2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் வரை சந்தேக நபர்களைக் கண்காணிப்பதிலும், குற்றத் தடுப்பிலும் கண்காணிப்பு கேமராக்களை அதிக அளவில் பயன்படுத்துவதில் உரிய கவனம் நம் நாட்டில் செலுத்தப்படவில்லை. அதன் பிறகுதான் மும்பை நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து, மற்ற நகரங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கொல்கத்தாவிலுள்ள ஜாவத் பூர் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் 2010-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நுழைவு வாசல்களில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ ஏற்பாடு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளை இரண்டு நாட்களுக்கும் மேலாக அவர்களது அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முடியாதபடி அடைத்து வைத்து போராட்டம் செய்தனர் மாணவர்கள். அதே போன்று, புனே பல்கலைக்கழக மாணவிகள் விடுதியின் நுழைவு வாசலில் அன்னியர்களின் வருகையைக் கண்காணிக்க 2011-ஆம் ஆண்டில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். நிறுவப்பட்ட கேமராக்களை உடைத்து சேதப்படுத்தினர். இவ்வாறான போராட்டங்கள் காலப்போக்கில் வலுவிழந்து விட்டன.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், பிறந்த குழந்தைகளை மருத்துவமனைகளில் இருந்து திருடிச் சென்று பணத்திற்கு விற்பனை செய்யும் குற்றச் சம்பவங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் நிகழ்ந்தன. இது குறித்து மதுரையில் அமைந்துள்ள உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், நிலுவையில் உள்ள குழந்தைகள் திருட்டு வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டது. மேலும், குழந்தைகள் திருட்டு நிகழ்வுகளைத் தடுக்க, அரசு மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 2012-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக நிதியில் இருந்து நெரிசல் மிகுந்த சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

குற்றச் செயல்களில் துப்பு துலக்க கண்காணிப்பு கேமராக்கள் எப்படி பயன்படுகின்றன என்பது குறித்து பார்ப்போம்.

2013-ஆம் ஆண்டில் ஒரு நாள் மாலை நேரம். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்னைத் தெலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்பொழுது நான் வடக்கு மண்டல காவல்துறை தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

‘பண்ருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதாயக் கொலை ஒன்று நிகழ்ந்துள்ளது. மனைவியுடன் கணவன் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது, இரண்டு நபர்கள் அவர்களை வழிமறித்து, கணவரைத் தாக்கிவிட்டு, மனைவியிடம் இருந்த தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். அந்த தாக்குதலில் கணவன் இறந்துவிட்டான்’ என்று நிகழந்த சம்பவத்தின் சுருக்கத்தை காவல் கண்காணிப்பாளர் தெரியப்படுத்தினார்.

சாலைகளில் வழிப்பறியில் ஈடுபடுபவர்களின் நோக்கம் நகை மற்றும் பணத்தைப் பறித்துச் செல்வதாகத்தான் இருக்கும். வழிப்பறி சம்பவத்தின் பொழுது, பொருளை பறிக்கொடுத்தவர்களுக்குச் சிறுசிறு காயங்கள்தான் ஏற்படுமேயன்றி, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்காது. எனவே, சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.யை உடனடியாக சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு, விசாரணை விவரத்தைத் தெரியப்படுத்துமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் கூறினேன்.

சம்பவ இடம் சென்று இரவு முழுவதும் நேரடி விசாரணை மேற்கொண்ட டி.எஸ்.பி, அடுத்த நாள் அதிகாலையில் என்னைத் தொடர்பு கொண்டார். ‘இறந்து போன நபர் சென்னையில் தொழில் செய்து வந்திருக்கிறார். பண்ருட்டியைச் சேர்ந்த பெண்ணை ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாட மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் பைக்கில் கடலூர் சென்றுள்ளனர். கடலூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் பிற்பகல் காட்சியைப் பார்த்துவிட்டு, பின்னர் கடலூரை அடுத்துள்ள சில்வர் பீச்சில் மாலை நேரத்தைக் கழித்துள்ளனர். பிறகு, அங்கிருந்து கிளம்பி பண்ருட்டி திரும்பி வரும் பொழுது, பைக்கில் வந்த இரண்டு நபர்கள் அவர்களை வழிமறித்து, கணவனைத் தாக்கிவிட்டு, தன்னிடமிருந்த தங்க நகைகளைப் பறித்துச் சென்றுவிட்டதாக அந்தப் பெண் விசாரணையின் பொழுது வாக்குமூலம் கொடுத்தாள்’ என்று டி.எஸ்.பி என்னிடம் கூறினார்.

‘கணவனை உயிரிழக்கச் செய்த அந்த தாக்குதல் சம்பவத்தில் மனைவிக்குச் சிறிதும் காயம் ஏற்படவில்லை. மேலும், கணவனைப் பறி கொடுத்த துக்கம் எதுவும் அந்த இளம்பெண்ணிடம் வெளிப்படவில்லை’ என்று தன்னுடைய கருத்தைப் புலன்விசாரணை செய்த அதிகாரி தொலைபேசியில் என்னிடம் தெரியப்படுத்தினார்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில மாதங்களுக்கு முன்புதான் கடலூர் நகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தன. கடலூர் நகரில் சினிமா தியேட்டர் மற்றும் பீச் ஆகிய இடங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் பயணித்த அந்த இளம் தம்பதியரின் வாகனம் ஏதாவது ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா? எனப் போலீசார் ஆய்வு செய்தனர். போலீசாரின் முயற்சி வீண் போகவில்லை. அந்த தம்பதியர் பயணித்த இரு சக்கர வாகனம் சில கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. அந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவைப் புலனாய்வு போலீசார் தொடர்ந்து செய்த ஆய்வில், புலனாய்வுக்குப் பயன்படும் வகையில் சில ஆதாரங்கள் கிடைத்தன.

அந்த இளம் தம்பதியர் கடலூர் நகரில் நுழைந்தது முதல், சினிமா தியேட்டர் மற்றும் பீச் சென்ற பொழுதும், பின்னர் பீச்சில் இருந்து திரும்பிய பொழுதும் ஒரு பைக்கில் இரண்டு நபர்கள் அந்த இளம் தம்பதியரைப் பின் தொடர்ந்து பயணித்தது தெரிய வந்தது. அந்த இருவரில் ஒருவன் கைக்குட்டையைக் கொண்டு தன் முகத்தை மறைத்து கட்டியிருந்ததும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. தங்களுக்குப் பின்னால் தொடர்ந்து பைக்கில் பயணம் செய்தவர்களை அந்த பெண் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்ததும் கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இடம் பெற்றிருந்தன. அந்த இளம் தம்பதியரைச் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பின் தொடர்ந்த பைக்கின் பதிவு எண்ணைப் போலீசார் கேமரா பதிவுகளில் இருந்து கண்டறிந்தனர். பின்னர், அந்த பைக்கின் உரிமையாளர் யார் என்றும், அதில் பயணித்தவர்கள் யார் என்றும் போலீசார் துப்பு துலக்கியதில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

இளம் தம்பதியரைப் பின் தொடர்ந்து பைக்கில் பயணம் செய்தவர்களில் ஒருவன் அந்த பெண்ணின் கல்லூரி பருவத்து காதலன் என்பதும், இந்த திருமணத்தில் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்பதும், அவளது சம்மத்தின் பேரில்தான் வழிப்பறி செய்வது போல் நடித்து, அவளின் கணவனைக் கொலை செய்தனர் என்பதும் புலன் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

எப்பொழுதும் கண் வழித்திருந்து, சுற்றுப்புறத்தைக் கண்காணித்து, நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்து வைத்திருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ‘வானத்தில் கண்கள்’ என்று அழைக்கலாம்.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(15.12.2017 தேதிய தினத்தந்தியில் வெளியான கட்டுரை)

One thought on “மனைவியைக் காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *