இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் இருந்து சிறுவர், சிறுமியர்கள் தப்பி ஓடுவதும், அவர்களில் சிலரைக் கண்டுபிடித்து மீண்டும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் ஒப்படைப்பதும் ஆன செயல்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. கண்டுபிடிக்க முடியாத சிறார்கள் என்ன ஆனார்கள்? என்பது புதிராகவே இருந்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் இல்லம் ஒன்றின் வரவேற்பு பிரிவில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுவர்களில் ஏழு பேர் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதிகாலை நேரத்தில் இல்லப் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் கண்ணயர்ந்த நேரம் பார்த்து அந்த ஏழு சிறுவர்களும் இல்லத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

தப்பியோடிய சிறுவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் ஹரியானா, உத்திரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அச்சிறுவர்கள் அந்த குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்தார்கள் என்றும், அவர்களில் சிலருக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது என்றும், சிலரின் பெற்றோர்கள் பிரிந்து வாழ்கின்றனர் என்றும், சிலர் பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தப்பி ஓடிய சிறுவர்கள் அனைவரும் அவரவர் மாநிலத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் ஏற்கெனவே தங்க வைக்கப்பட்டு இருந்தவர்கள் என்பதும், அங்கிருந்து தப்பித்து ‘திருட்டு ரயில்’ ஏறி தமிழ்நாடு வந்துள்ளனர் என்பதும்,   ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித் திரிந்த அவர்களை ‘சைல்ட் லைன்’ மற்றும் சிறார்களைக் கண்காணிக்கும் காவலர்கள் கண்டறிந்து, சென்னையிலுள்ள அரசினர் சிறுவர் இல்லத்தின் வரவேற்பு பிரிவில் சேர்க்கப்பட்டனர் என்பதும் தெரியவருகிறது.

குழந்தைகள் இல்லத்தின் வரவேற்பு பிரிவில் தங்க வைக்கப்படும் சிறார்கள் மீது குறிப்பிட்டுச் சொல்லும்படியான குற்றச்சாட்டுகள் எதுவும் இருக்காது. அச்சிறார்களிடம் நன்னடத்தை அலுவலர் விசாரணை மேற்கொண்டு, அவர்களின் சொந்த மாநிலம், பிறந்த ஊர், பெற்றோர்களின் பெயர், முகவரி, தொழில் உள்ளிட்ட தகவல்களைத் திரட்டி, ஆய்வறிக்கையைக் குழந்தைகள் நலக் குழுவிடம் கொடுப்பார். அதன் பின்னர் அச்சிறார்களை அவர்களுடைய சொந்த மாநிலத்திலுள்ள குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுவரை அச்சிறார்கள் குழந்தைகள் இல்லத்தில் உள்ள வரவேற்பு பிரிவில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்படுவார்கள்.

குழந்தைகள் இல்லங்களில் இருந்து சிறுமிகளும் தப்பியோடிய சம்பவங்களும் உண்டு. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் அரசு சாரா நிறுவனம் நடத்திவரும் குழந்தைகள் இல்லம் ஒன்றிலிருந்து அண்மையில் தப்பியோடிய மூன்று சிறுமிகளைச் சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் தக்கலை என்ற இடத்தில் கண்டுபிடித்து, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தற்காலிகமாகத் தங்க வைத்துள்ளனர்.

சென்னை அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருந்து தப்பி ஓடிய ஏழு சிறுவர்களில் சிலர் இராமேஸ்வரத்திலும், சிலர் விஜயவாடாவிலும் கண்டுபிடிக்கப்பட்டனர். ஒருவர் மட்டும் இதுநாள்வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

குழந்தைகள் இல்லங்களின் பராமரிப்பில் இருந்துவரும் சிறுவர்கள், சிறுமியர்கள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. அவர்கள் ஏன் தப்பியோடுகின்றனர்? என்ற கேள்விக்கான விடை தேடும் முயற்சியில் கிடைத்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

138 கோடி பேர் வாழ்ந்துவரும் நம்நாட்டில் 26% பேர் 14 வயதுக்கும் குறைவான குழந்தைகள். அதாவது, நான்கில் ஒருவர் குழந்தையாக இருக்கின்ற நம்நாட்டில் கோடிக் கணக்கான குழந்தைகள் பெற்றோர்களால் முறையாக வளர்க்கப்படுவதில்லை. பெற்றோர்களை இழந்த, பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட, பெற்றோர்களால் வெறுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மிகுந்து காணப்படும் நம்நாட்டில், அத்தகைய குழந்தைகளைப் பேணிக் காப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் குழந்தைகள் இல்லங்கள்.

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நம்நாட்டில் 6,368 குழந்தைகள் இல்;லங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் அதிகமான குழந்;தைகள் இல்லங்கள் உள்ள மாநிலங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டில் 1,103 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் லட்சக் கணக்கான குழந்தைகள் இந்;த இல்லங்களில் தங்கியுள்ளனர்.

உண்ண உணவு, உடுத்த உடை, தங்க இருப்பிடம் ஆகியவற்றைக் கொடுப்பதுதான் குழந்தைகள் இல்லங்களின் பொறுப்பு என்ற மனநிலையோடு செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் பலவற்றைக் காணமுடிகிறது. அடிப்படை தேவைகளான உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றைக் கடந்து, வளரும் பருவத்திலுள்ள இளம் சிறார்களின் உணர்வைப் புரிந்து கொள்ளாத குழந்தைகள் இல்லங்களின் நிர்வாகமும், பாசத்திற்கு ஏங்கித் தவிக்கும் சிறார்களின் மனநிலையும், குழந்தைகள் இல்லங்களிலே கைதிகளைப் போன்று அடைத்து வைத்திருக்கும் நிர்வாக செயல்பாடும் துடிப்பான சிறார்களை இல்லங்களில் இருந்து தப்பியோடும் மனநிலைக்குத் தள்ளி விடுகிறது என்பது கள விசாரணையில் தெரியவருகிறது.

வயதுக்கு மீறிய துடிப்பான செயல்பாடுகளுடன் வளரும் சில சிறார்களை இல்ல நிர்வாகிகள் கையாளும் விதம் அச்சிறார்களைச் சட்டத்திற்கு முரணான செயல்களைச் செய்யத் தூண்டிவிடுவதும் உண்டு. அதன் நீட்சியாக அச்சிறார்கள் குழந்தைகள் இல்லங்களில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்த சம்பவங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

ரயில் நிலையம் உள்;ளிட்ட பொது இடங்களில் இருந்து சைல்ட் லைன் மூலம் அழைத்து வந்து,  குழந்தைகள் இல்லங்களில் செயல்படும் வரவேற்பு பிரிவில் தங்க வைக்கப்படும் சிறார்களை மூன்று மாதங்களுக்குள் அவர்களின் சொந்த மாநிலத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதில் ஏற்படும் காலதாமதம் சிறார்களை இல்லத்திலிருந்து தப்பி ஓடும் மனநிலைக்குத் தள்ளிவிடுவதும் உண்டு.

அரசினர் குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களின் கைச்செலவுக்கு மாதம்தோறும் ஒரு சிறு தொகையை ‘பாக்கெட் மணி’ என்ற பெயரில் அரசின் நிதி ஆதாரத்திலிருந்து கொடுக்கும் பழக்கம் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. தற்பொழுது ஒவ்வொரு சிறாருக்கும் மாதம் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் ‘பாக்கெட் மணி’யாகக் கொடுக்கப்படுகிறது. அந்த தொகையையும் மாதம் தோறும் கொடுக்காமல், அந்த சிறார் குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியே செல்லும்பொழுது மொத்தமாக கணக்கிட்டு கொடுக்கப்படுவதாகத் தெரியவருகிறது.

இன்றைய காலகட்டத்தில் மாதம் ஒன்றுக்கு ‘பாக்கெட் மணி’யாக மாநில அரசின் நிதியிலிருந்து கொடுக்கப்படும் ஐந்து ரூபாயைக் கொண்டு குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்குப் பயன்படும் பொருள் எதனையும் வாங்க முடியாது. மாதம்தோறும் கொடுக்கப்பட வேண்டிய ‘பாக்கெட் மணி’யை அந்த சிறார் குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியேறும் பொழுது மொத்தமாகக் கொடுப்பது என்பது வேதனைக்குரிய செயலாகும். இது குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமானது ஆகும்.

சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வந்தாலும், அவைகளின் நிர்வாக செயல்பாடுகள் சிறைத்துறை கையேட்டின் (Prison Manual) வழிகாட்டுதலின்படி தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இத்தகைய செயல்பாடுகள் சிறார் நீதி சட்டத்திற்கு (Juvenile Justice Act) முரணானது ஆகும். குழந்தைகள் இல்லப் பராமரிப்பு, குழந்தைகள் இல்லப் பணியாளர்கள் நியமனம், இல்லப் பணியாளர்களுக்கான பயிற்சி உள்ளிட்டவைகளை வரைமுறைப்படுத்தும் கையேடு (Manual for Children Homes) உருவாக்கப்பட வேண்டியதின் அவசியத்தை சமூகப் பாதுகாப்புத் துறை உணர்ந்து செயல்படுவது சிறார்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்குப் பெரிதும் துணைபுரியும்.

குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் உரிய கவனம் செலுத்தத் தவறினால், காலப்போக்கில் அச்சிறார்கள் சமுதாயத்திற்கு எதிரானவர்களாக மாறிவிடக் கூடும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(11.10.2021- ஆம் தேதிய இன்மதி இணைய வழி இதழில் வெளியான கட்டுரை)

https://inmathi.com/2021/10/11/26589/?lang=ta

3 thought on “சிறார் இல்லங்களில் இருந்து தப்பி ஓடும் சிறுவர்கள்: காரணம் என்ன?”
  1. அய்யா வணக்கம்
    சிறார்களுக்கு அன்பாக பேசாததாலும் அவர்களுக்கு மனம் வருத்தம் வருகிறது.அவர்களுக்கு மனநிலை ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

  2. இந்த பதிவு மிக முக்கியமான கருத வேண்டும்.ஏன் எனில் குழந்தை /சிறார் பருவத்தில் இல்லங்களில் நல்ல முறை யில் அன்புடன் அதே நேரம் கண்டிப்புடன் பராமரிக்க தவறினால் சமுதாயத்தில் பிற் காலங்களில் கொடும் குற்ற செயல்கள் செய்யும் சூழ்நிலை க்கு தள்ளப் படுகிறார்கள்.
    இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

  3. தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *