காவல்துறை இயக்குநரின் நேர்முக உதவியாளர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘குழந்தையுடன் ஒரு பெண் டி.ஜி.பி.யைப் பார்த்து, குடும்பப் பிரச்சினை குறித்து மனு கொடுக்க வந்துள்ளார். அவரது மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, அந்தப் பெண்ணை உங்கள் அலுவலகம் அனுப்பி வைக்கிறேன்’ என்று கூறினார்.

வடக்கு மண்டல ஐ.ஜி ஆக அப்போது பணியாற்றி வந்த நான், அன்றைய தினம் காவல்நிலைய ஆய்வு ஒன்றுக்காக வெளியூர் சென்றிருந்தேன். வெளி அலுவல் முடித்து அலுவலகம் திரும்பியபோது, எனது வருகைக்காக அந்த மனுதாரர் மனவுடன் காத்திருந்தார். அவரிடம் இருந்து மனுவைப் பெற்றுக் கொண்டு, அவரது பிரச்சினை குறித்து விசாரித்தேன்.

சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகரத்துக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அந்த பெண்ணுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிகழ்ந்துள்ளது. அரசு பேருந்து ஒன்றில் நடத்துநராக வேலை பார்த்துவரும் கணவனுடன் புகுந்த வீட்டில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வந்த அவள், ஓர் ஆண் குழந்தைக்குத் தாயானாள்.

புகுந்த வீட்டாரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அடிக்கடி பெற்றோர் வீட்டுக்குப் படையெடுத்துச் செல்வதும், சில மாதங்களுக்குப் பிறகு புகுந்த வீட்டின் கோரிக்கைகளை அவளது பெற்றோர் நிறைவேற்றியதும், கணவனுடன் இணைந்து குடும்பம் நடத்துவதுமாக அவளது வாழக்கைப் பயணம் சென்று கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

புகுந்த வீட்டின் கோரிக்கைகளை அவளது பெற்றோரால் இனி நிறைவேற்ற முடியாது என்ற சூழல் ஏற்பட்டதும், அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறினாள் அந்தப் பெண். மகளிர் காவல் நிலையத்தில் மனு கொடுத்தால், போலீசார் விசாரணை செய்து, கணவனுடன் சுமூகமான வாழ்க்கை நடத்த வழி வகுத்துக் கொடுப்பார்கள் என்று அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் அவளுக்கு ஆலோசனை கூறியுள்ளார். அவரை அழைத்துச் சென்று மகளிர் காவல் நிலையத்தில் அவள் மனு n;காடுத்துள்ளாள். விசாரணையும் நடைபெற்றது. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.

டி.ஜி.பி.யை நேரில் பார்த்து மனு கொடுக்கலாம் என்று கல்லூரியில் படித்த அவளது தம்பி, அவளை அழைத்துக் n;காண்டு டி.ஜி.பி அலுவலகம் வந்தது வரை நிகழ்ந்த சம்பவங்களைக் கோர்வையாக அந்தப் பெண் கூறினாள். திருமண வாழ்க்கையில் அவள் சந்தித்துவரும் பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணம் அவளது பேச்சில் இ;ருந்து வெளிப்பட்டது. குடும்பப் பயணப் பாதையில் நெருடிவரும் முட்செடியை அகற்றினாலே, அவளின் வாழ்க்கை தடையின்றி தொடரும் என்பதை உணர முடிந்தது.

அவள் வசித்துவரும் பகுதிக்குப் பொறுப்ப வகிக்கும் டி.எஸ்.பி.யைத் தொலைபேசியில் அழைத்து, அப்பெண் கொடுத்த மனு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அவரிடம் விவரித்துக் கூறிவிட்டு, அந்தப் பெண்ணிடம், ‘உங்க பிரச்சினையை டி.எஸ்.பி நேரடியாக விசாரித்து தீர்த்துவைப்பார். நாளைக்கு அவரது அலுவலகம் சென்று, அவரைப் பாருங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு அப்பெண் போனில் என்னைத் தொடர்பு கொண்டு, ‘நீங்கள் சொன்னபடி தினசரி என் குழந்தையுடன் டி.எஸ்.பி ஆபீஸ் சென்று வருகிறேன். இதுவரை விசாரிக்கவில்லை. சீக்கிரமாக விசாரிக்கச் சொல்லுங்க சார்…’ என்று வேண்டுகோள் வைத்தாள்.

காவல்துறை பணியில் குறைந்த அனுபவம் கொண்ட அந்த இளம் டி.எஸ்.பி.யை மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘குடும்பப் பிரச்சினை என அந்த மனுவை உதாசீனப்படுத்த வேண்டாம். தனிக் கவனம் செலுத்தி விசாரணை செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தினேன். அதன் பிறகு அந்த பெண்ணிடம் இருந்து எந்தவித தகவலும் இல்லாததால், அவளது பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்று கருதினேன்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையைச் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள், அவர்களின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதும், முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா? என உயரதிகாரிகள் பரிசீலனை செய்வதும் வழக்கமான காவல்துறை நடைமுறை.

காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் அப்பெண் கொடுத்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டி.எஸ்.பி அனுப்பி வைத்த விசாரணை அறிக்கை எனது பரிசீலனைக்கு வந்தது. மனு கொடுத்த அந்த பெண்ணும், அவரது மாமியார் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களும் அவர்களது குடும்பப் பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் ஆகிவிட்டதால், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மனுதாரரான அந்தப் பெண் கையெழுத்திட்ட வாக்குமூலமும் அந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்தது.

அப்பெண்ணின் குடும்ப வாழ்க்கையை மீட்டுக் கொடுத்த போலீசாரின் பணியைப் பாராட்ட வேண்டும் என்று எண்ணினேன். அவர்களைப் பாராட்டுவதற்கு முன்னர், தற்போதைய வாழ்க்கை நிலை குறித்து அவளிடம் கேட்போம் எனக் கருதி, அவளது செல்போனைத் தொடர்பு கொண்டேன்.

‘சார், என் அக்கா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்’ என்றான் அவளது தம்பி. தொடர்ந்து பேசிய அவன், ‘ஒரு வாரத்துக்கு முன்பு விஷம் சாப்பிட்டுவிட்டாள். மூன்று நாட்கள் ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்டிருந்தாள்’ என்ற தகவலையும் தெரியப்படுத்தினான்.

‘அவள் ஏன் விஷம் சாப்பிட்டாள்?  அவளால் பேச முடியுமா?’  என்று நான் கேட்டதற்கு, செல்போனை அவளிடம் கொடுத்தான்.

சார், உங்களுக்குச் சிரமம் கொடுத்துவிட்டேன். முதலில் என்னை மன்னிக்கவும்’ என்றவள், கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தாள். பின்னர் பேசத் தொடங்கினாள்.

“திருமணத்துக்குப் பிறகு என்னுடைய குடும்பப் பிரச்சினைகளைச் சில வருஷங்கள் சமாளித்துப் பார்த்துவிட்டு, பின்னர் முடியவில்லை என்று என் அப்பா என்னைக் கைவிட்டுவிட்டார். பிறகு, நியாயம் தேடி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போனேன். நான் கொடுத்த மனுவைப் பெற்றுக் கொண்ட அவர்கள், விசாரணையைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

டி.ஜி.பி ஆபீசில் கொடுத்த மனுவை விசாரணைக்காக டி.எஸ்.பி.க்கு நீங்கள் அனுப்பி வைத்தீர்கள். நானும் தினந்தோறும் டி.எஸ்.பி ஆபீஸ் சென்று காத்திருந்தேன். விசாரணை நடைபெறவில்லை.

உங்களிடம் போனில் பேசி, விசாரணையைச் சீக்கிரம் நடத்துமாறு கேட்டுக் கொண்டேன். அடுத்த நாள் அந்த போலீஸ் அதிகாரி என்னைக் கூப்பிட்டார். ‘மேல் அதிகாரி மூலம் பிரஷர் கொடுத்தால், உன் மீது கேஸ் போட்டுவிடுவேன்’ என்றார். பிறகு, ஒரு வெள்ளைத்தாளில் என்னிடம் கையெடுத்து வாங்கிக்கொண்டு, என்னை அனுப்பி வைத்துவிட்டார். இனிமேல் யாரிடம் சென்று நான் முறையிட முடியும்?  என் தம்பிக்குப் பாரமாக இருக்க விரும்பாததால், இந்த முடிவை நான் எடுத்தேன்” என்று அதுவரை நிகழ்ந்த சம்பவங்களைக் கூறி முடித்தாள்.

அந்தப் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் வெளிப்பட்டதும், பாராட்ட வேண்டும் என்று நினைத்த போலீசார் மீதான மரியாதை மறைந்துவிட்டது. வெற்றுத்தாளில் மனுதாரரிடம் கையெழுத்து பெற்று, பின்னர் திருப்திகரமான முறையில் விசாரணை நடத்தப்பட்டது என போலீசாரே எழுதி, மனுவை முடிவுக்குக் கொண்டு வரும் தவறான அணுகுமுறையை அந்த இளம் போலீஸ் அதிகாரி பின்பற்றியது தெரியவந்தது.

நிகழ்ந்த தவறைச் சரி செய்ய, பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து, முறையான விசாரணை நடத்திட, அந்த மாவட்ட கூடுதல் எஸ்.பி.யை உடனடியாக அனுப்பி வைத்தேன். அவரும் அவரது கடமையைச் சிறப்பாகச் செய்து முடித்தார்.

ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியே சில நேரங்களில் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்த்திவிடும் சூழலை ஏற்படுத்திவிடுகிறது!  கடமையைச் செய்ய வேண்டியவர்கள் கடமை தவறுவதால் வருகின்ற வினைகள் இவை!!

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

18.08.2019 தேதியிட்ட ராணி வார இதழில் வெளியான கட்டுரை.

4 thought on “உதவி நாடிய தாய்! ஊசலாடிய உயிர்!!”
  1. இது போன்ற சம்பவங்கள் பலருக்கும் ஏற்படுகிறது.கீழ் நிலை அதிகாரிகளின் ஈகோ காரணமாக, நேரிடைாக மேல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கும் மக்கள் பலவாறு கஷ்டத்திற்கு உள் ஆகிரார்கள்.
    இந்த மாதிரி செயல் தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு காவலரும் புகார் கொடுக்கும் மக்கள் மீது நம்பிக்கை கொடுக்கும் வகையில் நடந்து துறையின் பெருமையை உணர்ந்து பணி ஆற்ற வேண்டும்.தாங்கள் கூறியது போல் ஒரு அதிகாரியின் தவறால் ஒரு பெண் தன் உயிரை விட நேர்ந்த செயல் போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

  2. மனு விசாரணையின் முக்கியத்துவத்தை பல காவல் அதிகாரிகளும் தற்போது உணர்ந்து இருக்கிறார்களா என்பது சந்தேகம் தான். பணிச்சுமை ஒரு தடையாக இருந்தாலும் மனு விசாரணைக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காத பட்சத்தில் பல குற்றங்கள் தவிர்க்க முடியாமல் போய்விடும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *