ShopliftingsSource : https://www.deccanherald.com/metrolife/retail-chains-battle-shoplifting-722520.html

பணம் கொடுத்து தன் பசியை ஆற்றிக்கொள்ள முடியாத நிலையிலுள்ள நபர் ஒருவர், பெட்டிக்கடை முன்பாகத் தொங்கிக் கொண்டிருக்கும் வாழைத் தாரில் இருந்து திருட்டுத்தனமாக ஒரு பழத்தைப் பிய்த்து சாப்பிட்டால், நம் நாட்டில் என்ன நடக்கும்? பெட்டிக்கடைக்காரர் மட்டுமின்றி, கடை முன்பாக நின்று கொண்டிருப்பவர்கள் அனைவரும் பழம் திருடியவனுக்கு ‘தர்ம அடி’ கொடுத்து, ‘திருட்டுப் பட்டம்’ கட்டி, அவனைப் போலீசாரிடம் ஒப்படைப்பார்கள். ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, பணம் கொடுக்காமல் ஏமாற்ற முயற்சி செய்பவர்களைப் பிடித்து, மாவு அரைக்கும் வேலையைச் செய்யச் சொல்வதும் நம்நாட்டு நடைமுறை. ஆனால், வளர்ச்சியடைந்த மேலைநாடுகளில் நிகழ்வது என்ன?

வீடியோ காட்சிகள்:

கடந்த சில நாட்களாக சில வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் உலா வந்து கொண்டுள்ளன. சூப்பர் மார்க்கெட், மருந்துகடை போன்ற சில்லறை வியாபார நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், சில நபர்கள் திடீரென்று கடையினுள் நுழைந்து, விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, பொருட்களுக்குரிய பணத்தைச் செலுத்தாமல், கடையை விட்டு வெளியேறும் காட்சிகள்தான் அந்த வீடியோ காட்சிகள். அந்த கடையின் நிர்வாகத்தைக் கவனித்து வருபவர்கள் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள் அனைவரும் இச்சம்பவங்களை வேடிக்கை பார்ப்பவர்களாக இருப்பதையும் இந்த வீடியோ காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. இச்சம்பவங்கள் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நிகழ்ந்துள்ளன. அந்த வீடியோ காட்சிகள் வாசகர்களின் புரிதலுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முன்மொழிவு – 47:

சிறைத் தண்டனைக்குரிய குற்றங்களாக இதுநாள்வரை கருதி வந்த சில குற்றச் செயல்களைச் ‘சிறிய தவறுகள்’ என வகைப்படுத்தி, அம்மாதிரியான தவறுகளுக்குச் சிறைத் தண்டனை வழங்கத் தேவையில்லை என்பதை மையப்படுத்தி 2014-ம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 60 சதவீதம் வாக்குகள் பெற்று, வெற்றியடைந்த அந்த வாக்கெடுப்பின்படி, திறந்திருக்கும் கடையினுள் ஒரு நபர் நுழைந்து, 950 டாலர்கள் மதிப்புக்கும் குறைவான பொருட்களைப் பணம் கொடுக்காமல் எடுத்துச் சென்றால், அது சிறைத் தண்டனைக்குரிய குற்றம் ஆகாது. அப்படி ஒரு நபர் பொருட்களை எடுத்துச் சென்றால், அந்த கடையில் பணிபுரிபவர்களோ அல்லது பாதுகாப்பு அதிகாரிகளோ அந்த நபரைத் தடுத்து நிறுத்தி, அவரிடமிருந்த பொருட்களைப் பறிமுதல் செய்யக்கூடாது உள்ளிட்ட சில சட்ட திருத்தங்களை உள்ளடக்கியதுதான் முன்மொழிவு-47 ஆகும்.

விளைவுகள்:

கலிபோர்னியா மாகாண அரசு கொண்டு வந்த இந்த முன்மொழிவு 47-க்கு ஆதரவும், எதிர்ப்பும் வெளிப்பட்டன. சமுதாயத்தில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட இச்சட்ட திருத்தம் வழி வகுப்பதோடு, மாணவர்களிடையே ஒழுக்கமின்மையை ஊக்கப்படுத்தி, பள்ளிகளின் ஆரோக்கியமான சூழலைப் பாழ்படுத்திவிடும் என்றும் கலிபோர்னியா மாகாணத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தையும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பவர்கள் வெளிப்படுத்தினர்.

‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘தி லாஸ் ஏன்செல்ஸ் டைம்ஸ்’ உள்ளிட்ட சில செய்தியேடுகள் கலிபோர்னியா மாகாண அரசு கொண்டுவந்த இந்த சட்ட முன்மொழிவு 47-யை வரவேற்று, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்று குறிப்பிட்டு தலையங்கம் எழுதியுள்ளன.  இது தொடர்பாக ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகம் 2015-ம் ஆண்டின் இறுதியில் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில், மாகாண சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகளின் எண்ணிக்கை கணிசமான அளவிற்குக் குறைந்துள்ளது என்றும், அதன் விளைவாக ஓராண்டில் மாகாண அரசின் செலவில் 150 மில்லியன் டாலர்கள் குறைந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

அரசின் நிதி சேமிப்பு ஒரு பக்கம் இருக்க, சிறு சிறு தவறுகள் மீது போலீசார் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதின் மூலம், முக்கிய குற்றச் செயல்களான போதைப் பொருட்கள் நடமாட்டம், வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் வன்முறை போன்ற கொடுங்குற்றச் செயல்களில் செலுத்த வேண்டிய கவனம் குறைகிறது என்றும், முன்மொழிவு 47-ன் படி, போலீசார் கொடுங்குற்றச் செயல்களைத் தடுப்பதில் அதிகக் கவனம் செலுத்த முடியும் என்ற கருத்தும் பலரின் கவனத்தை ஈர்த்தது.

அதே சமயம், ‘முன்மொழிவு 47-யைப் பலர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்; இதனால், பல கடைகள் மூடக்கூடிய அபாய சூழலும் ஏற்படுகிறது’ என்று ஒரு சாரார் வெளிப்படுத்தும் கருத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. இம்மாதிரியான தவறுகள் நிகழாமல் இருக்க, கல்வி நிலையங்களின் பங்களிப்பு பெரிதும் துணைபுரியும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.

உணர்த்தும் பாடம்:

அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் சாதக, பாதகம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்த நடவடிக்கை ஏதேனும் விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்டதா? பெரும்பான்மையான மக்கள் அந்த நடவடிக்கையினால் பலனடைகின்றனரா?  அதனால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்து, மறைந்து போய்விடுமா? அந்த நடவடிக்கை நாட்டின் வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்குத் துணைபுரியுமா? போன்றவற்றைச் சிந்தித்துப் பார்த்தல், செல்ல வேண்டிய பாதை தெளிவாகப் புலப்படும்.

அரசின் மிகப்பெரிய நிர்வாக அமைப்பில் முக்கியமானது காவல்துறை. பொதுமக்கள் அனைவரும் ஏனைய அரசுதுறை அதிகாரிகளைக் காட்டிலும் காவல்துறை மீது மரியாதையுடன் பழகுவதற்குக் காரணம், வழக்கு பதிவு செய்து கைது செய்யும் அதிகாரம் காவல்துறையிடம் இருப்பதுதான்.

காவல்துறையின் முக்கிய செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும்? கொடுங்குற்றச் செயல்கள் நிகழாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது; நிகழ்ந்த கொடுங்குற்றச் சம்பவங்கள் மீது துரிதமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளுக்குக் காலதாமதமின்றி தண்டனை கிடைக்கும் வகையில் செயல்படுவது ஆகிய இரண்டும் காவல்துறையின் தலையான கடமைகளாகும்.

காவல்துறையின் செயல்பாடுகள்:

கொடுங்குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் எத்தனை பேர் தண்டனை அடைந்தனர் என்பதுதான் காவல்துறையின் செயல்திறனை மதிப்பீடு செய்யும் அளவுகோல். 

கொடுங்குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டு, அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் முறையாக சேகரித்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால், நீதிமன்ற விசாரணையின் முடிவில் அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டால், நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.

மாறாக, குற்றத்தை உறுதிப்படுத்த போதிய ஆதாரங்கள் இல்லை உள்ளிட்ட சில காரணங்களால் குற்றவாளிகள் நீதிமன்ற விசாரணையில் விடுதலையானால், சட்டம் ஒழுங்கு முறையாக இருக்காது என்பதில் ஐயமில்லை.

இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2019-ம் ஆண்டில் கொடுங்குற்ற வழக்குகளில் எத்தனை சதவீத வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் தண்டனையில் முடிவடைந்துள்ளன என்பது குறித்து பார்ப்போம்.

 • கவனக்குறைவான முறையில் வாகனம் ஓட்டிய காரணத்தல் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பான சாலை விபத்து வழக்குகளில் 27.7% வழக்குகள்தான் தண்டனையில் முடிவடைந்துள்ளன.
 • ஆள் கடத்தல் வழக்குகளில் 24.9% வழக்குகள்தான் தண்டனையில் முடிவடைந்துள்ளன.
 • பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 27.8% வழக்குகள்தான் தண்டனையில் முடிவடைந்துள்ளன.
 • போலி ஆவணம், மோசடி மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பொருளாதார குற்ற வழக்குகளில் 22.8% வழக்குகள்தான் தண்டனையில் முடிவடைந்துள்ளன.
 • வரதட்சணை கொடுமையின் விளைவாக நிகழ்ந்த இறப்புகள் தொடர்பான வழக்குகளில் 35.6% வழக்குகள்தான் தண்டனையில் முடிவடைந்துள்ளன.
 • பல்வேறு சமூக காரணங்களுக்காக நிகழ்ந்த கொலை வழக்குகளில்; 41.9% வழக்குகள்தான் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

கள நிலவரம்:

சமீப காலங்களில் காவல்துறையினர் வாகனச் சோதனைகளுக்கு அவர்களின் தினசரி பணியில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தகவல் ஒன்றின் அடிப்படையில் வாகனச் சோதனை நடத்துவது பலனளிக்கக் கூடியது. மாறாக, சிறு வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக நடத்தப்படும் வாகனச் சோதனைகள் எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்துகின்றன. வாகனச் சோதனை என்ற பெயரில் தினசரி செய்ய வேண்டிய பல முக்கிய பணிகளைக் காவல்துறையினர் புறந்தள்ளிவிடுகின்றனர்.

குற்றத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டுமானால், காவல்துறையினர் முதலில் கவனம் செலுத்த வேண்டியது குற்ற வழக்குகள் பதிவு செய்தல்; அவை மீது முறையாக புலன் விசாரணை செய்தல்; நீதிமன்ற விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை நடத்துவது ஆகும். ஆனால், காலப்போக்கில், புலன்விசாரணையின் முக்கியத்துவம் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி வருகிறது. நீதிமன்றத்தில் தண்டனை பெறும் வழக்குகளின் சதவீதமும் கணிசமான அளவுக்குக் குறைந்து வருகிறது.

பாடம்:

கலிபோர்னியா மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவு – 47 காவல்துறைக்கு ஒரு கருத்தை உணர்த்துகிறது. கொடுங்குற்ற வழக்குகள் நிகழாமல் கண்காணிப்பதிலும், நிகழ்ந்த கொடுங்குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைக்கும் வகையில் புலன்விசாரணை மேற்கொள்வதிலும் காவல்துறை அதிக கவனம் செலுத்தினால், அதுவே சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதோடு, குற்ற நிகழ்வுகள் குறைய துணைபுரியும்.

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

6 thought on “கலிபோர்னியாவின் முன்மொழிவு – 47 உணர்த்துவது என்ன?”
 1. மிக ஆழமான கருத்துக்களுடன் கூடிய கட்டுரை. வாழ்த்துக்கள் சார்.

 2. வாகன சோதனையில் அதிக நேரம் செலவழிப்பது காலவிரையம் மட்டுமின்றி காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல இடங்களில் தேவையில்லாத வாக்குவாதங்களும் தொடர்ந்து இருபக்கங்களிலும் மன உளச்சலையும் உண்டு பண்ணுகிறது.
  ஆனால் நடப்பில் கடந்தமாதத்தைவிட இந்தமாதம் கூடுதல் வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் காவலர்களுக்கு அதிகரிக்கல்லவா செய்கிறது.பாவம் அவர்கள் என்ன செய்ய முடியும்.

 3. Sir,
  In current days, Daily morning, Evening & night vehicle check up and register MV petty case and lock down violation cases registered as specific target.

  Last year i think every dist / city registered approximately 40,000 lock down cases..
  during that time “Sathankulam Issue” was also happened.

  But now all the cases are withdraw by the govt.

  What is the use?

  Nothing.

 4. காலமாற்றத்திற்கேற்ப பல சீரமைப்பு நடவடிக்கைகளை கவனமாக எடுக்க வேண்டிய இடத்தில் நமது தேசம் இருக்கிறது என்று நம்புகிறேன் சார்

 5. மேலும் இந்த கலிபோர்னியா முன்மொழிவு என்பது தவறான ஒரு முன்னுதாரணமாகவே தோன்றுகிறது. எந்த ஒரு பலனும் உழைப்பின் பேரில் கிடைக்கப்பெறவேண்டும் என்ற வழக்கம் நம்மிடையே நேர்மை சார்ந்ததாக நிலையுற்றுள்ளது. எவ்வளவு சிரமமான சூழலிலும் பிறர் பொருளை நாடக்கூடாது என்பது நம்மிடையே தொன்று தொட்டு நிலவி வரும் கலாச்சாரமாகவே உள்ளது. இந்த கலிபோர்னியா முன்மொழிவு என்பது மிகவும் தவறான செயலாகவே தோன்றுகிறது சார்.

 6. அய்யா வணக்கம்
  காணொளியில் பார்க்கும்போது மிக கொடுமையாக உள்ளது.
  சிந்திக்க வேண்டிய கருத்துள்ள பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *