கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து மனித சமூகம் மீண்டு வரத் தொடங்கி, உற்பத்தி, வாணிபம், வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் முழு வீச்சில் செயல்படத் தொடங்கிய நிலையில் ஒமைக்ரான் என்கிற கரோனாவின் புதிய உருமாற்றம் நம்மை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில் அமல்படுத்தப்பட்ட முதல் பொதுமுடக்க காலத்தில் ஒரு நாளின் 24 மணி நேரமும் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் அவரவர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். விளையாட்டு, பொழுதுபோக்கு, போக்குவரத்து உள்ளிட்டவை முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தன. மதுபானக்கடைகள் மூடப்பட்டிருந்தன. கைப்பேசி, கணினி, இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றிடம் அனைவரும் தஞ்சம் அடைந்தனர்.

சில மாதங்களிலே தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் தொடர்ந்து இயங்காமல் இருந்தன. அக்காலகட்டத்தில் போதைப் பழக்கத்திற்கு புதிய நுகர்வோர் வருகையும், சுறுசுறுப்பான போதை பொருட்கள் விற்பனையும் நிகழத் தொடங்கின என கள ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும் போதைப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதும், அவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துள்ளன என போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்கள் குறித்த 2021- ஆம் ஆண்டைய ஐக்கிய நாடுகளின் அலுவலக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உலக நாடுகளில் 43 கோடி பேர் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும், அவர்களில் 3.6 கோடி பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்றும், 1.1 கோடி பேர் ஊசி மூலம் போதைப் பொருளை உடலில் செலுத்திக் கொள்கின்றனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அலுவலக அறிக்கை கூறுகிறது.

கடந்த 24 ஆண்டுகளில் ‘கஞ்சா’ எனப்படும் போதைப் பொருளின் பயன்பாடு நான்கு மடங்காக உயர்ந்துள்ளது என்றும், அதைப் பயன்படுத்தும் இளம் வயதினரில் 40% பேர் அப்பழக்கம் உடல் நலத்திற்குக் கேடு எனக் கருதவில்லை என்றும் ஐக்கிய நாடுகளின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்படி கஞ்சா, ஓபியம் உள்ளிட்ட போதைப் பொருட்களை 7.34 கோடி பேர் பயன்படுத்துகின்றனர் என்றும்,   போதையூட்டும் மதுபானங்களை 29.2% ஆண்களும், 1.6% பெண்களும் அருந்துகின்றனர் என்றும் தெரியவந்திருக்கிறது. மது அருந்துவோரில் 18 ஆண்களுக்கு ஒரு பெண் இருக்கிறார் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், 45% ஆண்கள் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்றும், மது அருந்தும் பழக்கம் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. பிறந்த நாள், திருமண நாள் விருந்துகளில் மதுபானங்கள் இடம் பெறும் கலாச்சாரம் தற்பொழுது நிலவுகிறது. திருவிழாக் கொண்டாட்டம் என்றாலே மதுபானங்கள் சுவைக்கும் நாள் என்ற மனநிலை இளைஞர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

நகரங்கள் பலவற்றில் இயங்கிவரும் இரவு நேர கேளிக்கை விடுதிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பானங்களில் ‘கிளப் டிரக்ஸ்’ எனப்படும் போதைப் பொருட்கள் கலந்து கொடுக்கப்படும் சட்ட விரோதமான பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

கல்விக்கூடங்களில் மாணவர்களின் ‘பிரியாவிடை’ நிகழ்ச்சிகளில் இனிப்பு, காரம், காபி வழங்கி வந்த காலம் மாறி, தற்பொழுது மதுபானங்கள் வழங்கப்படுகின்றன. மாணவிகளும் தங்கள் தோழிகளுடன் மது அருந்தும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இவை மட்டுமின்றி, சிறார்கள் மது அருந்தும் கலாச்சாரம் சமுதாயத்தில் வேகமாக ஊடுருவி வருகிறது.

தனியார் அமைப்பு ஒன்று கடந்த ஆண்டில் சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்ட பள்ளி மாணவர்களிடம் நடத்திய கள ஆய்வில், 9% பேர் மது, கஞ்சா, போதை தரும் பாக்கு போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.   

பெற்றோர்கள் இல்லாத அல்லது பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, தெருக்களையே தங்களின் வசிப்பிடமாகக் கொண்டு, வாழ்க்கை சக்கரத்தைச் சுழற்றிவரும் ‘சாலையோரக் குழந்தைகள்’ மிகுந்து காணப்படும் நாடுகள் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இத்தகைய சாலையோரக் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் மது, கஞ்சா, போதைப் பாக்கு போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதும், அவர்களில் சிலர் தெருக்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் விற்பனை மையங்களாக விளங்குகின்றனர் என்பதும் கள எதார்த்தம்.

திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட சிறார்களிடம் நடத்திய விசாரணையில் 87% பேர் மது, போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என தெரியவந்ததாக சிறார் குற்றவாளிகள் குறித்த ஆய்வில் தெரியவருகிறது.

நம் நாட்டில் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் கடுமையாக இருந்த 2020-ஆம் ஆண்டில் 9,169 பேர் மது, போதைப் பொருள் பழக்கத்தின் விளைவாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் மது, போதைப் பொருளின் பயன்பாட்டினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020-ஆம் ஆண்டில் மது, போதைப் பொருள் பழக்கத்தினால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 17% அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரம் நம் நாட்டில் மது, போதைப் பொருட்கள் ஏற்படுத்திவரும் சீரழிவைத் தெளிவாக உணர்த்துகிறது.

போதைப் பொருட்களை நுகர்வோர் இந்தியாவில் அதிகரித்து வருகின்ற நிலையில், ‘போதைப் பொருள் தேசிய ஒருங்கிணைப்பு மைய’த்தின் உயர்நிலைக் கூட்டம் டிசம்பர் 2021-இல் புதுதில்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் போதைப் பொருட்கள் நுகர்வோர் எண்ணிக்கை ஏழு மடங்காக உயர்ந்துள்ளது என்றும், போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் நுகர்வைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதைப் பொருட்களின் தீமை குறித்து பாடத் திட்டம் வாயிலாக மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட உயரதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்றுவரும் போதைப் பொருட்கள் கடத்தல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் மீதான மாநிலம் தழுவிய வேட்டை கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டது. இந்த வேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, ஹெராயின், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் டன் கணக்கில் எப்படி பதுக்கி வைக்க முடிந்தது? காவல்துறையின் இந்த நடவடிக்கை போதைப் பொருட்கள் விற்பனையை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுமா? கள நிலவரத்தைப் பார்ப்போம்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தென்மாவட்டம் ஒன்றில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. ‘போலீசார் கைப்பற்றிய கஞ்சா என்னவாயிற்று?’ என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியது.

‘குற்றவாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா கைமாறிய தகவல் நீதிமன்றத்திற்குத் தெரிந்துவிட்டதா?’ என்ற சந்தேகம் காவல்துறைக்கு ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க, கஞ்சா வியாபாரி ஒருவரை அழைத்துக் கொண்டு, கஞ்சா கொள்முதல் செய்துவர அண்டை மாநிலத்திற்குச் சென்றார் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி.

கொள்முதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் காவல் அதிகாரி தென்மாவட்டம் திரும்பிவரும் வழியில், வாகனச் சோதனை நடத்திய போலீசாரிடம் அந்த கஞ்சா பிடிபட்டுவிட்டது.

காவல்துறை தன்னுடைய செயல்பாடுகள் குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.

போதைப் பொருட்கள் கடத்தல், பதுக்கல், விற்பனை ஆகியவற்றைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையில், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவரும் போலீசாரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவரும் காவல்துறையினரை நல்வழிப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் காவல்துறைக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் பொழுது, சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் சிறுவர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், அவர்களை போதை பழக்கத்திலிருந்து மீட்டு, நன் மக்களாக சமுதாயத்தில் உயர்த்திடும் பொருட்டு சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் ‘போதை தடுப்பு மையங்கள்’ அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மது மற்றும் போதைப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறினால், மாவட்டம் தோறும் போதை தடுப்பு மையங்கள் ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழல் அரசுக்கு ஏற்படக்கூடும்.

‘மது விற்பனையைத் தடை செய்தால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்’ என்ற கருத்து பொதுவெளியில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதாரப் பின்னடைவு ஆகியவைகளைத் திறமையுடன் எதிர்கொண்ட நமது அரசு, மது விற்பனையால் ஏற்படும் வருமான இழப்பையும் பொருளாதார நிபுணர்களின் துணையுடன் எதிர்கொண்டு, தாராள மது மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடை செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும்.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்

***

(05.01.2022 தேதிய தினமணி நாளிதழில் வெளியான கட்டுரை)

4 thought on “பொதுமுடக்கமும், போதைப் பழக்கமும்!”
 1. மதுவினால்,அரசுக்கு இழப்பீடு நான்,வருமானம் இல்லை,ஏனென்றால் அவர்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் இழப்பீடுகளை கணக்கிடும் போது நன்கு புள்ளி விவரமாக ஆராய்ந்தால் அரசுக்கு நஷ்டம் தான் வரும்,

  இதை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் முழு மதுவிலக்கு அமல் படுத்தினால் நன்றாக இருக்கும்
  இனிவரும் காலங்களில் இளைஞர்கள் சமுதாயம் மது இல்லாமல் இருப்பார்கள்

  போதைப்பொருளுக்கு என தற்போது உள்ள காவல்துறை அதிகாரி ஒரு சிறந்த நடவடிக்கை எடுத்து வருகிறார்

  அதை அனைத்து மாவட்டத்திலும் உள்ள கீழ் மட்டத்தில் உள்ள காவல் துறையினர் சிறப்பாக கடைபிடித்தால் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தலாம்

 2. அய்யா வணக்கம்
  கொடுமை உள்ளது. கட்டுபாடுகள் இருந்தும் எப்படி போதை பொருட்கள் வருகிறது. என்பது தெரியவில்லை. அரசாங்கம் ஏன் கட்டுபடுத்த முடியவில்லை.
  போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை காவல்துறை அதிகாரிகள் இடம் சொல்ல பயப்படும் பொதுமக்கள்
  இதை தடுக்க விழிப்புணர்வு அதிக தேவை

 3. கட்டுரையை படித்து முடிக்கும் போது நம் வருங்கால சந்தடியர் குறித்துமனதில் இனம்புரியாத அச்ச உணர்வு ஏற்படுகிறது.அரும்பாடு பட்டு இதனை தடுக்க வேண்டும்.

 4. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு ஒரு ஊரை எடுத்துக் கொண்டால் போதைப் பொருட்களை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்தது. சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதையும் இருக்கவில்லை. ஒரு கேவலமும் பயமும் கூட அவர்களிடையே இருந்தது. ஆனால் அரசு அங்கீகரித்த பின்னர், படிப்படியாக இது வளர்ந்து இன்று 14,15 வயது மாணவர்கள் கூட மது அருந்த ஆரம்பித்து விட்டனர். ஓரளவுக்கு பெண்களும் தற்போது அருந்த ஆரம்பித்து விட்டது மகாகொடுமை. இதனால் ஆரோக்கியமற்ற சமுதாயம் உருவாகிறது என்ற உண்மை கூட பலருக்கு மறைக்கவில்லை.
  இதற்கு முக்கியமான காரணம் அரசு என்றால் அது மிகையல்ல. மன்னிக்கவே முடியாத மிகப்பெரும் அழிவை அரசியல்வாதிகள் மக்கள் மீது இழைக்கிறார்கள். மிகப்பெரிய விலையை மக்கள் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு விரைவாக இவற்றை அரசு தடை செய்கிறதோ, அந்த அளவுக்கு இது மக்களுக்கு நன்மை பயக்கும்.
  மேலும் இந்த புகையிலைப் பொருட்கள் மிகப்பெரிய அளவில் மக்களின் ஆரோக்கியத்தை கெடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *