காவல்துறையும், கையூட்டு கலாசாரமும்!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிடும்போது, ‘நேர்மையுடன் கடமையாற்றுவதன் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெறுவதுதான் காவல்துறையின் தலையாய கடமை. நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வு இருந்தால்தான் காவல் துறையினரால் தங்கள் பணியைத் திறம்படச் செய்ய முடியும்’ என்று கூறியுள்ளார்.

இந்தியா விடுதலை அடைந்து 74 ஆண்டுகள் கடந்த பின்னரும், தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண காவல்துறையை அணுகுவதில் தயக்கமும், பயமும் பொதுமக்களிடம் வெளிப்படுகின்றன.

நியாயமான பிரச்னைக்கு தீர்வு காண காவல்துறையினரை அணுகினால் கையூட்டு கொடுக்க வேண்டும் என்பதும், விரைந்து தீர்வுகாண செல்வாக்குள்ள நபர்களின் பரிந்துரை தேவைப்படும் என்பதும் பொதுமக்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டன.

அரசுத்துறைகள் பலவற்றில் கையூட்டு கொடுப்பது தடையின்றி நிகழும் செயலாக நம் நாட்டில் இருந்து வருவதும், சாமானிய மக்கள் அம்மாதிரியான நடைமுறைக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதும் கள எதார்த்தமாகும்.

கையூட்டு குறித்த பரபரப்பான செய்தி ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. மாவட்ட காவல்துறையில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை அறுபதுக்கும் மேற்பட்ட செயல்களுக்கு வாங்கும் கையூட்டு தொகை விவரப் பட்டியல்தான் அந்த பரபரப்பான செய்தி.

காவல்துறையினர் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதற்கும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் வாங்கும் கையூட்டு விவரம் அடங்கிய அந்த நீண்ட பட்டியலைப் பார்த்த பொதுமக்கள் ‘என்று தணியும் இந்த கொடுஞ்செயல்’ என்று மனவேதனை அடைந்தனர்.

நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர்கள் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் கையாடல் செய்யும் பழக்கம் நெடுங்காலமாக நம் நாட்டில் இருந்து வந்துள்ளது என்பதை கௌடில்யரின் ‘அர்த்தசாஸ்திரம்’ மூலம் அறியமுடிகிறது.

அந்நூலில், ‘வானத்தில் உயரத்தில் பறக்கும் பறவைகளின் இயக்கத்தைக் கணித்துவிடலாம்; ஆனால், கையூட்டு பெறும் அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கணிக்க முடியாது’ என கௌடில்யர் குறிப்பிட்டுள்ளார்.

17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வர்த்தகம் செய்ய இந்தியா வந்த ஆங்கிலேயர்கள், காலப்போக்கில் தங்கள் ஆட்சியை இந்தியாவில் நிலை நாட்டினர்.

மக்களிடம் இருந்து வசூலித்த வரிப்பணத்தில் முறைகேடுகள் செய்ததும், இந்தியர்கள் சிலருக்கு சலுகைகள் காட்டுவதற்காக ஆங்கிலேய அதிகாரிகள் சிலர் கையூட்டு பெற்றதும், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்கள் எனக் குறிப்பிடப்படும் ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்க் ஆகியோர் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து நாடாளுமன்றம் விசாரித்ததும் வரலாற்றுப் பதிவுகளாகும்.

ஆங்கிலேய ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சியில் ஆங்;கிலேயர்கள் வெற்றி பெற்ற நிலையில், 1857-ஆம் ஆண்டில் சிப்பாய் கலகம் ஏற்பட்டது. தங்கள் ஆட்சி இந்;தியாவில் தொடர வேண்டுமானால், தங்கள் கட்டுப்பாட்டில், தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ‘காவல் அமைப்பு’ ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆங்கிலேயர்கள் கருதினர். அதன் விளைவாக, இங்கிலாந்து நாடாளுமன்றம் 1861-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான ‘போலீஸ் சட்டம்’ ஒன்றை இயற்றி, ‘காவல்துறை’ என்ற அமைப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

காவல்துறையில் ஆய்வாளர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் ஆங்கிலேயர்கள் நியமிக்கப்பட்டனர். காவலர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களாக இந்தியர்கள் நியமிக்கப்பட்டனர். குறைவான ஊதியம், வரைமுறைப்படுத்தப்படாத வேலை நேரம், பணியிடத்தில் குடியிருப்பு வசதிகள் இல்லாத நிலை உள்ளிட்ட சில நிர்வாகக் காரணங்களால் காவல்துறையில் சேர்ந்து பணிபுரியும் ஆர்வம் இந்தியர்களிடம் குறைவாக இருந்தது.

தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும், உள்ளுர் பிரமுகர்களின் தலையீடு காரணமாகவும் குற்றங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்காமல் இருக்க காவலர்கள் கையூட்டு பெறும் பழக்கம் ஆங்கிலேய நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த காவல்துறையில் மிகுந்து காணப்பட்டது. காவல்துறையின் நிர்வாகத்தை சீர்படுத்த ஆங்கிலேய அரசாங்கம் 1902-ஆம் ஆண்டில் ‘காவல் அணையம்’ ஒன்றை அமைத்தது.

காவல்துறையில் இந்தியர்களை அதிகாரிகளாக நியமித்தல், காவலர்கள் உள்ளிட்ட காவல்துறையினரின் ஊதியத்தை உயர்த்துதல், காவலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தரமான பயிற்சி அளித்தல், குற்றப் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி) அமைத்தல் உள்ளிட்ட காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று ஆங்கிலேய அரசு காவல்துறை நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.

கையூட்டு பெறும் காவலர்களைக் கண்காணிக்கவும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் 1902-ஆம் ஆண்டின் காவல் ஆணையம் வழி வகுத்தது. அந்த காலகட்டத்தில் காவல் உயரதிகாரிகள் பொதுமக்களிடத்தில் கையூட்டு பெறும் பழக்கம் அதிக அளவில் இல்லாவிட்டாலும், உயர்குடி மக்களிடத்தில் நெருங்கிய தொடர்பில் இருந்து, தங்களின் ஆடம்பர வாழக்கைக்கு வழி வகுத்துக் கொண்டனர்.

முதலாம் உலகப் போராலும், இரண்டாம் உலகப் போராலும் இந்தியா மேற்கொண்ட பொருளாதார விரிவாக்க நடவடிக்கைகள் ஊழலுக்கு வித்திட்டன. குறிப்பாக, இரண்டாம் உலகப் போரின் போது ராணுவத்தின் உடனடித் தேவைகளுக்காக செய்யப்பட்ட கொள்முதல், விநியோகம் தொடர்பாக அரசு அதிகாரிகள் செய்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ‘ஸ்பெஷல் போலீஸ் எஸ்டாபிலிஷ்மென்ட்’ (எஸ்.பி.இ.) என்ற சிறப்பு காவல் அமைப்பை ஆங்கிலேய அரசாங்கம் 1941-ஆம் ஆண்டு உருவாக்கியது. அந்த அமைப்புதான் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், 1963-ஆம் ஆண்டு முதல் ‘சி.பி.ஐ.’ என்ற பெயர் மாற்றத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து 1947-ஆம் ஆண்டில் விடுதலை பெற்றிருந்தாலும், ஆங்கிலேயர்கள் இந்திய காவல் நிர்வாகத்திற்கென 1861-ஆம் ஆண்டில் வடிவமைத்த போலீஸ் சட்டம்தான் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களுடன் இன்று வரை தொடர்ந்து நம் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆங்கிலேய காலனி நாடாக இருந்த இந்தியாவுக்கு விடுதலை கிடைத்ததும், தம் மக்களின் அடிப்படை தேவைகளில் தன்னிறைவு அடைய இந்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், தொற்றுநோய் போன்று சமுதாயத்தில் ஊடுருவி இருந்த கையூட்டு, ஊழல் போன்றவற்றின் மீது அரசு கவனம் செலுத்தவில்லை. அவை விஸ்வரூபம் எடுத்து, ஆட்சி நிர்வாகத்தையே சிதைத்துவிடும் நிலையை அடைந்த பின்னர்தான், ஊழல் தடுப்பு சட்டத்தை 1988-ஆம் ஆண்டில் இந்திய அரசு இயற்றியது.

காவல்துறையினர் கையூட்டு பெறுவதும், குற்றம் புரிந்தவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்படுவதும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் துணை நிற்பதும் காவல்துறைக்கு எதிரான மனநிலையை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளன.

குற்ற வழக்குகளில் கைது செய்தல், ஜாமீனில் விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை சூழல்நிலைக்கேற்ப காவல்துறையினர் எடுத்துக் கொள்ள இடம் அளிக்கும் நம் நாட்டு சட்டமும் கையூட்டுக்கும், ஊழலுக்கும் வழிகோலுகிறது என்று கூறலாம்.

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அமைக்கப்பட்ட ‘காவல் ஆணையங்கள்’ அனைத்தும் அந்தந்த மாநில காவல் துறையில் கையூட்டு பெறும் பழக்கம் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதை உறுதிபடுத்தியுள்ளன. ஆனாலும், காவல்துறையினர் வெளிப்படையாக வாங்கும் கையூட்டைக் கூட தடுத்து நிறுத்த முடியாத நிலைதான் பல மாநிலங்களில் நிலவுகிறது.

நல்ல பணியிடத்தைப் பெறவும், பணிபுரிந்துவரும் வசதியான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகார மையத்திற்கு கொடுப்பதற்காகத்தான் கையூட்டு பெறப்படுகிறது என்கிற கையூட்டு பெறும் அதிகாரிகளின் வாதத்தை மறுப்பதற்கில்லை.

மிடுக்கான சீருடையில் சட்டம் – ஒழுங்கைப் பராமரிக்கும் நிலையைக் கடந்து, சமூக விரோத கும்பல்களுடன் கைகோத்து, குற்றச்செயல்களில் ஈடுபடும் போக்கு காவல்துறையில் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. அதனால், தனி மனித ஒழுக்கமும் காவல்துறையில் மெல்ல மெல்ல மறையத் தொடங்கிவிட்டது.

காவல்துறையில் பணிபுரிபவர்கள் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் காவலர் முதல் உயர் அதிகாரி வரை அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிகின்றனர். ஆனால், சிலர் தங்களின் சாதி, மத விருப்புணர்வை பணியில் வெளிக்காட்டும் நிலையைக் காண முடிகிறது.

நடுநிலையுடன் செயல்பட வேண்டிய காவல்துறையில், சிலர் அரசியல் கட்சிகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஆதாயம் தேடும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், நேர்மையுடன் செயல்படும் அதிகாரிகளை காவல்துறையில் காண்பது அரிதாகிவிடும்.

காவல்துறையில் பதவி உயர்வு பெறுவதற்கும், மெச்சத் தகுந்த பணிக்கான பதக்கம் பெறுவதற்கும் கையூட்டு வாங்காமல் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் தற்போது இல்லை. கையூட்டு வாங்கிய செயலுக்காக வழக்கு பதிவு செய்யப்படாமல் பார்த்துக் கொண்டாலே போதுமானது என்ற நிலையை காவல் நிர்வாகம் கடைபிடிக்கத் தொடங்கி விட்டது.

சட்டத்தை அமல்படுத்தும் பணியில் ஈடுபடுபவர்களுக்கான நடத்தை நெறிமுறைகளை உருவாக்கியுள்ள ஐக்கிய நாடுகள், ‘சட்டத்தை அமல்படுத்துவோர் கையூட்டு, ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடாமலும், அவற்றை எதிர்த்துக் கடுமையாகப் போராடுபவர்களாகவும் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது. அதனை மனத்தில் கொண்டு காவல்துறையினர் செயல்பட வேண்டிய தருணம் இது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(03.11.2021 தேதிய தினமணியில் வெளியான கட்டுரை இது)

Previous post சாதியக் கொலையின் பின்னணி
Next post கடமையைச் செய்த போலீசாருக்குக் கிடைத்த தண்டனை

3 thoughts on “காவல்துறையும், கையூட்டு கலாசாரமும்!

  1. அய்யா வணக்கம்
    காவலர்கள் கையூட்டு பழக்கம் இன்னும் முடியவில்லை. எனக்கும் தெரிந்த நண்பர் சொன்னார் அவர் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை பிறகு தெரிந்ததாம் பணம் பெற்றுக்கொண்டார்கள்
    என்று.
    சட்டம் காப்பாற்றப்படும் என்று வருகிறவர்கள் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும் பணம் தான் வெற்றி பெறுகிறது. நினைக்கும் போது கேவலமாக இருக்கிறது.
    எல்லாம் இடத்தில் எப்போது ஒழியும் கையூட்டு

  2. Sir, One of my relatives was in a higher post. He was Chief Engineer in PWD. Whenever he was going for inspection, he used to carry Curd Rice and water bottle. Used only Govt. Vehicle. On his staying places he washed his clothes. He was an example for freeing himself from corruption. It is not easy to find out persons like him in any Govt. Department. To touch Gold is like to loot Gold.

  3. பல அடிப்படைத் தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை இது. கையூட்டு தவிர்க்க முடியாத நிலைக்குச் சென்று விட்டது. நியாயமான தங்கள் கடமையைச் செய்வதற்குக் கூட கையூட்டு எதிர்பார்க்கிறார்கள் காவல்துறையினர். கையூட்டு பெற்றுக் கொண்ட பின்னரும் பலர் கடமையைச் செய்ய மறுக்கின்றனர். காவல் நிலையத்தின் செலவுகளைக் கையாளவும், காவல்துறையினரே தங்கள் பணிகளைச் செயல்படுத்த பிற துறைகளுக்கு கையூட்டு வழங்கும் அவல நிலையும் தொடர்வது வேதனைக்குரியது. இன்றும் பல நேர்மையான திறமையான அதிகாரிகள் உள்ளனர். பல தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க இவர்கள் சட்ட ஒழுங்கு அல்லாத பிற பிரிவுகளில் பணி செய்கின்றனர். காவல்துறையினர் நேர்மையாகச் செயல்படும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். தவறு இழைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மிகவும் அவசியம். மேலும் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு தாங்கள் சேவகர்கள் என்ற எண்ணம் வரவேண்டும். மேலும் நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்படும் காவல்துறையினருக்கான பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கைகளும் மிகவும் அவசியம் என்று கருதுகிறேன் 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *