1930-களின் பிற்பகுதியில் ஒருநாள் காலை நேரம். அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாநிலம் பிரின்ஸ்டன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் அறிஞர் ஒருவரின் வீட்டு வரவேற்பு அறை வழக்கம் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

புல நாடுகளைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் அவர்களது குழந்தைகளுடன் வந்து, அந்த அறிஞரைப் பார்த்து ஆசி பெற்றுச் செல்வதும் வழக்கமான நடைமுறை.

அன்றைய தினமும் அவரைச் சந்திக்க அனுமதிகேட்டு அவரது உதவியாளரிடம் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பலர் பதிவு செய்து கொண்டிருந்தனர். 25 வயது, 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் அவர்களின் பெயர்களைப் பதிவு செய்துவிட்டு, அந்த அறிஞரைச் சந்திப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். நேரம் கடந்து கொண்டிருந்தது.

‘அண்ணா, இன்று இவரைச் சந்திக்க முடியுமா?’ அவர்களில் ஒருவன் மற்றொருவனிடம் மெல்லிய குரலில் வினவினான்.

‘வீட்டில் இருக்கும் நாட்களில் காலை நேரத்தில் பார்வையாளர்களைத் தினசரி சந்திப்பது இவரது வழக்கம் என்று பலர் கூறக் கேட்டுள்ளேன். இன்னும் கொஞ்ச நேரம் காத்திருப்போம்’ என்று ஆறுதல் கூறினான் மற்றவன்.

வரவேற்பறையில் ஆவலோடு அனைவரும் எதிர்பார்த்திருந்த அந்த அறிஞர், அவரது அறைக்கு வந்தார். அவரைச் சந்திப்பதற்கான முறை வரும்வரை அந்த இரு சசோதரர்களும் காத்திருந்தனர். அவர்களுக்கான அழைப்பும் வந்தது; அறையினுள் நுழைந்தனர்.

எழுந்து நின்று வரவேற்ற அந்த அறிஞர், ‘நீங்கள் இருவரும் எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்?  உங்களைப் பற்றிக் கூறுங்கள்’ என்று கூறி அவர்கள் இருவரையும் அங்கிருந்த இருக்கையில் அமரச் சொன்னார்.

‘எங்களது பூர்வீகம் ஜெர்மனி. தற்பொழுது சுவிட்சர்லாந்தில் எங்கள் அம்மாவுடன் வசித்து வருகிறோம். எனக்கு 5 வயதாக இருக்கும் போது அப்பா எங்களைத் தனியாக விட்டுவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்’ என்று அவர்களது குடும்பம் பற்றிய விவரங்களைச் சுருக்கமாகக் கூறினான் அவர்களில் இளையவன்.

முகமலர்ச்சியுடன் கனிவாக அதுவரை பேசிக் கொண்டிருந்த அந்த அறிஞரின் முகம் சுருங்கியது. கண்களில் நீர் கசியத் தொடங்கியது.

‘சிறுவர்களாக நீங்கள் இருந்த போது உங்க அம்மாவுடன் எனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டிலிருந்து வெளியேறியதற்காக என் வருத்தத்தை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறி, அவர்கள் இருவரையும் வாஞ்சையுடன் கட்டித் தழுவினார் அந்த அறிஞர்.

‘நானும், உங்க அம்மாவும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சில பாடங்களில் உங்க அம்மா என்னை விட மிக அதிக மதிப்பெண்கள் எடுத்து, என்னையும் படிப்பில் ஊக்கப்படுத்தினாள். நீங்கள் இருவரும் பிறந்த பிறகும் கூட என்னுடைய ஆராய்ச்சிக்கு உங்க அம்மா எனக்குப் பெரிதும் துணையாக இருந்தாள். என்னுடைய ஆய்வுக் கட்டுரைகளின் சில பகுதிகளை அவள் கைப்பட எழுதியுள்ளாள். ஆனால், காலப்போக்கில் எங்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் உங்களிடமிருந்து பிரிய நேரிட்டுவிட்டது’ என்று தன்னிலை விளக்கம் அளித்தார் அந்த அறிஞர்.

‘உங்களைச் சந்தித்த இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். இனிமேல் எந்த சூழலிலும் உங்களை விட்டு பிரியமாட்டேன். உலக நாடுகள் போற்றும் அறிஞராக இருப்பதை விட உங்களுக்கு தந்தையாக இருப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன். நீங்கள் இருவரும் இனிமேல் என்னுடன் தங்கி, உங்களது வாழ்க்கையைத் தொடர வேண்டும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்யத் தயாராக உள்ளேன்’ என்று தன் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தினார் அந்த அறிஞர்.

‘பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அமெரிக்கா வரும் வாய்ப்பு கிடைக்கும் போது, உலகம் போற்றும் விஞ்ஞானியாகிய உங்களைச் சந்தித்துச் செல்வது போன்றுதான் நாங்களும் உங்களைச் சந்தித்து, ஆசி பெற்றுச் செல்ல வந்தோம். எங்கள் அப்பாவைச் சந்தித்து அவரிடம் உதவி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் வரவில்லை. உங்களைச் சந்தித்த இந்நாள் எங்களுக்கும் மறக்க முடியாத இனிய நாள். உங்களைச் சந்திக்க பார்வையாளர்கள் பலர் வெளியே காத்திருக்கின்றனர். எனவே, உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்கிறோம்’ என்று கூறி, அந்த இரு சகோதரர்களும் அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு வெளியேறினர்.

20-ம் நூற்றாண்டின் தலை சிறந்த அறிவியல் விஞ்ஞானியும், நோபல் பரிசு பெற்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இல்லத்தில் அவருக்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையே நிகழ்ந்த உள்ளத்தை உருக்கும் சந்திப்புதான் இந்த சம்பவம்.

1879-ம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால், அவருக்குக் கல்வி கற்பதில் குறைபாடு உள்ளது என அவரது பள்ளி ஆசிரியர்கள் கருதினர். இளம் ஐன்ஸ்டீனிடம் பொதிந்திருந்த அறிவாற்றலை ஆசிரியர்களால் உணர முடியவில்லை. ஆசிரியர்களின் கணிப்பைப் பொய்யாக்கிய ஐன்ஸ்டீன், 26-வயதில் முனைவர் பட்டம் பெற்றார்.

கண்ணுக்குப் புலப்படாத அணுவைப் பற்றியும், பரந்து விரிந்து காணப்படும் வின்வெளியைப் பற்றியும் ஆய்வு செய்த ஐன்ஸ்டீன், சிறப்பு சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார். இந்த சார்பியல் கோட்பாடு சில வினோதமான தத்துவங்களைப் புலப்படுத்தியது. ஒளியின் வேகத்தில் பயணிக்கும் ஒருவரின் கெடிகாரம் சாதாரணமாக இருக்கும் ஒருவரின் கெடிகாரத்தை விட மெதுவாகச் செல்லும் என்பதை சார்பியல் கோட்பாடு உணர்த்தியது. மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிடமுடியும் என்ற நிறைக்கும், ஆற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பை இவர் கண்டறிந்தார். இந்த நிறை – ஆற்றல் சமன்பாடுதான் அணுகுண்டு தயாரிப்புக்கான அடிப்படையாகும். ‘போட்டோ எலெக்டிரிக் எபெக்ட்’ எனப்படும் ஒளி மின் விளைவுகள் தொடர்பான இவரது கண்டுபிடிப்புக்காக 1921-ம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

ஜெர்மனியின் அதிபர் ஹிட்லர் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்ததினால், அமெரிக்கா வந்த ஐன்ஸ்டீன், அங்கேயே தங்கி தனது ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டார். அணுவின் சக்தியை உலகுக்கு உணர்த்திய இவர், இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவரது மனதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, வாழ்நாள் வரை அணு ஆயுதங்களுக்கு எதிரான தன் கருத்தை இவர் வலியுறுத்தி வந்தார். ‘துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன’ என்ற தனது அனுபவத்தை இளம் தலைமுறையினருக்கு இவர் உணர்த்தினார்.

தன் வாரிசுகளின் எதிர்கால வாழ்விற்காக பொருள் ஈட்டுவதில் தன் வாழ்நாட்களின் பெரும்பகுதியைக் கழிக்காமல், அரிய கண்டுபிடிப்புகளுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இந்த அறிஞரைப் பேற்றுவதா?  மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்துவரும் தந்தையின் பாசத்துடன் கூடிய உபசரிப்பையும், உதவியையும் பணிவுடன் ஏற்க மறுத்துவிட்டு, தங்களது திறமை மீது நம்பிக்கை கொண்டு எதிர்கால வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருந்த அந்த இளைஞர்களைப் போற்றுவதா? 

குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்காகப் பொருள் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், தங்களது நிகழ்கால வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கும், தங்களது வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருளைப் பெற்றோர்கள் தேடி வைக்கவில்லை என பெற்றோர்களைப் புறக்கணிக்கும் இளைஞர்களுக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் குடும்ப வாழ்க்கை நல்லதொரு படிப்பினை என்பதில் ஐயமில்லை.

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

18.04.2019 தேதிய தினத்தந்தி நாளிதழில் வெளியான கட்டுரை.

Previous post அரசு நிர்வாகத்தின் முகம் காவல்துறை!
Next post திடீர் தடியடி!

One thought on “சிந்திக்க வைத்த வாரிசுகள்…!

  1. அய்யா வணக்கம் அருமை
    கட்டுரை தன்னம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *