இந்திய குற்ற விசாரணை முறைச் சட்டத்தின்படி நடத்தப்படும் நீதிமன்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் உண்மையில் குற்றம் புரிந்தவரா?  இல்லையா? என்பது தீர்மானிக்கப்படுவது இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களும், சாட்சியங்களும் குற்றத்தை நிரூபிக்கப் போதுமானதா? இல்லையா? என்பது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்து, சீர்தூக்கிப் பார்த்து, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா? அல்லது நிரபராதியா? என்று தீர்ப்பு வழங்குகிறது.

இன்றைய சமுதாயச் சூழலில், குற்றம் புரிந்த எவரும் புலன் விசாரணையின் பொழுதும், அதைத் தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற விசாரணையிலும் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்வதில்லை. குற்ற நிகழ்வுக்குப் பிறகு மனசாட்சி காரணமாக, குற்றம் செய்தவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ள முன் வந்தாலும், அவரது உறவினர்களும், சட்ட ஆலோசகர்களும் அதற்கு தடை போடுவதையும் காண முடிகிறது.

தொடர்ச்சியாக கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் போலீசில் பிடிபட்டான். போலீசாரின் விசாரணையில் தான் செய்த குற்றங்கள் குறித்தும், தன்னுடன் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்தும் அவன் விரிவாக வாக்குமூலம் கொடுத்தான். அந்த இளைஞன் சம்பந்தப்பட்ட சில குற்றவழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அவ்வழக்குகளின் சாட்சியங்கள் குறித்து எதுவும் விவரிக்காமல், அந்த இளைஞனின் தந்தை போலீஸ் விசாரணையின் பொழுது நடந்து கொண்ட விதம் குறித்தும், அவர் தன் மகனுக்குக் கொடுத்த அறிவுரை குறித்தும் பார்ப்போம்.

2009-ஆம் ஆண்டில் நான் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றினேன். அந்த காலகட்டத்தில், ஜனவரி மாதத்தில் ஒரு நாள் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் என்னைத் தொடர்பு கொண்டு, மூன்று பேர் ஒரே இடத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த தகவலைத் தெரிவித்தார்.

திருநெல்வேலி நகரத்தை அடுத்துள்ள ஒரு சிறிய கிராமம் சுத்தமல்லி. துhமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள செழிப்பான பகுதி அது. அந்த கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலையம் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

‘சாதி உணர்வு காரணமாக நிலவி வந்த முன் விரோதத்தினால், பழிக்குப் பழியாக மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகளில் சிலர் திருநெல்வேலி நகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஒரு காவல் நிலையத்தில் ரத்தம் தோய்ந்த ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர்’ என்று மாவட்ட எஸ்.பி என்னிடம் தகவல் தெரிவித்தார்.

கொலை செய்து விட்டு, கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்;களுடன் கொலையாளி காவல் நிலையத்தில் சரணடையும் பழக்கம் கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்தது. காலப்போக்கில் கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக, பொய்யான நபர்களை நீதிமன்றத்தில் சரணடையச் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. கொலை செய்து விட்டு தலைமறைவாகிவிடும் கொலையாளிகள், புலன் விசாரணையின் போக்கை திசை திருப்பி விடும் செயல்களில் தற்பொழுது ஈடுபடுவதைக் காணமுடிகிறது.

இந்த மூவர் கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளில் சிலர், சுத்தமல்லி காவல் நிலையத்தில் சரணடையாமல், திருநெல்வேலி நகர காவல் எல்லைக்குட்டபட்ட காவல் நிலையத்தில் ஏன் சரணடைய வேண்டும்?

அதற்கு காரணம் இருக்கிறது. கொலை நடந்த எல்லைக்குட்பட்ட சுத்தமல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தால், தங்களிடம் கடுமையான முறையில் போலீசார் விசாரணை செய்வார்கள் என்பது கொலையாளிகளின் கருத்து. அதற்கு பதிலாக, திருநெல்வேலி நகர காவல் எல்லைக்குட்ட காவல் நிலையத்தில் சரணடைந்தால், திருநெல்வேலி நகர போலீசார் தங்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ள மாட்டார்கள் என்பது கொலையாளிகளின் நம்பிக்கை.

ஆனால், கொலையாளிகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக, திருநெல்வேலி மாவட்ட போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இந்த மூவர் கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பார்வைக்குள் கொண்டு வரப்பட்டனர்.

மூவர் கொலையில் இறந்தவர்களின் ஆதரவாளர்கள், கொலையாளிகளைப் பழி தீர்க்க திட்டம் தீட்டினர். பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்த கொலையாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துவரும் பொழுது, அவர்களைத் தாக்கி பழி தீர்த்துக் கொள்ள முயற்சி செய்தனர். நீதிமன்ற வளாகத்திலும், வழிக்காவலின் பொழுதும் அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், கொலையாளிகளின் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலையாளிகள் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று, மதுரையில் தங்கியிருந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த கொலையாளிகள் தினந்தோறும் மதுரை நகரில் உள்ள தல்லாகுளம் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்துப் போட வேண்டும்.

பழி தீர்க்க இதுதான் சமயம் என்று உணர்ந்தவர்கள், திருநெல்வேலியில் இருந்து மதுரை சென்றனர். அந்த கொலையாளிகள் கையெழுத்து போட காவல் நிலையம் வரும் வழியில், அவர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவது என்பது அவர்களின் திட்டம். இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து மதுரை போலீசாருக்கு முன் கூட்டியே தகவல் கிடைத்தது. பாதுகாப்பு பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்த போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

தாக்குதல் நடத்த திருநெல்வேலியில் இருந்து வந்தவர்கள், தங்களின் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, தங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை மதுரை புறநகர் சாலை ஓரத்தில் போட்டுவிட்டு, ஊர் திரும்பினர்.

பழி வாங்குவதற்காக மதுரை சென்று வந்தவர்களில் ஒரு இளைஞன் திருநெல்வேலி மாவட்ட போலீசாரிடம் பிடிபட்டான். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் ‘பழிக்குப் பழி’ என்ற வகையில், சங்கிலித் தொடர் போன்று அந்த வட்டாரத்தில் நிகழந்த குற்றச் செயல்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து அந்த இளைஞன் போலீசாரிடம் தெளிவாக வாக்குமூலம் கொடுத்தான்.

இந்த இளைஞன் பிடிபடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி நகரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் ஆதாயக் கொலைக்குப் பலியாகியிருந்தார். அந்த ஆதாயக் கொலையிலும் தான் சம்பந்தப்பட்டிருந்தாக அந்த இளைஞன் வாக்குமூலம் அளித்தான்.

பிடிபட்ட இளைஞனிடம் போலீசார் செய்து வந்த விசாரணையை மேற்பார்வையிட நான் சென்றிருந்தேன். போலீசாரிடம் கூறிய அதே வாக்குமூலத்தை என்னிடமும் அந்த இளைஞன் கூறினான்.

இது போன்ற பரபரப்பான வழக்குகள் விசாரணையில், குற்றவாளிகளின் உறவினர்கள் சிலரை வரவழைத்து, அவர்கள் முன்னிலையில் விசாரணை செய்யும் முறையை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவ்வாறு செய்வது, வழக்கு விசாரணையின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தியதைப் பல வழக்குகளில் நான் பார்த்திருக்கிறேன். இந்த நடைமுறையில் உள்ள சாதக பாதகங்களைப் புலன் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு நான் விளக்கிக் கூறுவதும் உண்டு.

அந்த அடிப்படையில் பிடிபட்ட அந்த இளைஞனின் தந்தையை விசாரணை நடைபெறும் இடத்திற்கு வரவழைக்க ஏற்பாடு செய்தேன். அவர் பணியில் இருந்து வரும் ஒரு போலீஸ் தலைமைக் காவலர்.

‘நடந்தது என்ன?’ என்று தன் மகனிடம் நேரடியாக விசாரித்து தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அந்த தந்தைக்கு வழங்கப்பட்டது. ஒரு மணி நேரம் தந்தையும், மகனும் தனிமையில் பேசிக் கொண்டனர். அதன் பிறகு, அந்த இளைஞனின் தந்தை எங்களிடம் வந்தார்.

‘ஐயா, பல குற்றவாளிகளையும், சாட்சிகளையும் என்னுடைய 30 ஆண்டு கால போலீஸ் வாழ்க்கையில் விசாரணை செய்துள்ளேன். இன்று என்னுடைய மகனின் செயல்பாடுகள் குறித்து நான் விசாரிக்க வேண்டிய துர்பாக்கியம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. என் மகனை நான் முழுமையாக விசாரித்துவிட்டேன். போலீசாரின் விசாரணையில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’ என்று வருத்தம் தோய்ந்த மெல்லிய குரலில் கூறினார்.

‘ஒரு போலீஸ்காரரின் மகனை விசாரணை செய்வதில் எங்களுக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்டேன்.

‘போலீஸ் வேலையில் நான் செலுத்திய கவனத்தை என் மகனின் வளர்ப்பில் செலுத்த தவறிவிட்டேன். அவனைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. தவறு என்னுடையதுதான். போலீசார் எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கைக்கு எதிராக நான் எதுவும் செய்ய விரும்பவில்லை’ என்று தனது கருத்தை வருத்தத்துடன் வெளிப்படுத்தினார்.

அங்கிருந்த போலீசார் அவருக்கு ஆறுதல் வார்த்தை கூறினார்கள். இது குறித்து அவரது குடும்பத்தினருடன் கலந்து பேசிவிட்டு வரும்படி அவரை அனுப்பி வைத்தேன். குடும்பத்தாருடன் ஆலோசனை செய்துவிட்டு மீண்டும் விசாரணை நடத்தப்படும் இடத்திற்கு வந்தார் அந்த தலைமைக் காவலர்.

‘போலீசாரின் விசாரணையை நான் ஏற்றுக் கொள்கிறேன். தேவையெனில், என் மகனை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுக்கும்படி கூறுகிறேன்’ என்றார்.

தந்தை என்ற முறையில் அந்த தலைமைக் காவலருக்கு எவ்வளவு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கும் என்பதை உணர முடிந்தது. அதே நேரத்தில், போலீசில் பணிபுரியும் தான், தன் மகனை எப்படியாவது வழக்கில் இருந்து விடுவித்துவிட வேண்டும் என்ற உணர்வில் செயல்படாத அவரது நடத்தை, அவர் போலீஸ் துறையின் மீது வைத்திருந்த மதிப்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தியது.

அந்த இளைஞன் சம்பந்தப்பட்ட வழக்குகளில் புலன் விசாரணை முடித்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை ஆதாயக் கொலை செய்த குற்றத்திற்காக அந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனையை 2012-ஆம் ஆண்டில் திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கியது.

அந்த தலைமைக் காவலரின் வாழ்க்கை உணர்த்தும் செய்தி இதுதான். ‘குடும்பமும், பணியும் இரண்டு கண்கள் போன்றது. இவ்விரண்டையும் கவனத்துடன் கண்காணித்து செயல்பட வேண்டும்.’

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(01.09.2017-ஆம் தேதிய தினத்தந்தி இதழில் வெளியான கட்டுரை)

3 thought on “காவல்துறைக்கு வழிகாட்டிய காவலர்”
  1. இய்யா வணக்கம்
    சில நேர்மையான காவலர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
    அந்த காவலருக்கு வாழ்த்துக்கள்

  2. அய்யா வணக்கம்
    சில நேர்மையான காவலர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
    அந்த காவலருக்கு வாழ்த்துக்கள்

  3. குற்றம் செய்த அந்த இளைஞனின் தந்தை உண்மையாகவே பாராட்டப்பட வேண்டியவர். மேலும் தாங்கள் திருநெல்வேலி சரகத்தில் பணியாற்றிய போது உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்த விதம் மற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு வழிகாட்டுதலாகவும் உதாரணமாகவும் இருக்கிறது 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *