நடராஜர் சிலையில் நாடகம்!

ரவுடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவர்களின் குற்றச் செயல்பாடுகளை முறியடிப்பதற்காக ‘ரவுடி ஸ்குவார்ட்’ என்ற பெயரில் தனிப்படைகளைப் பல மாவட்ட எஸ்.பி.களும், காவல் ஆணையர்களும் உருவாக்கி, அவைகளை அவர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்பட அனுமதித்து வந்த காலகட்டம் அது. ரவுடிகளின் செயல்பாடுகள் மட்டுமின்றி, அந்தந்த மாவட்டத்தில் நிகழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் துப்பு துலக்குவதற்கும், அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் அவ்வழக்குகளின் புலனாய்வு அதிகாரிகளுக்கு அவர்கள் உதவியாகவும் இருந்து வந்தனர்.

‘ரவுடி ஸ்குவார்ட்’டில் சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் ஒருவரின் தலைமையில் தனிப்படை ஒன்று திருநெல்வேலி மாநகர காவல்துறையில் செயல்பட்டு வந்தது. அவருடன் இணைந்து பணியாற்றுவதற்காக சில காவலர்களும், ஒரு போலீஸ் வாகனமும் வழங்கப்பட்டிருந்தது.

2000-ம் ஆண்டில் ஒரு நாள் அந்த தனிப்படையின் பொறுப்பு உதவி ஆய்வாளர் மாநகர உளவுப்பிரிவு ஆய்வாளரைச் சந்தித்தார். ‘திருட்டுச் சிலை ஒன்றை ஒரு நபர் அவரது வீட்டில் வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. நீங்கள் அனுமதித்தால், அது குறித்து விசாரித்து வருகிறேன்’ என்று அனுமதி கேட்டார்.

‘திருட்டுச் சிலை வைத்திருக்கும் நபர் எந்த ஊர்க்காரர்?  எந்தக் கோயில் சிலை அது?’

‘தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் அந்தச் சிலை இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. எந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பது விசாரணையில்தான் தெரியவரும்!’

‘தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் அந்தச் சிலை இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. எந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பது விசாரணையில்தான் தெரியவரும்!’

‘அந்த திருட்டுச் சிலை குறித்து விசாரித்து, நல்ல தகவலுடன் வாருங்கள். நான் கமிஷனரிடம் தெரியப்படுத்திவிடுகிறேன்’ என்றார் உளவுப் பிரிவு ஆய்வாளர்.

ஒரு வாரத்துக்குப் பிறகு காவல் ஆணையர் அலுவலகம் வந்து, உளவுப்பிரிவு ஆய்வாளரைச் சந்தித்தார் தனிப்படை உதவி ஆய்வாளர்.

‘திருட்டுச் சிலையைக் கைப்பற்றிவிட்டோம். அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் சிலரை விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம் சார்’ என்றார் தனிப்படை உதவி ஆய்வாளர்.

‘சிலை எங்கிருந்து கைப்பற்றினீர்கள்?’

‘அழைத்துவரப்பட்ட நபர்களில் ஒருவரது வீட்டில் இருந்து கைப்பற்றினோம்!’

‘என்ன சிலை அது?’

‘நடராஜர் சிலை’

‘எங்கிருந்து திருடப்பட்ட சிலை அது?’

‘அது குறித்து இனிதான் அவர்களிடம் விசாரிக்க வேண்டும்’

தனிப்படை உதவி ஆய்வாளரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, காவல் ஆணையரைச் சந்தித்துவிட்டு திரும்பி வந்த உளவுப்பிரிவு ஆய்வாளர், ‘சிலை கைப்பற்றிய விவரத்தைக் கமிஷனரிடம் தெரியப்படுத்திவிட்டேன். விசாரணை என்ற பெயரில் காலம் கடத்தாமல் உடனடியாக எஃப்.ஐ.ஆர் போட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை ரிமாண்டுக்கு அனுப்பும்படி கமிஷனர் கூறினார்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘குற்றவாளிகளை ரிமாண்டு செய்த பின்னர், வழக்கு குறித்த விவர அறிக்கையையும், கைப்பற்றப்பட்ட சிலையின் போட்டோவையும் அனுப்பி வையுங்கள்’ என்றார்.

சில தினங்களுக்குப் பின்னர், மீட்கப்பட்ட சிலையின் படத்துடன் காவல் ஆணையரின் பேட்டி அனைத்து தினசரி ஏடுகளில் பளிச்சென்று வெளியாயின. சில மாதங்கள் உருண்டோடின. இந்த நிலைiயில், ஒரு நாள் பிற்பகலில் காவல் ஆணையர் அழைத்ததின் பேரில் அவரைச் சந்திக்க அவரது அலுவலகம் சென்றேன். அப்பொழுது திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.ஆக நான் பணிபுரிந்துவந்ததோடு, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் பொறுப்பையும் கவனித்து வந்தேன.

அந்த சந்திப்பின்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் ஒன்றை என்னிடம் கொடுத்தார் கமிஷனர்.

‘சில போலீசார் என்னை விசாரிக்க வேண்டும் என்று என் வீட்டுக்கு வந்தனர். வீட்டை சோதனைப் போட்டனர். பின்னர், என் வீட்டில் இருந்து திருட்டுச் சிலை ஒன்றைக் கைப்பற்றியதாகக் கூறி, என்னைச் சிறையில் அடைத்துவிட்டனர். எந்த தப்பும் செய்யாத என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு குறித்து விசாரித்து, நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்பதுதான் அந்த மனுவின் சுருக்கம். அந்த மனு மீது நேரடி விசாரணை செய்து, அறிக்கை தரும்படி என்னைக் கேட்டுக் கொண்டார் காவல் ஆணையர்.

முன்னறிவிப்பு எதுவுமின்றி, ஒரு மாலை நேரத்தில் அந்த மனுதாரரை விசாரிக்க அவரது வீட்டுக்குச் சென்றேன். ‘ஐயா, நான் வீட்டிலேயே பட்டறை வைத்து, தொழில் செய்து வருகிறேன். திருட்டுச் சிலையை வாங்கி விற்பனை செய்வதில்லை. சில மாதங்களுக்கு முன்பு மஃடி போலீசார் சிலர் இங்கு வந்தனர். என்னுடைய பட்டறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு பேசிக் கொண்டிருந்த போது, போலீசாரில் ஒருவர், சிலை ஒன்றைக் காண்பித்து ‘அது எப்படி உங்க பட்டறைக்கு வந்தது?’ என்று கேட்டார்.

‘அந்த சிலை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல், என்னையும் மற்றவர்களுடன் ஜூப்பில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். ஓரிரு நாட்கள் நடத்திய விசாரணைக்குப் பிறகு, சிலரை விடுவித்துவிட்டு, திருட்டு சிலை வைத்திருந்ததாக என் மீது வழக்குப் போட்டு ஜெயிலில் அடைத்து விட்டனர்’ என்றார் அவர்.

வுpசாரணையை முடித்துக்கொண்டு என் அலுவலகம் திரும்பியதும், அந்த தனிப்படையினர் பயன்படுத்தி வந்த போலீஸ் ஜூப்பின் டிரைவரை எனது அலுவலகத்துக்கு வரவழைத்தேன். ஏரல் பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனைக்கு முன்பு தனிப்படையினர் விசாரணைக்காக எங்கெங்கு சென்று வந்தனர் என்று அவரிடம் கேட்டதற்கு, டிரிப் சீட்டைப் பார்த்து பயண விவரங்களைக் கூறினார்.

திடீர் சோதனை நடத்தப்பட்டதற்கு சில தினங்களுக்கு முன்பு, திருநெல்வேலி நகரிலுள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் பூம்புகார் கடைக்குத் தனிப்படை உதவி ஆய்வாளர் சென்று வந்த விவரம் தெரியவந்தது.

பூம்புகார் விற்பனை நிலையத்துக்கு அவர் சென்று வந்த காரணத்தை ரகசியமாக விசாரித்து வர போலீஸ் அதிகாரி ஒருவரை அனுப்பி வைத்தேன். ஒரு சிலையை வாங்க அவர் அங்கு சென்றது தெரியவந்தது. அப்படி வாங்கப்பட்ட சிலைதான் மனுதாரரின் வீட்டில் இருந்து தனிப்படை போலீசார் கைப்பற்றியது என்ற உண்மை புலனாகியது.

திடீர் சோதனைக்குச் சென்று வந்த போலீசாரைத் தனித்தனியாக விசாரித்ததில், போலீசாரே சிலையை மனுதாரரின் வீட்டில் வைத்துவிட்டு, பின்னர் அதைக் கைப்பற்றியதாக நடத்திய நாடகத்தை எழுதி, இயக்கியவர் தனிப்படை உதவி ஆய்வாளர் என்பது தெரியவந்தது.

ஏரலில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் சிலரிடம் பெரும்தொகையைப் பெற்றுக் கொண்டு அவர்களை விடுவித்ததும், பணம் கொடுக்காத மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த அதிகார துஷ்பிரயோகத்தில் சம்பந்தப்பட்டவர்களைத் தற்காலிக பணி நீக்கம் செய்த காவல் ஆணையர், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தார். துறை ரீதியான நடவடிக்கையின் முடிவில் சம்பந்தப்பட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் எதிர்பார்த்தன. ஆனால், காலச் சுழற்சியில் அந்த ஆணையர் மாற்றப்பட்டார். பதவி ஏற்ற புதிய ஆணையரின் இரக்கத்தால், பணி நீக்கத்தில் இருந்து தப்பித்தார் அந்த தனிப்படை உதவி ஆய்வாளர்.

அதிகார துஷ்பிரயோகம் செய்து பழக்கப்பட்ட அந்த உதவி ஆய்வாளர், ஒரு செல்போன் கடையில் நடந்த திருட்டு குறித்து விசாரணை நடத்தியபோது, உயர் அதிகாரிகள் கேட்டதாகக் கூறி, விலை உயர்ந்த இரண்டு செல்போன்களை அந்தக் கடையில் இருந்து வாங்கிய சம்பவம் காவல் ஆணையரின் கவனத்துக்குச் சென்றது. அதைத் தொடர்ந்து அவர் வெளிமாவட்டத்துக்கு மாற்றப்பட்டதோடு, அவரின் செயல்பாடுகள் குறித்து அவரின் பணிப் புத்தகத்தில் விரிவாக பதிவு செய்யப்பட்டது. பதவி உயர்வு பெறாமலே ஓய்வு பெறும் நிலை அவருக்கு ஏற்பட்டது.

காவல்துறையில் பணிபுரிபவர்களிடம் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள் அடையாளம் காணப்பட்ட பின்பும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பது, அவர்களுக்குச் செய்யும் நன்மையைவிட தீமையே காலப்போக்கில் மேலோங்கும் என்பது காலம் உணர்த்தும் பாடம்!

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

23.06.2019 தேதிய ராணி வார இதழில் வெளிவந்த கட்டுரை.

Previous post கொத்தடிமைகளாகும் சிறுவர்கள்
Next post நழுவிய நீதி தேவதை! நழுவாத மக்கள் தீர்ப்பு!!

One thought on “நடராஜர் சிலையில் நாடகம்!

  1. அய்யா வணக்கம்
    சில அப்பாவி மக்களை
    சபண ஆசை பிடித்த காவலர் இது மாதிரி வழக்கில் சிக்க வைத்திருந்தார்கள் போல இருக்கிறது.
    உங்களால் அப்பாவி வழக்கில் இருந்து தப்பித்தார்
    வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *