கைதும்… கவலையும்!

1996-ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நாள்.

சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆக நான் பணியாற்றிய போது, விருதுநகர் மாவட்ட எஸ்.பி என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது மாவட்ட வழக்கு ஒன்றின் புலன் விசாரணையில் என்னுடைய உதவியைக் கேட்டார். அந்த வழக்கு எவ்விதத்திலும் நான் பணி புரிந்துவந்த சிவகங்கை மாவட்டத்தோடு தொடர்பு இல்லாவிட்டாலும், ஏற்கெனவே நான் பணியாற்றிய ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி பகுதியைச் சார்ந்த சிலர் சம்பந்தப்பட்ட வழக்காக அது இருந்தது.

பேசித் தீர்க்கப்பட வேண்டிய சமுதாய பிரச்சினைகள் உட்பட எல்லா பிரச்சினைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது எதிர்ப்பைத் தெரியப்படுத்த அரசு பேருந்துகளைச் சேதப்படுத்துவது, தீயிட்டுக் கொளுத்துவது போன்ற வன்முறைச் சம்பவங்களை அதிக அளவில் நிகழ்த்திய காலகட்டம்.  அவ்வாறு நிகழ்த்தப்படும் வன்முறைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகாது என்பது தெரிந்திருந்தும், அம்மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடிக்கடி நிகழ்ந்து வந்தன.

அந்த வழக்கு குறித்த முழு விவரங்களையும் கேட்டறிந்த நான், ஒரு நாள் மாலைப் பொழுதில் பஸ் தீ வைப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளின் கிராமத்துக்குச் சென்றேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் டி.எஸ்.பி ஆக நான் பணியாற்றியதால், அவ்வு+ரின் முக்கிய பிரமுகர்களுடன் எனக்கு அறிமுகம் இருந்தது. அவர்களுடன் கலந்து பேசியபோது, இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில தகவல்கள் கிடைத்தன.

‘பஸ் தீ வைப்பு சம்பவம் நிகழ்ந்த கிராமத்து இளைஞர்களுக்கும், எங்கள் கிராம இளைஞர்களுக்கும் இடையே அரசியல் தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது. எங்கள் கிராம இளைஞர்கள் அங்கு சென்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக பஸ் தீ வைப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது’ என்று அந்த சம்பவம் குறித்து கிராமத் தலைவர் விவரித்தார்.  தொடர்ந்து பேசுகையில், பஸ் தீ வைப்பில் ஈடுபட்ட தங்கள் கிராமத்து இளைஞர்களின் பெயர்களையும் அவர் பட்டியலிட்டார்.

‘சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் புலன் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட எஸ்.பி சார்பாக எடுத்துக் கூறத்தான் நான் வந்துள்ளேன்’ என்று எனது வருகைக்கான காரணத்தை அவர்களிடம் விவரித்தேன்.

கிராம முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி, அவர்களுக்குள்ளே ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் என்னிடம் வந்து, ‘பஸ் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உங்களிடம் ஓரிரு நாட்களில் ஒப்படைக்கிறோம். ஆனால், நீங்கள் ஒரு வாக்குறுதியை எங்களுக்குக் கொடுக்க வேண்டும்’ என்றார் ஊர் தலைவர். ‘என்ன வாக்குறுதி வேண்டும்?’ என்றேன்.

‘தீ வைப்பு சம்பவத்தை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது. தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசாரிடம் ஒப்படைக்கும்போது, புலன் விசாரணை என்ற பெயரில் அவர்களை அடித்துத் துன்புறுத்தக் கூடாது’ என்ற நிபந்தனையை முன் வைத்தார்.

செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, புலன் விசாரணைக்காகப் போலீசாரிடம் ‘சரண்டர்’ ஆகும் குற்றவாளிகளைக் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் அடித்து துன்புறுத்துவதால் எந்தப் பலனும் இல்லை என்பதால், பஸ் தீ வைப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் புலன் விசாரணை என்ற பெயரில் போலீசார் அடிக்கமாட்டார்கள் என்ற வாக்குறுதியை விருதுநகர் மாவட்ட எஸ்.பி. சார்பாக அவர்களுக்குக் கொடுத்தேன். அதே சமயம், ‘தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை மட்டும்தான் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று நான் கூறிய நிபந்தனையையும் அந்த கிராமத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.

‘கிராமங்களில் இன்னும் நியாயம் செத்துவிடவில்லை!’ என்ற உணர்வோடு என் அலுவலகம் திரும்பினேன். பிறகு, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யைத் தொடர்பு கொண்டு, அந்த கிராமத்தில் நடத்திய பேச்சு வார்த்தையின் விவரத்தை அவரிடம் தெரியப்படுத்தினேன். நான் கொடுத்த வாக்குறுதியை விருதுநகர் மாவட்ட போலீசார் காப்பாற்றுவார்கள் என்று அந்த எஸ்.பி உறுதியளித்தார்.

பரபரப்பாகப் பேசப்பட்ட சிக்கலான வழக்கு ஒன்றுக்குத் தீர்வு காணப்பட்ட மனநிறைவோடு என்னுடைய தினசரி அலுவல்களில் கவனம் செலுத்தி வந்தேன். ஓரிரு வாரங்கள் உருண்டோடின. ஒரு நாள் பிற்பகலில் அந்த கிராமத் தலைவர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் என்னைச் சந்திக்க வந்தனர்.

அவர்கள் அனைவரையும் என் அலுவலக அறைக்குள் வரவழைத்தேன். உள்ளே நுழைந்ததும் பெண்கள் அனைவரும் கதறிக் கதறி அழத் தொடங்கினர். கிராமத் தலைவரும், மற்ற ஆண்களும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.

‘கிராமத்தில் ஏதாவது பிரச்சினையா?  பெண்கள் ஏன் அழுகிறார்கள்?’ என்று நான் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் அளிக்கவில்லை.

பெண்களில் அழுகை சிறிது நேரத்தில் ஓய்ந்ததும், பேசத் தொடங்கினார் கிராமத் தலைவர். ‘உங்களை நம்பித்தானே எங்கப் பிள்ளைகளை விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தோம். அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டீங்களே?’ என்று மெல்லிய குரலில் அவர்களின் வேதனையை வெளிப்படுத்தினார்.

‘தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட எங்க கிராமப் பிள்ளைகளைப் போலீசாரிடம் ஆஜர்படுத்தி விடுகிறோம். அவர்களை அடித்து துன்புறத்த வேண்டாம். வழக்கை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்று உங்களிடம் கோரிக்கை வைத்தது தப்பா?’ என்று கேட்டார் கிராமத் தலைவர்.

அந்தக் கேள்வி என் மனதில் முள்ளாகத் குத்தியது. ‘நான் எந்த தவறும் செய்யவில்லையே! கிராமத் தலைவர் இப்படி ஏன் பேசுகிறார்?’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் என் மனம் அலைமோதியது.

சிறிது இடைவெளிக்குப் பின், ‘போலீசார் எங்க பிள்ளைகளை அடித்திருந்தால் கூட, அதை நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால், இப்படி செய்துட்டாங்களே?’  என்று வருத்தத்தை வெளிப்படுத்தினார் மற்றொருவர்.

‘என்னதான் நடந்தது? வெளிப்படையாகச் சொல்லுங்கள்’ என்று நான் கோபப்பட்ட போதுதான் அவர்களின் வருத்தத்துக்கான காரணம் புரிந்தது.

பஸ் தீ வைப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட எல்லா குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துவிட்டனர் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குற்றவாளிகளின் உறவினர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் என்னிடம் முறையிட வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யை உடனடியாக நான் தொடர்பு கொண்ட போது, ‘உயர் அதிகாரிகளின் அறிவுரைப்படி அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது’ என்று சுருக்கமாகப் பேசி, உரையாடலை முடித்துக் கொண்டார்.

என்னிடம் முறையிட வந்த ஆண்களையும், பெண்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன். ஆனால், என் மனம் சமாதானம் ஆகவில்லை. அந்த மாவட்ட காவல்துறையின் செயல்பாட்டில் அரசியல் கலந்த சூழ்ச்சி இருந்ததைப் பின்னர் உணர்ந்தேன்.

பேச்சிலும், செயலிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதுதான் பொதுமக்களின் நம்பிக்கைக்கும், நன்மதிப்புக்கும் உரியதாக விளங்கும் என்ற எதார்த்த நிலையைக் காவல்துறை சில தருணங்களில் புரிந்து கொள்வதில்லை!

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

14.07.2019 தேதியிட்ட ராணி வார இதழில் வெளியான கட்டுரை.

Previous post மேம்படுத்தப்பட வேண்டிய புலனாய்வுத்துறை!
Next post லாட்டரிக்கு உலை

6 thoughts on “கைதும்… கவலையும்!

  1. இன்றை உலகம் இப்படிதான் உள்ளது.
    காரியம் நடக்கும் முன் ஒரு பேச்சு காரியம் முடிந்தபின் வேறு பேச்சு.

    கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மிகவும் குறைந்து விட்டது.

  2. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற பண்பு நடப்பில் மிகவும் குறைந்து விட்டதையும் , அவர்கள் காரியம் ஆக பிறறை நம்ப வைத்து பின் கண்டு கொள்ளாமல் விடுவதும் சாதாரணமாகிவிட்டதயும் உணர்த்துகிறது.த

  3. தாங்கள் போன்ற நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு இது போன்ற சம்பவங்கள் நேர்மை அற்ற அதிகாரிகளால் நடப்பது என்பது தற்போது மிகவும் அதிகரித்து விட்டது.
    இந்த நிலை எப்போது மாறும் என்று தெரிய வில்லை.

  4. அய்யா வணக்கம்
    மிக அருமை தாங்கள் மிக சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்
    உங்கள் போன்றவர்கள் வர வேண்டும் அப்பொழுது நேர்மையாக இருக்கும் நிர்வாகம்.

  5. காவல்துறையினர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. இது தான் இன்றும் காவல்துறை சிறப்பாக செயல்படுவதன் அடிப்படை காரணங்களுள் ஒன்று.
    இந்த சம்பவம் போன்ற விஷயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. அதுவும் மற்றொரு அதிகாரியின் உதவியைப் பெற்றுக் கொண்டு கொடுத்த வாக்கை மீறுவது ஏற்புடையது அல்ல. இது போன்ற செயல்கள் காவல்துறையினர் மீதான நம்பகத்தன்மையை போக்கடிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *