மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவர் என்னைச் சந்திக்க என் அலுவலுகம் வந்திருந்தார்.

‘ஐயா, ஒரு பாஸ்போர்ட் கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று கூறியவர் ஒரு விண்ணப்பத்தை நீட்டினார்.

‘உங்களுக்கு எதுக்கு பாஸ்போர்ட்?’

‘எனக்கு இல்லை!  என் மருமகளுக்குப் பாஸ்போர்ட் வாங்க வேண்டும்’ என்றார் அவர்.

1999 – 2000 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது. அப்போது தென்மாவட்டம் ஒன்றில் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தேன். அந்த காலகட்டத்தில் பாஸ்போர்ட் கிடைப்பது என்பது கடினமானது. காலதாமதமும் ஏற்படும். இப்போதுள்ள நடைமுறைபடி ‘ஆன் லைன்’ மூலம் விண்ணப்பித்தால், போலீஸ் விசாரணை அறிக்கைக்காகக் காத்திருக்காமல் முப்பது நாட்களில் வீடு தேடி வந்துவிடும் பாஸ்போர்ட்.

‘மாவட்ட எஸ்.பி ஆக மூன்று மாவட்டங்களில் வேலை பார்த்துள்ளேன். நானே இதுவரை பாஸ்போர்ட் வாங்கவில்லை. உங்க மருமகளுக்கு பாஸ்போர்ட் எதுக்கு வாங்க வேண்டும்?’ என்று மனதில்பட்டதைச் சிறிதும் யோசிக்காமல் கேட்டுவிட்டேன்.

என் நிர்வாகத்தின் கீழ் பணிபுரிவதால், அந்த தலைமைக் காவலரும் நான் கேட்டதைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல், அமைதியாகப் பதில் அளிக்கத் தொடங்கினார்.

‘என் மகன் லண்டனில் வேலை பார்த்து வருகிறான். அவனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. மருமகளை அவனுடன் லண்டனுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்காகத்தான் உடனடியாக பாஸ்போர்ட் தேவைப்படுகிறது’ என்றார் தலைமைக் காவலர்.

அப்போது இங்கிலாந்து போன்ற வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அதுவும் தமிழ்நாட்டின் தென்கோடியில் ஒரு தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவரின் மகனுக்கு லண்டனில் வேலை கிடைத்துள்ளது என்பது என்னை மிகவும் பிரமிப்பு அடையச் செய்தது.

‘உங்கள் மகன் என்ன படித்திருக்கிறான்?’

‘ஐயா, நம்ம ஊரில் உள்ள அரசாங்க என்ஜினீரிங் காலேஜ்ல பி.இ படிச்சான். படிப்பு முடிந்ததும், ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். அவனது திறமையைப் பார்த்து, அந்த நிறுவனம் அவனை லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளது’ என்றார்.

கல்லூரியில் படித்து, உயர் பதவியில் இருப்பவர்களில் பலர் அவர்களது பிள்ளைகளை வளர்ப்பதில் கோட்டை விட்டதை நான் அறிவேன். ‘பள்ளிக்கூட படிப்பு படித்த இந்த தலைமைக் காவலரால் மட்டும் எப்படி தன் மகனை இப்படி கொண்டு வர முடிந்தது?’ என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. இக்கேள்விக்கு அவர் கூறிய விளக்கம் வாழ்வியல் நடைமுறைக்கான புது அர்த்தத்தை எனக்கு உணர்த்தியது. அவர் கூறியது இதுதான்:

‘நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு போலீசில் வேலைக்குச் சேர்ந்தேன். என்னுடன் வேலையில் சேர்ந்தவர்களில் பலர் சில ஆண்டுகள் ஆயுதப்படையில் வேலை பார்த்துவிட்டு, பின்னர் சட்டம் ஒழுங்கைக் கவனிக்கும் காவல் நிலையத்துக்கு மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டனர். அவர்களில் சிலர் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பு எஸ்.ஐ ஆகவும், பலர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகவும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுதல் உண்டு. அவர்களில் பலருக்கு சம்பளம் போக மேல் வருமானமும் கிடைக்கும். வசதிகளைப் பெருக்குவதில் கவனம் செலுத்திய அளவுக்கு அவர்களின் பிள்ளைகளின் படிப்பு குறித்து கவனம் செலுத்துவதில்லை.

ஆனால், மேல் வருமானத்துக்கு ஆசைப்படாமல் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக ஆயுதப்படையிலேயே நான் பணியாற்றி வருகிறேன். சிக்கனமாகக் குடும்பம் நடத்தி, என் மகனைப் போலீஸ் குடியிருப்புக்கு அருகிலுள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தேன். அவனுக்கு உள்ளுரில் உள்ள என்ஜினீரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. பி.இ படித்தான். ஆயுதப்படை குடியிருப்பில் பிறந்து, வளர்ந்த அவனுக்கு ஒழுக்கத்தையும், கடின உழைப்பையும் கற்றுக் கொடுத்தேன். அதுதான் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தது!’ என்றார்.

சற்று இடைவெளிவிட்டு அவர் பேசியதுதான் என் மனதை இன்னும் அதிகம் தொட்டது.

‘நானும் மற்ற போலீசாரைப் போன்று சட்டம் ஒழுங்கு பிரிவுக்குச் சென்று வேலை பார்த்திருந்தால், அவர்களைப் போன்று வீடு, வாசல் என வசதிகளைக் கொஞ்சம் அதிகப்படுத்தி சொகுசாக வாழ்ந்திருப்பேன். ஆனால், என் மகன் இந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருப்பானா என்பது சந்தேகம்தான்’ என்று அவரது மனதில் இருந்ததை மறைக்காமல் வெளிப்படுத்தினார்.

ஒரு குடும்பத் தலைவன் எப்படி செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்து வாழ்க்கை நடத்தி வரும் அந்த தலைமைக் காவலரை மனதாரப் பாராட்டிவிட்டு, அவரது மருமகளுக்கு உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடுகள் செய்தேன்.

எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை விட, சம்பாதித்த பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் எதிர்கால வாழ்க்கை அமையும் என்பதை ஒரு சில மணித்துளிகளில் உணர்த்திச் சென்றார் பண்பட்ட அந்த தலைமைக் காவலர்!

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

16.09.2019 தேதிய ராணி வார இதழில் வெளிவந்த கட்டுரை.

5 thought on “ஏட்டையா உணர்த்திய பாடம்!”
  1. நியாயமான நேர்மையான உழைப்புடன் வாழ்க்கையில் கிடைக்கும் நிறைவு வேறு எதிலும் கிடைப்பதில்லை என்பதற்கு இந்த தலைமைக் காவலரின் வாழ்க்கை ஒரு சான்று தான் 🙂

  2. அய்யா
    வணக்கம்
    ஏட்டையா அவர்களின் வழியை பின்பற்றி எல்லா செல்வங்களை விட கல்வி செல்வம் உயர்ந்தது என
    குழந்தைகளுக்கு உணர்தியதால் தற்போது எனது இரண்டு மகன்களும் அரசு ஒதுக்கீட்டில் MBBS பயின்று வருகின்றார்கள். நேர்மையும் உண்மையும் சோதிக்கும் ஆனால் கைவிடாது என்பதற்கு இது போல் பல சான்றுகள்
    நன்றி வணக்கம்

  3. வாழ்க்கையில் நேர்மையும் ,சத்தியம் தவறாத கொள்கையில் வாழ்ந்தால் நிச்சயமாக நல்லது நடக்கும் என்பது ஏட்டையாவின் வாழ்வியல் நல்ல பாடமாகும்.

  4. ரமா, கோயம்புத்தூர்.வணக்கம் சார், பார்வையாளர் பக்கம், ஏட்டய்யா உணர்த்திய பாடம் முழுவதுமாக படித்தேன். என்னதான் பணம் இருந்தாலும், உயர் கல்வி கற்றாலும் எந்த ஒரு மனிதரிடம் ஒழுக்கம் இல்லையேல் கற்ற கல்வி அனைத்தும் வீண். ஒழுக்கமும், கல்வியும் இரண்டு கண்கள் போன்றது. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.

  5. அய்யா வணக்கம்
    தலைமை காவலர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    இவருக்கு மாற நிறைய காவலர்கள் இருக்கிறார்கள் பணம் (லஞ்சம்)தான் குறிக்கோளாக இருக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *