நம் நாடு சுதந்திரம் அடைவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று சுதந்திரப் பள்ளு பாடி மகிழ்ந்தார் மகாகவி பாரதியார். ‘பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்’ என்று அடிமை வாழ்க்கைக்கு எதிராக மக்களைத் தட்டி எழுப்பினார் மகாகவி.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை மகிழ்வுடன் கொண்டாடி முடித்த நிலையில், வளரும் இளம் பருவ சிறார்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வெளிவருகின்ற தகவல்கள் நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களின் மனதில் நெருடலை ஏற்படுத்துகிறது.

மனித சமுதாயத்தில் அடிமைத்தனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று பெருமையுடன் முழக்கமிடுகின்ற இன்றைய காலகட்டத்தில், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் சமீபத்தில் மேற்கொண்ட வழக்கு விசாரணையில் தஞ்சாவூரை அடுத்துள்ள பகுதியில் வாத்து மேய்ப்பதற்காக ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து 8 வயது, 10 வயதுடைய சிறுவர்கள் கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவ்வழக்கு குறித்து தஞ்சாவூர் குழந்தைகள் நலக் குழுவும், நன்னடத்தை அலுவலரும் மேற்கொண்ட தொடர் விசாரணையில், பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் அவ்விரு சிறுவர்களையும் ஏஜெண்ட் ஒருவர் தஞ்சாவூர் அழைத்து வந்து, வாத்து வளர்க்கும் நபர் ஒருவரிடம் கொத்தடிமைகளாக ஒப்படைத்துள்ளார் என்பதும், கடுமையான பணிச்சுமையை எதிர்கொள்ள முடியாத அச்சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது மகளிர் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

பள்ளிக்கூட வாசல் மிதிக்காத அவ்விரு சிறுவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் கூட எழுதப் படிக்கத் தெரியாது என்பதும், குடும்ப வறுமை காரணமாக அவர்களின் பெற்றோர்கள் அவர்களைக் கொத்தடிமைகளாக ஏஜெண்ட் மூலம் அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருந்து அச்சிறுவர்களைக் கொத்தடிமைகளாக தஞ்சாவூர் பகுதிக்கு அழைத்து வந்த ஏஜெண்ட் யார்? அச்சிறுவர்களை வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தியவர் யார்? எத்தனைச் சிறார்கள் ஏஜெண்டுகள் மூலம் அப்பகுதியில் கொத்தடிமைகளாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்? போன்ற தகவல்கள் எதுவும் விசாரணையில் வெளிவராமல் சிறுவர்கள் இருவரையும் ஆந்திர மாநில குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொத்தடிமைகளாக வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இரு சிறுவர்கள் குறித்த விசாரணை முழுமையடைவதற்குள், 11 வயதுடைய மற்றொரு சிறுவனை சென்னை ரயில்வே காவல்துறையினர் கண்டறிந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனை அவனது பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் ஏஜெண்ட் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அழைத்து வந்து, அரிசி மாவு விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரிடம் கொத்தடிமையாக ஒப்படைத்துள்ளார். இரண்டு ஆண்டுகள் மாவு அரைக்கும் பணியில் அடிமை போன்று செயல்பட்டுவந்த அந்தச் சிறுவன் ஒரு நாள் ‘திருட்டு ரயில்’ ஏறி தப்பிச் செல்ல முயன்ற போத காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளான்.

அச்சிறுவனை அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

அச்சிறுவனைக் கொத்தடிமையாக சென்னை அழைத்து வந்த ஏஜெண்ட் யார்? அவனை இரண்டு ஆண்டுகள் பணியமர்த்திய வியாபரி யார்? அந்த வியாபாரியிடம் கொத்தடிமைகளாக வேறு சிறார்கள் உள்ளனரா? போன்ற கேள்விகளுக்கான விடை தேடும் முயற்சி மேற்கொள்ளாதது இப்பிரச்னையின் ஆழத்தைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உணரவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

பெற்றோர்களின் சம்மத்தின் பேரில் சிறார்களை ‘நவீன அடிமை’களாக ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு அழைத்துச் செல்லும் ஏஜெண்டுகளைக் கண்டறிந்து, அவர்களின் செயல்பாடுகளை முறியடிக்கும் நடவடிக்கை எடுக்கப்படாத வரையில், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்படும் சிறார்கள் மீண்டும் கொத்தடிமைகளாக மற்றொரு இடத்தில் ஏஜெண்டுகள் மூலம் பணியமர்த்தப்படுவதைத் தவிர்க்க முடியாது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஜவ்வாது மலைப் பகுதி கிராமங்களிலிருந்து சிறுவர், சிறுமியர்களைக் குழந்தை தொழிலாளிகளாக தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களில் பணிபுரிய அழைத்து சென்ற சம்பவங்கள் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளன. இச்செயல்களுக்குக் காரணமான ஏஜெண்டுகள் சிலர் கைது செய்யப்பட்டு, பத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று சம்பவங்களும் சமீபத்தில் நிகழ்ந்தவை. ஊடகங்களின் மூலம் அவை வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆயிரக்கணக்கான சிறார்கள் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்குள்ளே ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கும் கொத்தடிமையாகவும், குழந்தைத் தொழிலாளியாகவும் பெற்றோர்களின் சம்மதத்துடன் இடம் பெயர்கின்றனர்.

குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் இத்தகைய ‘சிறார் அடிமைகள்’ பெரும்பாலும் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாயப் பண்ணைகள், உணவு விடுதிகள், சில்லறை வர்த்தக நிறுவனங்கள் போன்ற பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். பிச்சை எடுத்தல், சிறு சிறு திருட்டுகள், போதைப் பொருள்கள் விற்பனை, பாலியல் குற்றங்கள் போன்ற குற்றச் செயல்களிலும் இச்சிறார்கள் ஈடுபடுத்தப்படுகின்ற நிலையும் கள எதார்த்தமாக இருந்து வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட சில உலக நாடுகளில் கருப்பினத்தவர்களை அடிமைகளாக நடத்தி வந்ததற்கு எதிரான கண்டனக் குரல்கள் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் அடிமை ஒழிப்பு சட்டத்தை 1833-ஆம் ஆண்டில் இயற்றி, ஆங்கிலேயக் காலனி நாடுகளில் அச்சட்டத்தை நடைமுறைபடுத்தத் தொடங்கினர். அமெரிக்காவில் நடைமுறையில் இருந்துவந்த அடிமைத்தனத்தை 1865-ஆம் ஆண்டில் ஆபிரஹாம் லிங்கன் சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தினார்.

ஆனால், ‘நவீன அடிமைத்தனம்’ இந்தியாவில் மெல்ல மெல்ல வேரூன்றி வருகின்ற நிலையைக் காணமுடிகிறது. கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளிகள் உள்ளிட்ட நவீன அடிமைத்தனம் பழக்கத்தில் இருந்து வரும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்படி, 1.29 கோடி இந்திய சிறார்கள் கொத்தடிமைகளாகவும், குழந்தை தொழிலாளிகளாகவும் இருந்து வருகின்றனர்.

சிறார்கள் குழந்தை தொழிலாளிகளாகவும், கொத்தடிமைகளாகவும் குடும்ப வறுமை காரணமாக பெற்றோர் சம்மதத்தோடு ஈடுபடுத்தப்பட்டாலும், பெரும்பாலான சிறார்கள் ஒற்றைப் பெற்றோரிடம் வளர்பவர்களாகவும், சிதைவுபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர் என ஓர் ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இத்தகைய சிறார்களுக்காக இயங்கிவரும் குழந்தை இல்லங்கள், சிறார்களின் அடிப்படை பிரச்னைகளை உணர்ந்து கொள்வதில்லை என்றும், அவர்களுக்குத் தேவையான வாழ்க்கை கல்வி, சமுதாய அங்கீகாரம் கிடைக்க துணைபுரிவதில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்துள்ளதோடு, மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழித்துள்ளது. குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ள பலர், தங்களின் குழந்தைகளைத் தெரிந்த நபர்கள் மூலம் ஏதோ ஓரிடத்தில் வேலையில் சேர்த்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். பள்ளிக்கூடம் சென்றுவந்த சிறார்கள் பலர் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்யும் நிலையும் தற்பொழுது அதிகரித்து வருகிறது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களில் படிப்பை இடைநிறுத்தம் செய்தவர்கள் குறித்த கள ஆய்வை ‘கிராம உதயம்’ என்ற தொண்டு நிறுவனம் சமீபத்தில் நடத்தியது.

அம்மூன்று மாவட்டப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களில் 1,800 பேர் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு குழந்தை தொழிலாளிகளாக மாறியுள்ளனர் என்பதை அந்த ஆய்வு வெளிப்படுத்தியது.

இந்த மூன்று மாவட்டங்களில் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவர்களில் 55 சதவீதம் பேர் மாணவியர்.  பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தியவர்களில் பலர் பீடி சுற்றுதல், செங்கல் சூளை, நூற்பாலை, விவசாயக் கூலி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் குழந்தைத் தொழிலாளிகளாகப் பணியில் ஈடுபடுகின்றனர் என்பதும் கள ஆய்வில் தெரிய வருகிறது.

பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு, ஏதேனும் ஒரு வேலைக்குத் தங்களின் குழந்தைகள் செல்வதால் கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மீது பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் பெற்றோர்கள் பலருக்கு நாட்டம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளிகளாக மாறியுள்ள சிறார்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவரும் பெரும்பணியை அரசு நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

Previous post ஏட்டையா உணர்த்திய பாடம்!
Next post நடராஜர் சிலையில் நாடகம்!

2 thoughts on “கொத்தடிமைகளாகும் சிறுவர்கள்

  1. அய்யா வணக்கம்
    கொத்தடிமை சிறுவர்கள் டீ கடை, மெக்கானிக் சாப்பிலும் இருக்கிறார்கள். குடும்பத்தின் வறுமை காரணமாக இருக்கலாம்.

    பெரிய பணக்கார வீட்டில் தன் குழந்தை பார்த்துக்கொள் சிறுமி இருந்தாள் அவளிடம் கேட்டதற்கு குழந்தை பார்த்துக்கொள்ள விளையாடவும் இருக்கிறேன் என்றாள். மிக கஷ்டமாக இருந்தது.

  2. மிகவும் வருத்தமான விஷயம் இது. குழந்தைகளை கொத்தடிமைகளாக வைத்திருப்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது. இந்த நிலை மாறினால் மட்டுமே இந்த குழந்தைகளின் வாழ்வில் சுதந்திரம் பிறக்கும் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *