சாதியக் கொலைகளுக்கு முடிவு காண்போம்!

தென்மாவட்டங்களில் தொடரும் சாதியக் கொலைகளும், பழிக்குப் பழியாக நிகழும் வன்முறை நிகழ்வுகளும் மிகவும் கவலையளிக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமங்கள் பலவற்றிலும் குறிப்பிட்ட ஒரு சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வசித்துவரும் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியே சென்றால், மாற்றுச் சமூகத்தினர் கொலைவெறித் தாக்குதல் நடத்திவிடுவார்களோ என்ற அச்ச உணர்வுடனே வாழக்கின்றார்கள்.

பதற்றம் தென்படும் கிராமங்களில் நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தும், விவசாய வேலைகளுக்குக்கூட தைரியத்துடன் செல்லும் மனநிலையின்றி அக்கிராம மக்கள் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

சாதியக் கொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதும், பதற்றம் நிறைந்த கிராமங்களில் அதிக எண்ணிக்கையிலான காவலர்களைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதும் மட்டுமே சாதியக் கொலைகளைத் தடுத்து விடாது.

கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் தென்தமிழகத்தில் தலைதூக்கிய சாதிய மோதல்கள், அவற்றை அரசும், காவல்துறையும் எதிர்கொண்ட விதங்கள், சாதிய மோதல்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களையெடுக்கும் வகையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பின்நோக்கிப் பார்க்க வேண்டிய கட்டாயம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

இரு சமூகத்தினரிடையே பொது இடங்களில் நிகழும் சிறு சிறு வாய்ச்சண்டை, தகராறு போன்றவை குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் புறக்கணித்ததே சாதியக் கொலைகள் நிகழக் காரணம் என்பதைக் கடந்த கால நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு சாதியக் கொலைகள் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அங்கு 2012-ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கிடையே கைகலப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட தலைவரின் குருபூஜை தினத்தன்று ஒரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அதை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்த்தனர்.

பள்ளி மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த இந்த மோதலை சிறுவர் சண்டையாகக் கருதி, அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காவல்துறை அமைதி காத்தது. அதைத் தொடர்ந்து அக்கிராமத்தில் நிகழ்ந்த ஓரிரு விரும்பத்தகாத சம்பவங்கள் சாதியக் கொலைகளுக்கு வித்திட்டன.

2013-ஆம் ஆண்டில் அந்தப் பகுதியில் சாதிக்கு ஒருவராக இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தால் கொலையானார்கள். கொலையான இளைஞர்கள் மீது குறிப்பிட்டுச் சொல்லும்படியான குற்றப்பின்னணி எதுவும் இல்லை. அப்படியிருக்க அந்த அப்பாவி இளைஞர்கள் சாதிய வன்மத்தால் ஏன் கொலை செய்யப்பட வேண்டும்?

அப்பாவி இளைஞர் ஒருவரைக் கொலை செய்வதன் மூலம் குற்றப் பின்னணி எதுவும் இல்லாத அச்சமூக இளைஞர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தி, அவர்களின் செயல்பாட்டை முடக்க மேற்கொள்ளப்படும் முயற்சிதான் இத்தகைய கொலைகள்.

2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இரு சாதியக் கொலைகளைத் தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டில் மற்றொரு சாதியக் கொலை அப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. ஆக மொத்தம் மூன்று சாதியக் கொலைகள் 2013 – 2014 ஆண்டுகளில் கோபாலசமுத்திரம் கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் நிகழ்ந்துள்ளன.

2014-ஆம் ஆண்டில் கொலையானவரின் மகன் தற்பொழுது வாலிபப் பருவம் அடைந்துள்ளான. அவன் தலைமையில் அண்மையில் பழிவாங்கும் படலம் தொடங்கி உள்ளது. அதன் விளைவாக இரண்டு சாதியக் கொலைகள் இதுவரை அந்த பகுதியில் நிகழ்ந்துள்ளன.

நெல்லைப் பகுதியில் நிகழ்ந்த இவ்விரு சாதியக் கொலைகள் ஒருபுறமிருக்க, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாதியக் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சாதியக் கொலை சம்பவம் ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளது.

இப்படி தொடர்ந்துகொண்டே இருக்கும் சாதியக் கொலைகள் முடிவுக்கு வருமா? அரசும், காவல்துறையும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பொறுத்தே இக்கேள்விக்கு விடை கிடைக்கும்.

தென்மாவட்டங்களில் நிகழ்ந்த சாதியக் கொலைகள், பழிக்குப் பழியாக நிகழ்த்தப்பட்ட கொலைகள் ஆகியவற்றின் மீதான குற்ற வழக்குகள் பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் நீதிமன்ற விசாரணை நிறைவடையாமல் நிலுவையில் இருக்கின்றன. அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளிகள் பலர் சமூகத்தில் நிமிர்ந்த நெஞ்சுடன் உலா வருவதோடு, பல்வேறு கொடுங்குற்றங்கள் நிகழக் காரணமாகவும் இருந்து வருகின்றனர் என்பதுதான் கள நிலவரம்.

சாதியக் கொலை வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கக் காரணம், கொலை குற்றவாளிகள் பலர் நீதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகாமல் இருப்பதுதான். அவர்களைப் பிடித்து நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நீதிமன்றம் வழங்கியுள்ள பிடி ஆணைகள் (வாரண்டுகள்) நிறைவேற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.

தேடிப் பார்த்தும் கிடைக்காத குற்றவாளிகளை ‘பிரகடனம் செய்யப்பட்ட குற்றவாளிகள்’ என அறிவித்து, அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்யும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதிலும், அக்குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறையிடம் சுணக்கம் இருப்பதைக் காணமுடிகிறது.

சாதியக் கொலை வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை விரைவாக நடைபெறாமல் இருப்பது சாதியக் கொலைகள் தொடர்ந்து நிகழக் காரணமாக அமைந்துள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டும் விதத்தில், சாதியக் கொலை வழக்குகளை விரைவாக விசாரித்து,  தீர்ப்பு வழங்குவதற்காக மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ‘சிறப்பு நீதிமன்றங்கள்’ அமைப்பதன் அவசியம் குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

சாதிய உணர்வு மேலோங்கி இருக்கும் கிராமங்களில் சாதிய மோதல்கள் குறித்து தீட்டப்படும் திட்டங்கள் குறித்த தகவல்களை உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும் பணியில் இருந்து வரும் மாவட்டத் தனிப்பிரிவு உளவு போலீஸாரும், மாநில உளவுப் பிரிவைச் சேர்ந்த போலீஸாரும் (எஸ்.பி.சி.ஐ.டி) தங்களின் பணியிடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கள நிலவரத்தை முழுமையாக காவல்துறையின் உயர்நிலை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லாத நிலை காணப்படுகிறது.

காவல் நிர்வாகத்தின் கண்களாக விளங்க வேண்டிய உளவுப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, சீர்படுத்தும் பணி முன்னுரிமை பெற வேண்டும்.

சாதியக் கொலைகள் தொடர்பாகத் திட்டமிடுதல், கொலையாளிகளைத் தேர்வு செய்தல், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் உள்ளிட்டவை பெரும்பாலும் கொலை நிகழும் மாவட்டத்திற்கு வெளியே கட்டமைக்கப்படுவதை கடந்த கால சம்பவங்கள் வெளிப்படுத்துகி;ன்றன. இத்தகைய சதித்திட்டங்களை முறியடிக்க ஒருங்கிணைந்த உளவு தகவல் பரிமாற்றம், அதைத் தொடர்ந்து எடுக்கப்படும் கள நடவடிக்கைகள் ஆகியவற்றை மாநில அளவில் ஒருங்கிணைக்கும் அமைப்பு கால்துறையில் திறம்பட செயலாற்றும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

நெல்லைப் பகுதிக்கு பணி இடமாற்றம் செய்யப்படும் காவல் அதிகாரிகள் பலர் தண்டனை பணியாகவே (பனிஷ்மென்ட போஸ்டிங்) அங்கு வருகின்றனர். எனவே, அவர்கள் பணியில் ஆர்வம் காட்டும் மனநிலையில் இருப்பதில்லை. திறமையுடன் செயல்படும் இளம் காவல் அதிகாரிகளை நெல்லைப் பகுதியில் பணியாற்ற அனுப்பி வைக்க வேண்டும். முன்பு இம்முறை இருந்தது.

திருநெல்வேலி உள்ளிட்ட சில தென்மாவட்டங்களில் சாதிய வன்முறைகளைத் தூண்டும் விதத்தில் சில பழக்கங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றன.

சீருடை அணிந்து பள்ளிக்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் சாதியை வெளிப்படுத்தும் நிறத்தில் ‘ரப்பர் பேண்ட்’ ஒன்றைக் கைகளில் அணிந்து வருவதும், மாணவியர் அவரவர் சாதியை வெளிப்படுத்தும் நிறமுடைய பொட்டை நெற்றியில் வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதும் நடைமுறையாக இருந்து வருகிறது.

பள்ளி மாணவ – மாணவியர்களின் இச்செய்கை சீருடை அணிவதின் நோக்கத்தையே சிதைக்கச் செய்கிறது. கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளி வளாகத்தினுள் சாதிய உணர்வை வெளிப்படுத்தும் இச்செய்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாமல், கண்டும் காணாமல் கடந்து சென்று விடுகின்றனர்.

(தென்மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் சமீபத்தில் சாதி அடிப்படையில் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த மோதல் சம்பவம்)

சாலைகளில் உள்ள தகவல் பலகைகள், மின் கம்பங்கள், பாலங்கள் போன்றவற்றில் சாதிய வண்ணங்கள் ஆக்கிரமித்துள்ளன. சாலை ஓரங்களில் ஆங்காங்கே சாதியக் கொடிக்கம்பங்கள், சாதிய உணர்வை வெளிப்படுத்தும் ‘ஃப்ளக்ஸ் போர்டுகள்’ வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு ஏற்படுத்தப்படும் அவமதிப்பு சாதிய கொலைகள் நிகழக் காரணமாக அமைந்ததும் உண்டு.

சாதிய வண்ணம் கொண்ட ரப்பர் பேண்ட், பொட்டுகள் போன்றவற்றைப் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்துதல், அனுமதியின்றி சாலை ஓரங்களில் வைக்கப்படும் கொடிக்கம்பங்கள், ஃப்ளக்ஸ் போர்டுகள் உள்ளிட்ட சாதிய வன்முறைக்கு வித்திடும் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து, இவற்றுக்குத் தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் நிகழும் சாதியக் கொலைகள் அந்த மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதை அனைத்து சமூக மக்களும் உணர வேண்டிய தருணம் இது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(12.10.2021 தேதிய தினமணியில் வெளியான கட்டுரை)

Previous post உண்மை ஒரு நாள் வெளிப்படும்
Next post சிறார் இல்லங்களில் இருந்து தப்பி ஓடும் சிறுவர்கள்: காரணம் என்ன?

2 thoughts on “சாதியக் கொலைகளுக்கு முடிவு காண்போம்!

  1. தங்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலைக்காக மாறி மாறி பழிவாங்கல் கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பெண் படுகொலை வரை தொடர்கின்றது : இந்த கொலைகளில் அந்த இரு பிரிவினரும் பழிவாங்கும் படலத்திற்கும் தங்கள் பாதுகாப்பிற்கும் நாட்டில் எங்கெல்லாம் தங்கள் சாதியினர் உள்ளனரோ அங்கு எல்லாம் சென்று இளைஞர்களிடம் சாதிவெறியை தூண்டி மூளைசலவை செய்தும் நிதிதிரட்டவும் சாதி அமைப்பு கிளைகளை உருவாக்கவும் செய்து அடுத்த கொலைக்கு தயாராக களம் அமைக்கின்றனர். இதை எல்லாம் காவல்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : இந்த பழிவாங்கும் தொடர் கொலைகளுக்கு என காவல் துறையில் தனிபிரிவு அமைத்து கடுமையான நடவடிக்கை எடுத்து இக்கொலைகளுக்கு தொடர்புடைய பின்னனியில் உள்ள சாதி அமைப்புகளை தடை செய்தால் தான் தென் மாவட்டம் அமைதியாக சாதி மோதல் இல்லாமல் இருக்கும்

  2. திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக இந்த சாதிய கொலைகள் நடந்து வருகின்றன. தங்களைப் போன்ற சில காவல்துறை உயரதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் போது இவை பெரிதளவில் கட்டுப்படுத்தப் படுகின்றன. அந்த அதிகாரிகள் மாற்றத்தில் சென்ற சில காலத்திற்குப் பின்னர் பழி வாங்கல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அரசு இதற்கு தனி கவனம் கொண்டு செயல்பட்டால் இந்த மோதல்களைக் களையலாம் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *