சீர்திருத்தவா? சிறுமைப்படுத்தவா?

ஒருவர் குற்றமிழைத்தவர் என்பது நிரூபிக்கப்பட்டால், அவர் யாராக இருந்தாலும், நிகழ்ந்த குற்றம் அவரை அறியாமல் நிகழ்ந்திருந்தாலும் அல்லது விபத்தாக இருந்தாலும் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது பழங்கால சமூகத்தில் நிலவிவந்த நடைமுறை. அதில் தற்பொழுது மாற்றம் தென்படுகிறது. 

சுய நலனுக்காக சமூக நலனைப் புறந்தள்ளிவிட்டு, கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், பின்னர் தன்னைக் குற்றமற்றவர் என நிரூபிக்க முயற்சிகள் செய்வதுமான நிலையை நோக்கி இன்றைய சமூகம் பயணிக்கத் தொடங்கிவிட்டது. குற்றம் செய்ததற்காகச் சிறை செல்வது ‘சமூக களங்கம்’ என்று கருதிவந்த சமூகத்தின் பார்வையும் மாறிவருகிறது.

இந்தியா விடுதலை அடைந்த பின்னர், சிறைவாசிகளின் உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி, பொழுது போக்கு, உறவினர்கள் சந்திப்பு உள்ளிட்டவைகள் மேம்படத் தொடங்கின. மனித உரிமை மீறல்கள் பெருமளவில் சிறைகளில் தவிர்க்கப்படுகின்றன. விடுதலையாகும் சிறைவாசிகள் சமுதாயத்தில் இணைந்து பயணிக்கும் வகையில் தொழிற்கல்வியும், வாழ்வியல் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

சிறைவாசிகளின் எதிர்கால நலன் சார்ந்து மாநில அரசும், சிறைத்துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, சிறைவாசிகளில் ஒரு பகுதியினர் மற்றொரு உலகத்தில் சஞ்சரித்து வருகின்றனர். சமுதாயத்தில் நிகழும் சில கொடுங்குற்றங்களுக்கான சதித்திட்டங்கள் தீட்டப்படும் இடமாக சிறைச்சாலைகள் திகழ்கின்றன என்பது புலன் விசாரணையில் வெளிப்படுகின்றது.

சிறைவாசிகளுக்கு இடையே ஜாதி மோதல்கள் நிகழ்வதும், அம்மோதல்கள் சில சமயங்களில் கொலைகளாக மாறும் நிலையும் தொடர்கின்றன. அண்மையில் பாளையங்கோட்டை சிறையில் ஒரு சிறைவாசி கொலையான சம்பவம் சிறைவாசிகளின் மனப்போக்கை வெளிப்படுத்துகிறது. சிறைத்துறையின் கண்காணிப்பையும் மீறி, சிறை வளாகத்தினுள் தடை செய்யப்பட்ட பீடி, கஞ்சா போன்றவை ஏதோ ஒரு வகையில் கிடைக்கின்ற சூழல் பல இடங்களில் நிலவுகிறது.

தண்டனை அனுபவிக்கும் சிறைவாசிகளுக்கு தாம்பத்திய உறவுக்கு வாய்ப்பில்லாத காரணத்தால், மனதளவில் பாதிக்கப்படும் சிறைவாசிகளிடம் நல்லொழுக்கத்தை வளர்த்து, அவர்களைச் சீர்படுத்த முடிவதில்லை என்ற கருத்தைச் சிலர் பொதுவெளியிலும், நீதிமன்றங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு சிறைத்துறையின் கீழ் இயங்கிவரும் மத்திய சிறைச்சாலைகளில் ‘சிறைவாசிகளுக்கான தாம்பத்திய உரிமை’ குறித்த கருத்தாய்வு தற்பொழுது நடைபெற்று வருகிறது. சிறைவாசிகள் மட்டுமின்றி, சிறைத்துறையில் பணிபுரிபவர்களிடமும் இந்த கருத்தாய்வு நடைபெற்று வருகிறது.

தண்டனை அனுபவிக்கும் சிறைவாசியை அவரது வாழ்க்கைத் துணை சிறை வளாகத்தில் சந்தித்து, தாம்பத்திய உறவு கொள்ளும் முறையை ‘தாம்பத்திய வருகை’ (கான்ஜுகல் விசிட்) என்று குறிப்பிடுவார்கள்.

சிறைத்தண்டனை அனுபவிக்கும் சிறைவாசிகள் தாம்பத்திய உறவுகளில் ஈடுபடாமல் இருப்பதால் மனதளவில் பாதிக்கப்படுகிறார்களா? சிறைவாசிகள் தாம்பத்திய உறவுகளில் ஈடுபட அனுமதிப்பதால் ஏற்படும் பயன்கள் என்ன? இல்லற வாழ்க்கை உறவுகளுக்கென்று அறிமுகப்படுத்தப்படும் தாம்பத்திய வருகை திட்டத்திற்காக சிறைத்துறையின் கீழ் தனி வீடுகள் மற்றும் அறைகள் ஒதுக்கிக் கொடுக்கலாமா?  போன்ற கேள்விகள் இந்த கருத்தாய்வில் இடம் பெற்றுள்ளன.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு, தண்டனை அனுபவித்துவரும் சிறைவாசிகளிடம் ‘தாம்பத்திய வருகை’ குறித்து கருத்து கேட்டால், அவர்களிடம் இருந்து வெளிப்படும் கருத்து என்னவாக இருக்கும்?  பால் வேண்டாம் என்று கூறும் பூனையைப் பார்க்க முடியுமா? 

சமூகம் வெறுக்கின்ற கொடுங்குற்றங்கள் புரிந்து, தமிழ்நாட்டிலுள்ள மத்திய சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் சில சிறைவாசிகளின் குடும்பத்தினரிடம் தாம்பத்திய வருகை குறித்து நான் கருத்து கேட்ட போது, ‘பரோலில் ‘அது’ வீட்டுக்கு வரும்பொழுதெல்லாம், நான் சேமித்து வைத்திருந்த பணத்தைப் பிடிங்கிக் கொள்வதும், குடித்துவிட்டு வந்து கொடுமைபடுத்துவதும் வாடிக்கை. ‘அது’ முகத்தில் நான் விழிக்க விரும்பவில்லை’ என்று தன் வேதனையை வெளிப்படுத்தினார் சிறைவாசி ஒருவரின் மனைவி.

‘அவர் விரும்பும் போது ஜெயிலுக்கு போய், அவருடன் தங்கி வர, நான் என்ன வேசி தொழிலா செய்கிறேன்?’ என்று சீறினார் மற்றொரு சிறைவாசியின் மனைவி. அந்த பெண்ணின் ஆவேசப் பேச்சில் தன்மான உணர்வு வெளிப்பட்டது.

தாம்பத்திய வருகை என்ற பெயரில் சிறைவாசியுடன் தங்கிவர, அவரது மனைவி சிறை வளாகத்துக்குச் சென்று வந்தால், சமுதாயத்தில் பல பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, சிறைவாசியின் விருப்பத்தை நிறைவேற்ற, அவரின் மனைவி நிர்பந்திக்கப்படும் நிலையும் ஏற்படும்.

அமெரிக்கா, ஸ்பெயின், கனடா போன்ற பல மேலை நாட்டு சிறைகளில் தாம்பத்திய வருகை நடைமுறையில் இருந்து வருகிறது என்ற கருத்தைச் சிலர் முன்னிலைப்படுத்தி, தாம்பத்தியம் என்ற அடிப்படை உரிமையை சிறைவாசிகளுக்கு மறுக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த நூற்றாண்டு வரை அமெரிக்க மாகாணங்கள் பலவற்றிலுள்ள சிறைகளில் அதிக எண்ணிக்கையில் கருப்பு இனத்தவர்கள் இருந்தனர். அவர்களிடம் கடும் உடலுழைப்பு பெற்றுக் கொண்டு, அவர்களின் ஆவலை நிறைவேற்றும் விதத்தில் மாதம் ஓரிரு முறை அவர்களின் வாழ்க்கை துணையுடன் இரவுப் பொழுதைக் கழிக்கும் வாய்ப்பை சிறைவாசிகளுக்கு சிறை நிர்வாகம் வழங்கிவந்தது. காலப்போக்கில், இம்மாதிரியான நடைமுறைக்கு அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து, நான்கு மாகாணங்கள் தவிர, ஏனைய அனைத்து மாகாணங்களிலும் தாம்பத்திய வருகை முறை இருபது ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது.

ஸ்பெயின் நாட்டு சிறைகளில் தாம்பத்திய வருகை அனுமதிக்கப்பட்டாலும், தன் கணவனைத் திருப்திபடுத்துவதற்காக சிறை வளாகத்திற்குச் சென்று வருவது இழிவான செயல் என்ற கருத்து அந்நாட்டு பெண்களிடம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. சிறைவாசி ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது மனைவி தாம்பத்திய வருகைக்கு மறுத்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அச்செயல் தன்மானத்துக்கு இழுக்கு என்ற உணர்வு பெண்களிடம் அதிகரித்துவரும் நிலையை இச்செய்தி வெளிப்படுத்துகிறது.

2021-ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் 14,600 சிறைவாசிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 4,332 பேர் தண்டனை அனுபவித்துவரும் சிறைவாசிகள். மற்றவர்கள் விசாரணை சிறைவாசிகள். சிறைத் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டியவர்கள் யார் யார் என்று கண்டறியும் நீதித்துறைக்கு ரூ.1,403.17 கோடியும்,  சிறைத்துறை நிர்வாகத்திற்கு ரூ. 392.74 கோடியும் 2020-21 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த சூழலில், தண்டனை சிறைவாசிகளாக இருந்துவரும் 4,332 பேருக்கு தாம்பத்திய வருகையின்போது தங்க இடம் ஏற்பாடு செய்து, இத்திட்டத்தைச் செயல்படுத்த தேவைப்படும் நிதி எவ்வளவு? தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு சிறைத்துறை கவனம் செலுத்த வேண்டிய முக்கிய சமூகப் பிரச்சினையா இது?

குடியிருக்க வீடு இல்லாமல் சென்னை மாநகர வீதிகளில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை 50,000-க்கும் சற்று அதிகம் என்றும், அவர்களில் 40மூ பேர் குழந்தைகள் என்றும் கள ஆய்வு வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் பலர் தெருக்களில் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். இவர்களின் பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தண்டனை சிறைவாசிகளின் ‘தாம்பத்திய வருகை’ திட்டம் குறித்து அரசு நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அதிக எண்ணிக்கையிலான ஆண் சிறைவாசிகளின் உடற்பசியைத் தணிக்க, அவர்களின் மனைவிகளை அவ்வப்போது சிறை வளாகத்தில், அதற்கென ஒதுக்கப்படும் இடத்திற்கு தாம்பத்திய வருகை திட்டத்தின் கீழ் சென்று வர அனுமதிப்பது பெண்களின் தன்மனத்திற்கு இழுக்காக அமைந்துவிடாதா? இத்திட்டம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்? பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய கருத்துகள் இவை.

கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சிறைவாசிகளுக்கு தாம்பத்திய உறவு உட்பட அனைத்து வசதிகளும் அரசின் நிதியில் செய்து கொடுக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டால், நாட்டில் குற்றவாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதும், குற்றங்கள் பெருகுவதும் தவிர்க்க முடியாதது.

சிறைத்துறை நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் தேவை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நிர்வாக சீர்திருத்தங்களைப் புறந்தள்ளிவிட்டு, தாம்பத்திய வருகை திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் முயற்சி, சிறை நிர்வாகத்தில் பெரும் சீரழிவை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை.

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

21.08.2021 தேதியிட்ட தினமணி வார இதழில் வெளியான கட்டுரை.

Previous post லாட்டரிக்கு உலை
Next post குழந்தை கடத்தல் அதிர்ச்சி!

5 thoughts on “சீர்திருத்தவா? சிறுமைப்படுத்தவா?

  1. வாக்கு வங்கி அரசியல்தான் சார். வரும் பாராளுமன்ற தேர்தலை முன் ைவைத்து நடக்கும் கூத்துகள் சார்.

  2. சிறைச்சாலையில்’தாம்பத்திய வருகை திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் முயற்சியா?’

    நினைத்தாலே நெஞ்சம் பதருகிறது.

  3. அய்யா வணக்கம் தாம்பத்திய வருகை பல சிறைவாசிகளுக்கு சந்தோசமாக இருக்கலாம்.ஆனால் சிறைச்சாலை கேலி கூத்தாகிவிடும்.

  4. நாடு எங்கே போகிறது!
    நித்தம் நித்தம் நடந்து வரும் திருட்டு, கொள்ளை, லஞ்சம்,ஊழல்,கொலை மற்றும் கற்பழிப்பு செய்து வரும் கடுங்கு குற்றவாளிகளுக்கு சீர்திருத்தம் என்ற பெயரில் அவர்களுக்கு தேவைபடுமபோது தாம்பத்திய உறவு அனுமதிக்கப் பட்டால் குற்றங்கள் பெருகி விடாதா ? சட்டம் ஒழுங்கை எப்படி கையாள்வது? சிறைக்கு செல்வது என்பது ஒரு சாதாரண நிகழ்வு ஆகி விடாதா?
    விவாத பொருள் ஆகி இருக்கும் சீர்திருத்தம் என்ற திட்டம் கொண்டு வர கூடாது என்று கருதுவோம்.

  5. தெரிந்திராத தகவல் இது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் கேவலமானதாகத் தான் இருக்கமுடியும். இதில் எந்த சீர்திருத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *