மேம்படுத்தப்பட வேண்டிய புலனாய்வுத்துறை!

கிராமிய வாழ்வியல் முறையில் இருந்து நகரிய வாழ்க்கை முறைக்கு மாறிய சமூகத்தில் குற்றங்கள் பெருகத் தொடங்கின. பொருள் ஈட்டுவதுதான் வாழ்;வின் முக்கிய இலக்கு என்றும், அதை அடைய எச்செயலையும் செய்யலாம் என்ற மனநிலையும் சமூகத்தில் பரவத் தொடங்கின. குற்றம் புரிவது இழிவான செயல் என்ற உணர்வு சமுதாயத்தில் மெல்ல மெல்ல மறைந்து வருவதும், செய்த குற்ற செயலுக்கான சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் சமுதாயத்தில் அதிகரித்து வருகின்றன.

கொடுங்குற்றச் செயல் புரிந்தவருக்கு சட்ட ரீதியான தண்டனை கிடைக்க வேண்டுமென, சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு காத்திருப்பது பல நேரங்களில் ஏமாற்றத்தை அளித்துவிடுகிறது. இந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாதவர்கள் பழிக்குப் பழி வாங்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.

பழி தீர்க்கப்படும் வரை ஆண்கள் தாடி வளர்ப்பதும், கணவனைப் பறிகொடுத்த பெண்கள் தாலியை நீக்காமல் இருப்பதும் சங்கிலித் தொடராக நிகழும் கொடுங்குற்ற நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்றன. பழிக்குப் பழி என்ற உணர்வைக் கூலிப்படைகள் தூபம் போட்டு வளர்க்கின்றன.

அமைதியான சமூக சூழலைப் பெரிதும் பாதிக்கின்ற கொடுங்குற்ற நிகழ்வுகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்ற விசாரணையில் தண்டனை பெறுகின்றனரா?  தமிழ்நாட்டின் கள நிலவரம் என்ன?

நீதிமன்றங்கள் விசாரணை மேற்கொண்டு, தீர்ப்பு வழங்கிய கொலை வழக்குகளில் 2010-ஆம் ஆண்டில் 35.9% வழக்குகளும், 2019-ஆம் ஆண்டில் 29% வழக்குகளும் தண்டனையில் முடிவடைந்துள்ளன. 2011-ஆம் ஆண்டில் நீதிமன்ற விசாரணையில் 29.7% கொலை முயற்சி வழக்ககள் தண்டனையில் முடிவடைந்துள்ளன. தண்டனையில் முடிவடையும் கொலை முயற்சி வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, 2019-ஆம் ஆண்டில் 12.1% கொலை முயற்சி வழக்குகள்தான் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

பொது இடங்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் மீதான வழக்குகளில் 57% வழக்குகள் 2011-ஆம் தண்டனையில் முடிவடைந்துள்ளன. ஆனால், 2019-ஆம் ஆண்டில் 7.1% வழக்குகள்தான் தண்டனையில் முடிவடைந்துள்ளன.

குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக ‘போக்ஸோ’ சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீது நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் 25.4% வழக்குகள்தான் 2019-ஆம் ஆண்டில் தண்டனையில் முடிவடைந்துள்ளன. நான்கில் மூன்று போக்ஸோ சட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்ற விசாரணையில் தண்டனை எதுவுமின்றி விடுதலை அடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக ‘சைபர் குற்றங்கள்’ அதிக அளவில் நிகழ்கின்றன. இக்குற்றங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப் பிரிவுகள் இயங்கி வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை பல மடங்குகள் அதிகரித்துள்ளன.

2018, 2019, 2020-ஆம் ஆண்டுகளில் முறையே 295, 385, 782 சைபர் குற்ற வழக்குகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன. ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில் நீதிமன்றங்களில் தண்டனையில் முடிவடைந்த சைபர் குற்ற வழக்குகளின் மொத்த எண்ணிக்கை முறையே 11, 8, 7 ஆகும்.

நீதிமன்ற விசாரணையில் தண்டனையில் முடிவடையும் கொடுங்குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கணிசமான அளவிற்கு குறைந்து வருவதைப் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. கொடுங்குற்றம் புரிந்த குற்றவாளி நீதிமன்ற விசாரணையில் விடுதலையடைவது, அக்குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல அக்குற்றவாளி தொடர்ந்து கொடுங்குற்றங்கள் புரிய வழங்கப்பட்ட அனுமதியாகவே அது அமைந்து விடுகிறது.

ஒரு மருத்துவமனையில் நடைபெறும் பத்து அறுவை சிகிச்சைகளில் மூன்று வெற்றியில் முடிவடைந்து, மீதமுள்ள ஏழு அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்து, நோயாளிகள் உயிரிழக்க நேர்ந்தால், அந்த மருத்துவமனை பொதுமக்களிடையே மதிப்பிழந்து, மக்களால் புறக்கணிக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடும்.

ஆனால், காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு, ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த 10 கொலை வழக்குகளில் ஏழு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் விடுதலை அடைந்த பின்னரும், கொடுங்குற்றச் செயல்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் சட்ட ரீதியான நடவடிக்கை கேட்டு காவல் நிலையங்களைத்தான் அணுக வேண்டியுள்ளது.

கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் விடுதலை அடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தரம் குறைந்த புலன் விசாரணை.  குற்றவாளிகளைக் கைது செய்வதில் புலன் விசாரணை அதிகாரிகள் வெளிப்படுத்தும் ஆர்வத்தை, சாட்சியங்களைத் திரட்டுவதில் காட்டுவதில்லை. சாட்சிகளின் வாக்குமூலங்கள் தயாரிக்கும் பொறுப்பை பல நேரங்களில் வேறு ஒரு நபரிடம் புலன் விசாரணை அதிகாரிகள் ஒப்படைக்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் விளைவாக, வழக்குக்கு முரணான கருத்துகள் சாட்சியங்களில் இடம் பெற்று விடுகின்றன.

காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் கொடுங்குற்ற வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணையில் ஆர்வம் காட்டுவதும் குறைந்து வருகின்ற நிலையைக் காணமுடிகிறது. இதை குற்றவாளிகள் தரப்பினர் பயன்படுத்திக் கொண்டு, முக்கிய சாட்சிகளை விலைக்கு வாங்குவதும், விலைக்கு வாங்க முடியாத சாட்சிகளை மிரட்டி, பணிய வைப்பதும் வெளிப்படையாக நிகழ்கின்றன.

நீதிமன்ற விசாரணையில் ஏற்படும் காலதாமதமும் பல கொடுங்குற்ற வழக்குகள் விடுதலையடைய காரணமாக அமைந்துவிடுகிறது. ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, பல கொலை வழக்குகள் நீதிமன்ற விசாரணை முடிவு பெறாமல் தேங்கிக் கிடக்கின்றன. மேலை நாடுகளின் நிலவரம் என்ன?

சிறையில் இருக்கும் குற்றவாளிகள் மீதான விசாரணையை அமெரிக்க நீதிமன்றங்கள் விரைந்து முடித்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்புகள் வழங்குகின்றன. பிணையில் இருக்கும் குற்றவாளிகள் மீதான நீதிமன்ற விசாரணை ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படுகின்றன. நீதிமன்ற விசாரணை எட்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறை அமெரிக்காவில் பின்பற்றப்படுகிறது.

விலை கொடுத்து வாங்கிய பொருளின் தரம் குறைவாக இருந்தால், தரம் குறைந்த பொருளை விற்பனை செய்தவர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இழப்பீடு பெற முடியும். ஆனால், கொலை குற்றம் புரிந்த குற்றவாளி மீதான வழக்கு நீதிமன்றத்தில் விடுதலையானால், அக்குற்றச் செயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலை என்ன? நீதிமன்ற தீர்ப்பை மௌனமாக அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிக அளவில் நடைபெறும் மாவட்டம் ஒன்றில் 2016 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 298 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஐந்து ஆண்டுகளில் 37 கொலை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் தண்டனை அடைந்துள்ளன. 68 கொலை வழக்குகள் விடுதலையில் முடிவடைந்துள்ளன.

விடுதலையடைந்த கொலை வழக்குகள் எதிலும் விடுதலையை எதிர்த்து காவல்துறை மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், தண்டனையில் முடிவடைந்த 37 கொலை வழக்குகளில் தண்டனையை எதிர்த்து 17 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த கள நிலவரத்தைப் பார்க்கும்போது, கொலைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதில் காவல்துறைக்குத் தயக்கம் உள்ளதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

கொலை வழக்கு உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் புலன் விசாரணையின் தரம் குறைந்து வருவதும், நீதிமன்ற விசாரணையில் புலனாய்வு அதிகாரிகளின் பங்களிப்பு குறைந்து வருவதும் அதிக எண்ணிக்கையிலான கொடுங்குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் விடுதலை அடைவதற்கான காரணங்களில் முக்கியமானவை.

தொழில் நுட்பம் வளர்ந்து வருகின்ற இன்றைய சூழலில், குற்றவாளிகள் தடயங்களை மறைத்து, குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. குற்றவாளிகளின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் புலனாய்வு அதிகாரிகளும் மேலைநாடுகளைப் போன்று கொடுங்குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதற்கு உயர்ரக அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கு உதவும் வகையில் தடய அறிவியல் துறை விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இளம் காவல் அதிகாரிகளின் புலனாய்வுத் திறனை மேம்படுத்தத் தேவையான பயிற்சியளிப்பதும், புலன் விசாரணையின் போது சட்ட ரீதியாக வழிகாட்டும் சட்ட வல்லுநர்கள் மாவட்ட காவல்துறையில் இடம் பெறச் செய்வதும் புலனாய்வின் தரத்தை உயர்த்தும்.

தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவைகளை உள்ளடக்கிய சமூக வளர்ச்சிக்கு குற்ற நிகழ்வுகளை முனைப்புடன் கண்காணித்து, கட்டுப்படுத்தும் புலனாய்வு திறன் வாய்ந்த காவல்துறை அவசியமானது.  அதுவே, மாநில அரசு தன் இலக்கை அடையப் பெரிதும் துணைபுரியும்.

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

22.07.2021 தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை இது.

Previous post ஆப்பு அசைத்த அதிகாரிகள்!
Next post கைதும்… கவலையும்!

3 thoughts on “மேம்படுத்தப்பட வேண்டிய புலனாய்வுத்துறை!

  1. இந்த கட்டுரை தமிழக காவல் துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
    நேர்மையான திறமையான புலனாய்வு அதிகாரிகள் மூலம் பயிற்சி கொடுத்து வருங்கால காவல்துறையை கட்டமைத்தால் உலக புலனாய்வு அமைப்புகளும் நமது காவல்துறையை உற்று நோக்கும் காலம் விரைவில் வரும்.
    குற்ற நிகழ்வு விகிதம் பெரிதும் குறைந்து விடும்.
    கொடுங் குற்ற வழக்குகளை அங்குலம் அங்குலமாக கண்காணிப்பது தமிழக காவல் துறை வரலாற்றில் மிகப் பெரும் சாதனையை ஏற்படுத்தும்.

  2. வழக்குகள் விடுதலை ஆக பல காரணங்கள் இருந்தாலும் பல அதிகாரிகளின் புலனாய்வு திறன் மிகவும் மோசமாக உள்ளது. அசட்டையான போக்கு மிகவும் அதிகமாக உள்ளது. புலன் விசாரணை முடிந்து நீதிமன்ற விசாரணைக்கு போய் விட்டால் போதும் என்ற நிலையே பெரிதும் நிலவி வருகிறது. நிச்சயமாக காவல்துறை திருத்தி அமைக்கப்படவேண்டும் சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *