
1999-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் இரவு. வடசென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்த நாகராணி, தன் மூன்று குழந்தைகளுடன் தனது குடிசைக்கு வெளியே சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
‘லோடு மேன்’ ஆக வேலைப் பார்த்து வந்த அவளது கணவன் கதிர்வேல் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பியபோது உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த நாகராணி, அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்ததும் அதிர்ச்சியில் திகைத்துப் போனாள்.
‘குழந்தை சதீஷ் எங்கே?’ என்று மனைவியிடம் கேட்டான் கதிர்வேல். மற்ற இரண்டு குழந்தைகளும் குடிசைக்கு முன்பு சாலை ஓரத்தில் பாயில் உறங்கிக் கொண்டிருக்க, 18 மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தையைக் காணவில்லை.
கணவனும், மனைவியும் இரவு முழுவதும் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தனர். குழந்தை கிடைக்கவில்லை. விடிந்ததும் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். போலீசாரின் புலன் விசாரணையிலும் எவ்வித தகவலும் இல்லை.
தெருவில் நடந்து செல்லும் போதெல்லாம் தான் பார்க்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையும் ‘காணாமல் போன தன் மகன் சதீஷ்குமாராக இருக்குமோ?’ என்று உற்றுப் பார்த்து வந்தாள் நாகராணி.
மாயமான கடைக்குட்டிப் பிள்ளை எப்படியும் ஒரு நாள் தங்களுடன் இணைந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் அவனது பெயரையும் குடும்ப அட்டையில் பதித்து வைத்திருந்தான் கதிர்வேல்.
ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வசித்து வருபவர்களுக்குத் திருட்டுக் குழந்தைகளைப் போலியான ஆவணங்கள் மூலம் தத்துக் கொடுத்து வந்த சமூக சேவை மையம் ஒன்று திருவேற்காட்டில் இயங்கி வருவது குறித்து 2005-ம் ஆண்டில் சென்னை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் அந்த சேவை மையத்தின் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளின் புகைப்படங்களும், அக்குழந்தைகள் எந்தெந்த வெளிநாட்டைச் சேர்ந்த தம்பதியர்களுக்குத் தத்துக் குழந்தைகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களும் போலீசார் நடத்திய சோதனையில் கிடைத்தன.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ‘குழந்தை காணவில்லை’ எனப் புகார் கொடுத்தவர்களைச் சென்னைக்கு வரவழைத்து, திடீர் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் போலீசார் காண்பித்தனர். அந்த புகைப்படங்களைப் பார்வையிட்ட 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்களில் ஒரு சில பெற்றோர்கள் மட்டுமே அவர்களது குழந்தையின் புகைப்படத்தை அடையாளம் காண்பித்தனர்.
அவ்வாறு அடையாளம் காண்பிக்கப்பட்டதில் மூன்று குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொண்டவர்களின் விவரங்கள் போலீசாரின் திடீர் சோதனையில் கிடைத்தன. அந்த மூன்று குழந்தைகளில் ஒன்று நாகராணி – கதிர்வேல் தம்பதியரின் குழந்தை சதீஷ்குமார்.
அந்த குழந்தையைத் திருமணமாகாத பெண்ணுக்குப் பிறந்த குழந்தை என போலி ஆவணங்கள் தயார் செய்து 2001-ம் ஆண்டில் ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு டச்சுத் தம்பதியருக்குத் தத்துக் குழந்தையாகக் கொடுக்கப்பட்டுள்ளது புலன் விசாரணையில் தெரியவந்தது.
சென்னை போலீசார் விசாரணை செய்து வந்த இந்த குழந்தைகள் திருட்டு வழக்கு 2007-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி சி.பி.ஐ.யிடம் புலன் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. நெதர்லாந்து நாட்டில் டச்சு தம்பதியரின் தத்துக் குழந்தையாக வளர்ந்து வந்த சதீஷ்குமாரை முறைப்படி இந்தியா வரவழைத்து, பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்குச் சர்வதேச போலீசின் உதவியை சி.பி.ஐ நாடியது.
நெதர்லாந்து நாட்டில் வளர்ந்து வரும் இந்த தத்துக் குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள் நாகராணி – கதிர்வேல் என்பதை உறுதி செய்ய, அந்தக் குழந்தைக்கு மரபணுச் சோதனை செய்ய வேண்டும் என சர்வதேச போலீஸ் மூலம் சி.பி.ஐ வேண்டுகோள் வைத்தது. அது குறித்த விசாரணை ஜூன் 2010-ல் நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அந்த விசாரணையின் போது நாகராணி – கதிர்வேலு தம்பதியர் நெதர்லாந்து நாட்டிலுள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அனுபவித்துவரும் மனவேதனையை எடுத்துரைத்தனர். குழந்தையைத் தங்களிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் வைத்தனர்.
நெதர்லாந்து நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு டச்சு தம்பதியினர் அந்தக் குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டதால், தற்போது அந்த குழந்தை அந்நாட்டின் குடிமகன் என்றும், மரபணு சோதனைக்கு உட்பட விரும்பாத 12 வயது சிறுவனுக்கு மரபணு சோதனை செய்ய கட்டாயப்படுத்த முடியாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நாகராணி – கதிர்வேல் தம்பதியர் பெற்றெடுத்த அந்த குழந்தையைப் பெற்றோர் என்ற முறையில் குறைந்தபட்சம் ஒரு முறை பார்ப்பதற்குக் கூட நெதர்லாந்து நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. கனத்த இதயத்தோடு அத்தம்பதியர் இந்தியா திரும்பினர்.
திருவேற்காட்டில் செயல்பட்டுவந்த அந்த சமூக சேவை மையத்தின் மூலம் வெளிநாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட தத்துக் குழந்தைகளில் எத்தனை பேர் பொய்யான ஆவணங்கள் மூலம் தத்துக் கொடுக்கப்பட்ட திருட்டுக் குழந்தைகள் என்ற விவரங்களைப் புலன் விசாரணையில் முழுமையாகக் கண்டறிய இயலவில்லை.
மேலைநாடுகளைப் போன்று நம் நாட்டிலும் தத்துக் குழந்தைகளுக்கான தேவை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.
தாம் பெற்ற குழந்தையின் மழலை மொழியைக் கேட்டு இன்பம் அடைய வாய்ப்பு இல்லாதவர்கள் குழலோசையும், யாழோசையும் இனிமையானது என்பர். ஆனால், அத்தகைய இசை குழந்தைகள் பேசும் மழலைக்கு இணையாகாது என்கிறார் திருவள்ளுவர்.
மக்கட்பேறு கிடைக்காத தம்பதியர்கள், அவர்களின் உறவினர் குழந்தைகளில் ஒன்றைத் தத்து எடுத்துக்கொள்ளும் முறை கடந்த காலங்களில் நம் நாட்டில் நடைமுறையில் இருந்து வந்தது. சமீப காலத்தில் அம்முறை தவிர்க்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை புறக்கணிக்கப்பட்டு, தனிக் குடும்ப வாழ்க்கை முறை அதிக அளவில் நடைமுறையில் இருந்து வருகிறது.
குழந்தை பாக்கியம் கிடைக்காத தம்பதியர்கள் எப்படியாவது ஒரு குழந்தையைத் தத்து எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். ‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்ற நிலை மாறி, ‘நாம் இருவர்; நமக்கு ஒருவர்’ என்ற நிலையில் சமூகம் பயணித்து வருவதால், மகப்பேறு இல்லாத தம்பதியர்களில் பலர் தங்கள் உறவுக்காரக் குழந்தையைத் தத்து எடுக்கும் வாய்ப்பு பலருக்குக் கிடைப்பதில்லை.
இந்த சூழலில், குழந்தை பாக்கியம் கிடைக்காதவர்கள் குழந்தைகள் காப்பகம் நடத்தி வரும் அரசு சாரா நிறுவனங்களை அணுகி, ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. லட்சணமான குழந்தையைத் தத்து எடுக்க உதவி செய்யுங்கள்’ என்று கோரிக்கை வைக்கின்றனர். இதன் காரணமாக ஏற்படும் குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய, குழந்தைகள் திருட்டு நிகழ்த்தப்பட்டுள்ளதைப் போலீசாரின் புலன் விசாரணை பல வழக்குகளில் அம்பலப்படுத்தியுள்ளது.
2005-ம் ஆண்டில் நம் நாட்டில் காணாமல் போன 44 ஆயிரம் குழந்தைகளில் 11 ஆயிரம் குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தேசிய மனித ஆணைய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2016-ம் ஆண்டில் காணாமல் போன 1,11,000 குழந்தைகளில் 55,000 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தேசிய குற்ற ஆவண அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது, பத்து ஆண்டுகளில் கண்டுபிடிக்க முடியாமல் போன திருட்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை 5 மடங்காக நம் நாட்டில் உயர்ந்துள்ளது.
அதிகரித்து வரும் குழந்தைகள் திருட்டுக்குக் காரணங்கள் என்ன?
பொது இடங்களில் பிச்சை எடுக்க வைத்தல், குழந்தைத் தொழிலாளியாக வேலைகளில் ஈடுபடுத்துதல், உடலுறுப்புகளைத் தானம் செய்ய வைத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடச் செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுத்தும் நோக்கத்திற்காகக் குழந்தைகள் திருட்டு நடைபெற்று வந்தாலும், போலி ஆவணங்கள் மூலம் திருட்டுக் குழந்தைகளைத் தத்துக் குழந்தைகளாக வெளிநாட்டினருக்கும், உள்நாட்டிலும் பணம் பெற்றுக் கொண்டு கொடுப்பதற்காகவும் குழந்தைகள் திருட்டு நிகழ்த்தப்பட்டு வந்தன.
குழந்தைகள் திருட்டை ஊக்கப்படுத்திய சமூக சேவை மையங்கள் சில தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் செயல்பட்டு வந்தது போலீசாரின் புலன் விசாரணையில் தெரியவந்தது. தத்துக் கொடுக்கும் முறையில் வெளிப்படையான நிர்வாக அமைப்பு இல்லாததே அதிகரித்துவரும் குழந்தைகள் திருட்டுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்பதை அரசு உணர்ந்தது.
போலி ஆவணங்கள் மூலம் திருட்டுக் குழந்தைகள் தத்துக் குழந்தைகளாகக் கொடுக்கப்பபட்டு வந்த முறையை முற்றிலும் தடுத்து நிறுத்த ‘தத்து எடுத்துக் கொள்வதற்கான விதிமுறைகள் – 2017’ என்ற வெளிப்படையான புதிய நடைமுறையை மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ‘காரா’ (ஊயுசுயு – ஊநவெசயட யுனழிவழைn சுநளழரசஉந யுரவாழசவைல) என்ற அமைப்பு 2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
தத்துக் குழந்தை எடுத்துக் கொள்ள விரும்பும் இந்தியாவிலுள்ள எந்த ஒரு தகுதி வாய்ந்த தம்பதியரும் ‘காரா’வின் இணையதளத்தில் உள்ள ‘கேரிங்ஸ்’ (CARINGS – Child Adoption Resource Information and Guidance System) மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவு செய்ததில் இருந்து முப்பது நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் முழுமையாகப் பதிவு செய்த தினத்தில் இருந்து முப்பது நாட்களுக்குள் தத்து எடுப்பதற்காகப் பதிவு செய்யப்பட்ட தம்பதியர் குறித்த ஆய்வு அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த தம்பதியர் தத்து எடுத்துக்கொள்ள தகுதியற்றவர் என ஆய்வில் தெரியவந்தால், அதற்கான காரணமும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தத்துக் கொடுப்பதற்காகத் தகுதி வாய்ந்த நிலையில் உள்ள குழந்தைகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங்கள் ‘காரா’வின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். தத்து எடுக்க தகுதி வாய்ந்த தம்பதியர் இணையதளத்தில் உள்ள குழந்தைகளின் புகைப்படம் மற்றும் விவரங்களைப் பார்த்து, தங்களுக்குப் பிடித்த குழந்தைகள் சிலரைத் (6 குழந்தைகள் வரை) தேர்வு செய்துகொள்ளலாம்.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை 15 தினங்களுக்குள் அக்குழந்தைகளைப் பராமரித்துவரும் நிறுவனங்களுக்குச் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். அந்தக் குழந்தைகளில் ஏதேனும் ஒரு குழந்தை பிடித்திருந்தால், அதைத் தேர்வு செய்து இணையதளத்தில் குறிப்பிட வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட குழந்தையை முறைப்படி தத்துக் குழந்தையாக உரிய ஆவணங்களுடன் அத்தம்பதியரிடம் ஒப்படைக்கப்படும்.
ஒரு குழந்தையைக் ‘காரா’ இணையதளம் மூலம் தத்து எடுத்துக் கொள்ள இணையதளத்தில் பதிவு செய்யும் போது, பதிவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் தத்துப் பெற்றோரின் குடும்ப ஆய்வுக் கட்டணமாக ஐயாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
தத்துக் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, குழந்தைகள் பராமரிப்பு மைய நிதி மூலதனமாக ரூ.40,000/- செலுத்த வேண்டும். ஆக மொத்தம் ரு.46,000/- செலவில் மூன்று மாத காலத்துக்குள் தத்துக் குழந்தை பெற்றுக் கொள்ள கூடிய வகையில் இணையதளத்தில் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தத்துப் பெற்றோர்களுக்கான நிபந்தனைகள்:
- நல்ல உடல் ஆரோக்கியமும், மன நலமும், தேவையான பொருளாதார வசதியும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- தம்பதியராக இருப்பின், இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத இல்லற வாழ்க்கை நடத்தியவர்களாக இருக்க வேண்டும். கணவன், மனைவி இருவரின் சம்மதம் வேண்டும்.
- தனியாக வாழ்ந்து வரும் பெண் தத்துக் குழந்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தனியாக வாழ்ந்து வரும் ஆண், பெண் குழந்தையைத் தத்து எடுக்க இயலாது.
- தத்துப் பெற்றோருக்கும், தத்துக் குழந்தைக்கும் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்க வேண்டும்.
- இரண்டுக்கும் அதிகமான குழந்தைகள் உள்ள தம்பதியர், தத்துக் குழந்தை எடுக்க இயலாது.
- 2010 முதல் 2016 வரையில் 30,484 குழந்தைகள் இந்தியாவிலும், 3,613 குழந்தைகள் வெளிநாடுகளுக்கும் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. அக்குழந்தைகளில் 70% இரண்டு வயதுக்கும் குறைவானவர்கள்.
***
அறிய வேண்டிய தகவல்கள் சார். பலருக்கும் இவை பிரயோஜனமாக இருக்கக்கூடும்.