வயதானவர்களுக்கு தூக்கமின்மை என்பது இயல்பான ஒரு பிரச்சினைதான்.  ஆனால், சமீப காலமாக இரவு நேரங்களில் படுக்கைக்குச் சென்ற பின்னரும் தூக்கம் வருவதில்லை என்று மருத்துவ ஆலோசனை கேட்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய வாழ்வியல் பிரச்சினை எதுவும் இல்லாத இளைஞர்களும், இளம் பெண்களும் இரவு நேரங்களில் தூக்கமின்மைக்கு ஆட்பட வேண்டிய காரணம் என்ன?  இரவு நேரத்தில் படுக்கையில் படுத்த உடன் தூக்கம் வந்துவிடும் என்றும், அதிகாலை நேரத்தில் கடிகார அலாரம் உதவியின்றி குறிப்பிட்ட நேரத்தில் சரியாக விழிப்பு வந்துவிடும் என்றும் கூறுபவர்களும் உண்டு. அப்படியானால், ஒரு மனிதனின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும், வரைமுறைபடுத்தும் செயலைச் செய்யும் மனிதனின் உறுப்பு எது?

மனிதனின் மூளைப் பகுதியில் ‘பினியல்’ என்ற மிகச்சிறிய சுரப்பி அமைந்துள்ளது. அது உற்பத்தி செய்யும் ‘மெலடோனின்’ என்ற ஹார்மோன் தூக்கத்தின் நேர அளவை நிர்ணயம் செய்கிறது. பொதுவாக, அந்த ஹார்மோன் முன்னிரவில் சுரக்கத் தொடங்கி, இரவு முழுவதும் சுரந்து, அதிகாலை நேரத்தில் குறையத் தொடங்கிவிடும். அதன் காரணமாக இரவில் நல்ல உறக்கம் ஏற்பட்டு, அதிகாலை நேரத்தில் விழிப்பு ஏற்படுகிறது.

மெலடோனின் அளவு குறைவாக சுரந்தால், தூக்கமின்மை ஏற்படுகிறது என்பது மருத்துவர்களின் கருத்து. மன அழுத்தம், வேலைப்பளு, இரவு நேரப்பணி, மது அருந்துதல் போன்றவை மெலடோனின் குறைவாக சுரப்பதற்கு காரணங்களாக இருந்தாலும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளிக்கதிர்களும் மெலடோனின் சுரப்பதைப் பாதிக்கும் காரணியாக விளங்குகிறது. இதனால், இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் முன்பு நீலநிற ஒளி நிறைந்த அறையில் அதிக நேரம் செலவழிப்பது, ஆழ்ந்த உறக்கத்திற்குத் தடையாக அமைந்துவிடுகிறது.

சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒரு நாளில் 6 மணி நேரத்துக்கும் அதிகமான நேரத்தைச் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் கழிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக, படுக்கைக்குச் செல்லும் முன்பு அன்றைய தினம் செல்போனில் வந்து குவிந்துள்ள ‘வாட்ஸ் ஆப்’ தகவல்களையும், வீடியோக்களையும் பார்க்க, அவைகளுக்குப் பதில் அனுப்ப நீண்ட நேரம் செலவிடுகின்றனர். அதனால் வெளியாகும் நீல நிற ஒளிக்கதிர்களின் தாக்குதலால், செல்போன் பயன்படுத்துபவர்களின் உடலில் மெலடோனின் சுரப்பது குறையத் தொடங்குகிறது. அதன் விளைவாக, அவர்கள் இரவு நேரத்தில் தூக்கம் வரமால் நீண்ட நேரம் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.

இரவு நேரத் தூக்கத்திற்கு மட்டும்தான் செல்போன் எதிர்வினை புரிவதில்லை. பகல் முழுவதும் குடும்பத்துக்காக உழைத்துவிட்டு, இரவில் வீடு திரும்பும் அப்பாக்களில் பலரும் தங்களது குழந்தைகளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, செல்போன் மற்றும் ‘லேப்-டாப்’களில் மூழ்கிவிடும் சூழல் அநேக குடும்பங்களில் நிலவுகிறது.

அதேபோன்று குழந்தைகளும் பள்ளிக்கூடம் முடிந்து, டியூசன் வகுப்புகளுக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியதும், அவர்களது அப்பா, அம்மாவுடன் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, இணையதள வசதி கொண்ட செல்போன்களில் அதிக நேரம் செலவிட ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இம்மாதிரியான சூழல் பெற்றோர், குழந்தைகளுக்கு இடையேயான பாசத்துடன் கூடிய கருத்து பரிமாற்றங்களுக்குத் தடையாக இருக்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள வேண்டிய அன்பு மற்றும் பாசத்தைச் செல்போன் பயன்படுத்தும் நேரம் களவாடிச் சென்றுவிடுகிறது. அது மட்டுமின்றி, தங்களின் குடும்ப பாரம்பரியம் பற்றி குழந்தைகளிடம் பேசவும், வாழ்வியல் நெறிமுறைகளை அவர்களுக்கு வகுத்துக் கொடுக்கவும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

தொலைவில் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் செல்போன், அண்டை வீட்டில் யார் வசிக்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள அவகாசம் அளிப்பதில்லை. அவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் தருவதில்லை. தூய்மையான நட்பை பெறுவதிலும் அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. பொது இடங்களில் சாலையில் நடந்து செல்லும்போது, தன்னிலை மறந்து செல்போனில் பேசிக்கொண்டு செல்வதால், ஆபத்துக்கள் பலவற்றைச் சந்திக்க நேரிடுகிறது.

பள்ளிக்கூடங்களில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பலரிடம் பள்ளி வேலைநேரங்களில் செல்போன் உபயோகிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் வகுப்பு இல்லாத நேரத்தில், அடுத்த வகுப்பில் மாணவர்களுக்கு என்னென்ன சொல்லிக் கொடுக்க வேண்டும்; அவர்களை எப்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் ஆசிரியர்கள் திட்டமிட்டுக் கொண்டு இருப்பார்கள்.  ஆனால், இப்போது ஆசிரியர்களின் திட்டமிடும் அந்த நேரத்தையும் செல்போன் அபகரித்துவிட்டது.  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலரும் வகுப்பு நடக்கும் பொழுது, செல்போனில் அவர்களது நேரத்தை வீணடித்துவிடுகின்றனர். அதன் விளைவாக, நல்ல மதிப்பெண்களையும், பிரகாசமான எதிர்காலத்தையும் அவர்கள் இழந்துவிடுகின்றனர்.

உணவில்லாமல் கூட பலரால் இருந்துவிட முடியும்; ஆனால் செல்போன் இன்றி அவர்களால் சில நிமிடப் பொழுதைக் கூட கழிக்க முடிவதில்லை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படிதான் செல்போனும் ஒரு போதை போன்றது. இது வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளிலும் கவனமின்மையை மட்டுமே பரிசாக அளிக்கிறது. இதனால் ஏற்படும் பின் விளைவுகள், பாதிப்புகள் ஈடுகட்ட முடியாதவை என்பதைக் காலம் கடந்துதான் பலர் உணரும் நிலை ஏற்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது எப்படி ஓட்டுநருக்கும், சாலையில் பயணிப்பவர்களுக்கும் ஆபத்தானதோ, அது போன்றுதான் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதும், சாலையில் நடந்து செல்வதும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

பரந்து விரிந்த உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கியவாறு பல்வேறு வசதிகள் செல்போன் மூலம் கிடைக்கப் பெற்றாலும், செல்போன்களின் தினசரி பயன்பாட்டுக்கு ஒரு காலவரையரை நிர்ணயம் செய்யத் தவறினால், வளரும் இளம் தலைமுறையினர் ஆக்கப்பு+ர்வமான செயல் நேரத்தின் பெரும்பகுதியைச் செல்போன்கள் அபகரித்துக் கொள்ளும் அபாய சூழலில் இருந்து விடுபட முடியாது என்பதை உணர வேண்டிய தருணம் இது. அறிவியலின் அரிய கண்டுபிடிப்புகளை வரைமுறையின்றி பயன்படுத்தத் தொடங்கினால், அது மனித சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதற்கு அளவுக்கு அதிகமான செல்போன்களின் பயன்பாடு ஒரு சான்றாக விளங்குகிறது.

[16/01/2018 தேதிய தினத்தந்தி நாளிதழில் வெளியான கட்டுரை]

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

[16/01/2018 தேதிய தினத்தந்தி நாளிதழில் வெளியான கட்டுரை]

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

Previous post கல்விக்காக கண்ணியத்தைக் காவு கொடுக்கும் மாணவிகள்
Next post பாலியல் குற்றங்களில் 65% பேர் விடுதலை! – பலவீனமாக இருக்கிறதா போக்சோ?

5 thoughts on “களவாடிய பொழுதுகள்

 1. அருமையான ,எளிய முறையில் அனைவருக்கும் புரியும் விதத்தில் உள்ள கட்டுரை..அனைவரும்(குறிப்பாக இளய தலைமுறையினர்) படித்து இரவில் நீண்ட நேரம் செல்போனை ( Antroid) உபயோகிப்பதை தவிர்த்தல் நல்லது.

 2. இளைய தலைமுறையினருக்கு பயனுள்ள கட்டுரை. அருமையான பதிவு.

 3. தங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. செல்ஃபோன் 5 வயது குழந்தை முதல் பெரிவர்கள் வறை ஒரு தவிர்க்க முடியாத அங்க மாகி விட்டது.கொடுமை என்ன வென்றால் ஒரு வயது குழந்தகளுக்கு கூட பெற்றோர்கள் அதன் கையில் கொடுத்து விடுகிார்கள்,. தற்போது வீட்டில் உள்ள ஆண் பெண் மாணவர்களுக்கு 24 மணி நேரமும் அதில் மூழ்கி விடுகிறார்கள்.தங்களின் உடலும் உள்ளமும் மனமும் அதனால் பாதிக்க படுகிறது என்பதை தெரிந்தே செய்கிறார்கள். பெற்றோர்கள் சொல்லை கேட்பாதக தெரிய வில்லை.
  சமூகம் மற்றும் பள்ளி கல்லூரிகளில் வாயிலாக முடிந்தால் சட்ட த்தின் வாயிலாக அறிவுறுத்தலாம், இல்லை என்றால் விஞநாத்தில் வளர்லாம் ஆனால் வாழ் க்கையில் வெற்றி பெற முடியுமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. நம் மாணவ செல்வங்கள் சிறிது சிறிதாக சமூக கட்டமைப்பை காப்பாற்ற தவறி வருகிற்களோ என்ற பய உணர்வு ஏற்படுகன்றது.

  .

 4. ஐயா வணக்கம்
  நல்ல தகவல் பயனுள்ளதாக இருக்கிறது அருமை
  செந்தில் முருகன்
  சமூக ஆர்வலர்
  துத்திகுளம்
  நாமக்கல் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *