உண்மை ஒரு நாள் வெளிப்படும்

தமிழ்நாடு காவல்துறையின் மெச்சத் தகுந்த பணியைப்பற்றி பேசும்பொழுது, அதை ‘ஸ்காட்லாந்து யார்ட்’ போலீசுக்கு இணையானது என்று கூறுவதும், அதே சமயத்தில் தவறுகள் நிகழும் பொழுது, காவல்துறையை மிகவும் தரம் தாழ்த்த்p விமர்சிப்பதும் நம்நாட்டு மக்களின் வாடிக்கை.

குற்றவாளிகளைப் பிடிப்பது, அவர்களிடம் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வது, நீதிமன்ற விசாரணையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வழி செய்வது போன்றவை காவல்துறையின் பணிகளில் ஒரு பகுதி.

பொதுமக்களின் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகள் குறித்து விசாரித்து, நியாயமான தீர்ப்பு வழங்குவது காவல்துறையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். ஆனால், பல நேரங்களில் தங்களது நியாயமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குக் கூட பொதுமக்கள் காவல்நிலையம் செல்லத் தயங்குகிறார்கள் என்பதுதான் யதார்த்த நிலை.

அதற்கு காரணங்கள் பல இருப்பினும், கண்ணியமான முறையில் தங்களது பிரச்சினை குறித்து தீர விசாரணை செய்து, நியாயமான தீர்ப்பு காவல் நிலையங்களில் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்கள் மனதில் குறைந்து வருவதைக் காண முடிகிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் சில சம்பவங்கள் காவல் நிலையங்களில் நடப்பதும் உண்டு.

இது போன்ற சம்பவங்கள் காவல் நிலையங்களில் நிகழக் காரணம் என்ன? இரவு, பகல் என்று பாராமல் ஓய்வின்றி காவல்துறையினர் பணியாற்றுவதால்; ஏற்படும் மன அழுத்தம் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் சுய லாபத்திற்காக பொதுமக்களின் நியாயமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகான காவல்துறையினர் முயற்சிப்பதில்லை என்பது கள நிலவரமாக இருப்பதையும் காணமுடிகிறது.

காவல் நிலையங்களில் அவ்வப்போது நடைபெறும் தவறுகளைக் கண்காணித்து, சீர்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் காணப்படும் குறைபாடுகளும் பொதுமக்கள் மத்தியில் காவல்துறை நன்மதிப்பை இழப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

காவல் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் செய்யும் தவறுகளைச் சீர்படுத்தும் விரிவான நிர்வாக அமைப்பு கொண்டதுதான் காவல்துறை. இதைத் தெளிவுபடுத்தும் கொலை வழக்கு தொடர்பான நிகழ்வு ஒன்றைப் பார்ப்போம்.

1998-ம் ஆண்டு நான் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தேன். அப்போது கோவை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது.

கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்த பஞ்சாலை ஒன்றில் ஒரு இளம்பெண் பணியாற்றி வந்தார். ஒரு நாள் இரவு பணிக்குச் சென்ற அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அந்த பெண்ணின் உடல் பஞ்சாலைக்கு அருகில் இருந்த கிணற்றில் போடப்பட்டிருந்தது. பஞ்சாலையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர்தான் அந்தக் கொலையைச் செய்தார் என்பது வழக்கு.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் பொழுது வாதியும், இறந்து போன இளம்பெண்ணின் தாயாருமான பிரதான சாட்சி, போலீசாரின் புலன் விசாரணை குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

‘முதல் தகவல் அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள புகார் மனுவில் உள்ள கையெழுத்து என்னுடையது இல்லை. பஞ்சாலைக்கு வேலைக்குச் சென்ற என் மகளை பஞ்சாலை உரிமையாளரின் மகன்தான் பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, கொலையும் செய்து கிணற்றில் போட்டுவிட்டான். என் மகள் கிடந்த கிணற்றுக்கு அருகில் இருந்து கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் கைக்கடிகாரத்தைப் பஞ்சாலை உரிமையாளரின் மகன் கட்டியிருந்ததை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். பஞ்சாலை உரிமையாளரின் மகனை இவ்வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காக பஞ்சாலை ஊழியர் ஒருவரைக் குற்றவாளி என போலீசார் தவறாக முடிவு செய்துஇ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்’ என்று பாண்டிய நாட்டு மன்னின் அரசவையில் கண்ணகி வழக்குரைத்தது போன்று இறந்து போன இளம்பெண்ணின் தாய், புலன் விசாரணை செய்த போலீசார் மீது கடுமையான குற்றங்களைச் சாட்டி, புலன் விசாரணை மீதான அவரது அவநமபிக்கையை நீதிமன்ற விசாரணையின் போது வெளிப்படுத்தினார்.

இந்த வழக்கில் நீதிமன்ற நடவடிக்கையைக் கவனித்து வந்த ஆய்வாளர் உடனடியாக என்னைச் சந்தித்து முழு விவரங்களையும் கூறினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த புலன் விசாரணை அப்போது குடைச்சல் கொடுத்தது. ஏற்கனவே நடந்த புலன் விசாரணை குறித்து அறிந்து கொள்ள அந்த வழக்கின் கோப்புகளைப் பரிசீலனை செய்தேன்.

இறந்து போன இளம்பெண்ணின் பிரேதம் பஞ்சாலைக்கு அருகில் உள்ள கிணற்றுக்குள் கிடந்துள்ளது. அந்த கிணற்றுக்கு அருகில் இறந்து போன இளம்பெண்ணின் காதில் அணியும் தோடுகள் கிடந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய் பிரேதம் கிடந்த கிணற்றில் இருந்து மோப்பம் பிடித்தவாறு பஞ்சாலை வரைச் சென்று, பஞ்சாலையினுள் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளம் காட்டி நின்றது.

பஞ்சாலையினுள் நிகழ்ந்த அந்த குற்றச் சம்பவத்திற்கான ஆதாரங்களை மறைப்பதற்காக, அந்த பிரேதத்தைத் தூக்கிச் சென்று, அருகில் உள்ள கிணற்றுக்குள் போட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அப்படியானால், அந்த செயலில் குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று நபர்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது.

ஒரு பெண் தலைமைக் காவலருக்கு இறந்து கிடந்த இளம் பெண்ணின் பிரேதத்தைப் பாதுகாக்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் பணியை முடித்துவிட்டு, அவர் சமர்ப்பித்த அறிக்கை வழக்குக் கோப்பில் இருந்தது. சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேதத்தின் புகைப்படமும் வழக்குக் கோப்பில் இருந்தது.

அந்த இரண்டையும் ஆய்வு செய்ததில், பிரேதத்தின் மீதிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் சில முரண்பாடுகள் தெரியவந்தன. அந்தப் பெண் தலைமைக் காவலரை அழைத்து விசாரணை செய்ததில், ‘அந்த அறிக்கை நான் கொடுத்த அறிக்கை இல்லை. அறிக்கையில் உள்ள கையெழுத்தும் என்னுடையது இல்லை’ என்று அவர் கூறியது புலன் விசாரணையின் மீதான சந்தேகத்திற்கு வலுசேர்த்தது.

அந்த வழக்கின் புலன் விசாரணை முறையாகச் செய்யப்படாமல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைப் பட்டியலிட்டு, அப்போதைய காவல் ஆணையருக்குத் தெரியப்படுத்திவிட்டு, நீதிமன்ற விசாரணையைக் கவனித்து வந்த ஆய்வாளரை அழைத்தேன்.

‘இந்த வழக்கு மீதான நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து நடத்த வேண்டாம். இந்த வழக்கில் மறு புலன் விசாரணை செய்ய அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று ஆய்வாளருக்கு அறிவுரை வழங்கினேன். அதன்படி ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலனை செய்த நீதிமன்றம், ஆய்வாளரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. ‘மீண்டும் புலன் விசாரணை செய்து, ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் ஆய்வாளருக்கு ஆணை பிறப்பித்தது.

மறு புலன் விசாரணையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பஞ்சாலைத் தொழிலாளி அந்த இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. பஞ்சாலை உரிமையாளரின் மகன்தான் இந்;தக் கொடுஞ்செயலைச் செய்துள்ளான் என்பதும், அவருக்குத் துணையாக நான்கு பேர் இருந்துள்ளனர் என்பதும் மறு புலன் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

ஏற்கனவே மேற்கொண்ட புலன் விசாரணையில், பஞ்சாலை உரிமையாளரின் மகன் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் இருந்து வந்ததாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். அந்த மருத்துவமனை ஆவணங்களைப் பரிசீலனை செய்யாமலும், சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரிக்காமலும் அந்த வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்டு, பஞ்சாலை உரிமையாளரின் மகன் அந்த வழக்கில் சம்பந்தப்படவில்லை என்று புலன் விசாரணை அதிகாரி முடிவு செய்திருந்தார்.

ஆனால், மறு புலன் விசாரணையின் பொழுது, பஞ்சாலை உரிமையாளரின் மகன் சம்பவ தினத்தன்று சம்பவ நேரத்தில் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்பது தெரியவந்தது.

இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி முடித்ததும், இவ்வழக்கில் முதலில் புலன் விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் உள்பட மொத்தம் 6 பேர் மீது 376 (பாலியல் பலாத்காரம்), 302 (கொலை), 201 (ஆதாரங்களை மறைத்தல்) மற்றும் 120-பி (சதித்திட்டம்) ஆகிய இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த பெண் நீதிபதி ஒருவர், குற்றவாளிகள் அனைவரையும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்துவிட்டார். பின்னர், இந்தத் தீர்ப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இவ்வழக்கில் முதலில் புலன் விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் உள்பட 4 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கியது. முதல் குற்றவாளியாகிய பஞ்சாலை உரிமையாளரின் மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியதோடு, இறந்து போன இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் சிறப்பான முறையில் மறு புலன் விசாரணை செய்த ஆய்வாளர் சமுத்திரகனியை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டி, அதனைத் தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர்.

பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டியது காவல்துறை. அந்த துறையில் உள்ள மேல் அதிகாரிகளின் சீரிய மேற்பார்வை உரிய முறையில் இருந்தால், பொதுமக்கள் தயக்கமின்றி நாடிச் செல்லும் துறையாக காவல்துறை விளங்கும்.

***

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(தினத்தந்தி – 23.06.2017)

Previous post சாலை விபத்தும், சமுதாய இழப்பும்
Next post சாதியக் கொலைகளுக்கு முடிவு காண்போம்!

One thought on “உண்மை ஒரு நாள் வெளிப்படும்

  1. மிகவும் அபூர்வமாக இது போன்ற மறு விசாரணை நடந்துள்ளது. அதனை அங்கீகரிக்கும் வகையில் வழக்கு மேல்முறையீட்டில் தண்டனையில் முடிவடைந்ததும் மிகவும் சிறப்பானது. இது போன்ற காவல்துறையின் செயல்பாடுகளை அரசு மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் காவல்துறை மீதுள்ள நம்பிக்கை மேம்படுவதோடு எதிர்மறை பிம்பங்களும் உடையும் என்று நம்புகிறேன் 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *