ஆப்பு அசைத்த அதிகாரிகள்!

2004-ம் ஆண்டில் ஒரு நாள்…

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு சுங்கத்துறை அதிகாரிகள், கொச்சியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு என்னைச் சந்திக்க வந்தனர். கேரள மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் இருந்து பெறப்படும் புகார்கள் குறித்து விசாரணையை மேற்கொள்ளும் அந்த சி.பி.ஐ பிரிவில் அப்போது நான் எஸ்.பி. ஆக பணியில் இருந்தேன்.

சி.பி.ஐ அலுவலக வரவேற்பறையில் அவர்களைச் சற்று நேரம் காத்திருக்கச் செய்துவிட்டு, என் அறையில் இருந்த கோப்புகளையும், இதர சாதனங்களையும் ஒழுங்கு செய்துவிட்டு, அவர்கள் இருவரையும் மேல்தளத்தில் அமைந்திருந்த என் அறைக்கு வரவழைத்தேன்.

‘சார், முன் அனுமதி பெறாமல் உங்களைச் சந்திக்க வந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தனது பேச்சைத் தொடங்கினார் அவர்களில் ஒருவர். தொடர்ந்து பேசிய அவர், ‘உங்களைச் சந்திக்க முன் அனுமதி கேட்டால் கொடுக்க மறுத்துவிடுவீர்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. நேரடியாக அலுவலகம் வந்தால், ஒருவேளை உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் வந்தோம். நேரில் சந்திக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சார்’ என்று மனதில் ஒத்திகைப் பார்த்து வந்த வாசகங்களை வேகமாகப் பேசி முடித்தார்.

அவர்கள் இருவரும் எதற்காக என்னைச் சந்திக்க வந்துள்ளனர் என்பதை யூகம் செய்து கொண்ட நான், ‘ஏதாவது புகார் மனு கொடுக்க வந்துள்ளீர்களா?’ என எதார்த்த வார்த்தைகளில் வினவினேன்.

‘புகார் மனு எதுவும் கொண்டு வரவில்லை. சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோடு விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளைச் சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகளிடம் இருந்தும், விமான தலைமையிடத்து சுங்கத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்தும் சில ஆவணங்களையும், கொஞ்சம் ரூபாய் நோட்டுகளையும் கைப்பற்றிச் சென்றுள்ளனர். அது குறித்து சில தகவல்களை உங்களிடம் தெரியப்படுத்தத்தான் வந்துள்ளோம்’ என்றார்கள்.

‘அந்தச் சோதனையின் போது சி.பி.ஐ அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகள் யாரிடமாவது தவறான முறையில் நடந்து கொண்டார்களா? ஆவணங்கள் கைப்பற்றும் போது நடுநிலை சாட்சிகள் யாரும் இல்லையா? அவர்கள் தயாரித்த மகஜரில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஏதேனும் குறிப்பிட்டுள்ளனரா?’ என்று அவர்களது மனநிலையை அறிந்து கொள்ள சில கேள்விகளைக் கேட்டேன்.

என்னுடைய நேரடி மேற்பார்வையில்தான் அந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது என்பதை அறியாத அந்த சுங்கத்துறை அதிகாரிகளில் ஒருவர், ‘அப்படி ஒன்றும் தவறான முறையில் சி.பி.ஐ அதிகாரிகள் செயல்படவில்லை. ஆனால், எந்த தப்பும் செய்யாத என் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கேள்விப்பட்டேன்’ என்று அவரது பயத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசுகையில், ‘பணி மாறுதலாகி விமான நிலையத் தலைமையிடத்து சுங்கத்துறை கண்காணிப்பாளராக நான் பதவியேற்று சில மாதங்கள்தான் ஆகியுள்ளன. நான் பொறுப்பு ஏற்கும்போது என்னிடம் பொறுப்பு ஒப்படைத்தவர் என்ன அறிவுரைகள் கொடுத்தாரோ அவற்றைத்தான் நான் செய்து வருகின்றேன்’ என்றார்.

‘அங்கிருந்து பணி மாறிச் சென்றவர் உங்களுக்கு என்ன அறிவுரைகள் வழங்கினார்?’ என்ற என் கேள்விக்கு, விமான நிலைய சுங்கத்துறையினரின் செயல்பாடுகள் குறித்து விவரித்துக் கூறத் தொடங்கினார் அவர்.

‘எங்கள் துறையைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும், நண்பர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுக்க விமானப் பயணிகள் கொண்டு வரும் பொருட்களில் சிலவற்றை அவர்களின் அனுமதியுடன் சுங்கத்துறையினர் எடுத்துக் கொள்வார்கள். விமான நிலையத்துக்குப் பல உயரதிகாரிகள் குடும்பத்துடன் வந்து செல்வார்கள். அவர்களை உபசரிப்பதற்காகவும், அலுவலக தினசரி செலவுக்காகவும் வெளிநாட்டுப் பயணிகளிடம் சொற்பத் தொகை வசூலிக்கப்படுவது வழக்கம்.  அன்றைய தினம் வசூலிக்கப்பட்ட தொகையையும், முந்தைய மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகை செலவழிக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டையும் சி.பி.ஐ அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுவிட்டனர்’ என்று தன் மனதில் அடக்கி வைத்திருந்ததைப் படபடவென கொட்டினார் அவர்.

‘அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து, நானும் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்வார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள். அதனால்தான் உங்களைச் சந்திக்க வந்தோம்’ என அந்தச் சந்திப்புக்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

அவரது பேச்சில், தனது தலைமையின் கீழ் பணிபுரிபவர்கள் மீது வழக்காகிவிட்டதே என்ற வருத்தத்தை விட, தன் மீது வழக்கு வந்துவிடக் கூடாது என்கிற ஆதங்கம் வெளிப்பட்டதை உணர முடிந்தது. என் அலுவலக அறையில் அவர் பேசிய உரையாடல்கள் அனைத்தும் பதிவாகியுள்ளதையும், அதுவே அவர் மீதான குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரம் என்பதையும் உணராமல், அவரின் செயல்பாடுகளை நியாயப்படுத்தினார்.

சுங்கச் சோதனையின் பொழுது பயணிகளிடம் இருந்து பொருளோ, பணமோ பெறுவது அதிகார அத்துமீறல் என்பதை மறந்துவிட்டு, தனக்கு முன்பு பணியாற்றியவரின் செயல்பாடுகள் சரியானதா என்று பார்க்காமல், அதே வழியைப் பின்பற்றினேன் என்று கூறிய வாதம் தவறானது என்பதை உணராத அந்த அதிகாரி, அது தொடர்பான சி.பி.ஐ வழக்கைச் சந்திக்க நேர்ந்தது.

தவறான பாதையில் பயணிப்பவர்களை முன் மாதிரியாக்கிக் கொண்டு, வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும் சூழலைத் தவிர்ப்பது அனைவருக்கும் நலம் பயக்கும்!

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

01.09.2019 தேதியிட்ட ராணி வார இதழில் வெளியான கட்டுரை.

Previous post உதவி நாடிய தாய்! ஊசலாடிய உயிர்!!
Next post மேம்படுத்தப்பட வேண்டிய புலனாய்வுத்துறை!

5 thoughts on “ஆப்பு அசைத்த அதிகாரிகள்!

  1. பொதுவாக ஊழல்வாதிகள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். தன்னுடைய குற்றத்தை மறைப்பதற்காக கையாளும் தந்திரமே இது.

  2. சுங்க துறையை சரி செய்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும்.

  3. சுங்க துறையையில் லஞ்சம் அனைவரும் பார்க்க நடக்கும் அநியாயம். சரி செய்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும்.

  4. அய்யா வணக்கம்
    லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க அனைவரும் நினைத்தால் உருவாக்கமுடியும்

    1. உயர் பதவிகளில் இருந்து தவறுகளை செய்து விட்டு அதை நியாயப் படுத்தவும் முயல்கிறார்கள். யாரிடம் போய் என்ன பேசுகிறோம் என்ற விவரத்தையும் இல்லை 😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *