருக்கின்றன அவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.
    பெண்மை போற்றப்பட வேண்டும். பெண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

  3. அருமையான கருத்துக்கள். இந்த பரிந்துரைகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்..

  4. ஐயா வணக்கம்
    சட்டம் இன்னும் கடுமையாக இருக்கவேண்டும். போக்சோ சட்டம் இருந்தும் பாலியல் குற்றங்கள் அதிகம் இருக்கிறது.
    பெண்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    செந்தில் முருகன்
    சமூக ஆர்வலர்
    துத்திகுளம்
    நாமக்கல் மாவட்டம்

  5. அருமையான, உ.ண்மையான, நடைமுறையில் உள்ள சிக்கல்கள் மற்றும் சீர்கேடுகளை உணர்த்தும் விழிப்புணர்வு பதிவு அய்யா. by kannan. Ex.police., Vellore.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *