கொலையாளிக்கு உதவி செய்வது குற்றமாகுமா?

‘சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த வக்கீல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையை முடித்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அவர்களை போலீஸ் ஜுப்பில் ஏற்றிய பொழுது, காவல் நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவரின் பெற்றோர் போலீசாரைப் பார்த்து, ‘கொலையில் சம்பந்தப்படாத என் மகனைக் கைது செய்துவிட்டீர்களே’ என்று கதறிக் கதறி அழுதனர்.’

அதிகாலை நேரத்தில் அன்றைய தினசரி செய்தி ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்த பொழுது என் கண்களில் பளிச்சென்று தென்பட்ட செய்திதான் இது.

அப்பொழுது நான் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என் மேற்பார்வையின் கீழ் இயங்கிவந்த ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டார். குடும்பப் பிரச்சனை காரணமாகக் கொலையான வக்கீலின் முக்கிய உறவினர்கள்தான் இந்த கொலை வழக்கில் பிரதான குற்றவாளிகள் எனப் போலீசாரின் புலன் விசாரணையில் தெரியவந்தது. தனிப்படை அமைத்து, அந்த கொலையாளிகளைப் போலீசார் தேடி வருவதாக, அந்த வழக்கின் புலன் விசாரணையைக் கண்காணித்து வந்த போலீஸ் அதிகாரி என்னிடம் தெரிவித்து இருந்தார்.

இந்தச் சூழலில் கொலையில் சம்பந்தப்படாத தன் மகனைப் போலீசார் கைது செய்துவிட்டதாகக் கூறி, அந்த குற்றவாளியின் பெற்றோர் அழுது புலம்பக் காரணம் என்ன? என்ற கேள்வி என் மனதில் தோன்றியது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் காலையில் விளக்கம் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு, மற்ற செய்திகளைப் படிப்பதில் கவனம் செலுத்தினேன்.

செய்தித்தாள்களைப் படித்து முடித்ததும், என் அறையில் இருந்து வெளியே வந்தேன். நான் வசித்து வந்த டி.ஐ.ஜி. பங்களாவின் மெயின் கேட் அருகில் ஒரு வயதான ஆணும், பெண்ணும் நின்று கொண்டு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் என்னைச் சந்திக்க அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. அந்த காலை நேரத்தில் என்னைச் சந்திக்க அவர்கள் வந்திருப்பதால், அதற்கு ஏதேனும் ஒரு முக்கிய காரணம் இருக்கும் எனக் கருதிய நான், அவர்களை என் அறைக்கு அழைத்து வருமாறு போலீசாருக்குத் தெரியப்படுத்தினேன்.

என் அலுவலக அறைக்குள் நுழைந்த அந்த இருவரும், ‘ஐயா!  ஏன் மகனைப் போலீசார் கொலை வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்து விட்டார்கள். அவன் அந்தக் கொலையில் சம்பந்தப்படவில்லை. அவன் கல்லூரியில் படித்து வருகிறான். ஆவனைக் கொலை வழக்கில் இருந்து காப்பற்றிக் கொடுங்கள்’ என்று பயம் கலந்த வருத்தத்துடன் அவர்கள் இருவரும் கண்ணீர் வடித்து முறையிட்டனர்.

சற்று நேரத்திற்கு முன்பு படித்த செய்தியில் குறிப்பிட்டிருந்த, வக்கீல் கொலையில் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளி ஒருவரின் பெற்றோர் தான் இவர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

‘போலீசார் பொய் வழக்கெல்லாம் போட மாட்டார்கள். நீங்கள் உண்மையை என்னிடம் சொல்லுங்கள்’ என்று கண்டிப்புடன் நான் கூறினேன்.

‘எங்கள் குல தெய்வம் சத்தியமா அவன் இந்தக் கொலை சம்பவத்தைச் செய்யவில்லை. நீங்கள் நேரடியாக விசாரித்துப் பார்த்தால், உண்மை உங்களுக்குத் தெரியவரும்’ என்று அவர்கள் முறையிட்டனர்.

தொடர்ந்து பேசிய அந்தக் குற்றவாளியின் தந்தை, ‘சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் எங்களைப் போல அவன் வாழக் கூடாது என்பதற்காக, கஷ்டப்பட்டு அவனைக் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறோம். அவனது வாழக்கையைக் காப்பாற்றிக் கொடுங்கள்’ என்று அவர்களது குடும்ப சூழ்நிலையை வெளிப்படுத்தினார்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அந்த குற்றவாளியின் பெற்றோரைக் கொஞ்ச நேரம் என் அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்கும்படி கூறிவிட்டு, அந்த கொலை வழக்கின் புலன் விசாரணையை மேற்பார்வையிட்டு வரும் போலீஸ் அதிகாரியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரை என் அலுவலகத்திற்கு உடனே வருமாறு அழைத்தேன்.

‘புலன் விசாரணையில் இருந்து வரும் ஒரு வழக்கில் உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற அழுத்தம் போலீசாருக்குக் கொடுக்கப்படும் பொழுது, யாராவது ஒருவரைக் குற்றவாளி எனத் தீர்மானித்து, அவரைப் போலீசார் கைது செய்துவிடுவார்கள்’ என்ற பொதுவான குற்றச்சாட்டு போலீசார் மீது அடிக்கடி கூறப்படுவது உண்டு. அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டுகள் பல சமயங்களில் உண்மையானதாக இருக்காது.

வக்கீல் கொலை வழக்கின் புலன் விசாரணையை மேற்பார்வை செய்து வந்த போலீஸ் அதிகாரி என் அலுவலகம் வந்தார். அவரிடம் அன்றைய செய்தித்தாளில் வெளியான செய்தியைச் சுட்டிக்காண்பித்தேன். அந்தச் செய்தியை அவரும் ஏற்கனவே படித்திருந்தார்.

அந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போலீசாரிடம் எப்படி பிடிபட்டனர் என்பது குறித்தும், செய்தித்தாளில் குறிப்பிடப்படடிருந்த அந்த இளைஞரை எதற்காக போலீசார் கைது செய்து, சிறைக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறித்தும் விளக்கமாகக் கூறத் தொடங்கினார் அந்த போலீஸ் அதிகாரி.

கொலையுண்ட வக்கீலின் உறவுக்காரப் பையன் ஒருவன் அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதால், அவனைத் தேடி அவனது வீட்டுக்குத் தனிப்படை போலீசார் சென்றுள்ளனர். அவன் வீட்டில் இல்லாததால், அந்தக் கொலையாளியின் தம்பியையும், அப்பாவையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர். அன்று மாலை வரை அந்த முக்கிய கொலையாளி போலீசாரிடம் பிடிபடாமல் இருந்துள்ளான்.

‘ஐயா, நான் கல்லூரியில் படித்து வருகிறேன். நாளைக்கு எனக்கு தேர்வு உள்ளது. தேர்வுக்குப் படிக்க என்னை வீடடுக்கு அனுப்பி வையுங்கள்’ என்று தேடப்பட்டு வரும் கொலையாளியின் தம்பி போலீசாரிடம் வேண்டுகோள் வைத்துள்ளான்.

உண்மை நிலவரத்தை உணர்ந்த போலீசார் அவனிடம், ‘உன்னை இப்பொழுது வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் ஒரு கண்டிஷன். நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் உன் அண்ணன் குறித்து உனக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்’-என்று கூறி, தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களையும் போலீசார் அவனிடம் கொடுத்துள்ளனர். அந்த இளைஞனும் சரி என்று போலீசாரிடம் ஒப்புக் கொண்டு, அன்று மாலையில் அவனது வீட்டுக்குத் திரும்பிச் சென்றுள்ளான்.

நள்ளிரவில் அந்த இளைஞனுக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசிய அந்த இளைஞனின் அண்ணன், ‘ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒரு ரகசிய இடத்தில் நானும், போலீசாரால் தேடப்பட்டுவரும் சிலரும் தங்கியுள்ளோம். விடிந்ததும், ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரணடைய முடிவு செய்துள்ளோம். அதற்கு பணம் கொஞ்சம் தேவைப்படுகிறது. ஊரில் யாரிடமாவது கடன் வாங்கிக் கொண்டு, பைக்கில் உடனடியாக ஸ்ரீவைகுண்டம் புறப்பட்டு வா. இங்கு வந்ததும், என்னைப் போனில் கூப்பிட்டால், நான் இருக்கும் இடத்தை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்’-என்று கூறியுள்ளான்.

கொலை செய்துவிட்டு, போலீசில் பிடிபடாமல் தலைமறைவாக இருக்கும் தன் அண்ணனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக, மறுநாள் எழுத வேண்டிய தேர்வையும் பொருட்படுத்தாமல், நம்பிக்கையான சிலரிடம் இருந்து பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு, ஸ்ரீவைகுண்டம் நோக்கி பைக்கில் புறப்பட்டுச் சென்றுள்ளான் அந்த இளைஞன்.

அதிகாலை நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் மாட்டிக் கொண்டான் அந்த இளைஞன். போலீசாரின் விசாரணையில், நம்பும்படி பொய் பேச முடியாத காரணத்தால், முழு உண்மையையும் ரோந்து போலீசாரிடம் அவன் கக்கிவிட்டான். அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக மறைவிடத்தில் தங்கியிருந்த கொலையாளிகளை ரோந்து போலீசார் பிடித்து, வக்கீல் கொலை வழக்கில் புலன் விசாரணை செய்துவரும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வக்கீலைக் கொலை செய்தவர்களைக் கைது செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்த பொழுது, போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி, கொலையாளிகளுக்கு உதவி புரியும் வகையில் செயல்பட்ட அந்த இளைஞனையும் கைது செய்து, நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்ததாக அந்த போலீஸ் அதிகாரி விரிவாக என்னிடம் விளக்கம் அளித்தார்.

என் அலுவலகத்திற்கு வெளியே காத்துக் கொண்டிருந்த அந்த இளைஞனின் பெற்றோரை உள்ளே அழைத்தேன்.

‘ஒரு முக்கியமான உண்மையை என்னிடம் நீங்கள் மறைத்துவிட்டீர்கள். உங்களுடைய மூத்த மகன்தான் வக்கீல் கொலையில் முக்கிய குற்றவாளியாகச் செயல்பட்டுள்ளான். அந்த விவரத்தை ஏன் மறைத்தீர்கள்?’ என்று என் கோபத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினேன்.

‘என் மூத்த மகனின் நடத்தை சரியில்லாத காரணத்தால், அவனுடன் எங்களுக்குப் பேச்சு வார்த்தை இல்லை. அவனுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் நீங்கள் கொடுங்கள். நாங்கள் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வது எங்களது இளைய மகனைப் பற்றித்தான். அவனாவது நல்லவனாக வாழ வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்’ என்று பேசி முடித்தார் அந்தப் பெரியவர்.

‘சகோதரப் பாசம்’ காரணமாக அண்ணனுக்குப் பணம் கொண்டு சென்ற தம்பியைக் கைது செய்து, கொலை வழக்கில் சேர்ப்பதால், கல்லூரியில் படித்து வரும் அந்த இளைஞனின் எதிர்காலம் என்னவாகும்?  அவன் மனம் திருந்தி, நல்ல குடிமகனாக மாறி வருவானா?  அல்லது அவனுடைய அண்ணனை விடக் கொடிய குற்றவாளியாக மாறி வருவானா? என்ற கேள்வியை வக்கீல் கொலை வழக்கு குறித்த புலன் விசாரணையை மேற்பார்வையிட்டு வந்த அந்த போலீஸ் அதிகாரியிடம் கேட்டேன்.

பின்னர் அந்த போலீஸ் அதிகாரியிடம் கலந்து பேசிவிட்டு, ‘உங்கள் இளைய மகன் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவான். உரிய நேரத்தில் இந்த குற்ற வழக்கில் இருந்து அவன் சட்டப்படி விடுவிக்கப்படுவான். அவனது படிப்பில் கவனம் செலுத்தி, வாழ்க்கையில் அவன் முன்னேறுவதற்கான முயற்சிகளைச் செய்யச் சொல்லுங்கள்’ என்று அந்த பெற்றோரிடம் கூறி, அவர்களை அனுப்பி வைத்தேன்.

கொலை செய்வது குறித்து தீட்டப்பட்ட சதித் திட்டத்தில் கலந்து கொள்ளாமலும், கொலை செய்யத் தேவையான தயாரிப்பு பணிகளில் ஈடுபடாமலும், கொலை சம்பவத்தில் நேரடியாகக் கலந்து கொள்ளாமலும் இருந்த ஒரு நபரைப் போலீசார் அந்த கொலை வழக்கில் கைது செய்ய முடியுமா?

கொலை சம்பவம் நிகழ்ந்த பிறகு, கொலையாளிகளைப் போலீசாரிடம் இருந்து பாதுகாத்து, அடைக்கலம் கொடுத்த ஒருவரை அந்த கொலை வழக்கில் கைது செய்ய முடியுமா? –  போன்ற கேள்விகளுக்கு விடை காண பலர் விரும்புவார்கள்.  தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிக முக்கியமான கொலை வழக்கு ஒன்று இந்த கேள்விகளுக்கான பதிலைத் தெளிவுபடுத்தும்.

1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் பார்ப்போம்.

மேட்டூர் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் 23-ஆவது குற்றவாளி. ராஜிவ்காந்தி படுகொலையில் இவர் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவர். தோலைகாட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலமாகத்தான் படுகொலை நடந்ததை இவர் தெரிந்து கொண்டார்.

மோட்டார் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த இவர், சொந்தமாக ஆயில் டேங்கர் லாரியும் வைத்திருந்தார். இலங்கை தமிழர்கள் மீது பாசமும், நேசமும் கொண்ட இவர், இந்த படுகொலை நடந்து முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த படுகொலைக்கு மூளையாகச் செயல்பட்ட சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகளை இவ்வழக்கில் புலன் விசாரணை செய்து கொண்டிருந்த சி.பி.ஐ.யிடம் பிடிபடாமல் சென்னையில் இருந்து பெங்களுரூ செல்ல உதவி புரிந்துள்ளார். அதற்காக, தனக்குச் சொந்தமான ஆயில்; டேங்கர் லாரியைச் சென்னைக்குக் கொண்டு வந்து, காலி டேங்கருக்குள் சிவராசன், சுபா இருவரையும் ஏற்றிக் கொண்டு, இரவோடு இரவாக பெங்களுருக்குக் கொண்டு சேர்த்துள்ளார்.

சி.பி.ஐ.-ஆல் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் எனத் தெரிந்திருந்தும், அவர்களைக் காப்பாற்ற உதவி செய்த காரணத்தால், தனசேகரனை சி.பி.ஐ கைது செய்து, சிறையில் அடைத்தது.

தண்டிக்கக் கூடிய குற்றம் புரிந்த ஒரு குற்றவாளியைப் புலன் விசாரணை செய்யும் போலீசிடம் பிடிபடாமல் தப்பித்துச் செல்வதற்கு உதவி செய்பவர் அல்லது அந்த குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பவர் இந்திய தண்டனைச சட்டப் பிரிவு 212-ன் கீழ் குற்றவாளியாகக் கருதப்பட்டு, சிறைத் தண்டனைக்கு உரியவர் ஆவார். எனவே, நீதிமன்ற விசாரணையின் முடிவில் தனசேகரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

(17.11.2017 தேதிய தினத்தந்தியில் வெளியான கட்டுரை)

Previous post புலன் விசாரணை: சட்ட விதியும், நடைமுறையும்
Next post சைபர் குற்றமும், பெண்களின் பாதுகாப்பும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *