நாகரிக வளர்ச்சியடைந்த, கல்வி பரவலாக்கப்பட்ட இன்றைய சமுதாயத்தில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. இது போன்ற சம்பவங்கள் குறித்து சமூகத்தில் கடும் கண்டனக் குரல்கள் எழுகின்றன. மிருகத்தனமான இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து சமுதாயத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படுவதைக் காணமுடிகிறது.

அதே சமயம், வயது முதிர்ந்து பெண்களின் மீது தொடுக்கப்படும் பாலியல் பலாத்கார செயல்கள் சமுதாயத்தில் எப்படி பார்க்கப்படுகின்றன? அந்த கொடுஞ்செயல்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளைக் காவல்துறை எப்படி எடுக்கிறது? அந்தக் குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மீது நீதி தேவதையின் பார்வை எப்படி இருக்கிறது? போன்ற கேள்விகளுக்கான விடை தேடலை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள். அப்போது நான் வடக்கு மண்டல காவல்துறை தலைவராகப் பணிபுரிந்து வந்தேன். பூ வியாபாரம் செய்யச் சென்ற சுமார் 55 வயதுடைய பெண் ஒருவர் காணவில்லை என்று அவரது மகனும், உறவினர்கள் சிலரும் கூடுவாஞ்சேரி காவல்நிலையம் சென்று புகார் தெரிவித்துள்ளனர்.

தினந்தோறும் மாலை 4 மணி அளவில் வள்ளலார் நகரில் உள்ள தன் வீட்டில் இருந்து பூக்கூடையில் பூக்களை அடுக்கிக் கொண்டு, செங்கல்பட்டு – தாம்பரம் ரெயில் பாதையைக் கடந்து சென்று பூ வியாபாரம் செய்துவிட்டு, மாலை சுமார் 6 மணி அளவில் வீடு திரும்புவார் அந்த பெண். அன்று எப்போதும் போல் வீடு திரும்பாததாலும், பல இடங்களில் தேடிப் பார்த்தும் தகவல் இல்லாததாலும் அந்தப் பெண்ணின் மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகார் கொடுத்தவர்களை உடன் அழைத்துக் கொண்டு, அன்றிரவில் போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பூக்காரப் பெண்மணி குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், தைலாவரம் செல்லும் சாலைக்கு அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்திற்கு அருகில் பூக்கூடை கிடந்துள்ளது. ரெயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்லும் பொழுது ரெயிலில் அடிப்பட்டு பூக்காரப் பெண் இறந்து போயிருப்பாரோ? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. காணாமல் போனவர் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.

பூக்கூடை கிடந்த இடத்திற்குச் சற்று தொலைவில் மழை நீரும், கழிவு நீரும் ரெயில் தண்டவாளத்தைக் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பாலத்தின் அடியில் ஒரு பிரேதம் கிடப்பதாக அன்று பிற்பகலில் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.  போலீசார் அங்கு சென்று பார்க்க, ஆடைகள் கலைந்த நிலையில் ஒரு பெண் பிரேதம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அது காணாமல் போன பூக்காரப் பெண் தான் என்று அவரது உறவினர்கள் அடையாளம் காட்டினர்.

paarvaiyaalar

‘பெண் காணவில்லை’ என்ற வழக்கை ‘சந்தேக மரணம்’ என மாற்றம் செய்து, ஆய்வாளர் புலன் விசாரணை மேற்கொண்டார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அது தற்கொலையோ அல்லது விபத்தோ அல்ல என்பது தெரிய வந்தது. உடுத்தியிருந்த ஆடைகள் கலைந்திருக்க காரணம் என்ன?  ஆதாயக் கொலையாக இருந்தால், பூக்காரப் பெண்ணைக் கொலை செய்வதால் அப்படி என்ன பெரிய ஆதாயம் கொலையாளிக்குக் கிடைத்திருக்கும்? என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியது. அந்த வழக்கு குறித்து நேரடி விசாரணை செய்ய கூடுவாஞ்சேரி புறப்பட்டுச் சென்றேன்.

சந்தேகமான முறையில் மரணமடைந்த பூக்காரப் பெண்மணியின் இறப்பில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ‘பெண் காணவில்லை’ என்ற வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதும், காணமால் போன பெண் அதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

அந்த வழக்கின் கோப்பைப் பரிசீலனை செய்ததில், இரண்டு முக்கிய தகவல்கள் என் கவனத்திற்கு வந்தன. காணாமல் போன அந்தப் பெண் வசித்து வந்த இடம் வள்ளலார் நகர். தற்பொழுது புலன் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கில் சந்தேகமான முறையில் இறந்து போன பூக்காரப் பெண்ணும் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர். மேலும், கடந்த மாதம் பதிவான வழக்கில் காணாமல் போன பெண்ணிடம் இருந்த செல்போன் கண்டுபிடிக்கப்படவில்லை. பெண் காணாமல் போன தினத்தில் இருந்து அந்த செல்போன் எண் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டது.

ஒரே பகுதியில் வசித்து வரும் இரண்டு பெண்கள் ஒரு மாத இடைவெளியில் காணாமல் போனதும், அவர்களில் ஒருவர் சந்தேகமான முறையில் இறந்து போனதும் மிகவும் முக்கியத்துவம் வாயந்தது என்பதைப் போலீசாருக்கு உணர்த்தினேன்.

‘அந்த இரண்டு வழக்குகள் தவிர, வயது முதிர்ந்த பெண்கள் தொடர்பான வேறு வழக்குகள் ஏதாவது காவல் நிலையத்தில் உண்டா?’ என்ற கேள்வியை எழுப்பினேன். அப்போது போலீசார் அனைவரும் மவுனமாக இருந்தனர். ஏதே ஒரு குற்றச் சம்பவத்தை மறைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட நான், ‘பயப்படாமல் கூறுங்கள். உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. நம் அனைவரின் நோக்கமும் இந்த இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிப்பதுதான்’ என்று கூறினேன்.

போலீசாரின் மவுனம் மெல்ல கலைந்தது. ‘சுமார் 2 மாதங்களுக்கு முன்பு வள்ளலார் நகரில் இருந்து ஒரு வயதான பெண் காவல்நிலையம் வந்தார். சில தினங்களுக்கு முன்பு தன்னை யாரோ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று வாய்மொழியாக உதவி ஆய்வாளரிடம் புகார் கூறினார். ஆனால் அந்தப் பெண்ணின் புகார் மீது சந்தேகம் கொண்ட உதவி ஆய்வாளர் அந்த புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்பொழுதுதான் அந்த விவரம் எனக்குத் தெரியவருகிறது’ என்று ஆய்வாளர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வள்ளலார் நகரில் இருந்து காவல் நிலையம் வந்து புகார் கூறிய அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து, விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பைக் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தேன். அவரும், அவருடைய தனிப்படை போலீசாரும் இரவோடு இரவாக அந்தப் பெண்ணைத் தேடிப் பிடித்து விசாரணை செய்தனர். அந்தப் பெண்ணின் வாக்குமூலம், தொடர்ந்து பெண்கள் காணாமல் போகும் மர்ம முடிச்சை அவிழ்த்தது.

‘எனக்கு 50 வயது ஆகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு, என் மகள் குடும்பத்துடன் வள்ளலார் நகரில் வசித்து வருகிறேன். இதற்கு முன்பு வடபழனியில் பல ஆண்டுகள் வசித்து வந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலையில் வடபழனி சென்று, எனக்கான பென்ஷன் தொகையைப் பெற்றுக் கொண்டு, ரேஷன் கடையில் 5 லிட்டர் மண்ணெண்ணையை ஒரு கேனில் வாங்கிக் கொண்டு, பஸ்ஸில் திரும்பி வந்தேன். தைலாவரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, ஒத்தையடி மண் பாதையில் வள்ளலார் நகர் நோக்கி நடந்து சென்றேன்.

அப்போது சுமார் 6 மணி இருக்கும். செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில் வந்தது. ரெயில் கடந்து செல்வதற்காக கொஞ்ச நேரம் தண்டவாளம் அருகில் நின்று கொண்டிருந்தேன். ரெயில் சென்றதும் நான் தண்டவாளத்தைக் கடந்து நடக்கத் தொடங்கினேன். அப்போது தண்டவாளத்தை ஒட்டி சிமெண்டு சுவர் மீது உட்கார்ந்து இருந்த ஒரு வாலிபன், என்னைப் பார்த்ததும் சுவரில் இருந்து இறங்கி, என்னை நோக்கி நடந்து வந்தான். என் அருகில் வந்ததும், என் கழுத்தில் அவன் கொண்டு வந்த துண்டைப் போட்டு இறுக்கியும், என் வாயைப் பொத்தியும் அருகிலிருந்த புதருக்குள் இழுத்துச் சென்றான்.

அவனது செய்கையால் நான் மயக்கடைந்தேன். நடு இரவில் மயக்கம் தெளிந்து, எழுந்து பார்த்த பொழுது, உடல் முழுவதும் வலித்தது. பிறப்புறுப்பில் ரத்தம் கசிந்திருந்தது. என்னால் நடக்க முடியவில்லை. இரவு முழுவதும் அங்கேயே படுத்திருந்துவிட்டு, விடிந்ததும் மெல்ல மெல்ல நடந்து என் மகள் வீட்டுக்குப் போனேன். நடந்த அவமானகரமான சம்பவத்தை முதலில் யாரிடமும் நான் சொல்லவில்லை. உடல் வலி தாங்க முடியாத காரணத்தால், அடுத்த நாள் அக்கம் பக்கத்தில் நடந்ததைக் கூறினேன். பிறகு எங்கள் தெருவைச் சேர்ந்த ஒருவரை அழைத்துக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷன் போனேன். நடந்த சம்பவத்தைக் சொன்னேன். ஆனால், அவர்கள் நான் சொன்னதை நம்பவில்லை. என் புகாரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு, ஆஸ்பத்திரிக்குச் சென்று வைத்தியம் பார்த்துக் கொண்டேன்’ என்று நடந்த சம்பவத்தை அந்த பெண்மணி கோர்வையாகக் கூறினாள்.

‘என்னைக் கெடுத்தவனைப் பார்த்தால், வட நாட்டுக்காரன் போல் தோன்றியது. என்னிடம் இருந்த செல்போனையும், பென்ஷன் பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டான்’ என்று அந்தப் பெண் வாக்குமூலம் கொடுத்தார்.

அந்த மூன்று சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். தனிமையில் வரும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யும் குணம் கொண்டவனாக அவன் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. அவன் எடுத்துச் சென்ற இரண்டு செல்போன்கள் குறித்து சம்பந்தப்பட்ட செல்போன் சேவை நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த இரண்டு செல்போன்களும் புதிய சிம்கார்டுகளுடன் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த இரண்டு செல்போன்களுக்கும் பீகார் மாநிலத்தில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அந்த இரண்டு செல்போன்களையும் வைத்திருப்பவன் வடசென்னையில் தங்கியிருப்பதும், அவன் அடிக்கடி கல்பாக்கம் வரை செல்வதும் தெரியவந்தது.

அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ஒரு வார காலத்திற்குள் அந்தக் குற்றவாளியைப் பிடித்துவிட்டனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவன் அந்த மூன்று பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டான். சம்பவத்திற்குப் பின், அந்த பெண்களிடம் இருந்து எடுத்துச் சென்ற செல்போன்களும் அந்த குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

ஒரு மாதத்திற்கு முன்பு ‘பெண் காணவில்லை’ என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணைப் பலாத்காரம் செய்துவிட்டு, தைலாவரம் ஏரிப் பகுதியில் போட்டு விட்டுச் சென்றதாக அந்த குற்றவாளி வாக்குமூலம் கொடுத்தான். அதைத் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், ஏரிக்கரை ஓரத்தில் உள்ள தண்ணீரில் முழுவதும் அழுகிய நிலையில் எலும்புக்கூடு போன்று ஒரு பிரேதத்தைப் போலீசார் கண்டுபிடித்தனர். அந்தப் பிரேதத்தின் மண்டை ஓட்டையும், காணாமல் போன பெண்ணின் புகைப்படத்தையும் சென்னையில் உள்ள தடய அறிவியல் கூடத்திற்கு அனுப்பி வைத்து, பரிசோதனை செய்ததில், அந்த மண்டை ஓடு காணாமல் போன பெண்ணின் மண்டை ஓடு என நிரூபணம் ஆனது.

அந்தக் குற்றவாளியால் பலாத்காரம் செய்யப்பட்ட மூன்று பெண்களில் இருவர் சம்பவத்தின் விளைவாக இறந்து விட்டனர். உயிருடன் இருக்கும் ஒரு பெண், நீதிபதியால் நடத்தப்பட்ட குற்றவாளியை அடையாளம் காட்டும் அணிவகுப்பில் ஒரு முறை அடையாளம் காட்டினார். அந்தக் குற்றவாளி மனநோயாளியா? என்ற சோதனை செய்த மருத்துவர், அவன் ஆரோக்கியத்துடன் உள்ளான் எனக் கண்டறிந்து சான்றிதழ் வழங்கியுள்ளார்.

துரதிர்ஷடவசமாக, மூன்று பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களில் இருவரைக் கொலை செய்த குற்றவாளி மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபணமாகவில்லை.

காவல் நிலையம் வந்து புகார் செய்த அந்தப் பெண்ணின் புகாரை உதாசீனப்படுத்தாமல், வழக்கு பதிவு செய்து, முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், மற்ற இரண்டு சம்பவங்களும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்; இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

ஒரு குற்றச் செயல் குறித்து வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது, அந்தக் குற்றத்தைச் செய்தவனை மென்மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டும் என்பதற்கு இந்த நிகழ்வுகளே சான்றுகளாகும்.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(13.10.2017 தேதிய தினத்தந்தியில் வெளியான கட்டுரை)

Previous post வாருங்கள்! புலன் விசாரணை செய்யலாம்!!
Next post மனைவியைக் காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா

3 thoughts on “விசாரணை மறுக்கப்பட்ட புகார்

  1. சில நேரங்களில் கீழ் நிலை அதிகாரிகள் செய்யும் தவறுகள் எவ்வளவு பெரிய கொடும் குற்ற செய்த குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க முடியாமல் இருந்தது என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
    ஒவ்வொரு குடி மகனும் நிம்மதி யாக இருக்கிரர்கள் என்றால் காவல் துறையினர் நம்மை பாதுகாக்கிரார்கள் என்ற பெரிய நம்பிக்கை தான் காரணம்.
    அந்த நம்பிக்கை இழக்க நேரிடும் போது சட்டம் ஒழுங்கு சீர் கெட நேரிடும். காவல் துறை நண்பர்களுக்கு , தயவு கூர்ந்து நீதியையும் , நேர்மையும் பாது காக்க பணி புரிய வேண்டுகிறோம்.

  2. அய்யா வணக்கம்
    சிலர் கீழ் அதிகாரிகள் முழுமையாக நடத்துக்கொள்வதில்லை இதனால் குற்றவாளி தப்பிக்க உதவிகிறது

  3. குற்றங்கள் தொடர்பான புகார்கள் வரும் போது வழக்குப் பதிவு செய்யாமல் அலைய விடும் வழக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் முறையாகப் புலன் விசாரணை செய்யாமல் ஏனோதானோ என்று விசாரித்து முடிவு செய்யும் வழக்கமும் தொடர்கிறது. வரவர காவல்துறையினரின் செயல்பாடுகள் மோசமாகி வருவதும் தெரிகிறது. இவற்றைக் களைய தகுந்த திட்டமும் செயலாக்கமும் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *