1997-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நான் பணியாற்றி வந்தேன். சிவகங்கை மாவட்டத்திற்கு அடுத்துள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் பொழுது, அந்த மாவட்டத்திற்குச் சென்று சில வாரங்கள் தங்கி, பணிபுரியும்படி காவல்துறை உயரதிகாரிகள் என்னை அனுப்பி வைப்பார்கள்.

ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டுமானால், அந்த மாவட்ட மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொண்டும், சாதி உணர்வுகளுக்கு போலீஸ் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் இடம் கொடுக்காமலும் நடுநிலையான முறையில் செயல்பட வேண்டும்.

1997-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முதுகுளத்தூர் சுற்று வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவமும், அதற்கு பழி வாங்கும் விதத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை சம்பவமும் முதுகுளத்தூர், பரமகுடி, பார்த்திபனூர் மற்றும் கமுதி சுற்று வட்டாரங்களில் வசித்துவரும் இரு சமூகத்தினர்களுக்கு இடையே நிலவி வந்த பகைமை உணர்வை மேலும் அதிகப்படுத்தியது.

இந்த இரு கொலை சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்தனர். அந்தப் பகுதி சகஜ நிலைக்குத் திரும்பி வர அனைத்து முயற்சிகளையும் போலீசார் எடுத்தனர்.

இந்த தருணத்தில் அக்டோபர் மாத இறுதி வாரத்தில் பசும்பொன் கிராமத்தில் குருபூஜை நடைபெற்றது. பல மாவட்டங்களில் இருந்து குருபூஜையில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கும், அந்தப் பகுதியில் வசித்துவரும் மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் விளைவாக அந்தப் பகுதியிலும், குருபூஜைக்கு வந்தவர்கள் பயணித்த வழிகளிலும் இருந்த கடைகளும், வாகனங்களும் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டன. தென் மண்டல போலீசார் பதற்றம் நிலவிய பகுதிகளில் குவிக்கப்பட்டனர். மாவட்டம் சகஜ நிலைக்குத் திரும்பி வர அனைத்து முயற்சிகளையும் போலீசார் எடுத்தனர்.

இந்த சூழ்நிலையில், ஒரு நாள் அதிகாலை நேரத்தில், நான் பரமக்குடியில் பாதுகாப்பு பணியினை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது, பார்த்திபனூர் காவல் நிலையத்தில் இருந்து ஒரு தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

பார்த்திபனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோசுகுடி கிராமத்தில் உள்ள ஒரு நெல் வயலில் ஒரு ஆண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும், கொலைக்கான காரணமும், கொலையாளிகள் யார்? என்றும் தெரியவில்லை என்பதுதான் அந்த தகவல்.

கடந்த ஒரு வார காலமாக அந்த பகுதியில் இரு சமூகத்தினர்களுக்கு இடையே நிலவிவந்த அசாதரண நிலையைத் தொடர்ந்து, கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது சட்டம் – ஒழுங்கை மேலும் சீர்குலைத்து விடுமோ? என்ற அச்சம் போலீசாருக்கு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட உள்ளுர் காவல்துறை அதிகாரிகளை உடன் அழைத்துக் கொண்டு காலதாமதம் இன்றி சம்பவ இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றேன்.

கொலை சம்பவம் நிகழ்ந்த நெல் வயல் அருகில், உடலில் இருந்து தலை முழுவதுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் பிரேதம் கிடந்தது. ஆரம்ப கட்ட விசாரணையில், இறந்து கிடப்பவர் திருமணமாகி குழந்தை இல்லாதவர் என்றும், அடாவடி செயல்களில் ஈடுபடாதவர் என்றும், அவரது உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் அதே கிராமத்தில் வசித்து வருகிறார்கள் என்றும் தெரிய வந்தது.

சொத்து தகராறு காரணமாகவோ அல்லது தவறான நடத்தை காரணமாகவோ இந்த கொலை நடந்திருக்குமோ? என்ற கோணத்தில் போலீசார் புலன் விசாரணையைத் தொடங்கினர்.

சம்பவ இடத்தில் கிடந்த பிரேதத்தின் மீதுள்ள காயங்களின் தன்மையைத் தடய அறிவியல் நிபுணர் ஆய்வு செய்தார். உடலில் இருந்து தலை முழுமையாகத் துண்டிக்கப்பட்டு அருகில் கிடந்ததைத் தவிர்த்து, உடலின் மற்ற பகுதிகளில் கொடுங்காயம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு பெரியதாக காயம் எதுவும் இல்லை.

பிரேதத்தின் மீதுள்ள காயங்களை உன்னிப்பாக ஆய்வு செய்ததில், தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக இந்தக் கொலை செய்யப்படவில்லை என்றும், சாதி உணர்வு காரணமாக நிகழ்த்தப்பட்ட கொலையாக இது இருக்குமோ? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

கொலை சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் பட்டியலைப் பெற்று, பரிசீலனை செய்தேன். பின்னர், ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து, அந்தக் கிராம தலைவரைக் காவல்நிலையம் வந்து என்னைச் சந்திக்கும்படி செய்தி அனுப்பி வைத்தேன். தகவல் கிடைத்ததும், உடனடியாக அவர் காவல் நிலையம் வந்தார்.

‘உங்கள் கிராமத்து ஆட்கள்தான் மோசுகுடியில் நடந்த கொலையைச் செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. இந்தக் கொலையால், இந்தப் பகுதியில் மேலும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. ஊர் தலைவர் என்ற முறையில் அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்!’ என்று கேட்டேன். கொலை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், கொலை செய்தவர்கள் யார் என்றும் எதார்த்தமாக என்னிடம் கேட்டார் ஊர் தலைவர்.

‘கொலை செய்தவர்கள் யார் என்று போலீசாருக்கு துப்பு கிடைத்துவிட்டது. இருப்பினும், ஊர் தலைவர் என்ற முறையில் ஊர் கூட்டம் கூட்டி, கொலையாளிகள் யார் என்றும், கொலை செய்ய காரணம் என்ன என்றும் நீங்களே விசாரித்து தெரிந்து கொண்டு, கொலையாளிகளை உடனடியாக என்னிடம் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று கண்டிப்புடன் கூறி, ஊர் தலைவரை அனுப்பி வைத்தேன்.

‘இந்த கொலைக்கான காரணமும், கொலையாளிகள் யார் என்றும் தெளிவாகாத நிலையில், கொலையாளிகள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?’ என்று தனது ஐயப்பாட்டினை வெளிப்படுத்தினார் உள்ளுர் போலீஸ் அதிகாரி. ‘சாதி உணர்வுதான் இந்தக் கொலைக்கான அடிப்படை காரணம் என்று இறந்தவரின் தரப்பில் இருந்து யாரும் புகார் கூறவில்லை. நாம் ஏன் அந்த கோணத்தில் விசாரணை செய்ய வேண்டும்? சம்பவம் நடந்த இடம் வயல் பகுதியாக இருப்பதால், வரப்பு தகராறு, சொத்து தகராறு போன்ற காரணங்களால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை செய்யலாமே’ என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார் உள்ளுர் போலீஸ் அதிகாரி.

உள்ளுர் போலீஸ் அதிகாரியின் அந்த ஆதங்கம் எனக்கு புரிந்தது. கொலைக்கான காரணம் ‘சாதி உணர்வு’ என்று புலன் விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, வழக்கின் புலன் விசாரணையை வேறு கோணத்தில் திசை திருப்பிவிட்டால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைத் தற்காலிகமாக தவிர்த்துவிடலாம் என்பதுதான் அந்த போலீஸ் அதிகாரியின் கருத்து.

கொலை சம்பவத்தைப் பார்த்த சாட்சிகள் யாராவது அந்த சுற்று வட்டார கிராமங்களில் உள்ளனரா? அந்த பகுதியில் சாராய விற்பனை உண்டா? போன்ற தகவல்கள் குறித்து ரகசிய விசாரணை செய்துவர அனுப்பி வைத்த தனிப்படையினர் தங்களது விசாரணையை முடித்து, திரும்பி வந்தனர்.

கொலை சம்பவம் நிகழ்ந்த கிராம எல்லையில் சாராய விற்பனை உண்டு என்பதும், கொலை நடைபெற்ற தினத்தன்று மாலையில், சந்தேகப்பட்ட ‘அந்த கிராமத்தை’ச் சேர்ந்த சில இளைஞர்கள் கொலை நடந்த கிராமத்திற்கு வந்து சாராயம் குடித்துள்ளனர் என்பதும் தனிப்படை போலீசார் சேகரித்து வந்த தகவல்.

அப்படியானல், ‘அந்த கிராமத்து’ இளைஞர்கள் கொலை நடைபெற்ற கிராமத்திற்கு வந்து ஏன் சாராயம் குடிக்க வேண்டும்? என்ற கேள்விக்கான பதிலில் பல உண்மைகள் உள்ளடங்கி இருப்பதை உணர முடிந்தது.

அடுத்த நாள் காலையில் அந்த கிராமத் தலைவரும், ஊர் முக்கியஸ்தர்களும் காவல் நிலையம் வந்து என்னை சந்தித்தனர்.

‘நேற்று இரவில் ஊர் கூட்டம் போட்டோம். எங்கள் கிராம ஆட்கள்தான் இந்த கொலையைச் செய்துள்ளனர். அவர்களைத் தேடிப்பிடித்து உங்களிடம் ஆஜர்படுத்த மேலும் ஒரு நாள் அவகாசம் வேண்டும்’ என்று அவர்கள் கேட்டனர்.

வாக்கு கொடுத்தபடி, மறுநாள் ஊர் தலைவர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் காவல் நிலையம் வந்தனர். ‘கொலை செய்தவர்களைப் பிடித்து கிராமத்தில் வைத்துள்ளோம். நீங்கள் கிராமத்திற்கு வந்தால், அவர்களை உங்களிடம் ஒப்படைக்கிறோம்’ என்றனர்.

உள்ளுர் அதிகாரிகளுடன் நான் அந்த கிராமத்திற்குச் சென்றேன். அந்த கொலையைச் செய்தவர்கள் என்று சிலரை என்னிடம் ஒப்படைத்தனர். ‘இவர்கள்தான் உண்மையில் கொலை செய்தவர்களா? இவர்களில் யாராவது அப்பாவிகள் உள்ளனரா?’ என்ற ஐயப்பாட்டை ஊர் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் கேட்டேன்.

‘இவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று முறைப்படி விசாரிப்போம். இவர்களில் யாராவது கொலையில் சம்பந்தப்படாதவர் என்று தெரியவந்தால், அவரை உங்களிடம் ஒப்படைத்து விடுவோம். அந்த நபருக்குப் பதிலாக உண்மையான கொலையாளியை ஆஜர்படுத்த வேண்டும்’ என்ற நிபந்தனையோடு காவல் நிலையம் திரும்பினோம்.

சாதி அடிப்படையில் அந்தப் பகுதியில் நிலவி வந்த முன் விரோதம் காரணமாக, சத்துணவு அமைப்பாளர் ஒருவரை வெட்டச் சென்றவர்கள், அவர் அகப்படாத காரணத்தால், நெல் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபரைக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், கிராமத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர் கொலை சம்பவத்தில் ஈடுபடாதவர் என்றும், அவர் பெயர் கொண்ட மற்றொரு நபர்தான் கொலையாளிகளில் ஒருவர் என்றும் தெரியவந்தது.

ஊர் தலைவர் வரவழைக்கப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபடாதவரை அவரிடம் ஒப்படைத்தோம். ஓரிரு நாட்களில் உண்மையான குற்றவாளியைப் பிடித்துவந்து, போலீசில் ஒப்படைப்பதாக அவர் உறுதியளித்தார்.

இந்த பரபரப்பான கொலை வழக்கில் உண்மையான கொலையாளிகள் பிடிபட்டதாலும், கொலையாளிகளின் கிராமத்தினர் உண்மையை உணர்ந்ததாலும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை.

     20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இ;ந்த கொலை வழக்கில் துப்பு துலக்கப்பட்ட விதம் குறித்து வாசகர்கள் மனதில் சில கேள்விகள் தோன்றலாம்.

  • ஒரு காவல்துறை அதிகாரி கொடுத்த ஆலோசனையின்படி, போலீசார் புலன் விசாரணை செய்துவரும் கொலை வழக்கில், தங்கள் கிராமத்தினர் யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய ஊர் கூட்டம் கூட்டப்படுமா?
  • அப்படி சம்பந்தப்பட்டிருந்தால், கொலையாளிகள் குறித்த விவரங்களைக் காவல்நிலையம் சென்று காவல்துறை அதிகாரியிடம் ஊர் முக்கியஸ்தர்கள் கூறுவார்களா?
  • காவல்துறை அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க, கொலையாளிகளைத் தேடிப் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைப்பார்களா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான் இருக்கிறது.

எந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம் வாய்மையும், நேர்மையும் இருக்கிறதோ, அந்த அதிகாரி என்றும் பொதுமக்களின் ஒருமித்த மரியாதைக்குச் சொந்தக்காரராக விளங்குவார்.

பொதுவாக பிரேதத்தின் மீதுள்ள காயங்களின் தன்மையைக் கொண்டு, கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யூகம் செய்யலாம். அவைகளில் சில:  

  • பிறப்புறுப்பு போன்ற பகுதிகளில் கொடுங்காயங்கள் இருந்தால், அது கள்ளக் காதல் அல்லது ஒழுக்கக்கேடான நடத்தை காரணமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை.
  • பழிக்குப் பழி என்ற முறையில் வன்மம் தீர்த்துக் கொள்ள நடத்தப்படும் கொலைகளில், உயிர் இழக்கச் செய்வதைத் தாண்டி, கை, கால் போன்ற உறுப்புகளில் சில முழுமையாகத் துண்டிக்கப்படுவதும் உண்டு.
  • எதேச்சையாக ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றி கொலையில் முடிந்தால், காயங்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டவைகளாக இருக்காது.
  • கொலையால் இறந்தவரின் தலை துண்டிக்கப்பட்டு, சம்பவ இடத்தில் இல்லாமல் இருந்தால், கொலை வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் கொலையாளிகள் திட்டமிட்டு நடத்திய கொலை.
  • தலை துண்டிக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே போடப்பட்டிருந்தால், தங்களை யார் என்ன செய்ய முடியும் என்ற உணர்வோடு கொலையாளிகள் தங்களது உரிமையை நிலைநாட்டும் விதத்தில் செய்யப்பட்ட கொலை.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(08.09.2017 தேதிய தினத்தந்தியில் வெளியான கட்டுரை)

Previous post மனைவியைக் காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா
Next post காவல்துறையும், கையூட்டு கலாசாரமும்!

2 thoughts on “சாதியக் கொலையின் பின்னணி

  1. அய்யா தாங்கள் கூறிய வாய்மையும் நேர்மையும் இருந்தால் பொதுமக்கள் பெரிதும் மதிப்பர். அந்த மதிப்பால் ஒரு கொலை வழக்கு புலனாய்வே துரிதமாக முடிந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டியது “வாய்மையும் நேர்மையும்”. நன்றி அய்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *