நம் நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் கூட, தங்கள் நலனுக்காகத்தான் காவல்துறை இயங்கி வருகிறது என்ற உணர்வை பொதுமக்களிடம் காண முடிவதில்லை. அதே போன்று, பொதுமக்களின் நலன் காப்பதுதான் தங்களின் முக்கிய கடமை என்ற உணர்வும் காவல்துறையில் சில நேரங்களில் வெளிப்படுவதில்லை.
குற்ற நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஒருவர் நியாயம் தேடி, புகார் மனுவுடன் காவல்நிலையம் செல்லும் போது, அங்கு அவர் நடத்தப்படும் விதமும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் பல சமயங்;களில் புகார் கொடுக்க வந்தவரை நிலைகுலையச் செய்துவிடுகின்றன. உண்மையான குற்ற நிகழ்வு தொடர்பான புகார் மீது கூட உடனடியாக வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்காமல், புகாரைத் தட்டிக் கழிக்கும் மனநிலையுடன் காவல்துறை செயல்படுகிறது என்ற மனவருத்தம் பொதுமக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது.
அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளி போன்ற அரசு நிறுவனங்களில் திருப்திகரமான சேவை கிடைக்காவிட்டால், தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிகளை பொதுமக்கள் அணுகி, தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும். ஆனால், குற்ற நிகழ்;வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தை மட்டும்தான் அணுக முடியுமே தவிர, தனி நபர் யாரையும் அணுகி நிவாரணம் தேட முடியாது. அப்படி அணுகினால், நாடெங்கும் ‘கட்டப் பஞ்சாயத்து’ நிகழத் தொடங்கி, சட்டம் – ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டுவிடும்.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசு நிர்வாகத்தின் முகமாக பொதுமக்கள் பார்வையில் தென்படுவது காவல் நிலையங்கள். அவை செயல்படுகின்ற விதத்தின் அடிப்படையில்தான், அரசாங்கத்தை மக்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது, குற்ற நிகழ்வின் மீது வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்வது ஆகிய இரண்டும் காவல்துறையின் முக்கிய பணிகள். குறிப்பாக, ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அரசின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி, குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு காவல்துறையைச் சேர்ந்தது.
குற்றவாளிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்து, குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் பொறுப்புடைய காவல்துறையினர், சமூகத்தில் நிகழும் அனைத்து குற்ற நிகழ்வுகள் மீதும் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்கின்றனரா? உண்மையான குற்ற நிகழ்வுகள் குறித்து காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் புறக்கணிக்கப்படுகின்றனவா? தமிழ்நாட்டின் கள நிலவரம் என்ன?
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தின் மக்கள் தொகை 3.5 கோடி. தமிழகத்தின் மக்கள் தொகை 7.85 கோடி. கேரளத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமான மக்கள் தொகையைக் கொண்டது தமிழகம். இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் படி தமிழ்நாட்டில் 1,68,116 வழக்குகளும், கேரளத்தில் 1,75,810 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்திலும், அதைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தமிழகத்திலும் 2019-ம் ஆண்டில் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக இருப்பதாக அப்புள்ளிவிவரம் கூறுகிறது. இவ்விரு மாநிலங்களிலும் 2019-ம் ஆண்டில் நிகழ்ந்த குற்றங்களின் எண்ணிக்கை சமமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலையும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரமே தெளிவுபடுத்துகிறது.
2019-ம் ஆண்டில் கேரள மாநிலத்தில் 323 கொலை சம்பவங்களும், தமிழ் நாட்டில் 1,745 கொலை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அதே ஆண்டில் கேரளத்தில் 729 கொலை முயற்சி சம்பவங்களும், தமிழ் நாட்டில் 2,478 கொலை முயற்சி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கேரளத்தில் 18,910 காயம்பட்ட வழக்குகளும், தமிழ்நாட்டில் 39,050 காயமடைந்த வழக்குகளும் பதிவாகியுள்ளன. மனித உயிரைப் பறித்த 3,476 சாலை விபத்துகள் கேரளத்திலும், 10,259 சாலை விபத்துகள் தமிழ் நாட்டிலும் 2019-இல் நிகழ்ந்துள்ளன.
கேரளத்தைக் காட்டிலும் இரு மடங்கிற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில், கேரளத்தைக் காட்டிலும் ஐந்து மடங்கிற்கும் அதிகமான கொலை சம்பவங்களும், மூன்று மடங்கிற்கும் அதிகமான கொலை முயற்சி சம்பவங்களும், இரண்டு மடங்கிற்கும் அதிகமான காயம் ஏற்படுத்திய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. உயிரைப் பறித்த சாலை விபத்துகள் கேரளத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளன.
இந்த புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன? கேரளம் – தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மொத்த குற்றங்களின் எண்ணிக்கை சமமாக இருக்காது என்பதும், தமிழ்நாட்டில் நிகழ்ந்த பல குற்ற நிகழ்வுகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாத காரணத்தால்தான், இவ்விரு மாநிலங்களிலும் பதிவு செய்யப்பட்ட மொத்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கை சமமாக உள்ளது என்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
பொதுமக்களை நிலைகுலையச் செய்யும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மோசடி, சிறார்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் பல புகார்கள் மீது வழக்குகள் பதிவு செய்யாத நிலை உள்ளதுதான் தமிழ்நாட்டின் கள நிலவரம்.
காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீதான அணுகுமுறை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. சில நேரங்களில், புகார் தொடர்பான விவரங்களை வாய்மொழியாகக் கேட்டறிந்து, ‘நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று ஆறுதல் வார்த்தைகள் கூறி, புகார் கொடுத்தவரை அனுப்பி வைப்பது உண்டு. சில நேரங்களில் புகாரைப் பெற்றுக் கொண்டு, வழக்கு பதிவு செய்யாமல் மனு ரசீது கொடுத்து, புகார் கொடுத்தவரை திருப்திபடுத்துவதும் உண்டு.
ஒரு குற்ற சம்பவத்தால் தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, மன உளைச்சலைக் காட்டிலும், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளவில்லையே என்ற வேதனையும், வழக்கு பதிவு செய்வதற்காக சிபாரிசு தேடி அலைய வேண்டியுள்ளதே என்ற மன வருத்தமும் குற்ற நிகழ்வால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஏற்படுகின்றன.
தினசரி நிகழும் அனைத்து குற்ற சம்பவங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்தால், போலீஸாரின் வேலைப் பளு அதிகமாகும். புலன் விசாரணை மேற்கொள்ள அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் தேவைப்படுவார்கள். இவையெல்லாம் உண்மையே. ஆயினும், இவற்றைத் தாண்டி, வழக்குகள் பதிவு செய்யாமல் புகார்களைப் புறக்கணிப்பதற்கு ஓர் அரசியல் பின்னணி உள்ளது.
அனைத்து குற்ற நிகழ்வுகள் மீதும் வழக்குகள் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் நிலையங்களுக்கு அறிவுரைகள் கொடுப்பது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்றில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அனைத்து குற்ற நிகழ்வுகள் மீதும் வழக்கு பதிவு செய்யத் தொடங்கினால், ஓராண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் பதிவாகும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்ந்துவிடும். அதைத் தொடர்ந்து, ‘குற்றங்கள் பெருகிவிட்டன’, ‘குற்றங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டது’ என்று பொதுவெளியில் எழும் குற்றச்சாட்டுகளை காவல்துறை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அதுமட்டுமின்றி, ‘மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. அதனால்தான் குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று அரசின் மீது எதிர்கட்சியினர் குற்றம் சுமத்துவார்கள். இதற்கு இடம் கொடுக்க மாநில அரசு விரும்பாது’ என்று உயரதிகாரிகளில் சிலர் அக்கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர். தெளிவான முடிவு எதுவும் அக்கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.
குற்ற வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்துவிடாமல் இருக்க, உண்மையில் நிகழ்ந்த குற்ற சம்பவங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யாமல் இருப்பது, குற்றங்கள் தொடர்ந்து நிகழ காரணமாக இருப்பதோடு, காவல்துறை நிர்வாகத்தில் கையூட்டு அதிகரிக்கவும் காரணமாக அமைந்துவிடுகிறது.
குற்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியான நீதி கிடைப்பதற்கும், குற்றவாளிகள் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிச் சென்றுவிடாமல் கண்காணிப்பதற்கும் அனைத்து குற்ற நிகழ்வுகள் மீதும் தயக்கமின்றி உடனடியாக வழக்குகள் பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழ்நாடு காவல்துறை எடுப்பதற்கு மாநில அரசின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
***
அய்யா வணக்கம்
மிக அருமையான பதிவு புள்ளி விபரங்களோடு இருந்தது புரிந்துகொள்ள முடிந்தது.
செந்தில் முருகன்
சமூக ஆர்வலர்
ஆளும் அரசின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு செயல்படும் சூழல் களையப் படவேண்டும். மேலும் உயரதிகாரிகள் வழக்குப் பதிவை தீவிரமாக செயல்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம் என்று நம்புகிறேன் சார்.