கடமையைச் செய்த போலீசாருக்குக் கிடைத்த தண்டனை

‘ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடலாம். ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுதான் நம் நாட்டின் சட்டங்கள் உருவாக்கப்பட்டு, நீதி பரிபாலனம் நடைபெற்று வருகிறது. அநீதிகளிலேயே மிகவும் கொடூரமானதாகக் கருதப்படுவது நிரபராதி தண்டிக்கப்படுவதுதான்.

நிரபராதி ஒருவர் தண்டிக்கப்படும் போது, அது விபரீதங்களை ஏற்படுத்திவிடக் கூடும் என்பதற்குச் சான்று கண்ணகி மதுரையை எரித்த சம்பவம்.

குற்றம் எதுவும் செய்யாமல், மனிதாபிமான முறையில் தங்களது கடமையைச் செய்த சில போலீசாருக்குக் கிடைத்த தண்டனை பற்றிய சம்பவத்தைத் தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம்.

2008-ம் ஆண்டில் நான் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக பணி புரிந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு நாள் பிற்பகலில் என்னுடைய தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

தொலைபேசியில் பேசியவர், ‘ஐயா, நான் என் மனைவியுடன் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவியின் சீட்டுக்குப் பின்னால் நடுத்த வயது கொண்ட ஒரு ஆள் உட்கார்ந்து கொண்டு, என் மனைவியிடம் சில்மிஷம் செய்கிறான். அவனைப் பார்த்தால் குடி போதையில் இருப்பது போல் தெரிகிறது. அவனது செயல் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. தியேட்டரில் வேலை செய்பவரிடம் தெரியப்படுத்தினேன். உள்ளுர் போலீசுக்கும் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளேன். ஆனால் இது வரை நடவடிக்கை இல்லை’ என்றார்.

அந்த காலகட்டத்தில் என்னுடைய தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். சில சமயங்களில் அது எனக்கு இடையூறாக இருந்தாலும், பல சமயங்களில் அது எனக்கு பலமாக அமைந்திருந்தது. மாவட்டங்களில் நிகழும் சம்பவங்களின் உண்மை தன்மையை உடனுக்குடன் அறிந்து கொள்ள அது எனக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது.

மதிய உணவிற்குப் பிறகு காவல்நிலையங்களில் பொதுவாக ‘பாரா காவலர்’ மட்டும் தான் பணியில் இருப்பார். காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஓய்வுக்குச் சென்று விட்டு, மாலையில் பணிக்குத் திரும்புவார். எனவே, தொலைபேசி மூலம் எனக்குக் கிடைத்த தகவலைச் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.க்கும், மாவட்ட எஸ்.பி.யின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் தனிப்பிரிவு ஆய்வாளருக்கும் தெரியப்படுத்தி, ‘அந்த திரையரங்கில் நடந்தது என்ன?’ என்று விசாரித்து, நடவடிக்கை எடுக்கும் படி கூறினேன்.

பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கிடைத்த தகவலின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக அந்த சினிமா தியேட்டருக்குச் சென்றனர். அப்பொழுது தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருந்தது. சில்மிஷம் செய்ததாகக் கூறப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டு, தியேட்டருக்கு வெளியே அழைத்து வரப்பட்டார். அந்த நபர் போதையில் இருந்துள்ளார். பொதுவாக போதையில் இருக்கும் குற்றவாளியை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்வதை அனுபவம் வாய்ந்த போலீசார் தவிர்த்து விடுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் குடிபோதையில் இருக்கும் குற்றவாளியை மருத்துவமனையில் சேர்த்து, கண்காணிப்பில் வைத்திருப்பார்கள்.

ஆனால், குடிபோதையில் இருந்த அந்த நபரைப் போலீசார் விசாரணை செய்ய காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். காவல் நிலையம் சென்றதும், அந்த நபர் தனக்கு மயக்கமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். அருகில் இருந்த டீ கடையில் இருந்து டீ வரவழைத்து அவருக்குக் கொடுக்கப்பட்டது. டீ குடித்த அந்த நபர் மயக்கமடைந்தார். அதைத் தொடர்ந்து அந்த நபரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் மேல் சிகிச்சைக்காக அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுரை வழங்கியுள்ளார்.

போலீசாரும் தாமதமின்றி அந்த நபரை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அளித்த சிகிச்சையில் அவருக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை. சி.டி.ஸ்கேன் மூலம் அந்த நோயாளியைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், தற்போது அரசு மருத்துவமனையில் அதற்கான வசதி இல்லை என்றும் அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அந்த நபருக்கு சி.டி.ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ய போலீஸ் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

சி.டி.ஸ்கேன் எடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர், சிகிச்சை பலன் அளிக்காமல் மறுநாள் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இரவு பகலாக கண் விழித்திருந்து, அந்த நபரின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் போலீசார் அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்த போது, அந்த நபரின் உறவினர்கள் யாரும் நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வரவில்லை. மாறாக, சிகிச்சை பலனளிக்காமல் அந்த நபர் இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்ததும் உறவினர்கள் அனைவரும் அரசு மருத்துவமனை முன்பாக குவியத் தொடங்கினர்.

போலீசார் அடித்ததால் ஏற்பட்ட பலத்த காயங்களினால்தான் அவர் இறந்துவிட்டார் என்றும், அதற்காக சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்து மருத்துவமனை முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இறந்து போன நபர் யார் என்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தன் குடும்பத்துடன் வாழாமல், கிராமம் கிராமமாகச் சுற்றித் திரிந்து, மூலிகை மருந்துகளை விற்பனை செய்து வந்த நபர் என்பது தெரியவந்தது.

போலீசார் தங்களது கடமையைத்தான் செய்தார்கள். அவர்களது செயல்பாட்டில் அத்துமீறிய தவறு எதுவும் நடக்கவில்லை என்பது உயரதிகாரிகளுக்குத் தெரியவந்தது. ஆனால், இறந்தவரின் உறவினர்கள் போலீசார் மீது குற்றம் சுமத்தியதால், அந்த நபரின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய வழக்கின் புலன் விசாரணை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் ஒப்படைக்கபட்டது.

வருவாய் கோட்ட அலுவலரின் வேண்டுகோளின்படி, தகுதி பெற்ற இரண்டு அரசு மருத்துவர்கள், இறப்பிற்கான காரணம் கண்டறிய, இறந்து போன அந்த நபரின் பிரேதத்தைப் பரிசோதனை செய்தனர். அவர்களின் பிரேத பரிசோதனையில், அந்த பிரேதத்தில் உள் காயமோ அல்லது வெளிக் காயமோ இல்லை என்பதைக் கண்டறிந்து, அறிக்கை கொடுத்தனர். ஆனால், அந்த அறிக்கையை இறந்தவர்களின் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரேதத்தை வாங்கிக் கொள்ள அவர்கள் மறுத்ததுடன், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்தனர்.

அந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அனுபவம் வாயந்த இரு அரசு மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்தனர். அதை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்தனர். மறு பிரேத பரிசோதனையின் முடிவும், இறந்து போன நபர் போலீசாரால் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தது. மேலும், இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபருக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக இறப்பு நிகழ்ந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த கருத்தையும் இறந்தவர்களின் உறவினர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். போலீசார் அடித்ததால்தான் இறப்பு நிகழ்ந்துள்ளது என்றும், சி.பி.ஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்றும் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் இறந்தவரின் உறவினர்கள் மனு தாக்கல் செய்தனர். சி.பி.ஐ விசாரணை நடத்த உயர்நீதிமன்றமும் ஆணை பிறப்பித்தது.

அந்த வழக்கில் சி.பி.ஐ முழுமையாகப் புலன் விசாரணை மேற்கொண்டது. விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபருக்கு ஏற்கனவே இருந்த நோய் காரணமாக ரத்தக் குழாயில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அதன் விளைவாக இறப்பு நிகழ்ந்துள்ளது என்றும், அவரைக் காப்பாற்ற போலீசார் அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளனர் என்றும், அந்த நபரைப் போலீசார் அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் புலன் விசாரணையில் சி.பி.ஐ கண்டறிந்தது. எனவே, இந்த வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர். மீது மேல் நடவடிக்கை தேவை இல்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்தது.

அதே சமயம், இந்த வழக்கு பதிவு செய்த முறையில் போலீசார் தவறு செய்துள்ளதாகவும், அதற்காக சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ பரிந்துரை செய்தது.

வழக்கு பதிவு செய்ததில் போலீசார் செய்த தவறு என்ன ?

பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு நபர் தவறாக நடந்து கொண்டதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்த பொழுது, உடல் நலக்குறைவு காரணமாக எதிர்பாராத விதத்தில் அந்த நபருக்கு இறப்பு நிகழ்ந்துள்ளது.

ஆனால், அந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யும் பொழுது, தியேட்டர் அருகில் மயக்கமாக இருந்த அந்த நபருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் சேர்த்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.  விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துவந்த விவரத்தை போலீசார் மறைந்துவிட்டனர் என்பதுதான் போலீசார் மீதான குற்றச்சாட்டு.

அந்த குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் நிகழ்ந்த அந்த சம்பவத்தின் மீது எடுக்கப்பட்ட துறை நடவடிக்கையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் நேர்மையாகப் பணியாற்றிய போலீஸ் அதிகாரியும் அடங்குவார்.

நேர்மையானவர்கள் இதுபோல் தண்டிக்கப்படுவதால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன?

சமுதாய நலனுக்காச் செயல்பட்டு, புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொழுது ஏற்படும் எதிர்பாராத காரணங்களால் நிகழும் அசம்பாவிதங்களுக்கு ஏன் பொறுப்பு ஏற்க வேண்டும்? என்ற உணர்வும், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்தால் என்ன? என்ற மனப்போக்கும் காவல்துறையினரிடம் அதிகரித்துவிடும்.

அந்த உணர்வு காவல்துறையினருக்கு ஏற்படாமல் பார்த்துக் கொண்டால், பொதுமக்கள் நிம்மதியுடன் வாழ அது வழி வகுக்கும்.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(22.12.2017 தேதிய தினத்தந்தி நாளிதழில் வெளியான கட்டுரை)

Previous post காவல்துறையும், கையூட்டு கலாசாரமும்!
Next post தனயனால் தாய்க்குக் கிடைத்த சிறைவாசம்

4 thoughts on “கடமையைச் செய்த போலீசாருக்குக் கிடைத்த தண்டனை

  1. அய்யா வணக்கம்
    நேர்மையான அதிகாரி ஒன்பது ஆண்டுகள் கழித்து பணி நீக்கம் என்பது எனக்கு படிக்கும் பொழுது மனம் கஷ்டமாக இருந்தது
    சிறு தவறினால் ஏற்ப்பட்டது

  2. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் இதுவரை மீளமுடியாமல் உள்ளனர் என்பது மிகவும் வருத்தமான விஷயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *