
அதிகாலை நேரத்தில் முகாம் அலுவலகத்தில் அன்றைய நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தினந்தோறும் காலை 7 மணிக்குப் பிறகு திருநெல்வேலி சரக தனிப்பிரிவு ஆய்வாளர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வருவது வழக்கம். ஆனால், அன்றைய தினமோ பொழுது விடியும் முன்னரே திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளரின் தொலைபேசி அழைப்பு வந்தது.
‘சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் கொலை ஏதாவது நடந்துள்ளதா?’
‘கொலை எதுவும் நடக்கவில்லை சார். ஆனால், சாலை மறியல் நடந்து கொண்டிருக்கிறது’
‘எதுக்காக… எங்கே சாலை மறியல்?’
‘சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் சுமார் 5 கி.மீ தொலைவில் (ஒரு கிராமத்தின் பெயரைக் குறிப்பிட்டு) சாலைமறியல் அதிகாலையில் இருந்தே நடந்துகொண்டிருக்கிறது சார். ரோட்டின் ஓரத்திலுள்ள சமுதாயத் தலைவரின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.’
‘எவ்வளவு பேர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள்?’
‘ஆண்களும், பெண்களுமாக சுமார் 50 பேர் ரோட்டில் உட்கார்ந்துள்ளனர். அந்த தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.’
‘சிலையை உடைத்தவர்கள் யார் என்று தெரியுமா?’
‘இதுவரை தகவல் எதுவும் இல்லை சார்.’
‘அந்த சிலைக்குப் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்படவில்லையா?’
‘அமைக்கப்பட்டுள்ளது சார்!’
‘சம்பவ இடத்தில் பந்தோபஸ்து போடப்பட்டுள்ளதா?’
‘சங்கரன்கோவில் டி.எஸ்.பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியி;ல் உள்ளனர்’ என்று அதுவரை அவருக்குக் கிடைத்த தகவல்களைத் தெரியப்படுத்தினார் தனிப்பிரிவு ஆய்வாளர்.
கடந்த காலங்களில் சிலை உடைப்பு சம்பவங்கள் தென்மாவட்டங்களில் ஏற்படுத்திய விபரீத விளைவுகளை நினைவுபடுத்தியது அந்தத் தகவல். இரு வேறு சமுதாய மக்களுக்கிடையே ஏற்படும் சிறு சிறு சலசலப்பு கூட தலைவர்களின் சிலைகளுக்கு அவமதிப்பையும், சேதத்தையும் ஏற்படுத்தி, அசம்பாவிதங்களுக்கு வழி வகுத்துவிடும் சம்பவங்கள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளன.
அந்த மாதிரியான சம்பவம் நடத்தால், காதும் காதும் வைத்தது போல் உள்ளுர் போலீசாரே சிலையைச் சரி செய்துவிடுவதும் உண்டு. சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களைச் சரியாகக் கையாளாததால், அது சாதி மோதல்களாக உருவெடுத்ததும், அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் கொலைகள், வீடுகள் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைத்தல் என சட்டம்-ஒழுங்கைப் பெருமளவில் சீர்குலைத்த அசம்பாவிதங்கள் நிகழ்ந்த சம்பவங்கள் என் நினைவுக்கு வந்தன.
முதலமைச்சர் தலைமையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில், சாலை ஓரங்களில் நிறுவப்பட்டிருக்கும் சமுதாயத் தலைவர்களின் சிலை உடைப்பு சம்பவங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அம்மாதிரியான அசம்பாவிதங்களை எதிர்காலங்களில் தவிர்ப்பதற்காக அத்தகைய சிலைகளுக்குப் பாதுகாப்பு கூண்டுகள் அமைத்து, அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பை அந்தந்த கிராமத்தைச் சார்ந்த சிலை பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைத்துவிடுவது என முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தென்மாவட்டங்களில் பல சிலைகளுக்குப் பாதுகாப்பு கூண்டுகள் அமைக்கப்பட்டன.
சாலை மறியல் நடைபெற்று வந்த இடத்தின் கள நிலவரத்தை அறிய, அங்கு பணியில் இருந்த டி.எஸ்.பி.யைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுது, ‘சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டதும் பக்கத்து கிராம மக்களும் இங்கு வந்து மறியலில் ஈடுபடுகின்றனர். அதனால், சாலை மறியலில் பங்கெடுத்து வருபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது’ என்றார் அவர்.
‘அவர்களின் கோரிக்கை என்ன?’
‘சிலையை உடைத்தவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோஷமிடுகின்றனர்.’
‘சிலையை யார் உடைத்திருப்பார்கள்?’
‘யார் என்று இதுவரை தெரியவில்லை சார்’
‘யாரைச் சந்தேகப்படுகிறார்கள்?’
‘அந்த கிராமத்துக்காரர்கள் வெளிப்படையாக யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை. ஆனால், வெளியூரில் இருந்து வந்து மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் பக்கத்து கிராமத்தில் வசித்து வரும் மாற்று சமுதாய இளைஞர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்’ என்றார் டி.எஸ்.பி.
அவரிடம் பேசியதில் இருந்து, இந்தப் பிரச்சினையைச் சரியான முறையில் கையாளாவிட்டால், அது சாதி மோதலுக்கான அடித்தளத்தை அமைத்துவிடும் எனத் தோன்றியது. இந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்குத் தீர்வு காண மாவட்ட எஸ்.பி.யை உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தேன். அதிரடிப்படையுடன் அவரும் அங்கு சென்றார். பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. சாலை மறியல் முடிவுக்கு வரவில்லை.
‘மறியல் நடக்கிற இடத்தின் சூழல் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிடுமோ?’ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. நானும் சம்பவ இடத்துக்குப் புறப்பட்டேன். அந்த பயணத்தின் நடுவே, மறியல் நடைபெறும் இடத்தில் இருந்த தனிப்பிரிவு தலைமைக் காவலரைத் தொடர்பு கொண்டபோது, ‘சிலையை யார் உடைத்தார்கள் என்பதற்கான துப்பு இன்னும் கிடைக்கவில்லை’ என்றார். அந்த கிராமத்தைச் சார்ந்த நபர் யாராவது அருகில் இருந்தால், அவரிடம் செல்போனைக் கொடுத்து, என்னிடம் பேச வைக்கும்படி கூறினேன். அங்;கிருந்த நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து, அவரை என்னிடம் பேச வைத்தார் தனிப்பிரிவு தலைமைக் காவலர்.
‘ஐயா, நான்தான் பேசுறேன்…’ என்று அவரது பெயரைக் குறிப்பிட்ட அந்த கிராமவாசி, எனக்கு அறிமுகமானவர் போல பேசினார். அவர்கள் கிராமப் பிரச்சினைக்காக ஒருமுறை என்னைச் சந்தித்த விவரங்களையும் குறிப்பிட்டார்.
‘சிலை யார் உடைத்திருப்பார்கள்?’ என்று அவரிடம் கேட்டதற்கு, ‘வேறு யாராக இருக்க முடியும் ஐயா?’ என்றவர், ‘நீங்க நேரில் வாங்க. பார்த்துக்கொள்ளலாம்!’ என புதிர் போட்டார். ‘யாரையாவது குற்றவாளியாக்க வேண்டும் என்று அவரோ அல்லது அக்கிராம மக்களோ முடிவு செய்திருப்பார்களோ?’ என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது.
மறியல் நடைபெறும் இடத்தை நெருங்கும்போது, நூற்றுக்கும் சற்று அதிகமானவர்கள் சாலையை மறித்து உட்கார்ந்திருப்பதும், போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. சுழலும் சிவப்பு விளக்கைக் கொண்ட நான் பயணித்த கார் மறியல் நடைபெறும் இடத்தை அடைந்தது. காரின் கதவைத் திறந்து கீழே இறங்கினேன். சற்றும் எதிர்பாராத விதத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக ‘லத்தி சார்ஜ்’ செய்யத் தொடங்கிவிட்டனர்.
இதுபோன்றுதான் பல நேரங்களில் பொதுமக்கள் மீது தடியடியும், துப்பாக்கி சூடும் அவசரகதியில் நடந்துவிடுகின்றன. இம்மாதிரியான செயல்பாடுகளுக்கான காரணங்கள் குறித்து இங்கு விரிவாக கூறாமல், மேற்கொண்டு அங்கு நடந்தது என்ன என்று பார்ப்போம்.
பத்து நிமிடங்களில் சாலை மறியல் முடிவுக்கு வந்தது. தடியடியில் காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதோடு, சாலை மறியலுக்குக் காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். ஆனால், சிலையை யார், எதற்காக உடைத்தார்கள் என்பது விடை தெரியாத புதிராகவே இருந்தது.
தொலைபேசியில் என்னிடம் பேசிய நபரும், போலீசாரின் தடியடிக்குப் பயந்து தலைமறைவானார். அவரைத் தேடி பிடித்து, மீண்டும் என்னுடன் பேச வைத்தார் அந்த தனிப்பிரிவு தலைமைக் காவலர்.
சம்பவத்தன்று இரவில் அந்த கிராமத்தைச் சார்ந்த சிலர் (பெயர் குறிப்பிட்டு) சிலை அருகில் அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு இடையேயான பேச்சு முற்றி, அவர்கள் நிதானத்தை இழந்ததாகவும், அவர்களில் ஒருவன்தான் சிலையைச் சேதப்படுத்தியதாகவும், அதில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற ஊர் மக்கள் மவுனமாக இருப்பதாகவும், அது தெரியாத பக்கத்து கிராம மக்கள் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கிவிட்டதாகவும் கூறினார்.
அந்த நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சிலை உடைத்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்து, நிகழ இருந்த சாதி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
குற்ற நிகழ்வு மட்டுமல்ல் குற்றம் குறித்து தெரிந்த தகவல்களை மறைப்பதும் சமுதாயத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதற்கு ஒரு சான்றாகும் இந்த சிலை உடைப்பு சம்பவம்.
***
Super Sir
இந்த பதிவு காவல் துறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய மிக அருமையான நுண்ணறிவு மற்றும் சட்ட ஒழுங்கை எப்படி கையாள்வது என்பது ஆகும்.
தாங்கள் நெல்லையில் SP மற்றும் DIG ஆக பணியாற்றும் போது ஜாதி மோதல்களை எப்படி திறம்பட கையாண்டீர்ககள் என்பதை நான் உட்பட நெல்லை மாவட்டம் மக்கள் அனைவரும் அறிந்ததே.
காவல் துறை என்பது கண்கள் போன்றது, விழிப்பு உணர்வு கொண்டு பணி ஆற்றினால் எவ்வித தவுறுகளும் நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.சட்டம் ஒழுங்கை திறம்பட சமாளிக்க முடியும்.
அதங்களின் பணி மகத்தானது சார
அய்யா வணக்கம்
சிறப்பாக நடைத்துக்கொண்டாதால் சிறிய தடியடியோடு.
அய்யா வணக்கம்
சிறப்பாக நடத்துக்கொண்டதால் சிறிய தடியடியோடு முடிந்தது
உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்வதால் பல தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடிகிறது. அதில் இதுவும் ஒன்று. அதுவும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இத்தகைய சரியான நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது.