குற்றச் செயல்களில் மிகவும் கொடூரமானது கொலைக் குற்றம். ஒவ்வொரு கொலைக்கும் ஒரு உள்நோக்கம் அல்லது முன் விரோதம் இருக்கும். சில சமயங்களில் கொலையானது பழிக்குப் பழி என்ற முறையில் நிகழ்த்தப்படுவதும் உண்டு. இது தவிர, ஆதாயக் கொலை என்று ஒன்று இருக்கிறது. தங்க நகை, பணம், சொத்து போன்றவற்றை அபகரிக்க நடத்தப்படும் கொலைக் குற்றம் இது. இந்த வகை கொலைகள் தற்பொழுது கணிசமாக உயர்ந்துள்ளன. ஆதாயக் கொலைகளில் பழியாகும் நபர்கள் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருப்பார்கள். குறிப்பாக பெண்களும், முதியவர்களும் இவ்வகை கொலைகளுக்கு அதிகமாகப் பழியாகிறார்கள்.
வித்தியாசமான நோக்கத்திற்காக, வித்தியாசமான முறையில் நிகழ்ந்த கொலை சம்பவம் குறித்து பார்ப்போம்.
2007-ஆம் ஆண்டில் ஓர் அதிகாலை நேரம். சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தின் ஆய்வாளர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்பொழுது நான் காவல் துணை ஆணையராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
‘சார், ஒரு மர்டர் கேஸ். இறந்தவர் ஒரு வழக்கறிஞர். அவரது மனைவிதான் புகார் கொடுத்துள்ளார். அவருடைய கணவர் தலையில் பலத்த காயங்களுடன் வீட்டிற்குள் இறந்து கிடக்கிறாராம். பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளைக் காணவில்லையாம்’ என்ற தகவலைத் தெரியப்படுத்தினார்.
புகார் வந்த அடுத்த சில நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றுவிட்டனர். புலன் விசாரணையும் தொடங்கிவிட்டது. இறந்து போன வழக்கறிஞரின் மனைவி அந்த பகுதியிலுள்ள ஒரு தனியார் தொடக்கப்பள்ளியில் ஆசிரியை. கணவனை இழந்த துக்கத்தில் இருந்தார் அவர்.
அந்த பெண்ணைப் பொருத்தவரை இழப்பு என்பது மிகப் பெரியது. அதற்காக ‘அழுது முடிக்கட்டும். பிறகு விசாரித்துக் கொள்ளலாம்’ என்று போலீசாரால் காத்திருக்க முடியாதே! நடந்தது ஒரு கொலை. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் குற்றவாளி பல மைல் தூரத்தைக் கடந்துவிடக் கூடிய வாய்ப்புண்டு. ஆகையால் மிகுந்த கவனத்தோடு அந்த ஆசிரியையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் தனது தாய் மாமாவையே திருமணம் செய்திருந்தார். அவர்களின் திருமண வாழக்கைக்கு ஆதாரமாக ஐந்து வயது நிரம்பிய ஒரு மகனும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர்.
அந்த ஆசிரியை எழுத்து மூலமாகக் கொடுத்த புகார் இதுதான்: ‘நான் நேற்றிரவு என் மகளுடன் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தேன். கணவரும், மகனும் வீட்டின் வரவேற்பறையில் தரையில் படுத்து உறங்கினர். இன்று அதிகாலையில் என்னுடைய மகள் பசியில் அழுதாள். அவளுக்குப் பால் எடுத்துக் கொடுப்பதற்காக சமையல் அறைக்குச் செல்ல, படுக்கை அறையின் கதவைத் திறக்க முயன்ற போது, அது வெளிப்புறமாகத் தாழ்போடப்பட்டு இருந்தது. நான் கதவைத் தட்டினேன். வெகு நேரத்திற்குப் பிறகு என்னுடைய மகன் எழுந்து வந்து கதவைத் திறந்துவிட்டான். படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து நான் பார்த்தபோது, என் கணவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.’
சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்திய என்னிடத்தில், புகாரில் எழுதி இருந்த சம்பவத்தை விவரித்தார் அந்த ஆசிரியை. இறந்தவர் வழக்கறிஞர் என்பதால் துக்கம் விசாரிப்பதற்காக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிக அளவில் வரத் தொடங்கினர். சம்பவ இடத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, உடனடியாக இறந்த உடலைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தேன். அதைத் தொடர்ந்து, காவல் நிலைய ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள பழைய குற்றவாளிகளின் நடத்தையைக் கண்டறிய ஒரு காவலர் குழுவை அனுப்பி வைத்தேன்.
இந்த வழக்கின் புலன் விசாரணையை எந்த கோணத்தில் இருந்து தொடங்குவது என்று தெரியாமல், சம்பவ வீட்டின் எதிரே சற்று நேரம் நின்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது, தன்னை வளர்த்து ஆளாக்க வேண்டிய தந்தை இறந்துவிட்டதைக் கூட உணர முடியாத, இறந்தவரின் ஐந்து வயது சிறுவன் காவல்துறை வாகனத்தின் மீதிருந்த சுழலும் சிவப்பு விளக்கையும், என் அருகில் சீருடையில் நின்று கொண்டிருந்த கார் டிரைவரையும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
குழந்தைகளுக்கே உரிய உற்சாகம் இன்றி சோர்வுடன் இருந்த அவன் முகம், அவன் காலையில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்பதை வெளிப்படுத்தியது. அவனை அருகில் அழைத்தேன். ‘காலையில் ஏதாவது சாப்பிட்டாயா?’ என்று கேட்டதற்கு இல்லை என்று வேகமாக தலையசைத்தான். அருகில் இருந்த பெட்டிக்கடையில் இருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்து அவனிடம் கொடுக்க ஏற்பாடு செய்தேன். அவன் பிஸ்கட் சாப்பிட்ட வேகம் அவனது பசியின் உச்சக் கட்டத்தை உணர்த்தியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். அவன் சொன்ன தகவல் என்னைச் சிந்திக்க வைத்தது.
வரவேற்பறையில் இருந்த ஷோபாவில் அவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அவனது அம்மா தங்கச்சி பாப்பாவுடன், அவன் படுத்திருந்த ஷோபா அருகில் நின்று கொண்டு, அவன் மீது தண்ணீர் தெளித்து எழுப்பியதாகவும், அப்போது அப்பா தரையில் படுத்திருந்ததாகவும் எதார்த்த வார்த்தைகளில் அந்த சிறுவன் கூறினான். அப்படியானால், ‘படுக்கை அறையின் கதவு வெளிப்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. நான் கதவைத் தட்டிய சத்தம் கேட்டு, என் மகன் எழுந்து வந்து கதவைத் திறந்துவிட்டான்’ என்று அந்த சிறுவனின் தாய் கூறியது பொய்யா? இந்தக் கொலையில் இறந்தவரின் மனைவி எதையோ மறைப்பதாக எனக்குத் தோன்றியது.
துக்கம் விசாரிக்க வந்தவர்கள் மத்தியில் அமர்ந்திருந்த இறந்தவரின் மனைவியைத் தனியாக அழைத்து வரச் சொன்னேன். ‘கொலையாளியைப் போலீசார் கண்டுபிடித்து விட்டனர். நகை இருக்கும் இடம் உங்களுக்குத் தெரியும் என்பதும் போலீசாருக்குத் தெரிந்துவிட்டது. நகையை எடுத்து காண்பித்துவிட்டால், உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது’ என்று அந்தப் பெண் நம்பும்படி எதார்த்த வார்த்தைகளில் கூறினேன்.
நான் சொன்னதைக் கேட்டதும் சோகமாகக் காணப்பட்ட அந்தப் பெண்ணின் முகத்தில் பயம் படரத் தொடங்கியது. அவரிடம் இருந்து எந்தப் பதிலும் பெற முடியவில்லை. மவுனமாக எங்கள் முன் அவர் அமர்ந்திருந்தார். என்னுடன் இருந்த ஆய்வாளரும், நான் பேசிய கருத்தின் உள் அர்த்தம் புரிந்து கொண்டு, இறந்தவரின் மனைவியிடம் பக்குவமாகப் பேசி அவரது மவுனத்தை மெல்ல மெல்லக் கலைத்தார்.
‘நகைகள் இருக்கும் இடத்தை நான் காண்பித்துவிட்டால், எனக்கு எந்தப் பிரச்சினையும் வராதா?’ என்று அப்பாவித்தனமாகக் கேட்டார் அந்தப் பெண். நாங்கள் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில், எங்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, மறைத்து வைத்திருந்த களவு போனதாகச் சொல்லப்பட்ட தங்க நகைகளை அவர் எடுத்துக் காண்பித்தார்.
கணவனைக் கொலை செய்துவிட்டு, தனது தங்க நகைகளை மறைத்து வைத்துவிட்டு, ஆதாயக் கொலைக்குத் தன் கணவன் பலியாகிவிட்டான் என்ற கபட நாடகத்தை மனைவி அரங்கேற்றியுள்ளதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம்.
தன் கணவனை அவள் ஏன் கொலை செய்ய வேண்டும்? இந்தக் கொலையின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கு இதில் என்ன லாபம்? போன்ற கேள்விகளுக்கான சரியான பதிலைக் காலதாமதம் இன்றி கண்டுபிடிப்பதுதான் எங்களது அடுத்தகட்ட புலன் விசாரணையாக இருந்தது. அந்த நகைகளோடு, இறந்தவரின் மனைவியை உடனடியாக காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினோம்.
தாய் மாமனைத் திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்த போதிலும், கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இல்லாமல் இருந்திருக்கிறது. இதைத் தெரிந்து கொண்ட அவளது உறவுப் பையன் ஒருவன் அவளுக்கு ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி இ;ருக்கிறான். ஒரு கட்டத்தில் அவளது கணவன், அவர்களுக்குத் தடையாக இ;ருப்பதாக உணர்ந்ததால், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
சம்பவ தினத்திற்குச் சில நாட்களுக்கு முன்பாக மருந்து கடை ஒன்றில் தூக்க மாத்திரைகளை அந்தப் பெண் வாங்கி வைத்துள்ளாள். சம்பவத்தன்று இரவு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கணவனுக்கு உணவு பரிமாறியிருக்கிறாள். இரவு உணவு சாப்பிட்டதும், கணவன் உடனடியாக படுக்கைக்குச் சென்றுவிட்டார். அதன்பின் அந்த பெண் உறவுக்காரப் பையனுக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளாள்.
நள்ளிரவு நேரத்தில் இரும்பு குழாயுடன் அவளது வீட்டுக்கு வந்தான் அந்த உறவுக்காரப் பையன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வக்கீலின் தலையில் இரும்பு குழாய் கொண்டு பலமாக அவன் அடித்ததில், சத்தம் எதுவும் போடாமலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகிப் போனார் வக்கீல். இதையடுத்து உறவுக்காரப் பையன் அங்கிருந்து சென்றுவிட்டான். அவளும் தன் பெண் குழந்தையுடன் தன் படுக்கை அறைக்குச் சென்றுவிட்டாள்.
அதிகாலையில் தன் கணவன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட அவள், அந்த தகவலைத் தன் உறவுக்காரப் பையனுக்குப் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளாள். பின்னர், யாரோ தன் கணவனைக் கொலை செய்துவிட்டு, பீரோவில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக, ஆதாயக் கொலை நாடகத்தை அவள் அரங்கேற்றியிருக்கிறாள் என்பது புலன் விசாரணையில் தெரியவந்தது.
உறவுக்காரப் பையனையும் தனிப்படை போலீசார் விரைந்து பிடித்தனர். விசாரணை முடிந்ததும், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்த வக்கீலின் மனைவியை நீதிமன்ற அனுமதியுடன் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவளது அப்பா மற்றும் உடன்பிறந்த சகோதரி முன்னிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் பொழுது, கொலை சம்பவம் குறித்த முழு விவரத்தையும் ஒரு குழந்தையைப் போல் அவள் ஒப்புவித்தாள். உறவுக்காரப் பையனின் தூண்டுதலினால், இந்தக் கொலை சம்பவத்திற்குத் தான் உடந்தையாகிவிட்டதாகக் கூறி, தன் அப்பாவிடம் அவள் மன்னிப்புக் கேட்டாள்.
அவளது மாறிய மனநிலையைப் புலன் விசாரணை அதிகாரிகள், வழக்கை வலுப்படுத்த பயன்படுத்திக் கொண்டனர். செய்த தவறுக்கு பரிகாரமாக, தன்னை வயப்படுத்தி தன் கணவனைக் கொலை செய்த அந்த உறவுக்காரப் பையனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க, அவள் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அவளது உறவினர்கள் மூலம் அவளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கொலை செய்வதற்கான சூழல் உருவான விதத்தையும், தன் உறவுக்காரப் பையன் தன் கணவனைக் கொலை செய்த விதத்தையும் அவள் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 164-ன் படி ரகசிய வாக்குமூலம் கொடுத்தாள்.
புலன் விசாரணையின் பொழுது தன் கணவனுக்கு உணவில் கலந்து கொடுத்த தூக்க மாத்திரைகள் வாங்கிய மருந்து கடையை அவள் அடையாளம் காட்டினாள். கடைக்காரரும் அந்த பெண்ணுக்கு தூக்க மாத்திரைகள் விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார். டாக்டரின் மருந்து சீட்டு கொண்டு வருபவர்களுக்குத் தான் மருந்து கடையில் மருந்து விற்பனை செய்யப்பட வேண்டும்.
‘டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் எப்படி தூக்க மாத்திரைகள் அந்த பெண்ணுக்கு கொடுத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, ‘அந்தப் பெண் எங்களது வாடிக்கையாளர். ஆதனால்தான் மருந்து சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரைகள் கொடுத்தேன்’ என்ற நடைமுறையில் உள்ள கள நிலவரத்தை மறைக்காமல் மருந்துக் கடைக்காரர் வாக்குமூலம் கொடுத்தார்.
கொலையான வக்கீலின் பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, அவரது உடல் உள்ளுறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தியதில் கொலையானவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு இருந்ததைப் பரிசோதனை உறுதி செய்தது.
வக்கீலின் மனைவி மற்றும் அவரது உறவுக்கார பையன் இருவரும் பயன்படுத்திய செல்போன் எண்களை ஆய்வு செய்ததில், சம்பவ தினத்தன்று பல முறை செல்போனில் இருவரும் பேசி, கொலைக்கான திட்டத்தை வகுத்ததும், பின்னர் அந்த கொலையை ஆதாயக் கொலை என்று திசை திருப்ப நாடகமாடியதும் தெரியவந்தது.
இந்த கொலை வழக்கு மீதான நீதிமன்ற விசாரணையின் முடிவில் கொலையான வக்கீலின் மனைவிக்கும், அவளது உறவுக்காரப் பையனுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்ததில், காவல்துறை அதிகாரி என்ற முறையில் கடமையைச் செய்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் இந்த குற்றத்தை வெளிக் கொண்டு வரக் காரணமாக இருந்த அந்த சிறுவனின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் என்று நான் எண்ணிப் பார்த்தேன்.
குழந்தைத் தனமாக தான் பேசிய வார்த்தைகளால் தன் தாய் தண்டிக்கப்பட்டுவிட்டாரே என்று வருத்தப்படுவானா? அல்லது தன் தந்தையின் கொலைக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன்பாக அடையாளம் காட்டி விட்டோம் என்று பெருமிதம் கொள்வானா? விடைதான் தெரியவில்லை.
கலாச்சாரச் சீரழிவு பல நேரங்களில் இது போன்ற குற்றங்களுக்கு வழி வகுக்கிறது. தற்போது இது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. சுய ஒழுக்கம் குறைந்து வருவது தெரிகிறது. இது மேலும் பலவிதமான குற்றச் செயல்களை அதிகரித்துள்ளதும் தெரிய வருகிறது.