நழுவிய நீதி தேவதை! நழுவாத மக்கள் தீர்ப்பு!!

2002-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள் இரவு நேரத்தில்….

திருநெல்வேலி – தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த சிறிய நகரம் வழக்கம் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அதன் வீதிகளில் இரண்டு இளைஞர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்தபடி யாரையே தேடிக் கொண்டிருந்தனர்.

தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் செயல்பாடுகள் இரவு ரோந்து தணிக்கை செய்ய வந்த உதவி ஆய்வாளரின் கவனத்தை ஈர்த்தது. அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திஇ இளைஞர்களைப் பார்த்து, ‘நீங்கள் யார்? எந்த ஊர்? ஏதற்காக இந்த இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தெருக்களில் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்?’ என்று அவர் விசாரித்தார்.

சுமார் நான்கு கி.மீ தொலைவிலுள்ள தங்களது கிராமத்தின் பெயரைச் சொல்லி, தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இளைஞர்கள், ‘எங்க கிராமத்துப் பொண்ணு ஒன்னு இந்த ஊருல ‘பிளஸ்-2’ படிக்கிறா. பள்ளிக்கூடம் முடிஞ்சதும் இங்குள்ள ‘டியூசன் சென்டர்’ல படிச்சிட்டு, மினி பஸ் பிடிச்சு இரவு ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவா. இன்னிக்கு பத்து மணியாகியும் ஊருக்கு வராததால், அவளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்றனர்.

‘சரி. டியூசன் சென்டர்ல விசாரிச்சீங்களா?’

‘விசாரிச்சிட்டோம். எட்டு மணிக்கு வகுப்பு முடிஞ்சதும் அங்கிருந்து கிளம்பிட்டதாகச் சொன்னாங்க. அவளோடு படிக்கும் பொண்ணுகளையும் விசாரிச்சோம். மினி பஸ்ஸுக்காக பஸ் நிறுத்தத்துல அவ காத்திருந்ததா சொன்னாங்க. அவள் இதுவரை வீட்டுக்கு வரல. எங்கு போனாள்னு தெரியல?’ என சோகத்துடன் கூறியவர்கள், ‘சார், அவளுக்கு ஒண்ணும் ஆபத்து இருக்காது இல்லையா?’ என்று கேட்ட கேள்வி உதவி ஆய்வாளரின் மனதை நெருடியது.

பள்ளி இறுதித் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த நேரம். தேர்வுக்குப் பயந்து எங்காவது சென்றிருப்பாளா?  அல்லது காதல் பின்னணி ஏதாவது இருக்குமோ? போன்ற சந்தேகங்கள் உதவி ஆய்வாளருக்கு ஏற்பட்டது.

‘நீங்க இப்ப உங்க கிராமத்துக்குப் போங்க. காலைக்குள் அவள் வீட்டுக்கு வராவிட்டால், என்னை வந்து பாருங்க’ என்று கூறி அந்த இரண்டு இளைஞர்களையும் அவர்களது கிராமத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்த தகவலைத் தெரியப்படுத்தினார் அந்த உதவி ஆய்வாளர்.

அப்பொழுது நான் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்தப் பள்ளி மாணவி மாயமாக மறையக் காரணம் என்னவாக இருக்கும்?  டியூசன் சென்டர்ல பாடம் படித்துவிட்டு, வீட்டுக்குச் செல்ல பஸ் நிறுத்தத்தில் காத்திருந்ததைப் பலர் பார்த்துள்ளனர். இந்த சூழலில் அவள் காணாமல் போனதற்கு அதே பகுதியைச் சேர்ந்த யாராவது ஒருவர் முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்பது மட்டும் புலப்பட்டது. இது போன்ற நேரங்களில் காவல் துறையினரால் நடத்தப்படும் வாகனத் தணிக்கைகளில் காணாமல் போனவர் கண்டுபிடிக்கப்படுவதும் உண்டு. அந்த அடிப்படையில் தென்மாவட்ட காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டனர்.

காணாமல் போன மாணவியைத் தேடும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர், காலையில் காவல் நிலையம் திரும்பினார். அந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் காவல் நிலையத்தில் காத்திருந்தனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்களுடன் உதவி ஆய்வாளர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த பொழுது, காவல் நிலையத்துக்கு ஒரு தகவல் கிடைத்தது.

அருகிலுள்ள கிராமம் ஒன்றில் காலை நேரத்தில் விவசாய வேலைக்குச் சென்ற சிலர் தோட்டத்துக் கிணறு அருகில் புத்தகப் பை ஒன்று கிடப்பதைக் பார்த்து, காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர். அது காணாமல் போன மாணவியின் புத்தகப் பை என்பது உறுதியானது.

அந்தப் பை கிடந்த இடத்துக்குச் சற்று அருகில், உடைந்து போன கண்ணாடி வளையல் துண்டுகள் சிதறிக் கிடந்தன. சற்றுத் தொலைவில் அறுந்து போன ‘பெல்ட்’டின் மூன்று, நான்கு துண்டுகள் காணப்பட்டன. அங்கு கிடந்த கண்ணாடி வளையல் துண்டுகளைப் பார்த்த மாணவியின் உறவினர்கள், அவை காணாமல் போன மாணவி அணிந்திருந்த வளையல்களின் துண்டுகள்தான் என்பதை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, அந்த தோட்டக் கிணற்றுக்குள் போலீசார் ஆய்வு செய்ததில், ஒரு பிரேதம் தண்ணீரில் மிதப்பதைக் கண்டனர்.

பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அந்த பிரேதத்தைக் கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். பள்ளிக்கூட யூனிபார்ம் அணிந்திருந்த அந்த பிரேதம்தான் முந்தின இரவில் காணாமல் போன மாணவி என்பது உறுதியானது.

இந்தச் செய்தி சுற்று வட்டாரக் கிராமங்களில் காட்டுத்தீ போலப் பரவியது. போலீசார் பிரேத விசாரணை முடிப்பதற்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், பள்ளிக்கூட மாணவ-மாணவியர்களும் சம்பவ இடத்தில் திரண்டனர். பிரேதத்தைப் பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் சம்பவங்கள் நடைபெறக் கூடும் என்ற தகவலைத் தனிப்பிரிவு உளவு போலீசார் என்னிடம் தெரிவித்தனர்.

இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும் பொழுது, தனிப்பட்ட விரோதம் காரணமாக பகையாளிகள் மீது தாக்குதல் நடத்துதல், பகையாளிகளின் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற பழி வாங்கும் சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதும் உண்டு. அம்மாதிரியான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த மாணவியின் பிரேதத்தைப் பரிசோதனை செய்த மருத்துவரை நான் நேரில் சந்தித்து விசாரித்ததில், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உடலில் தென்படுகின்றன என்றும், கழுத்து நெறிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

தோட்டத்துக் கிணறு அருகில் மாணவியின் கண்ணாடி வளையல்கள் உடைந்து கிடந்தது, அவள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள் என்பதை உணர்த்தியது. அந்த இடத்தில் கிடந்த பெல்ட் துண்டுகள் புலப்படுத்துவது என்ன? என்ற கேள்விக்கான விடையைக் கண்டறிந்தால், இந்த வழக்கில் தீர்வு கிடைத்துவிடும் என்று தோன்றியது.

இந்த வழக்கு விசாரணையில் ஆரம்பத்தில் இருந்து கவனம் செலுத்தி வந்த அந்த காவல் நிலைய உதவி ஆய்வாளரை அழைத்து, சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட பெல்ட்டின் துண்டுகளை ஆய்வு செய்யச் சொன்னேன். அது பள்ளிக்கூட மாணவர்கள் அணியும் பெல்ட் என்பதையும், சுற்று வட்டாரத்திலுள்ள எந்தப் பள்ளிக்கூட மாணவர்கள் அணியும் பெல்ட் என்பதையும் கண்டறிந்தார் உதவி ஆய்வாளர். ஆனால், எந்த மாணவனுடையது அந்த பெல்ட் என்ற கேள்விக்கான விடை கண்டறிய வேண்டுமல்லவா!

காலை நேரத்தில் பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டு, ஒவ்வொரு மாணவன் அணிந்துவரும் பெல்ட்டைக் கண்காணித்து வந்தார் உதவி ஆய்வாளர். சில நாட்களுக்குப் பின்னர் நடந்த சம்பவம் இந்த வழக்கின் முடிச்சை அவிழ்த்தது.

புதிய பெல்ட் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவன் ஒருவனை அடையாளம் கண்ட உதவி ஆய்வாளர், அவனைத் தனியே அழைத்து விசாரித்தார். சில தினங்களுக்கு முன்பு புதிதாக பெல்ட் வாங்கியதை ஒப்புக் கொண்டவன், அவனது பழைய ‘பெல்ட்’டை அதே பள்ளியில் படித்துவரும் நண்பன் ஒருவனுக்குக் கொடுத்ததாக் கூறினான். பழைய ‘பெல்ட்’டை வாங்கிய மாணவனையும் உதவி ஆய்வாளர் கண்டறிந்தார். அவனது பெல்ட் என்னாச்சு? புது பெல்ட் வாங்காமல், ஏன் நண்பனிடமிருந்து பழையதை வாங்கிப் பயன்படுத்துகிறான்? என்கிற கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அந்த மாணவன் திணறினான். ஒரு கட்டத்தில் உண்மையைப் போட்டு உடைத்தான்.

டியூசன் வகுப்புகள் முடிந்ததும் பஸ் நிறுத்தம் வந்து மினி பஸ்ஸுக்காகக் காத்திருந்த அந்த மாணவியிடம், ‘மினி பஸ் ;போய்விட்டது. நானும் ஊருக்குத்தான் போகிறேன். சைக்கிளில் என்னுடன் வந்தால், உன்னை ஊரில் இறக்கிவிட்டுவிடுகிறேன்’ என்று அந்த மாணவன் யதார்த்த வார்த்தைகளில் பேசியுள்ளான். அவனும் அவளும் ஒரே கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவனது கபட நாடகத்தை அறியாத மாணவி, அவனுடன் அவளது வீட்டுக்குச் செல்ல சம்மதித்து, சைக்கிளில் ஏறினாள். ஊர் செல்லும் வழியில் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவளது கழுத்தை நெறித்து, பின்னர் அருகிலிருந்த தோட்டக் கிணற்றில் தள்ளிவிட்ட செயல் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் புரிந்ததற்காக அந்த மாணவன் கைது செய்யப்பட்டான். முறையான புலன் விசாரணைக்குப் பின்னர் அவன் மீது குற்றப் பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தீர்ப்பு அனைவரையும் வியப்படையச் செய்தது. சம்பவ தினத்தன்று இரவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாணவியை அந்த மாணவன் சைக்கிளில் அழைத்துச் சென்றதை நீதிமன்ற விசாரணையின் பொழுது சாட்சியங்கள் உறுதிப்படுத்தி இருந்தாலும், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததைப் பார்த்த சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் குற்றவாளியை நீதிமன்றம் விடுதலை செய்தது புலனாய்வு அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.

நீதிதேவதையின் தராசு இவ்வழக்கில் சற்று தடுமாறினாலும், அந்தக் கிராம மக்கள் நியாயத்தின் பக்கம் நின்றனர். ‘சக மாணவிக்குத் துணையாக இருக்க வேண்டிய நம்ம ஊர் பையனே அவளைக் கசக்கி சாகடித்துவிட்டானே?’ என வேதனைப்பட்டனர். ‘அம்மாதிரியானவர்கள் நம்ம ஊரில் வாழ இடமில்லை’ எனத் தீர்மானித்தனர். நீதிமன்றத் தீர்ப்பு அந்தக் குற்றவாளிக்குச் சாதாகமாக அமைந்துவிட்டாலும், சொந்த கிராம மக்களின் தீர்ப்பு இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது என்பது ஆச்சரியமான உண்மை!

‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ என்று கூறுவார்கள். அப்படி திருத்தப்பட்ட தீர்ப்புகளில் இது சற்று வித்தியாசமானது.

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

04.08.2019 தேதிய ராணி வார இதழில் வெளிவந்த கட்டுரை.

Previous post நடராஜர் சிலையில் நாடகம்!
Next post மேம்பாலங்கள்

3 thoughts on “நழுவிய நீதி தேவதை! நழுவாத மக்கள் தீர்ப்பு!!

  1. அய்யா வணக்கம்
    சில நேரங்களில் உண்மை இறந்து விடும் போல் இருக்கிறது. சாட்சி இல்லாததால்

  2. நீதிமன்ற தீர்ப்பில் தப்பித்தாலும் ஊர் மக்கள் தீர்ப்பு சற்று ஆறுதல் தறுகிறது.

  3. சம்பவத்தை நயம்பட உரைத்திருப்பது அழகாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *