சிறப்புக் குழந்தைகள் முன்னுரிமை பெறப்பட வேண்டியவர்கள்

இன்றைய சமுதாய வாழ்வியல் முறையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய நிகழ்வு எது?

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டவர் முதலிடம் பெறுவதும், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனைக்குத் தங்கப் பதக்கம் கிடைப்பதும், வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு கிடைப்பதும், கண் பார்வையில்லாத நபருக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைப்பதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் நிகழ்வுகள்தான். இருப்பினும், இவைகளைவிட அதிகமான மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிகழ்வு ஒன்று உண்டு.

‘ஆட்டிசம்’ என்று கூறப்படும் மன இறுக்கத்திற்கு ஆட்பட்டிருக்கும் ‘சிறப்புக் குழந்தை’ ஒரு நாள் தன் வீட்டிற்கு வந்த உறவுக்காரரைப் பார்த்து அடையாளம் புரிந்து கொண்டு, ‘மாமா’ என்றழைப்பதும், ‘வாங்க’ என்று கூறி வரவேற்பதுமான சம்பவத்தைப் பார்த்த அக்குழந்தையின் தாய் அடையும் மகிழ்ச்சிதான் உணர்ச்சி பூர்வமான, உன்னதமான மகிழ்ச்சியாகும்.

‘ஆட்டிசம்’ என்ற வார்த்தைக்கு ‘சமூகத் தொடர்புகளில் உள்ள சிக்கல் மற்றும் ஒரே மாதிரியான செய்கைகளைத் தொடர்ந்து செய்வது’ என அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ‘யதார்த்த வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பது’ என்பது அதன் பொருள்.

பிறந்த குழந்தையின் ஓராண்டு வளர்ச்சியில் ஒவ்வொரு மாதமும் முன்னேற்றம் இருப்பதைக் காணலாம். பொருட்களின் அசைவுக்கு ஏற்ப கண்களை அசைப்பது; சிரிப்பைப் புரிந்து கொண்டு, பதில் சிரிப்பு சிரிப்பது; அடிக்கடி பார்க்கும் நபர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்வது; பெயர் சொல்லி கூப்பிடும் பொழுது திரும்பிப் பார்ப்பது போன்ற பண்புகள் ஓராண்டு கால வளர்ச்சியில் குழந்தைகளிடம் வெளிப்படும்.

ஆனால், ஒரு சில குழந்தைகளிடம் இந்த வளர்ச்சியின் அடையாளங்கள் வெளிப்படுவதில்லை. அம்மாதிரியான குழந்தைகள் எதிரில் இருப்பவர்களின் கண்களைப் பார்த்து பேசுவதைத் தவிர்ப்பது; பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமல் இருப்பது; தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றி கவலைப்படாமல் இருப்பது; தனக்கென்று தனி உலகம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு, அதில் மூழ்கிக் கிடப்பது போன்ற வித்தியாசமான குணங்களில் ஒன்றோ அல்லது பல குணங்களையோ கொண்டிருப்பார்கள்.  இம்மாதிரியான குணங்களைக் கொண்ட குழந்தைகளை ‘ஆட்டிசம்’ பாதிப்புக்கு உள்ளான ‘சிறப்புக் குழந்தைகள்’ என்று குறிப்பிடுவார்கள்.

இந்தியாவில் 20 இலட்சத்திற்கும் சற்று அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்புக்கு அதிகமாக உள்ளாகின்றனர் என்றும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

குழந்தைகளிடம் காணப்படும் இம்மாதிரியான பண்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த லியோ கானர் என்ற அமெரிக்க மருத்துவர், இந்த பண்புகளுடன் வளரும் குழந்தைகளை எப்படி அதிலிருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதை 1943-ம் ஆண்டில் உலகுக்கு உணர்த்தினார்.  எதார்த்தமான வளர்ச்சியில் இருந்து மாறுபட்டு வளரும் இம்மாதிரியான குழந்தைகளை ‘ஆட்டிசம்’ பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் என அவர் குறிப்பிட்டார். இக்குழந்தைகள் ‘மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள்’ என்று சமுதாயத்தில் நிலவி வந்த கருத்து தவறானது என்றும், இக்குழந்தைகளுக்கு சொற்களால் வெளிப்படுத்த இயலாத நுண்ணறிவு மிக அதிகமாக இருக்கும் என்றும், அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரிவதில்லை என்றும் அவர் கண்டறிந்தார்.

டாக்டர் லியோ கானரைத் தொடர்ந்து, உலக நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பலர் ‘ஆட்டிசம்’ பாதிப்புக்கு உட்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்ததில், ‘ஆட்டிசம்’ என்பது நோய் அல்ல என்றும், அது ஒரு வகையான உடல் ரீதியான குறைபாடு என்றும் கண்டறிந்தனர்.  மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடு காரணமாக, இம்மாதிரியான குழந்தைகளுக்கு மூளையின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன என்றும், இவ்வகையான பாதிப்புக்கு ஆளானவர்கள் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருப்பதே ‘ஆட்டிசம்’ நிலைக்குக் காரணம் என்றும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதைத் துல்லியமாகக் கூற முடியாவிட்டாலும், குழந்தையின் தாய், தந்தையர் வழியில் முன்னோர்கள் யாருக்காவது இந்த பாதிப்பு இருந்தால், அது மரபு வழியில் குழந்தைகளுக்கு வர வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கருதுகின்றனர். நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்ளுதல், கருவுற்ற தாய் சாப்பிடும் மருந்துகளின் பாதிப்பு, சில வகையான கனிமச் சத்துகள் குறைபாடு போன்றவைகளும் ஆட்டிசம் பாதிப்புக்குக் காரணங்களாக அமையும் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

குழந்தை பிறந்து 12 மாதத்திலிருந்து 18 மாதத்திற்குள் ஆட்டிசம் பாதிப்பிற்கான அறிகுறிகள் சில குழந்தைகளிடம் வெளிப்படும். ஆனால், அம்மாதிரியான குழந்தைகளின் பெற்றோர்களில் பலர் அதன் முக்கியத்துவத்தை உணரத் தவறிவிடுகின்றனர். அதன் காரணமாக, பாதிப்புக்கு உள்ளான குழந்கைளிடம் 3 முதல் 5 ஆண்டுகளில் ஆட்டிசம் குணம் வளர்ந்து, உச்ச கட்டத்தை எட்டி விடுகிறது.

குழந்தையின் வளர்ச்சியில் தடங்கல் இருப்பதை உணர்ந்த பெற்றோர்களில் பலர் உடனடியாக உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறாமல், தங்களுக்குத் தெரிந்த சிலர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். அதனால், ஆட்டிசம் பாதிப்பிலிருந்து குழந்தையை மீட்டுக் கொண்டுவருவதற்கான பொன்னான நேரத்தை வீணாக்கி விடுகின்றனர். சில சமயங்களில் அக்குழந்தையின் தாயை அவரது உறவினர்கள் குறை கூறுவதும், சமூக பந்தத்திலிருந்து விலக்கி வைப்பதும் அக்குழந்தையை அந்த பாதிப்பிலிருந்து மீட்டுக் கொண்டுவருவதற்குப் பெரும் தடையாக அமைந்துவிடுகிறது.

ஒவ்வொரு சிறப்புக் குழந்தையின் பாதிப்பும், செயல்பாடுகளும் வித்தியாசமான வகையில் இருக்கும். அதனால், எல்லா சிறப்புக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையோ, பயிற்சியோ கொடுக்க முடியாது. பயிற்சி அளிப்பவர்களும், பெற்றோர்களும் அக்குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட்டு, அவர்களுக்கு எவ்விதமான பயிற்சி தேவை என்பதை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் பேசும் பயிற்சி, பழக்க வழக்க பயிற்சி, விளையாட்டு பயிற்சி போன்றவை கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் பயிற்சியானது அக்குழந்தை தன்னுடைய தினசரி பணிகளைத் தானே செய்து கொள்ளும் நிலையை உருவாக்கப் பெரிதும் துணைபுரிகிறது.

சில சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களின் தனிப்பட்ட முயற்சியால், சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி மையங்கள் சில தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகின்றன. பெற்றோர்களுக்கும் சிறப்புக் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும என்று தனிப் பயிற்;சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. மனம் தளராது, நம்பிக்கையுடன் தொடர்ந்து கொடுக்கப்படும் பயிற்சியினால், சிறப்புக் குழந்தைகள் தன்னுடைய அடிப்படை தேவைகளைத் தானே செய்து கொள்ளும் விதத்தில் மாறத் தொடங்கிவிடுவதையும் பல சமயங்களில் காணமுடிகிறது.

பல்வேறு இடையூறுகளுக்கு இடையே சிறப்புக் குழந்தையை வளர்த்துவரும் குடும்பத்தினரை அன்னியப்படுத்தி பார்க்கும் பழக்கம் நம் சமுதாயத்தில் பரவலாக இருந்து வருகிறது. சிறப்புக் குழந்தையுள்ள பல குடும்பங்கள் குடியிருக்க வாடகை வீடு கிடைக்காமல் அல்லல்படும் சூழலும் இருந்து வருகிறது. இந்த நிலை மாறி, அம்மாதிரியான குடும்பங்களை உணர்வு ரீதியாகக் காயப்படுத்தாமல், அவர்களை அரவணைத்து வாழ வேண்டும் என்ற உணர்வு சமுதாயத்தில் அதிகரிக்க வேண்டும்.

ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளானவர்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவதில் அனைவருக்கும் பங்கு உண்டு.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ் 

***

Previous post பாலியல் குற்றங்களில் 65% பேர் விடுதலை! – பலவீனமாக இருக்கிறதா போக்சோ?
Shopliftings Next post கலிபோர்னியாவின் முன்மொழிவு – 47 உணர்த்துவது என்ன?

2 thoughts on “சிறப்புக் குழந்தைகள் முன்னுரிமை பெறப்பட வேண்டியவர்கள்

  1. ஆட்டிசம் பாதித்த குழ ந்தைகள் பற்றிய அருமையான பதிவு.

    நான் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் என்ற ஊரில் உள்ள ஒரு ஆட்டிசம் பாதித்த குழநந்தைதகள் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு வருடத்திற்கு ஒரமுறையாவது சென்று அந்த குழந்தைகள் எந்த அளவுக்கு கஷ்ட படுகிறசார்கள் அவர்களுக்கு பயிற்று விற்கும் ஆசிரியர் களையும் பார்த்து (அவர்கள் பணி மிக மிக போற்ற பட கூடியது)அவர்களுடன் சில மணி நேரம் செலவிடுவேன்.
    அவர்களுக்கு என்று ஒரு ஸ்பெஷல் பள்ளி கட்ட வேண்டும் என்று நினைத்து அதன் தொண்டு நிறுவன மேற்பாயளர்களுடன் முயற்சி செய்து வருகிறேன்.
    பொருளாதரம் தான் பெரிய சவாலாக உள்ளது.

  2. அய்யா வணக்கம்
    மிக நல்ல தகவல் புரியும்படி உள்ளது.

    செந்தில் முருகன்
    சமூக ஆர்வலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *