வாருங்கள்! புலன் விசாரணை செய்யலாம்!!

‘துப்பறியும் திறனை வெளிப்படுத்த பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு’ என்ற தலைப்பில் மத்திய மண்டல காவல்துறை தலைவரின் பத்திரிக்கை செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மத்திய மண்டலத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் மொத்தம் 15 கொலை வழக்குகளும், 3 ஆதாயக் கொலை வழக்குகளும் கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும், அந்த கொடுங்குற்ற வழக்குகளைக் கண்டுபிடிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமுள்ள பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பத்திரிக்கை செய்தி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் அந்த பத்திரிக்கை செய்தியில் இடம் பெற்றுள்ளன.

நீண்ட காலமாக காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையில் இருந்துவரும் அந்த கொலை மற்றும் ஆதாயக் கொலை வழக்குகளைக் கண்டுபிடித்து தருபவருக்கு அல்லது வழக்குகளைக் கண்டுபிடிக்க பயனுள்ள தகவல்களைத் தருபவருக்கு வெகுமதியாக வழக்கு ஒன்றுக்கு ரூ.10,000/- வழங்கப்படும் என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை வழக்குகளில் கொலை நிகழ்ந்த ஓரிரு வாரங்களிலே கொலையாளிகள் யார் என்பதும், கொலை செய்ததற்கான விரோதம் என்ன என்பதையும் புலன் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதில் வேண்டுமானால் காலதாமதம் ஏற்படலாம்.

கொலை நிகழ்ந்து சில ஆண்டுகள் கழிந்த பின்னரும், கொலைக்கான விரோதமும், கொலை செய்தவர்கள் குறித்த துப்பும் கிடைக்கவில்லை என்றால், அம்மாதிரியான கொலை வழக்குகளில் புலன் விசாரணைக்கு எதிர்வினை ஆற்றும் சில சக்திகள் களத்தில் செயல்பட்டுள்ளன அல்லது செயல்பட்டு வருகின்றன என்பதில் ஐயமில்லை.

கொலையில் இறந்துபோனவரின் குடும்பத்தினர்கள் கொலையாளிகளின் மிரட்டலுக்குப் பயந்து உண்மையை வெளிப்படுத்தாமல் இருக்கலாம்; கொலையாளிகள் சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் பணபலம் போன்றவற்றால் புலன் விசாரணையை முறையாக செய்யவிடாமல் அணைபோட்டு தடுத்திருக்கலாம்; கொலையாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் காவல்துறையினரின் பங்களிப்பு கூட இருந்திருக்கலாம்.

இம்மாதிரியான சிக்கல்களுடைய கொலை வழக்குகளில் துப்பு துலக்கி, கொலையாளிகளைக் கண்டறிய பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், தங்களிடம் உள்ள துப்பறியும் திறனை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற ஆவல் மிகுந்த பொதுமக்களை நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவரும் கொலை வழக்குகளில் துப்பறிந்து, அவ்வழக்குகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தலாமா? அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் என்ன? இம்மாதிரியான செயல்கள் குறித்து சட்டம் என்ன கூறுகிறது? என்று பார்ப்போம்.

மத்திய மண்டல காவல்துறை தலைவர் பத்திரிக்கை செய்தி வாயிலாக கொடுத்த அழைப்பை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் பொதிந்துள்ள துப்பறியும் திறனை வெளிப்படுத்த முன் வருவார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களில் சிலர் குற்றவியல் மற்றும் சட்டம் தொடர்பான படிப்பு படித்தவர்களாகவும் கூட இருப்பார்கள். அப்படிபட்ட ஒருவர் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை அணுகி, ஒரு குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கொலை வழக்கு ஒன்றில் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட விரும்பம் தெரிவித்தால், அதைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள் என்ன?

அந்த துப்பறிவாளர் நிலுவையில் உள்ள ஒரு கொலை வழக்கு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள அனுமதி கேட்டால், அந்த வழக்கு தொடர்பான விபரங்களை அவருக்குக் கொடுக்கலாமா?

வழக்கை கண்டுபிடிப்பதற்காக பயனுள்ள தகவல்களைத் திரட்டுவதாகக் கூறி, பொதுமக்களிடம் அந்த நபர் மேற்கொள்ளும் வெளிப்படையான அல்லது ரகசியமான விசாரணையை காவல்துறை ஏற்றுக் கொள்கிறதா?

காவல்துறையின் அனுமதி பெற்ற துப்பறிவாளர் என்ற பெயரில் அந்த நபர் வழக்கில் சந்தேகப்படுபவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மற்றும் நடத்தும் பேரம் எத்தகையதாக இருக்கும்?

தங்களுக்கு பிடிக்காத நபர்களை அந்த கொலை வழக்கில் திட்டமிட்டு சிக்க வைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது துணைபுரியுமா?

சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு, நேர்மையான முறையில் தகவல் திரட்டி, அக்கொலையை யார், எதற்காக செய்தார்கள் என்ற விவரங்களை தகுந்த ஆதாரங்களுடன் காவல்துறைக்கு துப்பு கொடுக்கக்கூடிய நபர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன?

தங்களின் துப்பறியும் திறனை வெளிப்படுத்தும் ஆர்வத்துடன் கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகளைக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளும் தனி நபர்கள், அவர்களின் உயிரை விலையாகக் கொடுத்த சம்பவங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதன் நீட்சியாக, சங்கிலித் தொடராக கொலைகள் நிகழ்ந்த வரலாறும் உண்டு.

போலீசாரால் கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள், ஆதாயக் கொலை வழக்குகள் உள்ளிட்ட கொடுங்குற்ற நிகழ்வுகளில் துப்பு துலக்குவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடுவது தவறான அணுகுமுறையா? என்ற கேள்வி வாசகர்கள் மனதில் எழக்கூடும்.

சிக்கலான குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் பொதுமக்களின் பங்களிப்பு நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், ‘துப்பறியும் திறனை வெளிப்படுத்த வாருங்கள்; நிலுவையில் உள்ள கொலை வழக்குகளைக் கண்டுபிடிப்பதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று குற்றப் புலனாய்வில் பொதுமக்களை வெளிப்படையாக ஈடுபடுத்தும் நடைமுறை காவல்துறையில் இல்லை. அம்மாதிரியான செயலுக்கு சட்டத்திலும் இடமில்லை. மாறாக, குற்ற வழக்குகள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும், ரகசியமாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை அணுகி, தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்கும் நடைமுறை காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வருகிறது. அப்படி தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதி கொடுப்பதும், அவர்களின் பெயர்களை ரகசியமாக வைத்திருப்பதும் காவல்துறையில் உள்ள நடைமுறை.

தங்களிடம் உள்ள துப்பறியும் திறனை வெளிப்படுத்தி, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைப் பொதுமக்களில் யாரேனும் கண்டுபிடிக்கும் செயலில் ஈடுபட சட்டம் அனுமதிக்கிறதா?

குற்ற வழக்குகளில் புலன் விசாரணை எப்படி நடத்த வேண்டும்? என்பதை குற்றவியல் நடைமுறை சட்டமும், காவல் நிலை ஆணைகளும் வரையறை செய்துள்ளன.

முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் காவல் அதிகாரி மட்டும்தான் அந்த குற்ற வழக்கில் புலனாய்வு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. அந்த புலனாய்வு அதிகாரிக்கு உதவியாக காவலர்கள் யாரேனும் தேவைப்பட்டால், அதற்கான காரணங்களை வழக்கு நாட்குறிப்பில் அவர் குறிப்பிட வேண்டும். மேலும், அந்த விபரங்களை அந்த வழக்கின் புலன் விசாரணையை மேற்பார்வை செய்யும் அவரது உயரதிகாரிக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதற்காக அந்த வழக்குகள் நிலுவையிலுள்ள உட்கோட்ட காவல் அதிகாரியோ அல்லது அவரது உயரதிகாரிகளோ தனிப்படை அமைக்க விரும்பினால், அது குறித்து எழுத்து மூலமாக ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

புலன் விசாரணை அதிகாரிக்கு உதவியாக செயல்படும் காவலர்களும், தனிப்படை உறுப்பினர்களும் அந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையின் பொழுது, நீதிமன்றத்தில் ஆஜராகி, புலன் விசாரணையில் அவர்கள் மேற்கொண்ட பணி குறித்து சாட்சியம் அளிக்க வேண்டும்.

இந்த நடைமுறை பின்பற்றப்படாமல், துப்பறியும் திறனை வெளிப்படுத்தும் ஆர்வமுள்ள பொதுமக்களால் நிலுவையிலுள்ள குற்ற வழக்கைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அனைத்தும் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பானது ஆகும்.

சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகளை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நடைமுறையில் காலப்போக்கில் எதிர்மறை விளைவுகளை விளைவிக்கும் என்பதற்கு சான்றுகள் பல உண்டு. காவலர்களின் நண்பர்கள் (Friends of Police) என்ற பெயருடன் நம்மாநிலத்தில் செயல்பட்டு வந்த அமைப்பு காலப்போக்கில் குற்றவாளிகளுக்குத் துணை போன சம்பவங்களும், குற்றவாளிகளாக உருமாறி செயல்பட்ட சம்பவங்களும் பல உண்டு. தற்பொழுது, அந்த அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினர் நேர்மையுடன் அவர்களின் பணியில் ஈடுபடுகின்றனர் என்ற உணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டால், எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் பொதுமக்கள் அவர்களுக்குத் தெரிந்த ‘குற்றம் சார்ந்த தகவல்’களைச் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

Previous post சிறார் இல்லங்களில் இருந்து தப்பி ஓடும் சிறுவர்கள்: காரணம் என்ன?
Next post விசாரணை மறுக்கப்பட்ட புகார்

2 thoughts on “வாருங்கள்! புலன் விசாரணை செய்யலாம்!!

  1. அய்யா வணக்கம்
    நல்ல தகவல்
    தனியார் துப்பறியும் நிறுவனங்கள் தப்பு செய்பவர்களிடம் பணம் வாங்கி கொண்டு தப்பை மறைப்பார்கள்

  2. குற்றங்களைக் கண்டு பிடிப்பதில் பொது மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தகவல் சொல்வதோடும் சாட்சி அளிப்பதோடும் அவர்கள் பணி முடிந்து விடுகிறது. அதைத் தாண்டி புலனாய்வில் அவர்கள் ஈடுபட்டால் பல எதிர்மறையான செயல்களை அவர்களும் காவல்துறையினரும் எதிர் கொள்ள வேண்டிய க்ஷ இருக்கும் என்று நம்புகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *