இந்தியா முழுவதிலும் நிகழும் சாலை விபத்துகள் குறித்து உலக வங்கி ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வு முடிவை ஓர் அறிக்கையாக வெளியிட்டது. அந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மத்திய சாலை போக்குவரத்து- நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகள் கரோனா பெருந்தொற்றை விட ஆபத்தனாவை’ எனக் குறிப்பிட்டார்.

சாலை விபத்துகளால் மனித உயிர்கள் பலியாவது மட்டுமல்ல, ஆண்டுதோறும் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கடுமையான காயங்கள், உறுப்பு இழப்பு, மன நல பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. அதனால்தான் சாலை விபத்துகள் கரோனா பெருந்தொற்றைவிட ஆபத்தானவை எனக் கூறியுள்ளார் மத்திய அமைச்சர்.

இந்தியா அதிர்ச்சியடையும் விதத்திலான பல தகவல்கள் உலக வங்கியின் ஆய்வு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. உலக நாடுகளில் பயன்பாட்டில் இருந்துவரும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையில் ஒரு சதவீத வாகனங்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால், உலக நாடுகளில் சாலை விபத்துகளால் நிகழும் இறப்புகளில் 11 சதவீத இறப்புகள் இந்தியாவில் நிகழ்கின்றன என்பதை அந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் சாலை விபத்தால் நிகழும் ஒவ்வொரு மரணத்தாலும் சமுதாயம் எதிர்கொள்ளும் இழப்பு ரூ.91.16 லட்சம் என்றும், சாலை விபத்தால் ஏற்படும் ஒவ்வொரு கொடுங்காயத்தாலும் சமுதாயத்திற்கு ஏற்படும் இழப்பு ரூ.3.64 லட்சம் என்றும் உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.

சாலை விபத்துகளால் இந்தியாவில் உயிரிழப்பவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 18 முதல் 45 வயதுடையவர்கள் என்றும், இதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 7.5 சதவீத இழப்பை ஆண்டுதோறும் இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்கிறது என்றும், இந்த இழப்பின் மதிப்பு சுமார் ரூ.12.9 லட்சம் கோடிகள் என்றும் உலக வங்கியின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும், நடுத்தர பொருளாதாரப் பிரிவினரும்தான் இந்திய சாலைகளில் நிகழும் விபத்துகளில் அதிகம் உயிரிழக்கின்றனர் என்றும், சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் நடந்து செல்வோர், சைக்கிளில் செல்வோர், மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் என்றும் உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

உலக நாடுகளிலேயே சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பை எதிர்கொள்ளும் நாடாக இந்தியா இருந்து வருகிறது என்றும், இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நிகழ்கின்றன என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சாலை விபத்துகளால் கொடுங்காயம் அடைந்தவர்களில், சிகிச்சை பலனின்றி இறப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் என்றும், ‘பணமில்லா சிகிச்சை’ (கேஷ்லெஸ் ட்ரீட்மெண்ட)   என்ற அரசின் மருத்துவ உதவித்திட்டம் அவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்றும் உலக வங்கியின் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பாக மாவட்ட ஆட்சியர் வழங்கும் விபத்து நிவாரணத்தொகையும் காலம் கடந்தே வழங்கப்படுவதால், அந்த நிவாரணத்தொகை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுவதில்லை. 

கடந்த 20 ஆண்டுகளில் இந்திய சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளன என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து வகையான வாகனங்களில் 73 சதவீதம் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட் போன்ற இரு சக்கர மோட்டார் வாகனங்கள் என்றும், 13 சதவீதம் கார், டாக்ஸி, ஜுப் போன்ற நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் என்றும் ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் மோட்டார் வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகள், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், பொருளாதார இழப்பு ஆகியவை ஒரு பக்கம் இருக்க,  மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகை காற்று மாசு கணிசமான அளவுக்கு அதிகரிக்கக் காரணமாக உள்ளது என சிகாகோ பல்கலைக்கழகம் அண்மையில் இந்தியாவில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் 40 சதவீத இந்தியர்களின் ஆயுட்காலம் 9 ஆண்டுகளுக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காற்று மாசு மிக அதிகமாக உள்ள உலக நாடுகளின் பட்டியலில் வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கு அடுத்ததாக,  மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி, உலக நாடுகளில் காற்று மாசு மிக அதிகமாக உள்ள முப்பது நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்று தெரியவந்துள்ளது. இது இந்தியாவின் காற்றுவெளி தொடர்ந்து மாசு அடைந்து வருவதை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் காற்று மாசு காரணமாக அகால மரணம் அடைகின்றனர் என்றும், இந்திய காற்று வெளியை மாசுபடுத்தும் காரணிகளில் 27 சதவீதம் மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகை என்றும், கார், ஜூப் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களைக் காட்டிலும் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர மோட்டார் வாகனங்கள் வெளியிடும் புகை காற்று மண்டலத்தை அதிக அளவில் மாசுபடுத்துகிறது என்றும் புதுதில்லியில் உள்ள அறிவியல் – சுற்றுச்சூழலுக்கான ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

வாகன விபத்துகள் ஏற்படுத்தும் உயிரிழப்புகள், வாகனங்கள் வெளியிடும் புகையால் மாசு அடையும் காற்று மண்டலம் ஏற்படுத்தும் அகால மரணங்கள்- இவையெல்லாம் இந்தியாவிற்கு ஒரு சவாலாகவே இருந்து வருகின்றன. 2025-ஆம் ஆண்டுக்குள் வாகன விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளை 50 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்ற இலக்கை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது.

நம்நாட்டில் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்பதில் மோட்டார் வாகன ஓட்டுநர்களின் செயல்பாடுகள் திருப்தி அடையும் விதத்தில் இல்லை என்பதே கசப்பான உண்மை.

ஆண்டு ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்ற நம் நாட்டில், மூன்றில் ஒருவர் தகுந்த நேரத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு காப்பாற்றப்படாததால் உயிரிழக்கின்றார். காயம்பட்ட நபருக்கு முதலுதவி கூட செய்ய மனமின்றி, வழக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிடும் ‘ஹிட் அண்ட் ரன்’ மனநிலை நம்நாட்டு ஓட்டுநர்களிடம் மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது.

சாலை விதிகளை மீறுவதில் படித்தவர், படிக்காதவர்; இளைஞர், முதியவர்; ஆண், பெண் என்ற வேறுபாட்டை நம் நாட்டில் காணமுடிவதில்லை. அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டும், கைப்பேசியில் பேசிக் கொண்டும் வாகனம் ஓட்டுதல், முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல், தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுதல் போன்றவை தினசரி நிகழ்வுகளாக நம்நாட்டில் இருக்கும் பொழுது, சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை நம்மால் எப்படி குறைக்க முடியும்?

வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகள் கடுமையாக இருந்தபோதிலும், போதிய அனுபவம் இல்லாதவர்கள் இடைத்தரகர் மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுகின்ற நிலை நம்நாட்டில் தொடர்கின்ற நிலையைக் காணமுடிகிறது.

சாலை விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகப்படுத்தினால், ஓட்டுநர்கள் சாலை விதிமீறல்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் 2019-ஆம் ஆண்டில் மோட்டார் வாகனச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், அபராதத் தொகை உயர்வு சாலை விதிமீறல்களுக்குத் தீர்வாகாது என்பதுதான் உண்மையான கள நிலவரம்.

சாலையில் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் மேற்கொள்ளும் சோதனைகள் பெரும்பாலும் அபராதத் தொகை வசூலிப்பதற்காகவே செய்யப்படுகின்றன. இம்மாதிரியான வாகனத் தணிக்கைகள் மேலைநாடுகளில் நடத்தப்படுவதில்லை.

அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து, சாலை விதிமீறல்களில் ஈடுபடும் அனைத்து ஓட்டுநர்கள் மீதும் துரித நடவடிக்கை மேலைநாடுகளில் எடுக்கப்படுகிறது. அத்தகைய நடைமுறை நம்நாட்டில் பின்பற்றப்படவில்லை. அதற்குத் தேவையான நவீன தொழில் நுட்பமும் காவல்துறையில் முழுமையாக இல்லை.

சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகள் குறித்து பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகள் பெரும்பாலும் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான இன்றியமையாத் தேவையாகத்தான் நம்நாட்டில் கருதப்படுகிறது. இவ்வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை முடிவு பெறாமல் பல ஆண்டுகள் நிலுவையில் இருப்பதும், விசாரணையின் முடிவில் வழங்கப்படும் தண்டனை சாதாரண தண்டனையாக இருப்பதும் சாலை விபத்துகள் அதிக அளவில் நிகழ்வதற்கான காரணங்களாக அமைகின்றன. 

சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்தும், பாதுகாப்பான சாலைப் பயணம் குறித்தும் பள்ளிக் கல்வியில் கற்பிக்கப்பட்டடால் ஆண்டுதோறும் நிகழும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறையும்.

சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களைத் தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தேவையான நவீன தொழில் நுட்ப வசதிகளை அமைப்பதும், சாலை விபத்து வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை விரைவாக நடத்தி, தீர்ப்பையும் விரைவாக வழங்குவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கப் பெரிதும் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(23.09.2021 தேதிய தினமணியில் வெளியான கட்டுரை)

3 thought on “சாலை விபத்தும், சமுதாய இழப்பும்”
 1. ஐயா,
  சாலை விபத்து நிகழ்ந்தால் காவல்துறை விபத்து குறித்து முறையாக விசாரித்து யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது பாரபட்சம் இன்றி குற்றச்சாட்டு செய்து FIR போடவேண்டும் அதை தவிர்த்து உருவத்தில் பெரிய வாகனம் ஓட்டியவர் மீது FIR போடும் நடைமுறை இந்த நவீன காலத்திலும் மாறாமல் இருப்பதும் அதனால் விபத்துக்கு உண்மையான காரணமானவர் தப்பிப்பதும்(சட்டத்தின் மீது உள்ள பயம் நீங்குதல்) விபத்துகள் தொடர ஒரு காரணம் என்பது எனது கருத்து

 2. அய்யா வணக்கம்
  சாலை விபத்திற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கவன குறைவு மற்றும் வேகமாக ஓட்டுதல்
  சாலையில் கடக்கும் போதும் கவனமாக கடப்பது இல்லை
  சில இடங்களில் பாதுகாப்பாக செல்பவர்கள் மீது கவன குறையாக வருபவர்கள் விபத்து ஏற்படுத்தி விடுகிறார்கள்.

 3. அருமையான கட்டுரை சார். உரிமம் வழங்கும் விதிமுறைகள் கண்டிப்புடன் இருத்தல், மாணவப் பருவத்தில் போக்குவரத்துக் கல்வி, தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் நல்ல பலனைத் தரக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *