புலன் விசாரணை: சட்ட விதியும், நடைமுறையும்

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குற்ற வழக்குகளில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை அடையாளம் கண்டறியும் பணியில் நம் நாட்டு காவல்துறை ஈடுபட்டுவருகின்ற நிலையில், ஒரு சில வழக்குகளின் புலன் விசாரணை தடம் புரண்டு, காவல்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழ்வது உண்டு.

குற்ற வழக்குகள் மீதான புலன் விசாரணையின் பொழுது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைக் குற்ற விசாரணை முறைச் சட்டமும், குற்றச் செயலை நிரூபிக்கத் தேவையான சாட்சியங்களைத் திரட்டுவது குறித்து இந்திய சாட்சியச் சட்டமும் வரையறை செய்துள்ளன. இந்த சட்ட விதிமுறைகளைப் புலன் விசாரணையின் பொழுது பின்பற்றப்படாத சில வழக்குகள் பொதுவெளியில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளன.

ஒரு குற்ற வழக்கில் துப்பு துலக்க மேற்கொள்ளும் புலன் விசாரணையின்போது குற்றச் செயல்கள் சிலவற்றை புலன் விசாரணை அதிகாரி செய்வதும்,  குற்றவாளியைக் கண்டறியும் முயற்சியில் செய்யப்படும் குற்றச் செயல்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை சமுதாயத்தில் நிலவுவதும் தடம்புரளும் புலன் விசாரணைக்கு முக்கிய காரணங்களாக அமைந்து விடுகின்றன.

ஒரு குற்ற வழக்கில் சந்தேகப்படும் எந்த ஒரு நபரையும் விசாரணை செய்வதற்கான அதிகாரத்தை ‘குற்ற விசாரணை முறைச் சட்டம்’ புலன் விசாரணை அதிகாரிக்கு வழங்கியுள்ளது. அச்சட்டத்தின் படி சந்தேகப்படும் நபருக்கு அழைப்பாணை அனுப்பி, காவல் நிலையம் வரவழைத்து விசாரணை செய்யலாம். அவர் குற்றம் செய்தவர் என்பதற்கான ஆதாரங்கள் விசாரணையில் கிடைத்தால், அவரைக் கைது செய்து புலன் விசாரணையைத் தொடரலாம்.

பெரும்பாலான குற்ற வழக்குகள் மீதான புலன் விசாரணையில் இந்த சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. காவல்துறையின் இத்தகைய செயல் எதிர்மறையான விளைவுகளைச் சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது. 

குற்றச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு சட்ட ரீதியான அழைப்பாணை வழங்காமல், அவரைக் காவல் நிலையம் அழைத்து வந்து, விசாரணை என்ற பெயரில் சில நாட்கள் தங்க வைத்து விசாரணை மேற்கொள்வதும், சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாக இருந்தால், அவரின் நெருங்கிய உறவினர்களைக் காவல் நிலையம் அழைத்து வருவதும் புலன் விசாரணையின் பொழுது நடைபெறுகிறது.

புலன் விசாரணை என்ற பெயரில் செய்யப்படும் இத்தகைய செயல்கள் அனைத்தும் ‘சட்ட விரோதக் காவல்’ என்ற குற்றச் செயல் என்பதைப் புலன் விசாரணை அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை.

செய்த குற்றத்தைச் சந்தேக நபர் மறைப்பதாக புலன் விசாரணை அதிகாரி கருதினால், அவரிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டுவர தேவையான சாட்சியங்களைத் திரட்டவும், உண்மை கண்டறியும் சோதனையில் அவரை ஈடுபடுத்தவும் வேண்டும்.  ஆனால், நடைமுறையில் நிகழ்வது என்ன?

சந்தேக நபரை அடித்து மிரட்டினால், உண்மையை அவர் வெளிப்படுத்துவார் என்ற கருத்து புலன் விசாரணை அதிகாரிகள் பலரிடம் நிலவுகிறது. ஒரு குற்றத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், சந்தேக நபரை அடித்து மிரட்டுவது உள்ளிட்ட குற்றச் செயல்கள் செய்கின்ற நடைமுறை நம் நாட்டில் நிகழ்த்தப்படும் புலன் விசாரணையில் ஓர் அங்கமாக இருந்து வருகிறது.

செய்த குற்றத்தை மறைக்க முயற்சி செய்பவர்களில் சிலர், விசாரணையின் பொழுது கொடுக்கப்படும் துன்புறுத்தலுக்குப் பயந்து கொண்டு, உண்மையை வெளிப்படுத்துவதும் உண்டு. சில நேரங்களில் குற்றம் செய்யாதவர் கூட, துன்புறுத்தலுக்குப் பயந்து, தான் செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக் கொள்வதும் உண்டு.

விசாரணை என்ற பெயரில் கொடுக்கப்படும் துன்புறுத்தலைத் தாங்க முடியாத சிலர், காவல் நிலையத்திலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் உண்டு.

இவை அனைத்தும் இந்திய தண்டனை சட்டத்தின்படி சிறை தண்டனைக்குரிய குற்றச் செயல்களாக இருந்தாலும், புலன் விசாரணை என்ற பெயருக்குள் அவை அடங்கிவிடுகின்றன.

திருட்டு, களவு போன்ற குற்ற வழக்குகள் சிலவற்றில் புகார் கொடுத்தவரே புலன் விசாரணையின் போக்கை தவறான திசையை நோக்கி நகர்த்திவிடுவதும் உண்டு. ‘சந்தேக குற்றவாளி என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபரிடம் தீவிரமாக விசாரணை செய்யவில்லை’ என்ற குற்றச்சாட்டு சில நேரங்களில் புலன் விசாரணை அதிகாரி மீது சுமத்தப்படுவதும் உண்டு.

சந்தேக நபரைத் துன்புறுத்தி, புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற வாதியின் எதிர்பார்ப்பு அசம்பாவித சம்பவங்களுக்கு வழி வகுத்து, காவல்துறையைத் தலைகுனியச் செய்த சம்பவங்களும் கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ளன.

காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கூடிய குற்றச் சம்பவம் குறித்த புகார் காவல் நிலையத்தில் கொடுத்தால், கால தாமதமின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று குற்ற விசாரணை முறைச் சட்டம் (பிரிவு154) கூறுகிறது. ஆனால், இச்சட்ட விதி சில நேரங்களில் பின்பற்றப்படுவது இல்லை.

அனைத்து குற்ற நிகழ்வுகள் மீதும் வழக்கு பதிவு செய்தால், குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டது என்ற விமர்சனத்திற்கு வழி வகுக்கும் என்பதாலும், வேலைப்பளு அதிகரிக்கும் என்பதாலும், வழக்குகள் பதிவு செய்வதைத் தவிர்க்கும் மனநிலை காவல்துறையினரிடம் நிலவுகிறது.

சில குற்ற நிகழ்வுகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் தவிர்ப்பதற்கு வாதியும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றார். திருட்டு, களவு, வழிப்பறி உள்ளிட்ட சில குற்ற நிகழ்வுகள் தொடர்பாக கொடுக்கப்படும் புகார்களில் பறிபோன பொருட்களின் மதிப்பை மிகைப்படுத்தி புகார் கொடுக்கப்படுவதும் உண்டு. இதன் காரணமாக, உண்மையான குற்ற நிகழ்வுகள் மீது வழக்குகள் பதிவு செய்யாமல் தவிர்க்கப்படும் நிலையும் நிலவுகிறது.

கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சில குற்ற நிகழ்வுகளின் உண்மை தன்மையைக் காவல்துறையினர் குறைத்து மதிப்பீடு செய்து, வழக்குகள் பதிவு செய்வதைத் தவிர்த்து விடுவதும் உண்டு. அதன் விளைவாக கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்த சம்பவங்;களும் உண்டு.

புலன் விசாரணையின் வெற்றியானது குற்ற நிகழ்வை நேரில் பார்த்த சாட்சிகளைக் கண்டறிந்து, அவர்களின் சாட்சியத்தைப் பெறுவதே ஆகும். குற்ற நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் பல சமயங்களில் சாட்சியம் சொல்ல முன் வருவதில்லை. குற்றவாளிகளால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நிகழக் கூடும் என்ற பயமும், அத்தகைய ஆபத்து நிகழாமல் காவல்துறை நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை இல்லாமையுமே ஆகும்.

தடய அறிவியல் நுட்பம், விரல் ரேகை, கண்காணிப்பு கேமரா, கைபேசி அழைப்புப் பட்டியல் போன்றவை குற்ற வழக்குகளில் துப்பு துலக்க புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உதவிகரமாக இருந்தாலும், திட்டமிட்டு நிகழ்த்தப்படும் குற்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பலரிடம் சட்ட நுணுக்கம், மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு குறித்த தெளிவான பார்வை இருப்பது துப்பு துலக்குவதற்குத் தடையாக இருந்து வருகிறது.

அதிகரித்துவரும் குற்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களும், புலன் விசாரணைக்குத் துணைபுரியும் வகையில் சில சட்ட திருத்தங்களும் கொண்டுவரப்பட்டு இருந்தாலும், புலன் விசாரணை அதிகாரிகள் பல சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் இருந்து வருகின்றனர்.

ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு என பல்வேறு பணிகளை கவனிப்பதில் காவல்துறையினர் அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதால், கொடுங்குற்ற வழக்குகளின் புலன் விசாரணையில் அவர்கள் அதிக கவனத்தைச் செலுத்துவதில்லை என்ற முணுமுணுப்பு பொதுமக்களிடம் வெளிப்படுகிறது.

ஒரு காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஆண்டு ஒன்றுக்கு கொடுங்குற்ற வழக்குகள் உட்பட சுமார் 50 வழக்குகளில் புலன் விசாரணை மேற்கொள்கிறார். குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் படி 3 மாதங்களுக்குள் புலன் விசாரணையை முடித்து, குற்றப் பத்;திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், ஓராண்டு கடந்த பின்னரும் பெரும்பாலான வழக்குகள் புலன் விசாரணையில் இருப்பதும், சட்டம் – ஒழுங்கு பணிச் சுமையே அதற்குக் காரணம் என்பதும் கள எதார்த்தமாகும். இதற்கு தீர்வுதான் என்ன?

காவல்துறையில் ‘புலனாய்வு பிரிவு’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை மத்திய, மாநில அரசுகளுக்கு 2006-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதே அறிவுரையை ‘தேசிய காவல் ஆணைய’மும் வழங்கியுள்ளது. சில மாநில காவல்துறையில் புலனாய்வு பிரிவு உருவாக்கப்பட்டு, தற்பொழுது இயங்கிவருகிறது. தமிழ்நாடு காவல்துறையும் புலனாய்வு பிரிவை உருவாக்கி, குற்றத் தடுப்பு பணியில் திறம்பட செயல்படும் நிலையை நோக்கி பயணிக்க வேண்டும்.

குற்ற வழக்குகளில் துரிதமாக துப்பு துலக்கி, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருக்கிறது. ஆனால், புலன் விசாரணையின் பொழுது ஏற்படும் செலவுகளைப் புலன் விசாரணை அதிகாரி எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.

‘புலன் விசாரணை நிதி’ என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்ட காவல்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து வழக்கு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.5,000/- வழங்கப்படுகிறது. போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால், பல வழக்குகளுக்கு புலன் விசாரணை நிதியில் இருந்து பணம் வழங்கப்படுவது இல்லை.

காவல்துறையின் பொறுப்பில் இருக்கும் குற்றவாளி ஒருவரின் ஒரு வேளை உணவு செலவுக்காக ரூ.35/-உம், ஒரு நாள் உணவு செலவுக்காக ரூ.100/-உம் வழங்கப்படுகிறது.  இந்த பணத்தைக் கொண்டு குற்றவாளிக்கு உணவு அளிக்க முடியாது என்பதே என்பதே எதார்த்தம்.

புலன் விசாரணையின் பொழுது ஏற்படும் செலவினங்களை அந்தந்த புலன் விசாரணை அதிகாரி ஏதோ ஒரு வகையில் ஈடுகட்டிக் கொள்ளும் நிலைதான் தற்பொழுது இருக்கிறது. புலன் விசாரணையில் நேர்மையற்ற தன்மை நிலவுவதற்கு இத்தகைய சூழலும் ஒரு காரணமாகும்.

இந்தியாவின் ‘முதன்மை புலனாய்வு அமைப்பு’ என்று அழைக்கப்படும் சி.பி.ஐ. புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வழக்குகளில், புலன் விசாரணையின் பொழுது ஏற்படும் செலவினங்களுக்கு சி.பி.ஐ. நிதியில் இருந்தே தொகை வழங்கப்படுகிறது. இம்மாதிரியான நடைமுறையை மாநில காவல்துறையிலும் கொண்டு வருவது குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(01.12.2021 தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)

Previous post தொடரும் போலீஸ் கொலைகள்: கள நிலவரம்
Next post கொலையாளிக்கு உதவி செய்வது குற்றமாகுமா?

2 thoughts on “புலன் விசாரணை: சட்ட விதியும், நடைமுறையும்

  1. யதார்த்தமான பல உண்மைகளை இப்பதிவு வெளிப்படுத்தி உள்ளது. நேர்மையாக செயல்பட பல தடைகள் இருப்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *