தொடரும் போலீஸ் கொலைகள்: கள நிலவரம்

நள்ளிரவில் ஆடு திருடிச் சென்ற கும்பலைத் துரத்திப் பிடிக்கும் முயற்சியில், சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்ற துயரச் செய்தியை இதர கொலை நிகழ்வுகளில் ஒன்று எனக் கருதி, எளிமையாகக் கடந்து செல்ல முடியாது.

கையும், களவுமாக போலீசாரிடம் பிடிபடும் திருடர்கள் தப்பியோட முயற்சி செய்வதும், தப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் போலீசாரிடம் சரண்டர் ஆவதும் குற்றவாளிகளின் மனநிலை. ஆனால், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க, போலீஸ் அதிகாரியைக் கொலை செய்ய துணிந்த சம்பவத்தை ஓர் அரிய நிகழ்வாகக் கருதி, புறந்தள்ளி விடவும் முடியாது.

குற்றம் செய்வது இழிவான செயல் என்ற உணர்வைக் கடந்து, குற்றம் செய்வதைத் தடுப்பவர்களைக் கொலையும் செய்யலாம் என்ற மனநிலை சமுதாயத்தில் துளிர்விடத் தொடங்கிவிட்டதை இச்சம்பவம் உணர்த்துகிறது. ‘திருட்டு உள்ளிட்ட சமூகக் குற்றங்கள் செய்ய தடையாக இருந்தால், கொல்லப்படுவீர்கள்’ என்ற அச்ச உணர்வை இச்சம்பவம் போலீசாரிடம் விதைக்கிறது.

காவல் பயிற்சி பள்ளியில் முறையான பயிற்சியும், காவல்துறையில் 25 ஆண்டுகளுக்கும் குறையாத அனுபவமும் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரைக் கொலை செய்த ஆடு திருடிய குற்றவாளிகளில் இருவர் 9 மற்றும் 14 வயதுடைய இளம் சிறார்கள் எனவும், மற்றொரு குற்றவாளி 19 வயதுடைய வாலிபர் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இளைஞர்கள் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில்; ஈடுபடுவதைத் தாண்டி, சிறார்களையும் குற்றச் செயலில் ஈடுபடுத்தும் செயல், இன்றைய இளம் தலைமுறையினர் தடம்புரண்டு செல்கின்றார்களோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.

பள்ளியில் கல்வி கற்கும் வயதுடைய இளம் சிறார்கள் குடும்ப வறுமையின் காரணமாக திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அல்ல. பள்ளி பருவத்திலே மது, கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு அதிகரித்து வருகிறது. போதையூட்டும் பழக்கங்கள் சிறார்களைத் திருடும் சூழலுக்குத் தள்ளிவிடுகிறது என்பதுதான் கள நிலவரம்.

கொலை, திருட்டு உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடும் அளவிற்கு இளம் சிறார்கள் திசைமாறிவிட்டார்களா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படுகிறது. நம் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இளம் சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாநிலங்களின் பட்டியல் வரிசையில் முதல், இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரத்துக்கு அடுத்து மூன்றாவது இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்களில் 2018, 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் கூடத்தின் அறிக்கை கூறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாகவும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் 2018, 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் முறையே 2,304, 2,686 மற்றும் 3,394 குற்றங்களில் இளம் சிறார்கள் ஈடுபட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் கூடத்தின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டில் இளம் சிறார்கள் 104 கொலைகள், 392 திருட்டுகள், 174 களவுகள், 128 வழிப்பறிகள், 16 கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரத்தை எளிமையாகக் கடந்து சென்றுவிடக் கூடாது. இளம் சிறார்களைக் குற்றவாளிகளாக உருமாற்றும் காரணிகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பூமிநாதன் கொலை நிகழ்வு உணர்த்துகிறது.

தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்கும் முயற்சியில் உயிர் தியாகம் செய்து, வீர மரணம் அடைவது போலீஸ் பணியில் தவிர்க்க முடியாதது. ஆனால், ஆடு திருட்டு, மணல் திருட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சாலை மறியலில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபடும் போலீஸாரைக் கொலை செய்யும் நிலை நம் மாநிலத்தில் தொடர்கதையாக இருந்து வருகிறது.

குற்றச் செயலில் ஈடுபடுவதால் கிடைக்கும் தண்டனையில் இருந்து ஏதேனும் ஒரு வழியில் தப்பி விடலாம் என்ற நம்பிக்கை குற்றம் செய்பவர்கள் பலரிடம் தென்படுகிறது. அதன் நீட்சியாக, குற்றத் தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் உயிருக்கு ஆபத்து விளைக்கும் விதத்தில் குற்றவாளிகள் செயல்படும் கலாச்சாரம் தற்பொழுது நிலவுகிறது.

குற்ற நிகழ்வுகளையும், குற்றவாளிகளின் தினசரி செயல்பாடுகளையும் கண்காணிப்பதில் போலீஸின் அணுகுமுறை மாறத் தொடங்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு பணிச்சுமை காரணமாக குற்றத் தடுப்பு, குற்றவாளிகளின் செயல்களைக் கண்காணித்தல் போன்றவற்றில் போதிய கவனம் செலுத்தாத நிலையில் காவல்துறை இயங்கி வருகிறது. நெருக்கடி வரும்பொழுது, முன்னெச்சரிக்கை என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பழங்குற்றவாளிகளையும், ரவுடிகளையும் கைது செய்வதில் காட்டும் ஆர்வம், அவர்களின் தினசரி செயல்பாடுகளைக் கண்காணிப்பதில் இல்லை.

போலீஸின் ஓர் அங்கமாக இருந்த ‘லத்தி’ தற்பொழுது மறைந்துவிட்டது. பூமிநாதன் கொலையைத் தொடர்ந்து, ரோந்து பணியின் பொழுது போலீஸார் துப்பாக்கி எடுத்துச் செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் முறையாக துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாது என்பதற்கு குற்றவாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற ஆய்வாளர் பெரியபாண்டியனின் மரணம் சான்றாகும்.

குற்றத் தடுப்பு பணியில் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடம், நிகழ்கால குற்றங்களின் தன்மை, எதிர்காலத்தில் குற்றங்கள் எவ்விதத்தில் உருமாறும் என்ற கணிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து, காவல்துறையின் செயல்பாடுகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். மாறாக, அன்றாட பிரச்சினையைச் சமாளிப்பதற்காகக் கொண்டு வரப்படும் சீர்திருத்தங்கள் முழுமையான பலனளிக்காது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(01.12.2021 தேதிய இந்து தமிழ் நாளிதழில் வெளியான கட்டுரை)

Previous post காவல்துறைக்கு வழிகாட்டிய காவலர்
Next post புலன் விசாரணை: சட்ட விதியும், நடைமுறையும்

3 thoughts on “தொடரும் போலீஸ் கொலைகள்: கள நிலவரம்

  1. குற்றவாளிகளுக்கு சட்டத்தில் அதிக தண்டனை கொடுத்த வழிவகுக்க வேண்டும்,மேலும் காவலர்களுக்கு பயிற்சியுடன் கூடிய துப்பாக்கி பயிற்சியும்கொகொடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

  2. வணக்கம் அய்யா
    குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
    சிறுவர்கள் என்று பாராமல் தண்டனை வழங்க வேண்டும். அடுத்துவர்கள் இது மாதிரி செய்ய கூடாது.
    தமிழக மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பது வேதனையாக உள்ளது.சிறுவர்கள் அனைவருக்கும் நல்ல சிந்தனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  3. சமீப காலங்களில் இரண்டு SSI(சிறப்பு சார்பு ஆய்வாளர்) கொலைகள் முக்கியமானவை. ஒன்று SSI Wilson மற்றொன்று SSI Bhoominathan. இதில் வில்சன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். பூமிநாதன் சிறு திருடர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டுமே காவல்துறையினர் மீது சமூக விரோதிகளுக்கு பயமோ மரியாதையோ இல்லை என்பதைக் காட்டுகிறது.
    குறைவான காவலர் எண்ணிக்கை, பணிச்சுமை மற்றும் நேர்மையாகப் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை குறைவு ஆகியவை காவல்துறையின் செயல்பாட்டுக்குக் கடிவாளம் போட்டுள்ளன. அடிமட்டத்தில் புரையோடியுள்ள லஞ்சமும் உயர்மட்டத்தில் காணப்படும் பாரபட்சமான செயல்பாடுகளும் முக்கிய காரணங்கள்.
    அரசு காவல்துறையினரை எந்த அளவுக்கு நேர்மையாக செயல்பட அனுமதிக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. குறைந்த அளவிலான காவல்துறையினரே நியாயத்தின் பக்கம் உறுதியாக இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
    போதாக்குறைக்கு இந்த மதுக்கடைகளை கண்ட கண்ட இடங்களில் எல்லாம் திறந்து சிறுவர்களையும் பெண்களையும் கூட குடிகாரர்களாக்கி வைத்திருக்கிறது அரசு. இலவசங்களாலும் போதையாலும் தன்மானத்தையும் அறிவையும் இழந்து சோம்பி மயங்கிக் கிடக்கிறது தமிழ் சமூகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *